வாடிக்கையாகப் பழிப்பது வேடிக்கையா?

0

-நிர்மலா ராகவன்

(நலம்… நலமறிய ஆவல் 153)

“எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் அதிகமாகப் பேசிக்கொள்வது கிடையாது!”

திருமணமாகிய முதல் சில ஆண்டுகளில் தம்பதிகள் நிறையப் பேசியிருப்பார்கள். அதன்பின், அந்த இணக்கம் ஏன் முறிந்துவிடுகிறது?

மற்றவரைப்பற்றி அறியவேண்டும் என்று முதலில் இருந்த ஆர்வம் காணாமல் போய்விட்டதுதான் காரணம். அதன்பின், ஒருவர் கூறுவதை மற்றவர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அப்படித் தவறாகப் புரிந்துகொள்வதால் வருத்தமோ, கோபமோ வருகிறது.

இருவருமே, `நான் சொல்வதைக் கேளேன்! என்னைப் புரிந்துகொள்!’ என்று சண்டை பிடிக்கிறார்கள். அல்லது, மனதளவில் ஏங்குகிறார்கள். தான் எண்ணியபடி உற்றவர் இல்லையே என்று வருந்தி, விவாதித்துக்கொண்டும், பழித்துக்கொண்டும் இருந்தால் நல்ல விளைவு உண்டாகுமா?

இது புரியாது, சிலர் `முட்டாள்!’ என்று மற்றவரைப் பழித்துக்கொண்டே இருப்பார்கள்.

`உனக்கு நான் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. மூளை இருந்தால்தானே!’

இந்த இரு வாக்கியங்களிலேயே பிழை இருக்கிறது. முதலாவதில், நான் என்ற சொல்லுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொல்பவர் புத்திசாலியோ, இல்லையோ, மற்றவரைவிடத் தனக்குத்தான் அறிவுகூர்மை அதிகம் என்று நம்பிப் பழித்தால், தாக்கப்பட்டவர் குறுகிவிடுவார். அல்லது ஆத்திரமடைவார்.

`மூளை கிடையாது!’ என்று ஒருவர் கூறுவதைப் பலமுறை கேட்கும்போது, அதை நம்பிவிடும் அபாயமும் இருக்கிறது.

கதை

தமிழ் நாட்டுக் குடும்பம் ஒன்றில், தினசரியில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்தார்கள். மாப்பிள்ளை தலைநகரில் மிகப் பெரிய வேலையில் இருந்தான். அதனால், கல்யாணத்தைப்பற்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிகம் யோசியாது, பெண்வீட்டார் ஏற்றுக்கொண்டனர்.

கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவனுக்கு மனநோய் என்று. (ஆனால், உத்தியோகம் பார்க்க முடிந்தது).

சாதுவான மனைவியை, `நீ பைத்தியம்!’ என்று ஓயாமல் பழிக்க, சில வருடங்களிலேயே அவளும் நிலைகுலைந்துபோனாள். அத்துடன் திருப்தி அடையாது, ஒரே மகளையும் இப்படியே நடத்த ஆரம்பித்தார்.

சுமார் இருபது வயதான அப்பெண்ணை நான் சந்தித்தபோது தானாகவே, “நான் நார்மல்தான். பைத்தியம் இல்லை,” என்றாள் என்னிடம்.

என் அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு, தாய் விளக்கம் அளித்தாள்: “அவளுடைய அப்பா அவளை எப்போதும் `பைத்தியம்’ என்பார். அவளும் நம்பிக்கொண்டிருக்கிறாள்!”

இம்மாதிரியான சிக்கலான மணவாழ்க்கை முறிந்தாலே நிம்மதி. தனக்குக் குறை இருக்கிறது என்று தெரிந்தும், அதை ஏற்க விரும்பாதவர்கள் தம்மைச் சார்ந்த பிறரிடம்தான் அக்குறை இருக்கிறது என்று நம்பவைப்பார்கள்.

இன்னும் சிலர், தான் எதில் தோல்வி அடைந்தாலும் அதற்கு மனைவிதான் காரணம் என்று பழி சுமத்துவார்கள்.

ஒரு மனைவி தன் கணவனிடம் கேட்டாள், சிரித்தபடி: `நான் உங்களை விட்டுப்போனால், நீங்கள் தவறான பாதையில் காரை ஓட்டிச் செல்லும்போதெல்லாம் யார்மீது குற்றம் சாட்டுவீர்கள்?’

கதை

சகாதேவன் வியாபாரத்தில் தோல்வியடைந்தவர். அதில் அவர் மனைவி எந்த விதத்திலும் ஈடுபடவில்லை. இருந்தாலும், அவள்தான் தன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தோன்றிப்போக, `முட்டாள்!’ என்று அவளைப் பழித்துக்கொண்டே இருப்பார். அவர் நொந்த மனதைப் புரிந்துகொண்டு, அவளும் எதிர்த்துப் பேசாமல், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள்.

`எல்லாப் பெண்களுமே முட்டாள்கள்தாம்!’ என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்பட்டது அந்த மனிதருக்கு.

நானும் இருமுறை இவரிடம் மாட்டிக்கொண்டேன். நான் அஞ்சவில்லை. என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். பயம் அவரிடமே திரும்பியது, சுவற்றில் அடித்த பந்துபோல்.

அச்சத்தை விளைவித்தால், உண்மையான மதிப்பும் மரியாதையும் வருமா?

தன்னைப் பார்த்துப் பிறர் பயப்பட வேண்டும், இல்லையேல், தான் அவர்களைக் கண்டு அஞ்ச வேண்டும்! என்ன மனநிலை இது! இவரைப் போன்றவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமுடியுமா?

சிறுவர்கள்கூட இப்படிப்பட்ட நடத்தையை மற்றவர்களிடமிருந்து கற்று, வீட்டில் பெரியவர்களை அப்படியே நடத்த ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் பிறர் தம்மைக் கவனிப்பார்கள் என்று அவர்கள் எண்ணம் போகிறது.

கதை

ஐந்து வயதான சுதா தன் சிநேகிதியான பியாங்காவின் வீட்டிற்கு விளையாடப்போய், இரண்டு, மூன்று மணி நேரம் அங்கேயே கழித்தாள். வீடு திரும்பியதும், பெரியவர்களிடம் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தாள்.

`எப்போதும் மரியாதையாக, அன்புடன் நடந்துவந்தவளுக்கு இப்போது என்ன வந்துவிட்டது?’ என்று யோசித்தார்கள்.

அவளை அப்படியே விட்டுவிட்டால், அதே நடத்தை தொடரும். வன்மையாகக் கண்டித்தாலோ, அதிகமாக முரண்டுபிடிக்கக்கூடும். முதன் முறை ஆனதால், கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்று தோன்றிப்போயிற்று.

“உன் சிநேகிதி பியாங்கா அவளைப் பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணிடம் எப்படி நடந்துகொள்கிறாள்?” என்று கேட்டாள் தாய்.

“அந்த அக்காவை பியாங்கா எப்பவும் திட்டுகிறாள்,” என்று பதில் வந்தது.

தவறு தோழியின் தாயின்மேல்தான். தாய் பணிப்பெண்ணை எப்படி நடத்துகிறாளோ, அப்படியே மகளும் நடத்தக் கற்றுவிட்டாள்.

வயதில் மூத்தவர்களிடம் அப்படி நடப்பது தவறு என்ற அதிர்ச்சி சுதாவின் பதிலில் காணப்படவில்லை. ஏனெனில், நல்லது, கெட்டது என்று ஆராயும் திறமை குழந்தைகளுக்குக் கிடையாது. பிறரைப் பார்த்துத்தான் எதையும் கற்கிறார்கள். உடனே அப்படியே நடந்தும் காட்டுகிறார்கள்.

“இனி நீ பியாங்கா வீட்டுக்குப் போகாதே! அவள் உன்னைமாதிரி நல்ல பெண் இல்லை!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினர்.

நாம் சொல்வதையும் செய்வதையும் குழந்தைகள் அப்படியே காப்பி அடிக்கின்றனர் என்பதால் சற்று கவனமாகத்தான் இருக்கவேண்டும்.

ஒரு காரியத்தைச் செய்யும் முறையை மாணவப் பருவத்திலிருப்பவர்களுக்கு ஆரம்பிக்குமுன் சொல்லிக்கொடுக்கலாம். இருந்தாலும், கூடவே நின்று தொணதொணத்துக்கொண்டிருந்தால், அவர்களுக்கும் பொறுமை மீறிவிடாதா!

`நான் இப்படிச் செய்வேன். நீ உனக்குத் தோன்றியபடி செய்!’ என்று விட்டுவிட்டால், அவர்களுக்கு நம்மேல் மரியாதை எழும். நாம் காட்டும் முறையை அப்படியே கடைப்பிடிப்பார்கள்.

வேடிக்கைதானா?

`வேடிக்கை’ என்று நினைத்து பெரியவர்கள் செய்யத் துணியாததை குழந்தைகளைச் செய்யத் தூண்டுகிறவர்களும் உண்டு.

ஒரு பதின்மவயதுப் பெண்ணைக் காட்டி, “இவளைப் பாரேன்! குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!’ என்று ஐந்துவயதுச் சிறுமியான சியாமளாவிடம் காட்டினாள் அவளுடைய அத்தை. (அத்தைக்குக் குழந்தைகள் கிடையாது).

அச்சிறுமியின் தாய்வழிப் பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, “பாட்டி குரங்குமாதிரி ஒக்காந்து சாப்பிடறா!” என்று சியாமளா கேலியாகக் கூறிச் சிரிக்க, எல்லாருக்கும் அவமானமாகப் போயிற்று.

இதில் குழந்தையின் தவறு என்ன?

சியாமளா ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், அவள் வயதை ஒத்த மாலாவுடன் அவளை ஒப்பிடுவாள் அந்த அத்தை: “மாலா அசடு! சாப்பிடப் படுத்தும். ஒன்னைமாதிரி சமத்தா சாப்பிடாது!”

பெருமையுடன், ஒவ்வொரு முறையும் மூச்சுப்பிடிக்கச் சாப்பிட்டு, குண்டாகிப்போனதுதான் நடந்தது.

மாலாவின் தாய் என்னிடம் வருத்தத்துடன் கூறினாள்: “`நீயும் சியாமளாமாதிரி சமத்து!’ என்று சொல்லிச் சொல்லி இவளை வளர்க்கிறோம். இங்கோ, இப்படிச் சொல்கிறார்கள்!”

`நீதான் உலகிலேயே உயர்த்தி!’ என்பதுபோல் புகழ்ந்து, சம வயதுக் குழந்தைகளை மட்டமெனக் கருதும் பழக்கத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அன்பின் மிகுதியா? அது அறிவீனம்.

தான் அப்படியெல்லாம் சிறந்தவள் இல்லை என்று எப்போதாவது உணரும்போது அவர்கள் செய்வது அறியாது திகைத்துப்போய்விடுகிறார்கள். தம்மை அப்படி வளர்த்தவர்கள்மேல் வெறுப்புதான் மண்டுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *