செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவர். தாம் கற்றவற்றை மற்றவர்களுக்குச் சொல்பவர் கேள்வி ஞானத்தை வளர்க்கிறார்.

கல்வியைப் பரப்புவதற்காகவே மேடைப் பேச்சாற்றல்.

நுணுகித் தேடல், தேடியதைத் தொகுத்தல், கேட்பார் வேட்கை தணிக்கச் சுவையுடன் ஒழுங்கு செய்தல், வேட்ப மொழிதல் யாவும் மேடைப் பேச்சாளரின் இயல்புகள்.

பேச்சு உள்ளத்தில் இருந்த வரவேண்டுமடா. உள்ள உணர்வுகளையும் அறிவையும் சரி சமமாகக் கலந்து பேசுபவனே கேட்பவனுக்குக் கற்பிக்கிறான் என என்னிடம் சொன்னவர் பேரா. அ. ச. ஞானசம்பந்தன்.

அத்தகைய நுண்மா நுழைபுலத்தார் சிலம்பொலி செல்லப்பனார். ஆழ்ந்த மனித நேயமும் கற்றுத் துறை போகிய அறிவும் செறிவாகப் பெற்றவர் சிலம்பொலி செல்லப்பனார்.

சச்சிதானந்தன் சிறையில் வாடலாமா? கேட்டவர் சிலம்பொலி செல்லப்பனார்.

யாரிடம் கேட்டார்? மேடையில் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கேட்டார்.

எங்கே? சென்னை, ஏவிஎம் இராசேசுவரி மண்டபத்தில்.

எப்பொழுது? 1997 பிப்புருவரி இறுதியில்.

முதலமைச்சர் சொன்ன பதிலால் இன்றுவரை நிறைவடையாதவர், சிலம்பொலி செல்லப்பனார்.

ஈழத்து நோயாளிகளுக்கு அக்காலத்தில் போதிய மருந்துகள் கிடைப்பதில்லை என்பதைச் சென்னையில் பேசிக்கொண்டிருந்தாம். மருந்து கடத்த முற்பட்டேன் எனக் குற்றம் சாட்டினர். 1997 பிப்புருவரி 9ஆம் நாள் சிறையிட்டனர். சென்னைச் சிறையில் ஒரு மாதம் என் வாழ்க்கை.

1986இல் காந்தளகப் பதிப்புப் பணியால் சென்னையில் தமிழ் அறிஞரிடையே வரவேற்பைப் பெற்றிருந்தேன். தரமான நூல்களைப்பதிப்பித்ததால் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட புகழ்பூத்த எழுத்தாளர்களுக்குப் பக்கமாக்கல் பணியைக் கூலி வாங்கிச் செய்து கொடுத்து வந்தேன்.

சிலம்பொலியார் காந்தளகம் வந்திருக்கிறார், ஈழத்து நூல்களை வாங்கிச் சென்றிருக்கிறார். வேறு தொடர்பில்லை.

என் சிறைவாசம் குறித்து முதல்வரிடம் அவர் பேசிய காலத்தில் நான் சிலம்பொலி செல்லப்பனாருடன் நேரடிப் பழக்கமில்லாதவன்.

சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போது
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்

என்ற வரிகளைப் பாரதிதாசன் இயற்றிய வரிகளாகத் தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி உரத்துச் சொல்வோர் சிலர் இருந்தனர்.

அந்த வரிகள். பாரதிதாசனுடையவை அல்ல, தவறாகச் சொல்கிறார்கள், ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் எழுதிய வரிகள் என அடிக்கடி முழங்குபவர் சிலம்பொலி செல்லப்பனார்.

ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனைச் சிலம்பொலியார் நேரில் பார்த்துப் பேசிப் பழகாதவர். அவரின் நூல்களை விரும்பிப் படிப்பவர்.

நேரிடையாகப் பழக்கமில்லாத ஈழத்தவர் இருவர். தமிழகத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே காரணம், அறம் சார்ந்த சிலம்பொலியாரின் செம்மாந்த நோக்கும் சான்றாண்மையுமே.

மனிதநேயம் என்மீதும், புலமை நேயம் ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் மீதும் கொண்டருந்ததால் குரல் கொடுத்தார். தவறுகளைத் திருத்த முயன்றார்.

2000இன் தொடக்க ஆண்டுகளில் சென்னைக்கு ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் வந்திருந்தார். ஒரு நாள் முன்னறிவிப்பு இன்றியே காந்தளகத்துக்கு வந்தார். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

எவ்வளவு நாள் தங்குகிறீர்கள் எனக் கேட்டு, அவருக்கு வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்தேன். அந்த விழாவில் பாராட்டுரை வழங்கக்கூடியவர் சிலம்பொலியார் என ஓர்ந்து அவரிடம் முதன்முறையாகச் சென்றேன்.

திருவான்மியூரில் கலாச்சேத்திரக் குடியிருப்பில் ஒருநாள் மாலை வேளையில் முன்தெரிவித்துச் சென்று பார்த்தபோது நெடுநாள் பழகியவர்போல வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வரப் பெருவிருப்புக் கொண்டார்.

பின்னர் ஆனந்தம் திரையரங்க வளாகத்தில் நிகழ்ச்சிக்கு வந்தார், ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.

சுவாமி விபுலானந்தவரின் மாணவராகவும் உதவியாளராகவும் இருந்தவர் ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன். கணிதம், வானியல், தமிழ்மொழி, தமிழிசை, கவிதை எனப் பன்முக ஆற்றல் பெற்றிருந்த புலமை நேயத்தாரை நேரில் சந்தித்ததில் சிலம்பொலியார் மிக மகிழ்ந்தார்.

அதற்குப் பின்னர், சிலம்பொலியாருக்கும் எனக்கும் இடையே தொடர்புகள் வலுப்பெற்றன. பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம்.

நாமக்கலில் அவர் சென்று வாழ்ந்த காலங்களில் அவருடன் கடிதத் தொடர்பும் வைத்திருந்தேன்.

2010 முற்பகுதியில் அவரே கேட்டதால், உலகெங்கும் தமிழர் என நான் தயாரித்த வரைபடத்தைச் செம்மொழி மாநாட்டில் பயன்படுத்த, அவரிடமே நேரில் சென்று, எணினி வடிவத்தைக் கொடுத்துவந்தேன். மாநாட்டில் பெரிய படமாக்கி வைத்ததாக மாநாடு சென்ற பலர் என்னிடம் கூறினர்.

காந்தளகம் வெளியிட்ட நூல் ஒன்றுக்குக் கடந்த 2011 வைகாசியில் பரிசு கிடைத்தது. நூலாசிரியருக்குப் பரிசு என்றாலும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்து, பாராட்டு, பரிசு சான்றிதழ் வழங்கும் மரபு தமிழகத்தில் உண்டு.

காந்தளகம் சார்பில் பாராட்டையும் பரிசையும் வாங்க முகாமையாளர் சென்றிருந்தபொழுது, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த என்னை மேடையில் இருந்த சிலம்பொலியார் அடையாளம் கண்டார். ஒருவரை என்னிடம் அனுப்பினார். பரிசைப் பெற நானே மேடைக்கு வரவேண்டும் என்றார். முகாமையாளருடன் சேர்ந்து பரிசைப் பெற்றேன். சிலம்பொலியார் என் மீது கொண்ட அன்பும் பாசமும் வாஞ்சையும் அளப்பில.

கடந்த சில மாதங்களுக்கு முன், சிட்னியில் பழனியப்பனாரின் மகனுக்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்வுக்குப் போயிருந்தேன். பழனியப்பனாரின் மருமகள், சிலம்பொலியாரின் பெயர்த்தி முறையானவர். கொங்கு நாட்டவர். அங்கு சென்றதும் தெரிந்துகொண்டேன், மகிழ்ச்சியைப் பழனியப்பனாரிடம் தெரிவித்தேன்.

பங்குனி 27, 2043 (09.04.2012) மாலை சிலம்பொலியாரின் இல்லம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. திருவான்மியூரில் அருள்மிகு மருந்தீச்சரர் திருக்கோலுக்குத் தெற்கே சிலம்பொலியாரின் இல்லம்.

என்னை அழைத்துச் சென்றவர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

என் சிறைவாசம் தொடர்பாக, முதலமைச்சராகக் கலைஞர் சொன்ன பதில் தனக்கு இன்றும் நிறைவைத் தரவில்லை எனக் கூறினார்.

அறிஞர் அண்ணா, எம்ஜியார், கலைஞர் எனத் தொடர்ச்சியாக முதமைச்சர்களுடன் பணிபுரிந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்தார். ஈழத்துப் பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி பற்றிய தன் மதிப்பீடுகளைக் கூறினார்.

சிட்னியில் பழனியப்பனாரின் மருமகளைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தேன். சிலம்பொலியாரின் அண்ணன் பாவலர் முத்துசாமியின் மகன், எம்பிஏ படித்தவர், காந்தளகத்தின் தொடக்க காலத்தில் பொறுப்பாளராகப் பணிபுரிந்ததையும் நினைவு கூர்ந்தேன். அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், பாவலர் முத்துசாமி.

திருவான்மியூரில் 09.04.2012 அன்று பதிந்த காட்சிகளைக் காண்க, பகிர்க.

Share

About the Author

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

has written 95 stories on this site.

பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர். கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.