பிரம்மஹத்தி தோஷம் (சிறுகதை)

0

நிர்மலா ராகவன்

தொலைக்காட்சி ஒத்திகை முடிந்து வீடு திரும்பியதும் களைப்புதான் மிஞ்சியது அபிராமிக்கு.

`எத்தனைவித சமையல் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க!’ என்று புகழ்ச்சியில் ஆரம்பித்து, அவளைத் தன் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருந்தார் இயக்குநர் சற்குணம்.

முதன்முதலாகத் தன்னைப் பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கவனமாக அலங்கரித்துக்கொண்டு போயிருந்தாள் அபிராமி.

அவளை மேலும் கீழும் நோட்டமிட்ட சற்குணம், “பாக்கறவங்க ஒங்களையேதான் பாத்துக்கிட்டு இருக்கப் போறாங்க. சமையல் குறிப்பிலே மனசு போகாது!” என்றார் கேலியாக.

உடனே, கழுத்திலிருந்த இரண்டு சங்கிலிகளில் ஒன்றைக் கழற்றி கைப்பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டு, தாயின் ஆமோதிப்பை வேண்டும் குழந்தையைப்போல் அவரையே பார்த்தாள் அந்த இல்லத்தரசி.

“இப்போ சரியா இருக்கு!” என்ற ஆமோதிப்பு, அப்போது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் ஒரு சின்னத்திரை நடிகை!

நேரம் நெருங்க நெருங்க, அபிராமிக்குப் பயம் வந்தது. பரீட்சைக்கு எழுதுமுன்னர் மாணவர்கள் கழிப்பறையை நாடி ஓடுவதுபோல் உணர்ந்தாள்.

“அதை ஏன் அங்கே எடுத்துக்கிட்டுப் போறீங்க? இப்படி சோபாமேல வெச்சுட்டுப் போங்க, என்று குரல் கொடுத்தவள், அவள் வயதை ஒத்த கலாராணி. கல்யாணி என்ற இயற்பெயரை தொலைக்காட்சிக்காக மாற்றிக்கொண்டிருந்தவள்.

அவள் அவ்வப்போது அங்கிருந்தவர்களுக்கு டீ போட்டுக்கொடுக்கும் `எடுபிடி’. ஆனால், அவ்வாறு அவள் மதிப்பைக் குறைக்காது, `உதவி இயக்குநர்’ என்று அவள் பெயரும் திரையில் வரும்படி செய்திருந்தார் இயக்குநர்.

“நீங்க போயிட்டு வாங்க. நான் பாத்துக்கறேன்!” என்றவளைப் பார்த்து, தர்மசங்கடத்துடன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, அவசரமாக ஓடினாள் அபிராமி.

திரும்பி வந்தபோது, கைப்பை அவள் வைத்த இடத்தில் இருக்கவில்லை.

“என் ஹாண்ட்பேக்?” என்று அபிராமி அலறியபோது, சிறிய சமையலறைக்கு உள்ளிருந்து வெளிப்பட்டாள் கலாராணி. அவள் தோளில் அபிராமியின் கைப்பை!

“மொதல்லே இந்த டீயைக் குடிச்சு ஆசுவாசப்படுத்திக்குங்க! ஒங்களுக்குன்னு ஸ்ட்ராங்கா போட்டிருக்கேன்”.

நன்றியுடன் அதை வாங்கிக்கொண்டாள் அபிராமி. சூடான பானம் தொண்டையின்வழி இறங்கியபோது, சற்றுமுன் எழுந்த பயம் மறைந்து, சுறுசுறுப்பு வந்துவிட்டாற்போல் இருந்தது.

அடுத்து, “இந்தாங்க. நான்தான் பத்திரமா எடுத்து வெச்சேன். இப்படி வெச்சுட்டுப் போகலாமா?” என்று அபிராமியிடம் அவள் பொருளை நீட்டினாள் கலாராணி. “எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்குங்க”. குரலில் திமிர் தெரிந்தது.

இயந்திரகதியில் அபிராமி அதைத் திறக்கப் போனபோது, “ரெடி?” என்ற இயக்குநர் குரல் கேட்டது.

ஆளுயரக் கேமராவையும் விளக்குகளையும் பார்த்து இன்னும் நடுக்கம் எழுந்தது.

நாலைந்து முறை குளறிவிட்டு, ஒருவழியாக வீடு திரும்பினாள் அபிராமி.

`இந்த ஒரு அனுபவமே போதுண்டா சாமி!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். உடலும் மனமும் ஒருங்கே களைத்திருந்தன.

அடுத்த சில நாட்கள், தன் உருவத்தைத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரும் தொலைக்காட்சிவழி பார்க்கப் போகிறார்கள், யாரெல்லாம் அழைத்துப் பாராட்டுவார்கள் என்ற இனிய கற்பனைகளில் கரைந்தன.

ஆனால், தான் சமையல் குறிப்புகளைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தபோது அபிராமிக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய சங்கிலி இருப்பதுதான் கண்ணை உறுத்தியது.

பதற்றத்துடன் கைப்பையில் தேடினாள் அபிராமி.

இந்த நிகழ்ச்சிகளுக்குச் சன்மானம் எதுவும் இல்லாவிட்டாலும், தங்கள் முகம் எல்லாருக்கும் தெரிகிறதே என்ற பெருமையில்தான் பலரும் பங்கேற்க முன்வந்தார்கள் – அபிராமியைப்போல்.

`நாங்க தெருவோரத்தில வெச்சிருக்கிற ஸ்டால்ல சாப்பிடுவோம்மா!’ என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் அவளும் அவர்களுடன் சேர்ந்து போவதைத் தவிர்த்திருந்தார் சற்குணம். அந்நிகழ்ச்சிக்கென்று அளிக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதியைத் தயாரிப்பாளர் தனதாக்கிக்கொண்டு, ஒரு சிறு விள்ளலை அதற்கென ஒதுக்கியிருந்த வயிற்றெரிச்சலை அவளுடன் முன்பே ரகசியமாகப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

“அதுக்கென்ன! வீட்டிலே சமைச்சு வெச்சுட்டுத்தான் வந்திருக்கேன்!” என்று பெரியமனது பண்ணினாள் அபிராமி.

கலாராணியோ, பகல் உணவின்போது, `நசி லெமாக்’ என்னும் தேங்காய்ப்பாலில் வெந்திருந்த சோறு நடுவில் இருக்க, அதைச் சுற்றி, வறுத்த நிலக்கடலை, கருவாடு மற்றும் வெள்ளரிக்காய் வில்லைகள், வறுத்தரைத்த மிளகாய்ச்சாறு எல்லாம் தனித்தனியாக வைக்கப்பட்ட கொழுப்பு சேர்த்த சாதம் ஓசியாகக் கிடைக்குமே என்று ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டாள்.

அவளால் கண்டிப்பாக ஆறாயிரம் வெள்ளி கொடுத்து, ஐந்து பவுன் சங்கிலி வாங்கியிருக்க முடியாது.

நடந்ததையெல்லாம் நாடகத் தொடர்போல் ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்டாள் அபிராமி.

ஏதோ உள்நோக்கத்துடன்தான் அவள் கைப்பையைக் கழிப்பறைக்குள் எடுத்துச் செல்லவேண்டாம் என்று தடுத்திருக்கிறாள்! அப்போது இருந்த பதற்றத்தில் அதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! முட்டாள்! முட்டாள்!

பேரன்புடன், சூடான பானத்தைக் கொடுப்பதுபோல் கொடுத்து, தன் கவனத்தைக் கலைத்திருக்கிறாள்.

அடுத்தடுத்து வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கலாராணியின் கழுத்தில் மின்னிய சங்கிலி தன்னுடையதுதான் என்பதில் அபிராமிக்குச் சந்தேகம் இருக்கவில்லை.

எடுத்ததை அவள் பார்க்கவில்லைதான். ஆனால், எந்தத் திருடன்தான் பிறர் பார்க்கத் திருடுகிறான்!

அவளைப்போய் கேட்க முடியுமா?

ஒரு பேரங்காடியில் தன் குழந்தைக்காகப் பால் போத்தல்களையும், மிட்டாய் வகைகளையும் திருடிய ஏழைத் தாய்க்கு சிறைத்தண்டனை. ஆனால் இவ்வளவு பெரிய குற்றத்திற்கு எந்தவிதத் தண்டனையும் இல்லாமல் இவள் தப்பிவிட்டாள்! இது என்ன நியாயம்!

தங்கத்தைத் திருடினால் பிரம்மஹத்தி தோஷம். அதாவது, கொலை செய்த பாவம் என்று அபிராமி படித்திருக்கிறாள். `தெய்வம் நின்று கொல்லும்!’ என்றெல்லாம் வேறு சொல்கிறார்களே! இந்தத் திருடிக்கு எப்போது, எப்படி தண்டனை கிடைக்கப் போகிறது?

விரைவிலேயே அதற்கான விடையும் கிடைத்தது, தினசரியில் முதல் பக்கச் செய்தியாக.

கலாராணியின் மகன் தன் காரில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருளுக்காக கைது செய்யப்பட்டிருந்தான்.

`பொருள் அங்கிருப்பதே அவனுக்குத் தெரியாது. அத்துடன், தனித்து வாழும் தாய்க்கு ஒரே மகன்!’ என்று வக்கீல் வாதாடினார். கலாராணி `அன்பளிப்பாக’ அளித்திருந்த சங்கிலி அவரை அப்படி உணர்ச்சிவசமாகப் பேச வைத்திருந்தது.

மலேசியச் சட்டப்படி, ஒரு கிலோ வைத்திருந்தாலே மரண தண்டனை. இவன் வசமோ நான்கு கிலோ!

அதற்கடுத்த வாரம் வந்த நிகழ்ச்சியில், சோர்ந்த முகத்துடன் காணப்பட்டாள் கலாராணி. கழுத்தில் ஒரு கருகமணி மாலை மட்டும்!

`பிரம்மஹத்தி தோஷம் சும்மா விடுமா!’ என்று உரக்கவே சொல்லிக்கொண்டபோது, ஆறுதலாக இருந்தது அபிராமிக்கு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *