(Peer Reviewed) சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

0

ப.சுடலைமணி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி – 642 107
மின்னஞ்சல்: sudalaimani77@gmail.com

சு. வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

புனைகதை எழுத்தாளர்கள் தங்களிடம் அதிக இணக்கம் கொண்ட மொழியைக் கருவியாகப் பயன்படுத்தி, தாங்கள் கண்ட மனிதர்களின் உலகினை மறுவுருவாக்கம் செய்வதில் பெரும் வெற்றியடைகின்றனர். இந்த வெற்றியை அடையும் படைப்பாளர்களின் படைப்புகளும் வாசகர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகின்றன. படைப்பின் வழியாக வாழ்க்கையைப் பதிவு செய்யப் பிரத்யேகமான மொழியைக் கொண்ட எடுத்துரைப்பு முறைகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் படைப்பாளனுக்கு ஏற்படுகின்றது. அறிவார்ந்த வாசகனிடம் தன்னுடைய படைப்புகளைக் கொண்டு சேர்க்க புதுமையான எடுத்துரைப்பு முறைகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டிய நிர்பந்தம் படைப்பாளனுக்கு ஏற்படுகிறது.

புதுமையான எடுத்துரைப்பின் வழி கதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மொழியை முழுமையாக தன் ஆளுமைக்குள் கொண்டுவர வேண்டும். சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை இணைத்துத் தொடர்ச்சியான ஒழுங்குமுறைக்குள் கதையினை அமைக்க வேண்டும். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் படைப்பாளன், அதனைப் படிக்கும் வாசகனிடமும் நிகழ்ச்சியின் இணைவு முறைகளைத் தெளிவாகப் புலப்படுத்த வேண்டும்.

புனைகதையினை எடுத்துரைப்பதற்கு நிகழ்ச்சிகளை இணைத்து ஓர் அமைப்பாக மாற்றுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நிகழ்ச்சிகளை இணைப்பதன் மூலம் சிறந்த கதையினைக் கட்டமைத்து விடலாம். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு  எடுத்துரைப்பியலில் சில விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. விதிமுறைகளின்படி நிகழ்ச்சிகளைக் காலம் சார்ந்தும், காரண காரியம் சார்ந்தும் ஒருங்கிணைக்கலாம். சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ என்ற சிறுகதையில் எடுத்துரைப்புத் தொடரொழுங்கு முறைகளின் கட்டமைப்புகளை இக்கட்டுரையில் ஆராயலாம்.

‘செத்துப் போ… செத்துப் போ… என்று வழி முழுக்கத் திட்டிக்கொண்டே வந்தார் அப்பா’ என்ற ஒரு வரியில் அமைந்த எடுத்துரைப்பிலிருந்து சு.வேணுகோபால் கதையினைத் தொடங்குகிறார். கதையின் தொடக்க வாக்கியத்தைப் படிக்கும் போது, இந்த மொழி, யாருடைய குரல், யாரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகனிடம் எழுகிறது. இந்த வரியின் மூலமாக கதையினைத் தொடர்ந்து படிப்பதற்கான ஆர்வத்தினை முதலில் ஏற்படுத்திவிடுகிறார். கதை நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பதற்கான முன்னோட்டமாக இந்த வரியை அழுத்தம் கொடுத்து அமைத்துள்ளார்.

‘விமலா, அவரது பேச்சுக்குப் பதில் சொல்லும் உத்தேசத்தில்லை. காலையில் ரயில் ஏறியதிலிருந்து அப்பா துப்புகிறாற்போல் விதவிதமான வார்த்தைகளில் திட்டுகிறார்.’ இந்த எடுத்துரைப்பைப் படித்தவுடன், விமலாவை எதற்காக அவளின் அப்பா திட்டுகிறார் என்ற கேள்வி எழுகிறது. அதே நேரத்தில் விமலா என்ற பாத்திரத்தின் அறிமுகமும் நடந்துவிடுகிறது. இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன.

1. விமலா தன்னுடைய தந்தையுடன் பயணித்தல்
2. விமலாவின் தந்தை விமலாவைத் தொடர்ச்சியாகத் திட்டுதல்

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இணையும் இடத்தில் கதைக்கான கச்சாப்பொருள் மறைந்து மையம் கொள்ள இருப்பதை வாசகன் ஓரளவு தன்னுடைய பொதுப்புத்தி கொண்டு புரிந்துகொள்வான். இந்த இடத்தில் எந்தவிதமான தொடரொழுங்கும் இல்லை. ஆனால் கதையினைத் தொடங்கிப் பனுவலாக உருமாற்றம் செய்ய ஏதேனும் ஒரு காரண காரியத்தினைக் கதைசொல்லி ஏற்படுத்த வேண்டும் என்பதனை வாசக மனம் இயல்பாகவே விரும்புகிறது. வாசகன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த இடத்தில் காரண காரியத்துடன் நிகழ்ச்சிகளை அமைக்கக் கதைசொல்லி முடிவு செய்துவிட்டதை அறிய முடிகின்றது.

இரயிலில் பயணம் செய்யும் விமலா அப்பாவின் பேச்சுக்குப் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறாள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் விமலா கண்மூடிச் சாய்கிறாள். மெதுவாகத் தன் வாழ்க்கையில் நடந்து முடிந்த பழைய நிகழ்வுகளை மனத் திரையில் ஓடவிடுகிறாள். விமலாவின் எண்ண ஓட்டங்களை எடுத்துரைப்புடன் ஊடு இழையாக இணைத்துக் கதை கூறுகின்றார்.

விமலாவின் எண்ண ஓட்டங்களைக் கதையாக அமைத்துள்ள வேணுகோபால், விமலாவைத் தன்மைக் கூற்று முறையிலேயே கதை கூற வைத்துள்ளார். விமலா கதைசொல்லியாக இந்த இடத்தில் இருந்தாலும் இடை இடையே கதைசொல்லியும்   கதை கூறுகின்றார். விமலாவை முழுவதுமாகப் படர்க்கையில் வைத்துக் கதை கூறுவதைத் தவிர்த்துள்ளார். விமலா கதைசொல்லியாகச் செயல்படும் பனுவல் பகுதிகளை மிகவும் நுட்பமாக அமைத்துள்ளார்.

1. விமலாவை ராஜேந்திரன் பெண் பார்த்தல்
2. விமலா ராஜேந்திரன் திருமணம் நடைபெறுதல்
3. முதல் இரவு உரையாடல்கள்
4. திருமண மொய்ப்பணத்தை கிருஷ்ணன் அபகரித்தல்
5. ராஜேந்திரனின் மனப்பிறழ்வு.

மேற்கண்ட ஐந்து நிகழ்ச்சிகளையும் விமலாவின் மூலமாக காட்சிப்படுத்திவிடுகின்றார். ஐந்து நிகழ்ச்சிகளும் காரண காரியம் சார்ந்தும் இணைந்தும் காணப்படுகின்றன. விமலாவின் பார்வைக் கோணத்தில் கதை நிகழ்ச்சிகள் வாசகனுக்குக் குவிமையப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நிகழ்ச்சிகளுக்கும் காலம் சார்ந்த தொடரொழுங்கும் அமைந்து இருப்பதைக் காண முடிகின்றது. கதையில் இதுவரை இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகளை எந்தக் கோணத்தில் உற்று நோக்கினாலும், விமலாவை அவளது அப்பா திட்டியதற்கான காரணம் புலப்படவில்லை. விமலாவின் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. விமலாவின் அப்பாவிற்கு விமலா மீது ஏற்பட்ட கோபத்திற்கான காரணம் எங்கும் இல்லை. கோபத்திற்கான காரணம் எந்த இடத்தில் கதையின் இயங்குதளத்தில் இணைக்கப்படும் என்பதையும் முன்னதாக அறிய முடியவில்லை.

கதை நிகழ்வுகள் அனைத்தும் காரண காரியத் தொடரொழுங்கு இழையால் சேர்த்து இணைக்கப்பட்டிருந்தாலும் கதைக்கான மையத்தை ஐந்து நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டு அவதானிக்க முடியவில்லை. ‘காலம் சார்ந்தும், காரண காரியம் சார்ந்தும் சிந்தித்துப் பழக்கப்பட்டுப்போன மனித மூளை, நிகழ்ச்சிகளை இணைத்துக் கதையாக வளர்த்தெடுத்துக்கொள்கிறது. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் காரண காரியக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் போது கதையில் பிரச்சினை எழுவதற்கு வழியில்லாமல் போய்விடும். ஆனால் உண்மையில் பனுவலின் உயிரே பிரச்சினையில் தான் மையம் கொண்டிருக்கிறது.’ என்ற பஞ்சாங்கத்தின் கூற்றினை முன்வைத்து கதையை ஆராயும் போது சில உண்மைகள் வெளிப்படுகின்றன.

கதையின் முரண், விமலாவின் எடுத்துரைப்பைத் தாண்டி வேறு எங்கோ மையம் கொண்டுள்ளது. இந்தப் பனுவலில் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்வதுதான் மைய நிகழ்ச்சி போன்று புனையப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த நிகழ்ச்சியானது விமலாவின் எண்ணவோட்டத்தின் மூலமாகக் கூறப்படவில்லை. விமலாவின் எடுத்துரைப்பை ஓர் இடத்தில் யதார்த்தமாக முடிவுக்குக் கொண்டு வருகிறார். கதையின் உண்மையான பிரச்சினையை வாசகனுக்குக் கடத்தும் பணியைக் கதைசொல்லி ஏற்கிறார். விமலாவின் கதைசொல்லிப் பணியைத் தக்க இடத்தில் பறித்துவிடுகிறார்.

பனுவலின்படி, மிகச் சரியாகக் கூறுவதென்றால் ராஜேந்திரன், கிருஷ்ணனிடம் கடன் வாங்கிய செய்தியையும், அதற்காகத் திருமண மொய்ப்பணத்தை கிருஷ்ணன் அபகரித்துக்கொண்ட செய்தியையும் விமலா வாசகனுக்குப் புரியும் வண்ணம் கூறிவிடுகிறாள். இத்துடன் விமலாவின் எடுத்துரைத்தல் பணி நிறைவடைந்துவிடுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எளிமையான தொடரொழுங்கு முறையில் இணைத்தும் விடுகின்றார். ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டதைக் கதைசொல்லி எடுத்துரைத்துவிடுகின்றார்.

விமலாவைத் தொடர்ந்து கதைசொல்லி, கதையின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கதை அமைப்புடன் இணைக்கிறார்.

1. கிணறு வெட்ட கிருஷ்ணனிடம் ராஜேந்திரன் கடன் வாங்குதல்.
2. வாங்கிய கடன் பணத்திற்கு வட்டி கட்டியது
3. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டது.
4. ஊரார் விமலாவைத் தூற்றியது.

மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளையும் ஓர் அமைப்புக்குள் கொண்டுவருகிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கதைசொல்லி தன்னுடைய கூற்று மூலம் எடுத்துரைக்கிறார். வேணுகோபால் கதைசொல்லியாக இருந்து கதையைக் கூறிச் சென்றாலும் ராஜேந்திரனையும் இடையில் பேச வைக்கிறார். ஒரே நேரத்தில் கதைசொல்லியும் ராஜேந்திரனும் மாறி மாறிக் கதையினை வளர்த்துச் செல்கின்றனர். இருவரும் கதைசொல்லியாக இருந்து ஒழுங்கு முறைக்குள் கதையினை நிகழ்ச்சிகளாக நிரல்படுத்துகின்றனர்.

‘ஒரு வார்த்த அவன் என்னய கேட்டுட்டு பணத்த எடுத்துருக்கக் கூடாதா…? பிடித்திருந்த விமலாவின் கைகளில் கண்ணீர்த்துளி சொட்டியது. பலப்பல சமாதானங்கள் சொல்லிப் படுக்க வைத்தாள்.’

மேற்கண்ட ஒரே எடுத்துரைப்பில் ராஜேந்திரனும் கதைசொல்லியும் ஒன்றாகப் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் படிக்கும் வாசகன் கண்டிப்பாக ராஜேந்திரனுக்கு நிகழ இருக்கும் ஏதேனும் ஒரு சம்பவத்தைத் தன்னுடைய மனத்தில் கதையாக இணைக்க முயல்வான். இந்த இடத்தில் கதை ஆசிரியரின் எடுத்துரைப்பு, மையம் கொள்வதை உணரலாம்.

‘அதிகாலையில் அலறல் கேட்டு விமலா முழித்தாள். கட்டிலில் ராஜேந்திரன் இல்லை. சேலையைச் சரிசெய்து கொண்டு லவக் லவக்கென்று குறுகி நிமிர்ந்து ஓடிவரும் போது, ராஜேந்திரனின் உடலைத் தூக்கிக் கொண்டு வராந்தாவிற்கு ஓடினார்கள். உப்போடு சோப்பையும் நீரில் கரைத்து வாயில் ஊற்றினார்கள். வாந்தி வரவில்லை. அவர்கள் கையிலிருந்து நழுவி உடல் விழுந்தது.’

ராஜேந்திரனின் புலம்பலைத் தொடர்ந்து அவனது தற்கொலையும் நிகழ்ந்ததாக கதைசொல்லி இணைக்கிறார். ஆனால் இதனோடு கதை நிறைவடையவில்லை. ராஜேந்திரனின் இறப்பிற்காக விமலாவின் தந்தை அவளைத் திட்டவில்லை. இதனையும் தாண்டி ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு, காரண காரிய அடிப்படையில் இணைந்துள்ளதை வாசகன் புரிந்துகொள்வான். அந்த நிகழ்வினையும் கதைசொல்லி கட்டமைக்கிறார்.

1. விமலாவை அப்பா திட்டுதல்
2. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ளல்
3. விமலா, ராஜேந்திரனின் கடனை அடைத்தல்.

கதையின் தொடக்கத்தில் இரயில் பயணத்தின் போது விமலாவின் அப்பா விமலாவைத் திட்டிக்கொண்டு வருகிறார். இதனைப் படிக்கும் வாசகன், கதையின் நீட்சியாக இடம் பெற்ற ராஜேந்திரனின் தற்கொலை நிகழ்வைப் படிக்கும் போது திட்டுதலுக்கான காரணத்தை நேரடியாக பொருள் விளங்கிக்கொள்ள முயல்வான். அதாவது விமலாவின் விதவைக் கோலத்தை மனத்தில் வைத்துக்கொண்டுதான் விமலாவின் அப்பா திட்டுவதாகக் கற்பிதம் செய்வான். ஆனால் இந்த இடத்தில் காரண காரியத் தொடர்பு என்பது பிரச்சினைக்கு உரியதாக அமைந்துள்ளது. இதனையே கதைசொல்லி, வாசகனைத் திசை திரும்பும் எடுத்துரைப்பாக அமைத்து வெற்றியடைந்துள்ளார்.

‘விமலா கூடையில் சுருட்டி வைத்திருந்த மஞ்சள் பையை எடுத்தாள். பிரிக்காத ஐம்பது ரூபாய்க் கட்டை நீட்டினாள். அவன் பார்த்தான்.’

‘அவர் பாக்கி தராமலே செத்திட்டாரில்ல? அதுக்குத்தான்.’

‘அப்ப கடன வசூல் பண்ணத்தான் இந்தக் கல்யாணத்தில் அக்கறை காட்டுறது மாதிரி பாவலா பண்ணுனீங்களா? நீங்க உலகத்தில் இந்த மனுஷன்கிட்டயாவது முழு நம்பிக்கை வைக்கலையேன்னுதான்’ கொண்டு வந்தேன்.’

இந்த எடுத்துரைப்புகளின் வாயிலாக விமலா தன்னுடைய கணவன் இறந்த பிறகு, கிருஷ்ணனிடம் கடன் பணத்தை ஒப்படைத்தாள் என்பதை அறிய முடிகிறது. விமலாவின் அப்பா, விமலாவைத் திட்டுவதற்கு உச்சக்கட்டமாக ‘செத்துப் போ…’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதையும் வாசகனால் அறிய முடியும். அப்பாவின் பேச்சால் விமலாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தையும் கதையின் இறுதியில் கதைசொல்லி கூறிவிடுகின்றார்.

‘உண்மையாக என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா? என்று முதலிரவில் கேட்ட போது, உன்னை மட்டுமில்ல, உன் குழந்தைக் காலும் பிடிச்சிருக்கு என்று சவலையாகத் தொங்கும் பாதத்தில் இட்டாரே ஒரு முத்தம். அதுதானா இவ்வளவுக்கும் காரணம்? பின் ஏதோ ஒன்று பிரவாகமாக இறங்கி, என்னை உருக்கிய அபூர்வ கணம்…’

விமலாவின் வார்த்தைகளாக அமைந்த எடுத்துரைப்பில் தன்னுடைய கணவனின் கடனை அடைக்கக் காரணமான செய்தியும் வாசகனை இறுதியாக எட்டிவிடுகின்றது. தன்னுடைய உடல் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் ராஜேந்திரன் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட செயல் விமலாவை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. ராஜேந்திரனுடன் குறைந்த நாள்கள் வாழ்ந்தாலும் அது நிறைவான வாழ்க்கையாக அமைந்ததாகக் கருதுகிறாள். இதனால் கணவன் இறந்தாலும் அவன் பட்ட கடனை அடைக்கப்  போராடுகிறாள். இந்தச் செயலால் தன்னுடைய அப்பாவின் தீராத கோபத்திற்கும் ஆளாகிறாள். விமலாவின் செயல்பாடுகள் அனைத்தும் காரண காரியத்துடன் நிகழ்வதை வாசகன் கண்டறியும் வண்ணம் அமைந்துள்ளன.

கதைசொல்லியின் கூற்றாக அமைந்த எடுத்துரைப்பின் இடையிடையே நிகழ்ச்சிகளைப் பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவும் காட்சிப்படுத்துகிறார். இதில் குறிப்பாக கிருஷ்ணனை ராஜேந்திரன் நேரிடையாகச் சந்திக்கும் காட்சியைக் கூறலாம். இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சியைத் தொடங்கி வைத்துவிட்டு கதைசொல்லி விலகி நின்று வேடிக்கை பார்க்கிறார்.

‘சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்’

ராஜேந்திரன் கிருஷ்ணனைச் சந்திக்கக் கிளம்பினான் என்ற அளவில் கதைசொல்லியின் எடுத்துரைப்பு முடிவடைந்துள்ளது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சியைப் பாத்திரங்கள் வாயிலாகவே கட்டமைத்துள்ளார்.

‘நாந் தரமாட்டேனா? அப்படி நெனச்சிருந்தா மொய்யெழுத உங்கிட்ட ஒப்படச்சிருப்பேனா?’

‘இப்ப வாங்காம நா எப்ப கலெக்ஷன் பண்ண முடியும்? ரெண்டு மாசம் வட்டி சரியா
வரலை’

‘ஒவ்வொரு வாட்டியும் வெள்ளாமயில தர்றேன்னுதான் சொல்றே! எனக்கு இதவிட்டா கை சேராது’

இவ்வாறு பாத்திரங்களை உரையாடச் செய்து கதையின் நிகழ்ச்சிகளை இணைத்துவிடுகின்றார். மொய்ப்பணம் கிருஷ்ணனால் அபகரிக்கப்பட்ட நிகழ்ச்சியை உரையாடல் மூலமாக கதையின் இயங்குதளக் கட்டமைப்பு ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிடுகின்றார்.

ராஜேந்திரனின் பிரச்சினையையும் உரையாடல் மூலமாக அமைத்துள்ளார். ராஜேந்திரனுடன் விமலாவைப் பேச வைத்து ஒரு காட்சியை அமைத்துவிடுகிறார். விமலா கேட்ட கேள்விகளுக்கு ராஜேந்திரன் ஓரிரு வார்த்தைகளில் பதில் கூறி, தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறான்.

‘உடம்புக்கு என்ன?’
‘ஒண்ணுமில்ல’
‘பின்னென்ன இந்தப் பக்கமே காணோம்?’
‘சும்மாதான்’
‘……………’
நீண்ட நேரம் பேசாதிருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்
‘மொய்ப்பணத்தையெல்லாம் வச்சிக்கிட்டு தர மாட்டங்கிறான்’
‘யாரு?’
‘கிருஷ்ணா’

மிகவும் குறைவான வார்த்தைகளைக் கொண்டே உரையாடல்களை உருவாக்கியுள்ளார். ஆனால் உரையாடலில் ராஜேந்திரனின் உளவியல் பாதிப்பை முழுமையாக வாசகனுக்கு எடுத்துரைத்து விடுகிறார். சிறுவயது முதல் கிருஷ்ணனிடம் நட்புப் பாராட்டி வந்துள்ளதை ராஜேந்திரனின் அமைதி பிரதிபலிக்கின்றது. தன்னுடைய நண்பன் பண விசயத்தில் தன்னை நம்ப மறுப்பது அவனை மிகவும் பாதிக்கிறது. கடன் தொல்லையால் திருமண வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் திணறுகிறான்.

‘விமலாவின் கையைப் பற்றினான். பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது அவன் டிராக்டரில் ஏறுறேன்னு ஏறி, தவறி விழுந்து கால் முறிஞ்சிடுச்சு. செக்காலை முக்கிலிருந்து நான் ஒத்தாளாக அவனை உப்புக் குதிரை ஏத்தி வந்திருக்கேன் விமலா.’

ராஜேந்திரன், விமலாவிடம் தன்னுடைய பால்ய கால நிகழ்ச்சிகளை வருத்தம் தொனிக்கக் கூறுவதாக அமைத்துள்ளார். இந்த எடுத்துரைப்பில் ராஜேந்திரனின் மன நெருக்கடி தெளிவாக வெளிப்படுகிறது. குறிப்பாக ராஜேந்திரனின் மனநிலையை அவனது குரல் மூலமாகவே பதிவு செய்துள்ளார். மேலும் கிருஷ்ணனின் பாத்திரம் குவிமையப்படுத்தப்படும் இடமும் இதுவாகும். இருவருக்குமான இளமைக் கால நிகழ்வுகள், பனுவலுக்கு அந்நியமானவை ஆகும். ஆனால் இதன் மூலம் விமலாவிடம் கிருஷ்ணனின் பிம்பம் அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. வாசகனின் கவனமும் கிருஷ்ணனின் மீது விழுகின்றது.

ராஜேந்திரன் கூறும் பால்ய காலக் காட்சிகள், ஓரிரு சொற்களில் இடம் பெற்றிருந்தாலும் இது இடைப்பனுவலாகவே அடையாளம் காணப்படுகின்றது. கிருஷ்ணன் எதிர்முனைப் பாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளதால் இடைப்பனுவல் தாக்கம் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. கிருஷ்ணனிடம் ராஜேந்திரன் ஏமாந்து போனதற்கான காரணம், சிறுவயது முதல் இருவருக்கும் இடையில் இருக்கும் ஆழ்ந்த நட்பே என்பதைக் காரண காரியம் கொண்டு இணைத்துள்ளார்.

கதையின் இறுதிக் காட்சிகள், விமலாவும் கிருஷ்ணனும் உரையாடுவது போல அமைக்கப்பட்டுள்ளன. அச்சூழலில் அப்பா மௌனமாக மட்டும் இருக்கிறார்.

‘என் ஏழாம் நாள் ராத்திரியில் என் கையைப் பிடிச்சு கதறினான். அதுக்கு…’

‘கடன வாங்கிட்டு இழுத்தடுச்சா முடியுமா?’

‘வச்சுப் பொழைக்க முடியலையன்னா… ஏதோ சொல்ல வந்தவன், ‘இதென்ன வம்பாய் போச்சு! வாங்குனவன் நாலு பேரு ஓடிப் போயிட்டா என்னாகுறது? பாவ புண்ணியம் பார்த்தா நா போண்டியாக வேண்டியதுதான்’ என்றான்.’

ராஜேந்திரனின் கடனை விமலா அடைக்கிறாள். கடன் தொகையைக் கிருஷ்ணனிடம் கொடுப்பதற்காக அப்பாவுடன் பயணத்தைத் தொடர்ந்தாள். பயணத்திற்கான காரணம், கதையின் தொடக்கத்தில் இல்லை. கிருஷ்ணனுடன் விமலா பேசும் இடத்தில் பயணத்திற்கான காரணம் துலக்கம் அடைகிறது. இந்த உரையாடல் நிகழ்ச்சிகளைக் கதையின் இறுதிப் பகுதியில் அமைத்துள்ளார். விமலாவின் அப்பா திட்டுவதும், கடன் தொகையை விமலா கிருஷ்ணனிடம் ஒப்படைத்த நிகழ்வும் பனுவலின் இயங்குதளத்தில் பெரிய இடைவெளிவிட்டு இணைக்கப்பட்டுள்ளன. இதனை எடுத்துரைப்பின் நவீன அணுகுமுறையாகக் கருத இடம் உள்ளது. இந்த அணுகுமுறை, வாசகனின் வாசிப்புக்கு சற்று நெருக்கடியைக் கொடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

சிறுகதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வெளி (அல்லது) இடம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கதையின் இயங்குவெளி கதைசொல்லியால் நிர்ணயிக்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட வெளிக்குள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கதையின் இயங்கு தளத்துடன் ஓர் இழையில் பிணைக்கப்படுகின்றன. ‘ஒரு துளி துயரம்’ கதையில் கதை நிகழ்வு நடைபெறும் வெளியில் இரண்டு துணைமை நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

1. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்ட பிறகு, இழவு வீட்டில் நடைபெறும் நிகழ்வு.
2. கிருஷ்ணனின் அலுவலகத்திற்கு மதுப்புட்டியுடன் இளைஞன் செல்லுதல்.

சிறுகதையின் எடுத்துரைப்பு நிகழும் வெளியில் நிகழ்காலத்தில் மேற்கண்ட நிகழ்வுகள் கதைசொல்லியின் கூற்றின் இடையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இழவு வீட்டில் அடையாளம் காண முடியாத பாத்திரங்களைப் பேச வைத்து, ராஜேந்திரனின் இறப்பிற்கான வெவ்வேறு காரணங்களை வாசகனிடத்தில் சேர்க்கிறார். இதன் மூலம் வாசகனின் கவனம் சிதறடிக்கப்படுகிறது..

‘எமனா வந்திருக்காளே, நொண்டி அவுசாரி…’

‘எவங் கூடப்படுத்தாளோ, ரோசக்கார பையன் கேள்விப்படாமயா இப்படி முடிவெடுப்பான்!’

இந்தக் கூற்றுகள், இழவு வீட்டில் அடையாளம் தெரியாத குரல்களாக வெளிப்படுகின்றன. இதற்கு விமலாவும் பதில் கூறவில்லை. அமைதியாக இருந்து ராஜேந்திரனின் தற்கொலைக்கான காரணத்தைப் பகிரங்கப்படுத்தாமல் தனக்குள் பாதுகாக்கிறாள். ஆகையால் இந்த எடுத்துரைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. கணவன் தற்கொலை செய்துகொண்டாலும் அவன் மீது தனக்கு இருக்கும் அதீத அன்பினை அமைதியாக இருந்து வெளிப்படுத்துகிறார்.

‘பதிலை எதிர்பார்க்காமல் சுவரைப் பிடித்து, படியிறங்கினாள். கையில் பிராந்தி புட்டியோடு மேலேறி வந்த இளைஞன் இவர்களைப் பார்த்தும் சற்று ஒளித்து விலகினான்’

கதையின் வெளிக்குள் நடைபெறும் இந்தக் காட்சியை விமலா பார்ப்பதாகப் படம் பிடித்துள்ளார். இதற்கான பின்புலத்தை வாசகன் அவதானிக்கும் முறையில் அமைத்துள்ளார். கிருஷ்ணனின் வாழ்க்கை, கோலாகலமான கொண்டாட்டங்களால் நிரம்பியது. ராஜேந்திரனின் இறப்பு, அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கிருஷ்ணனின் பாத்திர வடிவமைப்பு எந்த வகைமாதிரிக்குள் வரும் என்பதையும் கதையின் போக்கிலேயே இணைத்துக் காட்டுகிறார். விமலா, கிருஷ்ணனைச் சந்தித்துப் பணத்தைக் கொடுக்க வந்த நோக்கம் நிறைவேறாது என்பதை இந்தக் காட்சி புலப்படுத்திவிடுகிறது. விமலா கிருஷ்ணனிடம் பணத்தைக் கொடுக்கும் போது அவன் மன்னிப்புக் கேட்பான் என்று நினைத்து வந்தாள். ஆனால் அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு எந்தவித பாவனையும் இன்றி இருந்தான். ராஜேந்திரனின் மரணத்திற்கான குற்ற உணர்ச்சி எதுவும் அவனிடம் இல்லை.

‘ஒரு துளி துயரம்’ கதையைப் படித்த பிறகு வாசகன் மனத்தில் பதிந்த காட்சிகளைக் கீழ்க்கண்டவாறு நிரல்படுத்தலாம்.

1. ராஜேந்திரன் விமலா திருமணம்
2. மொய்ப்பணம் அபகரிக்கப்படுதல்
3. ராஜேந்திரனின் மனப்பிறழ்வு
4. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ளல்
5. விமலா விதவை ஆதல்
6. ராஜேந்திரனின் கடனை விமலா அடைத்தல்
7. விமலா தன்னுடைய தந்தையிடம் திட்டு வாங்குதல்

இந்த நிகழ்ச்சிகளைக் கதையின் கட்டமைப்பு தளத்திற்குள் கொண்டு வந்த வாசகன், தன்னுடைய அறிவு கொண்டு இணைத்துக் கதையினை முழுவதும் விளங்கிக் கொள்கிறான். படைப்பினை விளங்கிக்கொள்ள வாசகனுக்கும் படைப்பாளிக்கும் ஒரு புரிதல் நிகழ வேண்டும். ‘எடுத்துரைப்பு என்பது மொழி வழியாக நிகழும் தகவல் தொடர்பு முறையியல் ஆகும். இதில் சொல்பவர் கேட்பவர், எழுதுபவர் படிப்பவர் எனும் முனைகள் அமைந்திருக்கின்றன. இந்த இரு முனைகளும் மொழி எனும் ஊடகத்தால் தொடர்புபடுத்தப்படுகின்றன’ என்ற கே. பழனிவேலுவின் கூற்று இங்கு முக்கியமானதாக அமைகின்றது. பனுவலைப் படித்த வாசகன், கதையின் கட்டமைப்பினைக் காரண காரியத் தொடரொழுங்கு மூலம் கால வரிசைப்படி அமைத்துக் கண்டடைகிறான்.

ஒரு துளி துயரம் கதையின் நிகழ்ச்சிகள் நேர்க்கோட்டு முறையில் இணைக்கப்படவில்லை. ஆயினும் வாசகன் கலைத்துப் போட்ட சீட்டுக் கட்டுகளில் இருந்து சீட்டினை எடுத்து நிரல்படுத்தி ரம்மி சேர்ப்பதைப் போன்று, நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கதையின் இயங்குதளத்தைக் கண்டடைகிறான். கதைசொல்லியின் எடுத்துரைப்புகள் அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றியடைந்துள்ளன.

விமலா, தன்னுடைய தந்தையிடம் திட்டு வாங்குவதில் தொடங்கும் கதை பல்வேறு நிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் காரண காரியத் தொடரொழுங்கு மூலம் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதை வாசகனால் அடையாளம் காண முடிகின்றது. ஆயினும் இந்த ஒழுங்குகள் அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. கதையின் எடுத்துரைப்பு ஓட்டத்தில் இயல்பாகவே அமைந்தவையாகும். கதை நிகழ்ச்சிகள் நேர்க்கோட்டு வரிசையில் இணைக்கப்படவில்லை. இருப்பினும் கதையின் சாராம்சத்தை வாசகனுக்குக் கொண்டு சேர்த்ததில் வெற்றியடைந்துள்ளார்.

ஒரே பனுவலில் நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து நிரல்படுத்தும் பணியைப் பலரும் செய்கின்றனர். ஆசிரியர் கதைசொல்லியாக இருந்து சில நிகழ்ச்சிகளை எடுத்துரைத்துள்ளார். கதையில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களான விமலா, ராஜேந்திரன், கிருஷ்ணன் போன்றவர்களும் கூட கதை நிகழ்ச்சிகளை உருவாக்கி, கதையின் அமைப்பினைக் கட்டமைத்துள்ளனர். கதையின் எடுத்துரைப்புத் தொடரொழுங்கு முறைகள் எந்தவிதமான முன்வரைவுத் திட்டமுமின்றி கதையின் போக்கிலேயே சீராக இணைந்துள்ளதைக் காண முடிகின்றது.

கதையின் எடுத்துரைப்பானது ஒரு விதமான துள்ளல் முறையில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்ச்சி நடைபெறும் வெளியில் வாசகனை நிறுத்திவிட்டு, திடீரென்று வேறு இடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கிறார். வாசகனை அறிவார்ந்தவனாக நினைத்து இந்தச் செயலைச் செய்கிறார். வேறு கோணத்தில் பார்த்தால் முதல் நிகழ்ச்சிக்கான எடுத்துரைப்பு விவரிப்புகள் போதும் என்ற அளவில் அடுத்த நிகழ்ச்சிக்கு அனிச்சையாக கடந்து விடுவதாகவும் முடிவு செய்யலாம். எளிமையான கதையாக இருந்தாலும் எடுத்துரைப்பு ஒழுங்கமைவுகள் சிக்கலானதாக இருக்கின்றன.

கதையினைப் படிக்கும் சாமானிய வாசகன், கதையினை எளிதில் அடையாளம் கண்டுவிடுவான். ஆனால் கதையின் இயங்கு தளத்தைச் சற்று சிரமப்பட்டுதான் அவதானிப்பான். ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்ட அறிவார்ந்த வாசகன் கதையின் இயங்குதளத்தைக் கண்டடைந்து, அதனுடன் பயணிக்கக் காரண காரியத் தொடரொழுங்கு அமைப்புகளை நுட்பமாக கவனிக்க வேண்டும். வாசகன் தனக்கான புரிதல் முறையில் நிகழ்வுகளைத் தொகுத்து எடுத்துரைப்புகளைத் தொடர்புபடுத்தி, பிரச்சினையின் மையத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் ஒரு துளி துயரம் கதையின் எடுத்துரைப்பு வெற்றியடைகிறது.

பார்வை நூல்கள்:

1. நவீன கவிதையியல் எடுத்துரைப்பியல்- க. பஞ்சாங்கம்
2. பனுவல் எடுத்துரைப்பு திறனாய்வியல் – பழனிவேலு
3. ஒரு துளி துயரம் – சு. வேணுகோபால்

====================================================================
ஆய்வறிஞர் கருத்துரை(Peer Review):

கட்டுரையாளர் தனது பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார். பின் நவீனப் போக்குகளில் எடுத்துரைப்பியல், பரவலாகப் பேசப்பட்டு வரும் ஆய்வு அணுகுமுறை. ஒரு துளி துயரம் கதையை முழுமையாக உள்வாங்கிய பாங்கு, ஆய்வில் ஆழமாக வெளிப்படுகிறது. கதைமாந்தர்களும் கதை நிகழ்வுகளும் ஆய்வில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அதேபோல் கதாபாத்திரம் மொழியும் சொற்களின் மூலம் கதை சொல்லும் உத்தி, எடுத்துரைப்பியலோடு கூறி இருப்பது மேலும் சிறப்பு.
====================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *