-மேகலா இராமமூர்த்தி

பூமுகத்தில் அழுகை அரும்ப நின்றிருக்கும் மழலையைப் படம்பிடித்து வந்திருப்பவர் நித்தி ஆனந்த். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 208க்கு உகந்ததென்று தெரிந்தெடுத்துத் தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

நானிலத்தில் உயர்ந்த செல்வம் மாண்புடைய மழலைச் செல்வமே ஆகும். மழலையர் அற்ற மணவாழ்க்கை மணமற்ற வாழ்க்கையாகவும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையாகவும் மாறிப்போய்விடுவதைக் காண்கின்றோம். அதனால்தான் புதிதாகப் பிறந்த குழந்தையை ’மகிழ்ச்சிப் பெட்டகம்’ என்று குறிக்கும் வகையில் ’Bundle of Joy’ என்பர் ஆங்கிலத்தில்.

இங்கே ஒரு சிறுகுழந்தையின் முக வாட்டத்தையும் அக வருத்தத்தையும் பார்க்கும்போது நம்மையும் அது வேதனையில் வாடச் செய்கிறது; இவ்வாறு வருத்தமுற வைத்தது யார் எனத் தேடச் செய்கிறது.

இக்குழந்தையின் வருத்தத்துக்குப் பொருத்தமான கவிதை மருந்துதரக் காத்திருக்கும் கவிஞர் குழாத்தை வாழ்த்தி வரவேற்கின்றேன்!

*****

”அன்னை தந்தையின் அருந்துணையோடு, திறமையைத் தீயாய் வளர்த்து முன்னேறு!” என்று குழந்தைக்கு அறிவுரை கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

திறமை வளர்த்திடு…

சின்னப் பெண்ணே அழவேண்டாம்
சீறிப் பாய்ந்திடு கொடுமைகண்டு,
அன்னை தந்தை தனைப்போல
அருந்துணை யாரும் இல்லையம்மா,
உன்னை நெருங்கும் அனைவரையும்
ஒன்றா யெண்ணி நம்பிடாதே,
தன்னைக் காத்துக் கொண்டிடவே
திறமை வளர்த்திடு தீயெனவே…!

*****

என்னருமைப் பெற்றோரே! சிணுங்கும் கைப்பேசியைக் குழந்தையாய் அள்ளி அணைத்தது போதும்! உம் அன்புக்கு ஏங்கி நான் அழும் குரல் காதில் கேட்கவில்லையா? என்று குழந்தைக்குப் பரிந்து குரல்கொடுக்கிறார் திருமிகு. கே. அனிதா.

என் அழுகுரல் கேட்கவில்லையா? என் பெற்றோர்களே!
உங்கள் கையில் நான் இருக்கவேண்டும்!
உங்கள் அன்பு எனக்குக் கிடைக்குமா என அழும் என் அழுகுரல் கேட்கவில்லையா?
கைப்பேசி உங்கள் குழந்தைபோல கைக்குள் வைத்து மார்பினிலே படுக்கவைத்து அதன் அழுகுரல் கேட்டதும் கைக்குள் அணைத்து வைக்கின்றீர்களே!!!
என் அழுகுரல் கேட்கவில்லையா???

*****

அழுகின்ற பிள்ளைக்குப் பால்கொடுக்கும் அன்னையை(யும்) ஆபாசமாகப் பார்க்கும் காம எண்ணத்தைப் புதைப்போம்! பிஞ்சின் நெஞ்சில் நஞ்சினை விதைக்காமல் நல்லதை விதைப்போம்! என்று காலத்திற்கேற்ற பொருளுரை புகல்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

நம்பிக்கை

அழுகின்ற பிள்ளைக்கு
ஆறுதல் சொல்ல நினைத்தது மனம்
வினாக்கள் எழுந்தன ஓராயிரம்
வெந்த புண்ணில் வேலாய்ப் பாயும்
வார்த்தைகளால்

அழுகின்ற பிள்ளைக்கு
அன்னை பசியென்று பால் கொடுக்க
அதையும் ஆபாசமாய் பார்க்கும் கண்கள்

அழுகின்ற பிள்ளையை
அள்ளி அணைத்து
ஆசையோடு கொஞ்சுவதிலும்
நஞ்சைக் கலந்துவிட்ட நயவஞ்சகர்கள்

தரணியெங்கும் தலைவிரித்தாடும் வன்கொடுமைகள்
மீண்டும் மீண்டும் அதையே பேசி
வடுவாய் மாற்றிடும் வாய்களுக்கு
போட்டிடு ஒரு பூட்டு

வினை விதைத்தவன்
வினை அறுப்பான்!
விட்டு விடு
அழுகின்ற பிள்ளைக்கு
ஆறுதல் சொல்ல
இளம்பிஞ்சு நெஞ்சில்
நஞ்சை விதைத்திடாதே!
நல்லதை நினைத்து விதைத்திடுவோம்
இவள் மனதில் நம்பிக்கையை!
தீமைகள் மடிந்து
புதிய பாரதம் உருவாகும்
என்ற நம்பிக்கையை
இவளுக்கு நாம் கொடுப்போம்!

*****

மழலையின் அழுகைக்கு மருந்தாய் நல்லுரைகளைக் கவிதைகளில் கலந்து தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

நேரமில்லை…!

அவசர உலகில் வாழ்வதற்காய் உழைக்கும்
அன்னை தந்தை இருவருக்கும் நேரமில்லை..!!

சற்று மூச்சு விடவும் நேரமில்லை..
சிறிதேனும் பேசிச் சிரிக்கவும் நேரமில்லை..!!

நான் சொல்வதைக் கேட்க நேரமில்லை..
நான் வெல்வதைப் பார்க்கவும் நேரமில்லை..!!

எனக்கு அமுது அளிக்க நேரமில்லை..
என்னிடம் அன்பு செலுத்தவும் நேரமில்லை.. !!

எனைக் கொஞ்சி மகிழ நேரமில்லை..
என்றன் கண்ணீர் துடைக்கவும் நேரமில்லை.. !!

எனக்குக் கதைகள் சொல்ல நேரமில்லை..
எனக்குக் கற்றுத் தரவும் நேரமில்லை.. !!

எனக்கு முத்தம் தந்திட நேரமில்லை..
என்னை உச்சி மோந்திடவும் நேரமில்லை..!!

எதிர்காலக் கனவில் வாழும் அவர்கட்கு..
என்றுமே நிகழ்காலத்தை நினைக்கவும் நேரமில்லை..!!

ஆதலால்.. அழுகையோ சிரிப்போ.. அனைத்துமே
ஆயாவின் அரவணைப்பில்.. குழந்தைகள் காப்பகத்தில்..!!

நிகழ்காலத்தை நினைக்கவும், மகிழ்வோடு மழலையைக் கொஞ்சவும் நேரமின்றிப் பொருள்தேட உழைக்கும் பெற்றோரின் அருளையும் அன்பையும் வேண்டி நிற்கும் மழலையின் மனவுணர்வுகளை மாண்போடு காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி  208-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கு மிக்க நன்றி.

Leave a Reply to ஆ.செந்தில் குமார்

Your email address will not be published. Required fields are marked *