தொல்தமிழின் சிறப்பை விளக்கிய சொல்லாராய்ச்சி அறிஞர் – தேவநேயப் பாவாணர்

0

மேகலா இராமமூர்த்தி

தமிழ் மொழியின் சிறப்பைப் போற்றி வளர்த்த பெருமக்கள் பலருள், குறிப்பிடத்தக்கவர் தேவநேயப் பாவாணர் ஆவார். ஞானமுத்து – பரிபூரணம் அம்மையார் இணையரின் பத்தாவது மகனாக, 1902-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார் பாவாணர். இவரின் தந்தையும் தாயும் அடுத்தடுத்து இறந்துபோகவே, யங் துரை என்ற பள்ளித் தாளாளரின் உதவியுடன் தொடக்கக் கல்வியைப் முடித்திருக்கின்றார். பிறகு, வட ஆர்க்காட்டில் உள்ள தம் சகோதரியின் வீட்டில் தங்கிப் படித்திருக்கின்றார். தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் (kellet) உயர்நிலைப் பள்ளி, சென்னை கிறித்தவப் பள்ளி உள்ளிட்டவற்றில் தம் படிப்பைத் தொடர்ந்தார் அவர்.

1921-ஆம் ஆண்டு ஆசிரியப் பணிக்குப் பாவாணர் செல்லவிரும்பியபோது, அவரது ஆசிரியரான, பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டிருந்தார் அவ் ஆசிரியர். பின்னாளில் அப்பெயரையே தமிழ்ப்படுத்தி, ’தேவநேயப் பாவாணர்’ என்று வைத்துக்கொண்டார் பாவாணர் என்றறிகின்றோம். 

1926-ஆம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் கலந்துகொண்டார் பாவாணர். அத் தேர்வில் வெற்றிபெற்றவர் அவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

`தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் மறைமலை அடிகளார் வழிநின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராய் அடிமரமாய் இருந்து சிறப்பாக உழைத்தவர் பாவாணர். அவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கண்ட  ’தமிழ்த் தேசியத்தின்’ தந்தை என்று அழைக்கப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார், ’மொழிஞாயிறு’ என்னும் அழியாப் பட்டத்தை வழங்கிப் பாவாணரைச் சிறப்பித்தார்.

இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று, சொல்லாராய்ச்சிகள் பல செய்தபின்னரே தமிழ்மொழி மிகவும் தொன்மையானது என்ற கருத்தை முன்வைத்தவர் பாவாணர். உலக மொழிகளில் மூத்ததும், மிகப்பழங்காலத்திலேயே செம்மையான வடிவம் பெற்றதும் தமிழாகும் என்றும், திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழ் எனவும் வாதிட்டவர் பாவாணர்.

அவர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள நூல்களில் சில:

1. ஒப்பியன் மொழிநூல்
2. தமிழ் இலக்கிய வரலாறு
3. தமிழ் வரலாறு
4. தமிழர் வரலாறு
5. தமிழர் திருமணம்
6. தமிழர் மதம்
7. திரவிடத்தாய்
8. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்
9. வடமொழி வரலாறு
10. வேர்ச்சொற் கட்டுரைகள்
11. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
12. The primary classical language of the world.

தமிழ் இயல்பாய்த் தோன்றிய மொழியாதலானும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே திரிந்து செல்லுதலானும், மிகத் தொன்மை வாய்ந்தது ஆதலானும், அது தோன்றியது குமரிநாடே என்று துணியப்படும்.” எனத் ’திரவிடத்தாய்’ எனும் தம்முடைய நூலின் முன்னுரையிலேயே குமரிநாட்டுக் கொள்கையையும், ஞால முதன்மொழி தமிழே எனும் தம் கொள்கையையும் உறுதியாய்ப் பதிவுசெய்கிறார் பாவாணர். ’பவளம்’ என்பது ’ப்ரவளம்’ என்று வடமொழியில் திரிந்தது போலவே ’தமிழம்’ என்னுஞ் சொல் த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் திராவிடம் என்றானது என விளக்குகின்றார்.

தம்முடைய தமிழர் மதம் என்ற நூலில் மாந்தன் நாகரிகமடைந்து அறிவுவளர்ந்து பண்பாடுற்ற பின்னர், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது அறிவு வளர்ச்சியேயாகும்.  மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப்பட்டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின.  அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மையே. அவை பெரும்பாலும் தன்னலக்காரர்களின் சூழ்ச்சியால் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக்கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொளல் வேண்டும்  என்று தெரிவிக்கும் பாவாணர், மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், (1) சிறுதெய்வ வணக்கம் (2) பெருந்தேவ மதம், (3) கடவுள் சமயம் என மூவகைப்படும்.

சிறுதெய்வங்களுக்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்;  சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள்தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனிமட்டும் படைத்து, அந்தந்த மத அடையாளந் தாங்கி, இருதிணை உயிர்க்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்து ஒழுகுவது பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறையை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படையலாயிட்டு, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்திலோ துறவறத்திலோ நின்று, இயன்றவரை எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்து, வீடுபெற ஒழுகுவது, கடவுள் சமயமாகும். இம்மூவகை மதநிலையையும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டுத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவர்களுடைய மதம் கொலைவேள்வியை முதன்மையாய்க் கொண்ட சிறுதெய்வ வணக்கமே ஆகும். தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் அவர்கள் தழுவினர். ஆதலால், அவர்களின் வேதாகம இதிகாச புராணக் கதைகளையும் புரட்டுகளையும் நம்பி, அவையே சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் அவற்றின் சித்தாந்தங்களுக்கும் மூலமெனக் கூறுவது, சற்றும் பொருத்தமற்ற கருத்தாகும் என்கின்றார்.

தமிழர் திருமணம் எனும் தம்முடைய நூலில் பழந்தமிழர் மணம் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கும் பாவணர், ஓர் ஆடவனும் பெண்ணும், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடாத்த இயைந்து ஒன்றுசேர்வதே மணமாகும். மணத்தல் என்றால் கலத்தல் அல்லது கூடுதல் என்று பொருள். மணவாழ்க்கைக்கென்றே இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருப்பதாலும், அதனிடத்து மிகுந்த அறப் பொறுப்புள்ளமையாலும், வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின்முன் அல்லது தெய்வத்தின்பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுவதாலும், மணம் தெய்வத்தன்மை பெற்றுத் திருமணம் எனப்பெற்றது.

முற்காலத்தில், எல்லா ஆடவரும் பெண்டிரும், பருவம் வந்தபின் விலங்கும் பறவையும்போல மணச் சடங்குகளின்றியே கூடி வாழ்ந்து வந்தனர். அப்போது சில ஆடவர், தாம் சேர்ந்திருந்த மகளிரைக் கைவிட்டும், அவர் வாழ்வைக் கெடுத்தும் வந்ததினால், மக்கள்மீது அருள்கொண்ட தமிழ்ச் சான்றோர், கரணம் என்னும் திருமணச் சடங்கை ஏற்படுத்தினர். மணமகன், மணமகளைத் தன் நிலையான வாழ்க்கைத் துணையாகக் கொள்வதாக, பலரறியக் கடவுள் திருமுன் ஆணையிடுவதே கரணமாகும்.
 
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
”    (கற்பியல், 4)

என்று இதனைக் குறிப்பிடுகின்றது தொல்காப்பியம்.

எனவே, பண்டைத் தமிழ்மணம் என்பது தமிழ்க்குடியைச் சேர்ந்த பார்ப்பாராலும், குலத்தலைவராலும் தமிழில் நடத்தப்பெற்று வந்த மணங்களே ஆகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிறார் பாவாணர்.

ஆனால், ”மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” என்று சிலப்பதிகாரம் பிராமண அல்லது ஆரியப் பார்ப்பனப் புரோகிதத்தைக் குறித்திருப்பது பற்றி நமக்கு ஐயம் எழலாம் என்பதை உணர்ந்த பாவாணர், கடைச்சங்க காலத்தில் நகரங்களிலும் மாநகரங்களிலும் பெரும்பாலும் அரசரும்  வணிகரும் மாமுது பார்ப்பான் வழிகாட்டலில் மணம் நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான தமிழர் மணங்கள் தமிழ் மரபிலேயே – அஃதாவது ஆரியப் பார்ப்பார் இன்றியே அன்று நடந்துவந்தன என்று அழுத்தமாய்ப் பதிவுசெய்கின்றார் அவர்.

இந்நூலில் இறுதிப்பகுதியில் தமிழர் திருமணங்களில் நடைபெறவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் பேசுகின்றார். நாளும் கோளும் பார்க்கும் மூடநம்பிக்கையைத் தகர்த்து, பெண்வீட்டாரிடம் வரதட்சணை வாங்கும் அருவருப்பான செயலை விடுத்து, சாதி பார்க்கும் அகமணமுறையை ஒழித்து, வெவ்வேறினங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மணப்பது அறிவார்ந்த மக்கட்பேறு வாய்ப்பதற்கு வழிவகுக்கும் என்று பாவாணர் தெரிவித்திருப்பது அவருடைய முற்போக்குச் சிந்தனையைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் பற்றிப் பேசவந்த பாவாணர், அன்றைய தமிழர்கள் வீடு கட்டும்போது, அயலாரும் ஆண்டியரும் படுத்துறங்கத் தெருத் திண்ணை அமைத்தனர். அயல்நாட்டாரும் வழிப்போக்கரும் தங்குவதற்கு ஊரார் ஊர்மடங்கள் கட்டி வைத்தனர். பெண்கள் தம் வீட்டு முற்றத்தில் கோலமிடுவதற்கு அரிசி மாவைப் பயன்படுத்தியதுகூட, எறும்பிற்கு உணவாதல் பொருட்டே. தமிழர் கடைப்பிடித்த தலையாய அறங்களுள் இரண்டு, வாய்மையும், நேர்மையுமாகும், அதனால்தான் “பொய் சொன்ன வாய்க்குப் புகா (போசனம்) கிடைக்காது” எனும் பழமொழி ஏற்பட்டது என இன்று நாம் மறந்துவிட்ட, நடைமுறையில் துறந்துவிட்ட அற்றைய பழக்கவழக்கங்கள் பலவற்றை மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றார் அவர்.

கோயில் வழிபாடுகள் பற்றிக் குறிப்பிடுகின்ற தேவநேயர், கோயில்களில் தமிழ்வழிபாட்டு முறைதான் பின்பற்றப்படவேண்டும்; வழிபாடு மட்டுமன்றிப் பிறப்பு இறப்பு குறித்த சம்பிரதாய முறைகளும் தமிழ்மொழியில்தான் பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒரு பெருமையும் இல்லாத, காலத்தால் மிகவும் பிற்பட்ட புது மொழிகளையெல்லாம் அந்தந்த மொழிகளைப் பேசும் மக்கள், பலபடப் பாராட்டி வளர்த்து வருகையில், பல வகையில் தலைசிறந்த, தனிப்பெருந் தாய்மொழியாகிய தமிழை நம் தமிழர் போற்றாதும் புரக்காதும் விடுவதும், ஞாயிறு எங்கே உதித்தால் எமக்கென்ன என்றிருப்பதும், தமிழ்ப் பிறப்பிற்கு முற்றும் தகாத செயலாகும் என்று பாவாணர் கடிந்துரைத்திருப்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோடு தமிழைப் பின்னுக்குத் தள்ளித் தமிழர் பெருமையை இருட்டடிப்பு செய்யவிழையும் இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் பொருத்தமான அருங்கருத்தாகவும் இருப்பது கண்கூடு.

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் வியனுலகுக்கு உணர்த்துவதற்காகவே காலமெல்லாம் உழைத்த பாவாணருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்ன தெரியுமா?

செம்மொழியான நம் தமிழ்மொழிக்கு எத்தகு இடர்வரினும் அதனை அழியாது காப்பதும், தன்னேரிலாத அதன் தனிச்சிறப்பை அகிலமெங்கும் பரப்புவதுமே ஆகும்.

*****

கட்டுரைக்குத் துணைநின்றவை:

1.  https://en.wikipedia.org/wiki/Devaneya_Pavanar
2. https://ta.wikipedia.org/wiki/தேவநேயப்_பாவாணர்
3. தமிழர் மதம்:  http://www.tamilvu.org/node/154572?linkid=101917
4. தமிழர் திருமணம்: http://www.tamilvu.org/node/154572?link_id=89836
5. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்: http://www.tamilvu.org/node/154572?link_id=91149

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *