நிர்மலா ராகவன்

நலம்… நலமறிய ஆவல் – 160

`எவ்வளவு நிதானமாகப் போனாலும், பாதியில் நின்றுவிடாதே! வெற்றி உனக்குத்தான்!’ ஆரம்பப் பள்ளியில் நாம் படித்த ஆமை-முயல் கதையில் வரும் நீதி இது. இதனை எத்தனைபேர் கடைப்பிடிக்கிறோம்?

நடை பயில ஆரம்பிக்கும்போது பலமுறை விழுந்தாலும், யாரும் நடக்காமலேயே இருந்துவிடுவதில்லை.

இதைத்தான் ஐன்ஸ்டீன் இப்படிச் சொல்கிறார்: “வாழ்க்கை மிதிவண்டிக்கு ஒப்பானது. ஒரே இடத்தில் நில்லாது, நகர்ந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், விழுந்துவிடுவோம்”.

`ஏன் வெற்றி நம்மைக் கண்டு அஞ்சி விலகுகிறது?’ என்று காலங்கடந்து சிந்தனையை ஓடவிட்டால் எந்தப் பயனுமில்லை. `நேராகப் போனால், சுவரில்தான் முட்டிக்கொள்ள வேண்டும்!’ என்று தோன்றினால், அதைச் சுற்றி வேறு வழி இருக்கிறதா என்று ஆராய்வதுபோல், பிரச்னையை எப்படியெல்லாம் சமாளிக்க முடியும் என்ற யோசனை பலனளிக்கும்.

தோல்வி நிரந்தரமில்லை என்று உணர்ந்தால் போதும். மனம் தளராது, நம் கனவுகளையோ, அதற்கான முயற்சிகளையோ கைவிடாது இருந்தால் வெற்றி நிச்சயம்.

கதை

அபியின் புக்ககத்தினர் `ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்து!’ என்பதை வேத வாக்காக பாவித்து நடந்துகொண்டிருந்தனர்.

அப்பெண்ணின் நாத்தனார்கள், மைத்துனர் ஆகியவர்களின் வாழ்க்கை நரகமாக அமைந்திருந்தது. `இவள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கலாமா?’ என்று எண்ணியதுபோல் அபியை ஆட்டிவைத்தார்கள்.

பெரியவர்கள் நிச்சயித்த கல்யாணம் பொய்த்தால், அவர்களுக்குத்தான் மனவருத்தம், அவமானம் என்று ஏதேதோ குழப்பம் உண்டாக, தன்னால் இயன்றவரை எதிர்த்துப் பார்த்தாள் அபி. பலனில்லாது போக, எல்லா இடர்களையும் பொறுத்துப்போனாள். ஒரு தருணத்தில், இனி பொறுக்கவே முடியாது!’ என்று தோன்றிப்போயிற்று.

ஒரு பூட்டைத் திறக்கவென சாவிக்கொத்தில் இருப்பவற்றில் சிலவற்றைப் பரீட்சித்து, முடியாவிட்டால் விட்டுவிடுவோமா? ஒன்று மாற்றி ஒன்றாக எல்லா சாவிகளைக் கொண்டும் முயற்சி செய்வோமே!

அப்படித்தான் அபியும் யோசித்தாள்: இன்னும் என்ன செய்யலாம்?

சண்டை பிடித்தால்தானே நிம்மதி கெடுகிறது! வீட்டில் எப்போதும்போல் பொறுமையைக் கடைப்பிடிக்க நிச்சயித்தாள். தான் நிம்மதியாகவே இருக்கக்கூடாது என்று நினைத்ததுபோல் நடந்துகொண்டவர்களின் உறவைத் துண்டித்தாள். ஒரு வழியாக, குடும்பத்தில் அமைதி நிலவியது.

அபி செய்ததுபோல், இதுவரை துணிந்து செய்யாத முயற்சிகளில் இறங்கத் தயங்குவார்கள் பலர். அவை பலனளிக்காவிட்டால் என்ன செய்வது! `இப்போது சௌகரியமாகத்தானே இருக்கிறேன்!’ என்று ஒரே நிலையில் இருப்பார்கள்.

“ஆரம்பிக்காதே! ஆரம்பித்தால், பாதியில் விடாதே!” (சீனப் பழமொழி).

எதையாவது செய்ய ஆரம்பித்து, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில் அம்முயற்சியைக் கைவிட்டவர்கள்தாம் தோற்கிறார்கள் என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

`நான் தோல்வியே அடைந்ததில்லை. ஒரு காரியத்தை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைத்தான் விதவிதமாகக் கற்றேன்!’ என்று, தோல்விகளை வெற்றியாக்கிய வித்தையை வேடிக்கையாகப் பகிர்ந்துகொள்கிறார் இவர்.

இந்த மனநிலையால்தான், 1,093 மின்சாதனங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் — சில சமயம், குழுக்களுடன் இணைந்து. (அமெரிக்காவிலேயே மிக அதிகமான காப்புரிமை பெற்றவர் என்ற புகழுக்கு உரியவர் எடிசன்).

`நம்மால் முடியுமா!’ என்ற அவநம்பிக்கையைப் பொய்க்கச் செய்தால், அது அளிக்கும் ஆனந்தமே தனிதான்.

தோல்வி ஒவ்வொரு மனிதரையும் வெவ்வேறு விதத்தில் பாதிக்கிறது.

தாம் தோல்வி அடையும்போது, அதற்கு வேறு எவரையாவது காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ள நினைப்பது கோழைத்தனம். இப்படிப்பட்டவர் முயற்சியில் தோற்கவில்லை. முயற்சியில் முழுமனதாக ஈடுபடவில்லை.

எல்லா முயற்சிகளும் வெற்றியில்தான் முடியும் என்றில்லை. முதலாவதாக, எடுத்த காரியத்தில் திறமை இருக்கவேண்டும். வற்றாத ஆர்வம், அடுத்து வருவது.

`முயலாமல் போய்விட்டோமே!’ என்ற வருத்தம் எதற்கு? முயற்சி செய்தபின் தோல்வியடைந்தால், `ஏதோ, நம்மால் முடிந்ததைச் செய்தோம்!’ என்ற திருப்தியாவது மிஞ்சும்.

`இந்தக் காரியத்தைச் செய்ய நெடுநேரம் பிடிக்குமே!’ என்று தயங்குவார்கள் வேறு சிலர். காலம் எப்படியும் கடந்துதான் போகும். அதை ஆக்ககரமாகச் செலவழிக்கலாமே!

இளமையில் தாங்கள் விரும்பியது கிடைக்காவிட்டால், அந்தக் கனவை பிள்ளைகளின்மூலம் நனவாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள் பெற்றோர் பலர்.

“அவளுடைய நான்கு குழந்தைகளும் மருத்துவர்கள்!” என்று எங்கள் தோழியைப் பற்றி வியந்து கூறினாள் ஒருத்தி.

பதிலுக்கு, “அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களோ?” என்று கேட்டேன். பெற்றோரது ஆசைகளைப் பூர்த்தி செய்வது கிடக்கட்டும், பிள்ளைகளுக்கென்று தனியாக மனம் இருக்காதா? அதில் வேறு எதிர்பார்ப்புகள் இருக்காதா?

சிலர் ஏன் செய்கிறோம் என்று புரியாமலேயே ஒரு காரியத்தில் ஈடுபடுவார்கள். முழுமனதுடன் ஈடுபடாவிட்டால், காரியம் அரைகுறையாகத்தான் இருக்கும்.

கதை

திருமணம்தான் ஆகவில்லை, படித்தாவது வைக்கிறேனே!’ என்று மருத்துவரானவள் கற்பகம். புத்திசாலி. அத்துடன், சொந்தக் காலில் நிற்கவேண்டிய அவசியமும்கூட.

ஆனால், அதற்கான பக்குவம் இருக்கவில்லை. இல்லாவிட்டால், நள்ளிரவில், `குழந்தைக்கு உடம்பு ரொம்ப மோசமாக இருக்கிறது, டாக்டர்!’ என்று வீட்டுவாசலில் நின்று பெற்றோர் கதற, `எனக்குத் தூக்கம் வருது!’ என்று இழுத்துப் போர்த்திக்கொள்வாளா?

ஏன் விழுகிறோம்?

முதலாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அது தொடரும் என்பது நிச்சயமில்லை.

ஒரே ஒரு கதை எழுதிவிட்டு, அது பத்திரிகையில் பிரசுரமும் ஆனபின், `நான் எப்படி எழுதினாலும் ஏற்றுக்கொள்வார்கள்!’ என்ற மிதப்புடன் கிறுக்கித் தள்ளினால் எப்படி!

இந்த `உயர்ந்த’ மனப்பான்மை, எல்லா மனிதருக்கும் ஏற்படுவது. அதை எதிர்கொள்ள, அடுத்தடுத்து வரும் முயற்சிகளுக்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டுவது அவசியம்.

தோல்வியை எவரும் விரும்புவதில்லை. அது ஏற்படும்போது, மனம் உடைந்துதான் போகும். ஆனால், விரக்தியிலேயே மூழ்கிவிடாது, சொற்ப காலம் கழித்து, வேறு முயற்சிகளில், அல்லது வெவ்வேறு விதமாக ஒரே முயற்சியில் ஈடுபட்டால் பலன் கிடைக்குமே!

“நான் ஆங்கில தினசரிக்கு எத்தனையோ எழுதினேன். ஒன்றுகூட பிரசுரம் ஆகவில்லை!” என்று ஓர் இளம்பெண் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்தாள்.

இது சம்பந்தமாக, பிறர் என்னைக் கேட்டது: “உங்களுக்கு யாரைத் தெரியும்?”

தெரிந்தவர் மூலம் வெற்றி அடைந்தால் அதனால் ஒருவர் பெருமைப்பட என்ன இருக்கிறது?

கதை

1990-இல், சிங்கப்பூரில் ஒரு விஞ்ஞானக் கண்காட்சியில், பிரா மாதிரியான ஒரு சாதனத்தை வைத்திருந்தார்கள்.

`இதில் என்ன புதுமை?’ என்கிறீர்களா?

இது ஆண்கள் அணிவது. உள்ளே குழந்தை குடிக்கும் பால் இருக்கும். அம்மா வீட்டில் இல்லாதபோது குழந்தை அழுதால், அப்பா இந்த சாதனத்தை அணிந்துகொண்டு, குழந்தையை `மார்புடன்’ அணைத்துப் பாலூட்டலாம்.

`இச்செய்தியைப் படித்ததுமே, குமுதம்தான் நினைவில் எழுந்தது!’ என்று ஒரு கடிதத்தைத் தனியாக ஆசிரியருக்கு எழுதி, ஒரு குட்டிக் கதையையும் அனுப்பினேன். உடனே பிரசுரமானது, தினசரியில் வந்த படத்துடன்.

எந்தப் பத்திரிகையில் எப்படி எழுதினால் ஏற்பார்கள் என்று புரிந்துகொள்ள அந்த அனுபவம் உதவியது.

ஆன்மீகப் பத்திரிகைக்கு இந்தக் கதையை அனுப்பியிருக்க முடியுமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *