இலக்கியம்கவிதைகள்

எண்ணியெண்ணி அழுகின்றோம்!

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

இரக்கமின்றி கொலைசெய்ய
எம்மதமும் சொன்னதுண்டா?
வணக்கத்தலம் வன்முறைக்கு
வாய்த்ததென்றும் சொன்னதுண்டா?

அரக்ககுணம் மனமிருத்தி
அனைவரையும் அழிக்கும்படி
அகிலமதில் எம்மதமும்
ஆணையிட்டு சொன்னதுண்டா!

ஈஸ்டர்தின நன்னாளில்
இலங்கையினை அதிரவைத்த
ஈனச்செயல் தனைநினைக்க
இதயமெலாம் நடுங்குகிறதே!

துதிபாடி துதித்தவர்கள்
துடிதுடித்தார் குருதியிலே
அதையெண்ணி அகிலமுமே
அழுதேங்கி நிற்கிறதே!

பிராத்தனைக்குச் சென்றவர்கள்
பிணமாகிக் கிடந்தார்கள்
பேயாட்டம் நடந்தேறி
பெருந்துயரே எழுந்ததுவே

இன்னுயிரை ஈந்தளித்த
யேசுபிரான் சன்னதியில்
இரத்தவெறி அரங்கேறி
எடுத்ததுவே பலவுயிரை!

மதங்கடந்து இனங்கடந்து
மக்கள்மனம் சேரவேண்டும்
மதவெறியை இனவெறியை
மனம்விட்டு அகற்றவேண்டும்

புவிமீது பொல்லாங்கு
நிகழ்த்துகின்றார் அனைவருமே
அறவழியில் வருவதற்கு
ஆண்டவனை வேண்டிநிற்போம் !

ஈழத்தின் துயரமதை
எண்ணியெண்ணி அழுகின்றோம்
வாழுகின்ற வயதினிலே
மண்மீது சாய்ந்தார்கள்,

ஆழமாய்ப் பதிந்துவிட்ட
அவலமதை நினைக்கையிலே
அழுகின்ற நிலைமாற
ஆண்டுபல ஆகிடுமே!

                                

                               

Comments (1)

 1. மூன்றாம் உலகப் போர்

  சி. ஜெயபாரதன், கனடா

  ஈழத்தில் இட்ட மடி வெடிகள்,
  மத வெறி வெடிகள் !
  திட்ட மிட்டு மானிடரைச்
  சுட்ட வெடிகள் !
  காட்டு மிராண்டி களின்
  கை வெடிகள் !
  முதுகில் சுமந்து தட்டிய
  நடை வெடிகள்,
  அப்பாவி
  அமைதி மனிதர் மீது
  விட்ட இடி வெடிகள் !
  பொதுநபரைச் சுட்ட
  தனி வெடிகள் !
  எப்படி இத்தனை மடி வெடிகள்
  ஈழத்தில் இறங்கின ?
  தென் ஆசியா வுக்கு ஏற்று மதியா ?
  சின்ன வெடிகள் !
  சிரியாவி லிருந்து
  ஶ்ரீலங்கா
  புகுந்த கனல் வெடிகள் !
  எச்சரிக்கை இது !
  இனி மத வெடிகள் இந்தியாவைக்
  குறி வைக்கலாம் !
  மூர்க்கர் இடும் மதப்போர் தான்
  மூன்றாம் உலகப் போர் !

  +++++++++++++

Comment here