இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றி பெற்றுவிட்டார்; இது என்ன வெற்றி!?

0

நாகேஸ்வரி அண்ணாமலை

இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இது என்ன வெற்றி? 120 அங்கத்தினர்கள் உள்ள பாராளுமன்றத்தில் 35 இடங்களே பெற்றிருக்கிறார். இது ஓட்டு வங்கியில் 34 சதவிகிதம்தான். இன்னொரு தேர்தலைத் தவிர்ப்பதற்காகப் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் இடங்கள் பெற்றுவிட்டால் அந்தக் கூட்டுக் கட்சி அரசு அமைக்க முடியும். (இந்தியாவில் கர்நாடகாவில் 2018-ஆகஸ்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களே பெற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்ததுபோல்தான். 104 இடங்கள் வாங்கிய பிஜேபி 78 இடங்கள் வாங்கிய காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பாததால் ஜனதா தளத்திற்கு அதிர்ஷ்டம் அடித்தது.)

மற்றக் குட்டிக் கட்சிகள் வெள்ளை-நீலம் கட்சியின் தலைவர் கேன்ட்ஸோடு (இந்தக் கட்சிக்கும் 35 சீட்டுகள் கிடைத்திருக்கின்றன) சேர விரும்பாததால் நேத்தன்யாஹுவோடு சேர முடிவு எடுக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் நேத்தன்யாஹுவுக்கு அரசு அமைக்கும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

நேத்தன்யாஹு வன்மம் படைத்தவர்; தனக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்குவதில் கில்லாடி; ஊழல் புரிந்தவர்; பாலஸ்தீனர்களின் உரிமைகள் என்று வரும்போது அவர்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பவர். இவருக்கு ஐந்தாவது முறையாக – இஸ்ரேலின் ஸ்தாபகர் பென்-குரியனுக்குக் கிடைத்ததைவிட அதிக முறை – ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது. ஊழல்கள் புரிந்திருக்கிறார் என்று இவர்மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதம மந்திரியாகிவிட்டால் பிரதம மந்திரிக்குத் தண்டனை வழங்க முடியாது என்று சட்டம் இயற்றிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

இது இஸ்ரேலுக்கு சோதனையான சமயம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. அவர் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்கப் போவதால் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு அமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது, இஸ்ரேலின் ஜனநாயகத் தன்மைக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு வந்திருக்கிறது, அமெரிக்க யூதர்களுக்கும் இஸ்ரேலின் வலதுசாரி அரசுக்கும் இடையிலான உறவு முறிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறது.

நேத்தன்யாஹு காலத்தில் இஸ்ரேல் நிறையச் சாதனைகள் படைத்திருக்கிறது என்பது உண்மைதான். இவையெல்லாம் அமெரிக்காவின் உதவியால்தான் என்பதை மறுக்க முடியாது. இஸ்ரேல் தோன்றிய நாளிலிருந்தே அமெரிக்காவும் அமெரிக்க யூதர்களும் இஸ்ரேலுக்கு நிறையப் பண உதவியும் தொழில்நுட்ப உதவியும் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது ட்ரம்ப் உதவியும் நிறைய அளவில் கிடைத்திருக்கிறது. இரண்டு crooks-களும் ஒன்று
சேர்ந்திருக்கிறார்கள். இது உலகுக்கே நல்லதல்ல.

இதுவரை அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக உலகுக்குக் காட்டிக்கொண்டாவது இருந்தது. இப்போது அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்யாத சில காரியங்களை
ட்ரம்ப் செய்திருக்கிறார். அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றினார். போரில் சிரியாவிடமிருந்து கைப்பற்றிய, இதுவரை ஆக்கிரமித்திருந்த கோலன் ஹைட்ஸை இஸ்ரேலின் இறையாண்மைக்கு நேத்தன்யாஹு உள்ளாக்கிக்கொண்டபோது நேத்தன்யாஹுவின் வேண்டுகோளுக்கு இணங்க ட்ரம்ப்பும் அதை அங்கீகரித்தார். கிழக்கு ஜெருசலேமிலிருந்த அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடிவிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களில் நேத்தன்யாஹு ஓட்டுகளைப் பெற, பாலஸ்தீனர்களுக்குரிய இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் கட்டியிருக்கும் குடியிருப்புகளை இஸ்ரேலின் ஆளுகைக்குக் கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தார். பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கை இஸ்ரேல் போரில் பிடித்துக்கொண்டது முதல் தவறு. அதில் யூதர்களுக்காகக் குடியிருப்புகள் கட்டியது இரண்டாவது தவறு. இப்போது அதை இஸ்ரேலின் வசமாக்கிக்கொள்ள நினைப்பது அதைவிடப் பெரிய தவறு. இது சர்வதேசச் சட்டத்திற்கே விரோதமானது. இப்படிச் செய்தால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகும் சாத்தியமே இல்லை.

இஸ்ரேல் உருவானதிலிருந்து செய்த அட்டகாசங்களையெல்லாம் கண்டித்து ஐ.நா. பொதுச்சபை கொண்டுவந்த எந்தத் தீர்மானத்தையும் இஸ்ரேல் மதிக்கவில்லை; அது அப்படி நடந்துகொள்வதற்கு அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து அந்தத் தீர்மானங்களை முறியடித்துவிடுவதுதான் காரணம். இஸ்ரேலும் பாலஸ்தீனர்களும் கூடிப் பேசி இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லைகளை முடிவெடுக்க வேண்டும், இஸ்ரேலால் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட  பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவது பற்றி முடிவெடுக்க வேண்டும், ஜெருசலேமின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று 1995-இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தம் போட்ட எந்த ஷரத்தையும் இஸ்ரேலின் பிரதம மந்திரியாக 1996-இல் பதவியேற்ற நேத்தன்யாஹு நிறைவேற்றவில்லை.

ஆஸ்லோ ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதற்கு நேத்தன்யாஹுதான் காரணம். நேத்தன்யாஹு பிரதம மந்திரியாகப் பதவியேற்ற பிறகு ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்கா இருந்தது போல் இஸ்ரேலும் ஒரு இன ஒதுக்கல் நாடாக மாறிவிடும்; அதில் பாலஸ்தீனர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருக்காது. எல்லாப் பாலஸ்தீனர்களையும் பாலஸ்தீனத்தை விட்டே விரட்டிவிட்டு, இஸ்ரேல் யூதர்கள் மட்டுமே வாழும் ஒரு ஜனநாயக நாடாக விளங்க வேண்டும் என்ற நேத்தன்யாஹுவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *