இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(253)

செண்பக ஜெகதீசன்

கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.
-திருக்குறள் -575 (கண்ணோட்டம்)

புதுக் கவிதையில்…

அணிகலன் கண்ணுக்குக்
கண்ணோட்டம்,
அது இல்லாத
கண்ணது முகத்தில்
புண்ணெனவே கருதப்படும்…!

குறும்பாவில்…

அணிகலனாய்க் கண்ணை
அழகுபடுத்துவது கண்ணிறைந்த கண்ணோட்டமே,
அது இலாதது கருதப்படும் புண்ணெனவே…!

மரபுக் கவிதையில்…

அணிகலன் ஆயிரம் போட்டாலும்
அவற்றி லெல்லாம் சிறந்ததான
அணியாய்க் கண்ணில் கண்ணோட்டமே
அழகு படுத்திடும் அதிகமாயே,
துணிந்தே அறிஞர் சொல்லிடுவர்
தயையது இல்லாக் கண்ணதுதான்
பிணியது வந்த உடம்பிலதுவோர்
புண்ண தென்றே கருதலாமே…!

லிமரைக்கூ..

கண்ணோட்டம் உள்ளதுதான் கண்ணே
அணிகலனாயது அழகினையூட்டும் கண்ணுக்கே,
அஃதில்லாத கண்வெறும் புண்ணே…!

கிராமிய பாணியில்…

எரக்கமிருக்கணும் எரக்கமிருக்கணும்
கண்ணுல எரக்கமிருக்கணும்,
எப்பவுமே எரக்கமிருக்கணும்..
நகநட்டு எதுவும் வேண்டாம்,
கண்ணுக்கு நகையே
கண்நெறஞ்ச கண்ணோட்டந்தான்..
அது இல்லாத கண்ணயே
எல்லாரும் புண்ணுன்னுதான்
எண்ணுவாங்களே..
அதால
எரக்கமிருக்கணும் எரக்கமிருக்கணும்
கண்ணுல எரக்கமிருக்கணும்,
எப்பவுமே எரக்கமிருக்கணும்…!

Share

Comment here