காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 10

0

-மேகலா இராமமூர்த்தி

இருபத்தோராம் நூற்றாண்டு இணையமற்று, கைப்பேசியற்று வாழ்வதே மாந்தகுலத்துக்கு சாத்தியமற்ற ஒன்று எனும்படியாகச் சமூக சூழலை மாற்றிவிட்டிருக்கின்றது. உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொழில்நுடங்கள் துணைநிற்கின்றன; காசிநகர்ப் பேசும் புலவருரையைக் காஞ்சியில் நேரடியாகவே கேட்பதற்கு விழியங்கள் நிகழ்படங்கள் வழிசெய்துவிட்டன.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாணிகம் களைகட்டுகின்றது. முகநூல் நிறுவனர் திரு. மார்க் சக்கர்பர்க் (Mark E. Zuckerberg) முகநூல் விளம்பரங்கள் வாயிலாகவே கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றார். சாமானிய மக்களுங்கூடத் தங்கள் வாணிகத்தைப் பெருக்க புலனக் குழுமங்களைப் பயன்படுத்திவருகின்றனர்.

இவ்வாறு வாணிகம், பொழுதுபோக்கு, கருத்துப் பரிமாற்றம், காட்சிப் பரிமாற்றம் என்று பல்வேறு வகைகளில் சமூக வலைத்தளங்கள் மக்களுக்குப் பயனளித்தாலும் இவற்றால் விளையும் ஆபத்துக்களும் நாளுக்குநாள் அதிகரித்தே வருவதைக் காண்கின்றோம். ஆம், தொழில்நுட்ப வசதிகளின் துணையோடு இன்றைய தேதியில் நாம் ஒரு தனிநபரையோ, அரசியல்கட்சித் தலைவரையோ மிக மோசமானவராகவும் சித்திரிக்க முடியும்; உலக உத்தமராகவும் உருமாற்றிக் காட்டவியலும். அரசியல் காழ்ப்பின் காரணமாகக் கட்சிகள் ஒன்றையொன்று இழித்தும் பழித்தும் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான மீம்களும் (memes), வக்கிரப் பதிவுகளும் தேர்தல் காலங்களில் உக்கிரமடைவதைக் காணமுடிகின்றது.

தலைமைப் பதவிகளுக்குப் போட்டியிடும் அரசியலாளர்கள் சமூக வலைத்தளங்களைத் தம் அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அநாகரிகப் போக்கும் உலகளாவிய ஒன்றாகவே சமீப காலங்களில் மாறிவிட்டது.

கேம்பிரிட்ஜ் அனலட்டிகா எனும் அரசியல் தரவுச் சேகரிப்பு நிறுவனம் (Cambridge Analytica, a political data firm) முகநூலோடு இணைந்து அமெரிக்க அதிபர் திரம்புக்கு (Donald J. Trump) ஆதரவாகச் செய்த சில திரிபு வேலைகள் அவரை அதிபர் நாற்காலியில் அமரவைக்கப் பேருதவி புரிந்திருக்கின்றன என்பதை அறிகின்றபோது, பொதுமக்களுக்கு நன்முறையில் பயன்படவேண்டிய, நேரிய தகவல்களைத் தரவேண்டிய சமூக வலைத்தளங்கள் எத்துணைத் தவறான வழிகாட்டுதல்களைப் பணத்துக்காகச் செய்கின்றன என்ற வருத்தமே மேலிடுகின்றது.

முகநூலில் இளம்பெண்களைக் குறிவைத்து அவர்களிடம் நண்பர்களாகத் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கின்ற காமுக இளைஞர் கூட்டம் அப்பெண்களைப் போலியான காதல் வலையில் வீழ்த்தி, அவர்களின் ஒழுக்கத்துக்குக் களங்கம் விளைவித்துக் காசு பார்த்துவருவதையும், அதற்கு உடன்பட மறுப்போரை எதுவும் செய்யத் துணிவதையும் சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. இவைபோதாவென்று மார்ஃபிங் (Morphing) முறையில் ஒரு பெண்ணின் உடலையும் மற்றொரு பெண்ணின் தலையையும் இணைத்துச் செய்யும் ஆபாச அக்கிரமங்களுக்கும் அளவேயில்லை. இதனால் எத்தனையோ இளம்பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலைக்கு ஆளாகின்றார்கள். இவற்றையெல்லாம் நோக்குகையில், மனிதர்களின் நிம்மதிக்கும் நல்வாழ்வுக்கும் உலை வைக்கும் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடுகள் தேவையா என்ற வெறுப்பும் ஏற்படவே செய்கின்றது.

விவரமறியாப் பள்ளி, கல்லூரி மாணவிகள்தாம் இத்தொழில்நுட்பங்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் விபரீதங்களை உணர்ந்துகொள்ளாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றார்கள் என்றால் திருமணமாகிக் குழந்தைபெற்ற பொறுப்புள்ள தாய்மார்களும்கூடத் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் தம் அந்தரங்கங்களை முகமறியாத் தறுதலைகளிடம் பகிர்ந்துகொண்டு வம்பை விலைகொடுத்து வாங்குகின்றார்கள்.

வேறு சில இல்லத்தரசிகளோ இல்லறக் கடமைகளை மறந்து, பிள்ளைகளைப் பேணும் பொறுப்பையும் துறந்து, சமூக வலைத்தளங்கள் (social media), புலனம் (WhatsApp), யூ ட்யூப் (You Tube) முதலியவற்றிலேயே மூழ்கிக் குடும்ப வாழ்வையே குட்டிச்சுவராக்கிக் கொள்கின்றனர்.

தீபத்தை வைத்துத் திருக்குறளும் படிக்கலாம்; குடியிருப்பையும் எரிக்கலாம் என்பதுபோல் சமூக வலைத்தளங்களும் இருவிதமான வாய்ப்புக்களை மக்களுக்கு வழங்குகின்றன. அவ் வாய்ப்புக்களை நல்லவகையில் பயன்படுத்தி முன்னேறுவதும் தீயவகையில் பயன்படுத்திச் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் அவரவர் கைகளிலேயே உள்ளது.

”தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்…”
என்பார் திருமூலர். ஆகையால் அவரவரும் தம்முடைய இயல்பையும், தமக்கு நன்மை பயப்பது எது, தீமை பயப்பது எது என்பதையும் தெளிவாக உணர்ந்து நன்றின்பால் தம் அறிவைச் செலுத்தினாலே எத்துணையோ ஆபத்துக்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளலாம்.

இதுவரை இக்கட்டுரைத் தொடரில் பேசப்பட்டவற்றைத் தொகுத்துரைப்பதென்றால்…அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கிய பண்டைத்தமிழ்ப் பெண்கள் சிறிது சிறிதாகத் தம் சுதந்தரத்தையும் அதிகாரத்தையும் இழந்தனர். ஆடவர்க்கு அடிமைகளாய், அவர்தம் மோகம் தீர்க்கும் போகப்பொருளாய் மாற்றப்பட்ட அப்பெண்கள் கல்விக் கண்ணை இழந்து குருடராய்ப் பலகாலம் அறியாமை இருட்டில் தவித்திருந்தனர். இந்த அவலநிலை அகன்று அவர்கள் மீண்டும் கல்வி எனும் கண்ணொளி பெற்றது ஆங்கிலேயர் வருகைக்குப் பின்பே.

இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் பன்முகத் திறனும் வெளிப்படுவதற்கு அச்சு ஊடகங்களும், வானொலி, தொலைக்காட்சி போன்ற சமூக ஊடகங்களும் வழிவகை செய்தன. அதன்வாயிலாய், கல்விகற்ற பெண்கள் பலர் கதை கட்டுரை கவிதை என்று பல்வேறு வடிவங்களில் தம் எண்ணங்களை எழுத்துக்களாக்கிக் கதாசிரியர்களாய், கவிதாயினிகளாய் முத்திரை பதிக்கத் தொடங்கினார்கள்.

இணையம் வந்த பின்னரோ யாரும் எழுத்தாளராகலாம்; எவரும் கவிஞராகலாம் என்ற கட்டற்ற சுதந்தரம் கிட்டியுள்ளது. அம்மட்டோ? தேவையானதைப் படிக்கலாம்; காண விரும்புவதைக் காணலாம்; திறன்பேசிச் செயலிகளின் உதவியோடு உரையாற்றலாம்; ஆடலாம், பாடலாம், நடிக்கலாம் என்ற நிலை சாத்தியப்பட்டிருக்கின்றது. நாம் பேசுவதை அப்படியே எழுதிவிடும் மென்பொருள்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இவ்வளவு வசதிகளும் நடைமுறைக்கு வந்துவிட்ட 21ஆம் நூற்றாண்டை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் பொற்காலம் என்று கூறினும் மிகையில்லை.

ஆகவே, நம் மக்கள் குறிப்பாகப் பெண்கள் தம் பன்முக ஆற்றலையும் தொழில்நுட்ப அறிவையும் கவைக்குதவாத வெட்டி விவாதங்களிலும், தேவையற்ற பொழுதுபோக்குகளிலும், அரசியல்வாதிகளின் பொய்யுரைகளைக் கேட்பதிலும் வீணடிக்காது, அறிவார்ந்த வகைகளில் பயன்படுத்தத் தொடங்கினால் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தமுடியும்; உலகுக்கே உதாரண மங்கையராய்த் திகழமுடியும்!

அத்தோடு, சமூகத்தில் நிகழ்கின்ற அவலங்களையும், பெண்களுக்கு எதிரான பாலியல், குடும்ப வன்முறைகளையும் கண்டிப்பதற்கும் களைவதற்கும் வலைத்தளங்கள், புலனக் குழுக்களைச் சமூக நலத்தில் நாட்டங்கொண்ட பெண்கள் பயன்படுத்தலாம். வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அவர்களுக்குச் சட்டரீதியான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவது போன்றவற்றையும் செய்யலாம். இம்முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பொருட்செலவு ஏதுமில்லை; அருள்மனமும் சமூகப் பொறுப்புணர்ச்சியுமே தேவை!

தாழ்வுற்றுத் தளைப்பட்டு கிடந்த நம் பெண்கள், பூட்டிய இருப்புக்கூட்டின் கதவுகளைத் திறந்துகொண்டு சிம்புள் பறவைகளாய்ச் சிறகுவிரித்துப் பறக்கத் தொடங்கிவிட்டனர். இனி ஆண்களுக்கு நிகராக… ஏன்… அவர்களையும் மிஞ்சும் வகையில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை நிகழ்த்த வேண்டும்; சரித்திரம் படைக்க வேண்டும்; வறியோரின் தரித்திரம் துடைக்க வேண்டும்!

பெண்களே! உம் வளர்ச்சியைத் தடைசெய்யும் இடையூறுகள் அனைத்தையும் தன்னம்பிக்கை எனும் உளிகொண்டு தகர்த்தெறியுங்கள்! துணிச்சலெனும் கவசமணிந்து, அறிவின் துணையோடு வாழ்க்கைப் பாதையில் நடைபோடுங்கள்!

வெற்றி நிச்சயம்!

[முற்றும்]

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *