இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(257)

-செண்பக ஜெகதீசன்

எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு.

-திருக்குறள் -467(தெரிந்து செயல்வகை)

புதுக் கவிதையில்…

செய்யத்தகுந்த செயல்களையும்
செய்து முடிக்கும் வழிகளை
ஆராய்ந்து அறிந்தபின்
துணிந்து தொடங்கவும்..

தொடங்கியபின்
எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம்
என்பது
தவறாகிவிடும்…!

குறும்பாவில்…

செய்துமுடிக்கும் வழிகளை
ஆராய்ந்தறிந்தபின் செயல்தொடங்கு,
தொடங்கியபின் எண்ணுதல் தவறாகும்…!

மரபுக் கவிதையில்…

செயலைச் செய்யத் தொடங்குமுன்னே
செயல்படும் வழிவகை தெரிந்தவைதான்
பயன்படும் முறைகளை ஆய்ந்தறிந்தே
புறப்படு செயலினைத் தொடங்கிடவே,
செயல்படத் தொடங்கி நடக்கையிலே
செயல்வகை எண்ணலாம் என்பதாலே
பயனது யேதும் வருவதில்லை
பழியாய்ச் சேரும் இழுக்கதுவே…!

லிமரைக்கூ..

செயல்படுமுன் ஆய்ந்தறிந்திடு வழியை,
செயலதைத் தொடங்கியபின் எண்ணிக்கொள்ளலாமென்பது
பயனிலாதுதரும் இழுக்காம் பழியை…!

கிராமிய பாணியில்…

எறங்கு எறங்கு செயலுல எறங்கு,
எல்லாம் நல்லாத் தெரிஞ்சபின்னே
எறங்கு எறங்கு செயலுல எறங்கு..

வழிவகயெல்லாந் தெரிஞ்சபின்னே
துணிச்சலா செயலுல எறங்கு,
செயலச் செய்யத் தொடங்கிப்புட்டு
அப்புறம் யோசிக்கலாமுண்ணு இருந்தா
அதுவே பெரிய தப்பாப்போவும்..

அதால
எறங்கு எறங்கு செயலுல எறங்கு,
எல்லாம் நல்லாத் தெரிஞ்சபின்னே
எறங்கு எறங்கு செயலுல எறங்கு…!

 

Comment here