ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!

0

இன்னம்பூரான்

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5]

டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்றுப் பேராசிரியர், என்னுடைய மாமனார். மணிக் கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப் புனல் காலத்துச் செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, என் மனத்தில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்துகொண்டேன். அது மனத்தில் உதித்தது, இன்றும்.

“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹம் அன்றோ! ஊற்றுகளும் உப நதிகளும் கிளை நதிகளும் காட்டாறுகளும் நீரோடைகளும் நீர் வீழ்ச்சிகளும் கால்வாய்களும் வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்கா மாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவ ப்ரயாக், ருத்ர ப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்ப சாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிற நீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்துகொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்…”

நூற்றாண்டின் சில தினங்கள், சோக தினங்களாக அமையும். எந்த வரலாறும் அவற்றைப் புறக்கணிக்க முடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தர். காந்தீயவாதி. காந்திஜி சத்யாக்ரஹம் தொடங்கியதை அடுத்து, நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத்தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின் அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித் தீயாகப் பரிமளித்து, குருதிப் புனலாக அமைந்துவிட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று.

நீதி மன்றத்தைப் புறக்கணித்து, மக்களில் சிலரைச் சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்தச் சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறைச் சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுதீன் கிச்லூவும், டாக்டர் சத்யபாலும் கைது செய்யப்பட்டு தர்மசாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.

[டாக்டர் சைஃபுதீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென அவரைப் பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கிக் குத்திய வண்ணம், அவர் ஆவேசமாகப் பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947இல் இந்தியாவின் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்காரர், இவர் தான். அந்தக் கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்]

போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ஆம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப் போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி.

ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப் பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக்கில், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை. மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப் பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5.50-இலிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத் தள்ளினான். தாங்க முடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிப்புனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்துச் சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம், கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, இந்தக் குருதிப் புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர், மன்னிப்பு கேட்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். 2019ஆம் வருடம், ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது.

நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்த தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.

Pic Courtesy: Wikipedia

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *