கட்டுரைகள்பத்திகள்

சுதந்திரம் என்பது….

-நிர்மலா ராகவன்

நலம்…. நலமறிய ஆவல் (161)

மனைவிக்குச் சுதந்திரமா!

`மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு கணவன் செவிப்புலன் அற்றவராகவும், மனைவி பார்வையற்றவளாகவும் இருக்க வேண்டும்’. இது மனைவியுடன் ஒத்துப்போகத் தெரியாத ஒருவரின் கருத்தாக இருக்கவேண்டும். இந்த நிலை அவசியமென்றால், எவருமே முழுமையாக இருக்கமுடியாதே!

கதை

“`நான் முன்னுக்கு வந்திருப்பது நீங்கள் எனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தால்தான்! என்று தினமும் ஒருமுறை என் கணவரிடம் கூறுவேன்,” என்று என்னிடம் தெரிவித்தாள் நான்ஸி கூ (Khoo). சமூக சேவகியான அவள் குடும்பத்தில் வன்முறையைப் பொறுத்துப்போகும் பல பெண்களைச் சந்தித்திருக்கிறாள்.

எத்தனை பெண்கள் இவளைப்போல் தம் கணவன்மார்களிடம் நன்றியுடன் கூற முடியும்!

நான்ஸி வாரத்தில் மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதைத் தவிர, இசையில் தேர்ந்தவள். மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வாள். நிலையான உத்தியோகம் வேறு. இப்படியாக பலவற்றிற்கும் நேரத்தைச் செலவழித்தால், அவளுடைய இரண்டு குழந்தைகளுக்கும், கணவருக்கும் போதிய நேரத்தை ஒதுக்க இயலுமா?

சிரித்தபடி, அதையும் அவளே கூறினாள்: “உத்தியோகத்திற்காக 50%, பொதுநல சேவைக்கு 30%, வீட்டு வேலைக்கு 10%. குழந்தைகளுக்காகக் கொஞ்சம், மீதி 1% கணவருக்கு!”

தன் ஒவ்வொரு தேவையையும் குறிப்பாலேயே புரிந்துகொண்டு, மனைவி அவைகளை நிறைவேற்றவில்லையே என்று ஆத்திரப்படும் ரகமில்லை அவளது கணவர்.

மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருந்தால்தான் தானும் நிம்மதியாக இருக்கலாம் என்ற விவேகம் அவருக்கு இருந்தது. குழந்தைகளை வெளியில் அழைத்துப்போவது, பாடம் கற்பிப்பது எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

ஒரு நல்ல கணவர் நல்ல மனைவியாகவும் இருப்பார்.

`ஆண்’ என்றால் முரட்டுத்தனமாக இருக்கவேண்டும் என்று அவர் எண்ணவில்லை. `நீ களைத்துப்போய் வந்திருக்கிறாயே! இன்று வெளியில் போய் சாப்பிடலாமா? இல்லாவிட்டால், நான் ஏதாவது செய்யட்டுமா?’ என்று கரிசனப்படுவார்.

அத்துடன், தான் ஒரு நாளில் செய்வது எல்லாவற்றையும் அன்றே நான்ஸிதான் அவருடன் பகிர்ந்துகொள்கிறாளே! அவள் கூறுவதையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு, தகுந்த ஆலோசனையும், உதவியும் செய்யவும் அவர் தயங்கியதில்லை.

தீராத நோயால் அவதிப்பட்ட ஒரு மாதுவிற்கு மரணபயம், அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று நான்ஸி தன் குழப்பத்தை வெளியிட்டாள் ஒரு சமயம்.

`உனக்கே சாவு பயம்! இந்த லட்சணத்தில் நீ மற்றவர்களுக்கு அறிவுரை கூறப்போகிறாயா!’ என்ற ரீதியில் கேலி செய்தால், அடுத்த முறை நான்ஸி அவரிடம் எதுவும் சொல்வாளா?

அடுத்த நாளே, புத்தகசாலைக்குச் சென்று, அது சம்பந்தமான புத்தகங்கள் சிலவற்றை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார் கணவர்.

அவருக்கே அந்த விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், `நீ இப்படிச் செய்திருக்க வேண்டும்!’ என்பதுபோல் கூறினால், அது அவளைத் தாழ்த்துவதுபோல் ஆகிவிடும் என்று அவர் அறிந்திருந்தார். அதனால்தான் மறைமுகமான உதவி. நன்றியுடன் அதை ஏற்றவள், கணவருக்கும் மதிப்புக் கொடுத்து நடந்தாள்.

மனைவிக்கு இருப்பதுபோல் அவருக்கும் சிலவற்றில் தனிப்பட்ட ஆர்வம் இருக்காதா! மிஸ்டர் கூ நண்பர்களுடன் விளையாடிவிட்டு நேரங்கழித்து வீடு திரும்பினால், அவள் சந்தேகப்படாது, `இன்று எப்படி விளையாடினீர்கள்?’ என்று அக்கறையுடன் விசாரிப்பாள்.

இப்படி ஒற்றுமையாகச் செயல்படும் இன்னொரு தம்பதிகள் எனக்கு கோலாலம்பூரில் பழக்கம். அவர்கள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மனைவி மரியாதான் எனக்குத் தோழி. அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது, கணவர் நெடுநாட்கள் பழகியதுபோல் முகமெல்லாம் சிரிப்பாக சில சிற்றுண்டி வகைகளைக் கொண்டுவைத்தார்.

மனைவி பிற பெண்களுடன் நெருக்கமாகப் பழகினால்கூட தனிமையாக உணர்ந்து, தம் ஆட்சேபத்தை எப்படி எப்படியோ தெரிவிக்கும் ஆண்களில் இவர் வித்தியாசமானவர்.

மரியா அப்படியொன்றும் – தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளைப்போல் – நிறைய வளைவுகளுடன் இருக்கவில்லை. சோனியாக, பன்னிரண்டு வயதுப் பையன்போல் இருப்பாள். நான் அவர்கள் வீட்டுக்குப் போகும்போதெல்லாம், களிப்புடன் ஓடி வருவாள். பொதுவாகவே, மனிதர்கள் என்றால் அவளுக்கு உயிர். இது அவருக்குப் புரிந்தது. பெண்’ என்றால் அவளுடைய உருவம் மட்டுமில்லை என்பதை உணர்ந்தவர் அவர்.

ஸ்வீடன் நாட்டவர் எது நிலையானது, எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை.

இம்மாதிரியான புரிந்துணர்வு இருக்கும் குடும்பங்களில் மற்றவரை இழிவுபடுத்தாது, தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

`நீங்கள் என்னை மற்றவர் முன்னிலையில் திட்டினாலோ, பழித்தாலோ எனக்குப் பிடிக்கவில்லை,’ என்று திட்டவட்டமாகக் கூறினால், நிலைமை மாறக்கூடும். அடுத்த முறை, சற்று யோசிப்பார். இருவருக்குமே கருத்துச் சுதந்திரம் இருக்கும்.

சுதந்திரம் என்பது..

`சுதந்திரம்’ என்றால் மனம்போனபடி, சமூகம் ஏற்காததையெல்லாம் செய்வதில்லை. ஒருவரது திறமைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்றபடி நடந்துகொண்டு, பிறருக்குத் தொந்தரவோ, தீமையோ விளைவிக்காது இருத்தல் எனலாம்.

ஓர் இளம்பெண் கடற்கரைப் பகுதியில் இடுப்புக்குமேல் எதுவும் அணியாது நடந்துகொண்டிருந்தபோது, இங்கு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாள். `ஆண்களும் இப்படித்தானே நடக்கிறார்கள்! நீங்கள் ஏன் அவர்களைப் பிடிப்பதில்லை?’ என்ற அவளுடைய வாக்குவாதம் செல்லவில்லை.

பெண்ணியம், தனி மனித சுதந்திரம் என்றெல்லாம் பேசலாம். ஆனால், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டாமா?

படிக்காத பெண்களும் படித்த பெண்களும்

பல ஆண்களுக்கு மனைவி கூறுவதைக் கேட்கவே அலுப்பு ஏற்படும். `அறிவார்த்தமாக இவள் என்ன சொல்லிவிடப்போகிறாள்!’ என்ற அலட்சியம்.

“நீ சும்மா இரு. நீ படிக்காத முட்டாள்!”

தாம் பெற்ற ஒரே மகளின் திருமண விஷயத்தில் மனைவியின் குறுக்கீட்டை விரும்பாத பொன்னையா அவள் எது சொன்னாலும் கேட்கத் தயாராக இல்லை.

`நான் படிக்காதவள்னு தெரிஞ்சுதானே கட்டிக்கிட்டீங்க?’ என்று அவளுக்குக் கேட்கத் தெரியவில்லை.

அவள் மனம் அவமானத்தாலும், தன் கையாலாகாத்தனத்தாலும் நொந்தது. அது திசை மாறியது. வேலைக்கு வந்த இடத்தில் அந்த ஆத்திரத்தைக் காட்டினாள்.

இவளைப் போன்றவர்களுக்கு வீட்டிலும் நிம்மதி கிடையாது; வெளியிலும் மகிழ்ச்சியைத் தாமே குலைத்துக்கொள்கிறார்கள்.

இளம் வயதில் திருமணமான பெண்ணுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவே வாய்ப்பு இருந்திருக்காது. கணவனுக்குக் கீழ்ப்படிந்து, புக்ககத்தில் எல்லா இடர்களையும் பொறுத்துப்போவதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்பதுபோல் நடப்பாள்.

பத்திரிகை ஒன்றில் ஒரு பெண்மணி எழுதியிருந்தாள், “நாங்கள் (எங்கள் காலத்தில்) கணவரிடம் அடிவாங்கினோம், மாமியாரின் ஏச்சுப்பேச்சுகளை சகித்துக்கொண்டோம். பின்பு, நாத்தனார், மைத்துனர் ஆகியோருக்குத் திருமணம் செய்துவைத்தோம். அதனால்தான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்”.

கணவனிடம் அடிவாங்கியது, அதைப் பொறுமையாக ஏற்றது, இவற்றையெல்லாம் பெரிய சாதனைபோல் அவள் எழுதியிருந்தது எனக்கு எரிச்சலை ஊட்டியது.

“கணவர் அடிக்கும்போது உங்களுக்குச் சிறிதுகூட மனவருத்தம் ஏற்படவில்லையா?” என்று எழுதிக் கேட்டேன்.

அவளுக்கு என்மேல்தான் கோபம் வந்தது. வழக்கமாக அனுப்பும் வாழ்த்து அட்டைகள் நின்றுபோயின!

நன்கு படித்து, உத்தியோகத்திற்குப் போகும் பெண் திருமணம் செய்துகொண்டால் சுதந்தரத்தை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறாள். அப்படியே மணவாழ்வில் துணிந்து இறங்கினாலும், மனைவி தன்னை மிஞ்சிவிடுவாளோ என்ற தடுமாற்றம் ஆணுக்கு. அவள் மேலே போகப்போக, தானும் முயன்று, மேலே போக நேரிடுமே! அவள் மட்டும் முன்னேறிவிட்டால், நண்பர்கள் தன்னைக் கேலி செய்வார்களே என்ற பயம் வேறு.

`அவளைப் பார்! எப்படி பிறர் பாராட்டும்படி இருக்கிறாள்!’ என்று எவளையோ புகழ்ந்து, மனைவியை மறைமுகமாக மட்டும் தட்டுபவர் யோசிப்பதில்லை – தான் பக்கபலமோ, ஊக்கமோ அளிக்காமல் போனதுதான் மனைவி முன்னுக்கு வரத் தடையாக இருந்திருக்கிறது என்ற உண்மையை.

Comment here