இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(256)

-செண்பக ஜெகதீசன்…

தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது.

-திருக்குறள் -491(இடனறிதல்)

புதுக் கவிதையில்…

தக்க இடத்தினைத்
தேர்ந்தெடுக்குமுன்
பகைவரைத்
தாக்கும் செயலைத்
தொடங்கிடாதே..

அவரை
எளியரென்றெண்ணி
எள்ளி நகையாடாதே…!

குறும்பாவில்…

பகைவரைத் தாக்க, தக்கயிடம்
தேர்ந்தெடுக்குமுன் தொடங்காதே தாக்குதலை,
எளியரென்றவரை ஏளனம்செய்யாதே…!

மரபுக் கவிதையில்…

பகைவர் தம்மைத் தாக்கிடத்தான்
பொருத்த மான இடமதையே
வகையாய்த் தெரிந்தே ஆய்ந்தறிந்து
வழிவகை நன்றாய்த் தெரிந்தபின்னே
பகையினை முடிக்கும் செயலினிலே
புகுதல் வேண்டும் தெளிவுடனே,
நகைத்திடல் வேண்டாம் எதிரியையே
நிலையில் குறைவாம் நினைவினிலே…!

லிமரைக்கூ..

தேர்ந்தெடு ஆய்ந்தறிந்தே இடத்தை
தொடங்கிடு அதன்பின் பகைவரைத்தாக்கும் செயலை,
செய்யாதேயவரை எள்ளிடும் மடத்தை…!

கிராமிய பாணியில்…

எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
செயல்படணும் செயல்படணும்
எடமறிஞ்சி செயல்படணும்..

எதிரியத் தாக்கப் போகுமுன்னே
அதுக்கு
ஏத்த எடமாப் பாத்துக்கணும்,
எடத்தப் பாத்துத் தெரிஞ்சபின்னே
தாக்கிற வேலயத் தொடங்கவேணும்..

எதிரிய எப்பவுமே
எளக்காரமா நெனைக்கவேண்டாம்..

எப்பவும்
எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
செயல்படணும் செயல்படணும்
எடமறிஞ்சி செயல்படணும்…!

 

Comment here