அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும்  காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 208

  1. திறமை வளர்த்திடு…

    சின்னப் பெண்ணே அழவேண்டாம்
    சீறிப் பாய்ந்திடு கொடுமைகண்டு,
    அன்னை தந்தை தனைப்போல
    அருந்துணை யாரும் இல்லையம்மா,
    உன்னை நெருங்கும் அனைவரையும்
    ஒன்றா யெண்ணி நம்பிடாதே,
    தன்னைக் காத்துக் கொண்டிடவே
    திறமை வளர்த்திடு தீயெனவே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. நேரமில்லை..
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    அவசர உலகில் வாழ்வதற்காய் உழைக்கும்..
    அன்னை தந்தை இருவருக்கும் நேரமில்லை..!!

    சற்று மூச்சு விடவும் நேரமில்லை..
    சிறிதேனும் பேசிச் சிரிக்கவும் நேரமில்லை..!!

    நான் சொல்வதைக் கேட்க நேரமில்லை..
    நான் வெல்வதைப் பார்க்கவும் நேரமில்லை..!!

    எனக்கு அமுது அளிக்க நேரமில்லை..
    என்னிடம் அன்பு செலுத்தவும் நேரமில்லை.. !!

    எனைக் கொஞ்சி மகிழ நேரமில்லை..
    எந்தன் கண்ணீர் துடைக்கவும் நேரமில்லை.. !!

    எனக்கு கதைகள் சொல்ல நேரமில்லை..
    எனக்கு கற்றுத் தரவும் நேரமில்லை.. !!

    எனக்கு முத்தம் தந்திட நேரமில்லை..
    என்னை உச்சி முகர்ந்திடவும் நேரமில்லை..!!

    எதிர்காலக் கனவில் வாழும் அவர்கட்கு..
    என்றுமே நிகழ்காலத்தை நினைக்கவும் நேரமில்லை..!!

    ஆதலால்.. அழுகையோ சிரிப்போ.. அனைத்துமே
    ஆயாவின் அரவணைப்பில்.. குழந்தைகள் காப்பகத்தில்..!!

  3. என் அழுகுரல் கேட்கவில்லையா ? என் பெற்றோர்களே ! உங்கள் கையில் நான் இருக்கவேண்டும் . உங்கள் அன்பு எனக்குக்கிடைக்குமா என அழும் என் அழுகுரல் கேட்கவில்லையா ? கைபேசி உங்கள் குழந்தைப்போல கைக்குள் வைத்து மார்பினிலே படுக்கவைத்து அதன் அழுகுரல் கேட்டதும் கைக்குள் அனைத்து வைக்கின்றீர்களே !!!என் அழுகுரல் கேட்கவில்லையா ???

  4. நம்பிக்கை

    அழுகின்ற பிள்ளைக்கு
    ஆறுதல் சொல்ல நினைத்தது மனம்
    வினாக்கள் எழுந்தன ஓராயிரம்
    வெந்த புண்ணில் வேலாய் பாயும்
    வார்த்தைகளால்

    அழுகின்ற பிள்ளைக்கு
    அன்னை பசியென்று பால் கொடுக்க
    அதையும் ஆபாசமாய் பார்க்கும் கண்கள்

    அழுகின்ற பிள்ளையை
    அள்ளி அணைத்து
    ஆசையோடு கொஞ்சுவதிலும்
    நஞ்சை கலந்துவிட்ட நயவஞ்சகர்கள்

    தரணியெங்கும் தலைவிரித்தாடும் வன்கொடுமைகள்
    மீண்டும் மீண்டும் அதையே பேசி
    வடுவாய் மாற்றிடும் வாய்களுக்கு
    போட்டிடு ஒரு பூட்டு

    வினை விதைத்தவன்
    வினை அறுப்பான்
    விட்டு விடு
    அழுகின்ற பிள்ளைக்கு
    ஆறுதல் சொல்ல
    இளம்பிஞ்சு நெஞ்சில்
    நஞ்சை விதைத்திடாதே
    நல்லதை நினைத்து விதைத்திடுவோம்
    இவள் மனதில் நம்பிக்கையை
    தீமைகள் மடிந்து
    புதிய பாரதம் உருவாகும்
    என்ற நம்பிக்கையை
    இவளுக்கு நாம் கொடுப்போம்

Leave a Reply to Shenbaga Jagatheesan

Your email address will not be published. Required fields are marked *