இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (295)

0

Image ©Licensed to i-Images Picture Agency. 01/08/2016. London, United Kingdom. Prime Ministers Official Portrait. Picture by Andrew Parsons / i-Images

-சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். நெடியதோர் இடைவேளை. சில காலம், சில வாரங்கள் மடலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் உங்களுடன் இணைகிறேன். காலம் என்பது ஒரு புத்தகம் போன்றது அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. தன் வேகத்தில் தனது புத்தகப் பக்கங்களை மூடிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. மூடப்படும் அந்தப் பக்கங்களுக்குள் எமக்குத் தெரிந்த, தெரியாத பல நிகழ்வுகளும் புதைபட்டுப் போகின்றன. ஆனல் நிகழ்ந்து விட்ட நிகழ்வுகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் தொடரும் அதன் பக்கங்களில் எழுதப்படும் பல அத்தியாயங்களுக்கு அடிப்படையாக அமைந்து விடுகிறது.

கடந்து சென்ற இந்த சில வாரங்களுக்குள் இங்கிலாந்து அரசியல் புத்தகத்தில் பல புதிய அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வின் அதிர்வுகள் இங்கிலாந்தின் இத்தனை கால அரசியல் அமைப்பையே மாற்றி அமைத்து விடுமோ எனும் அச்சத்துடன் கூடிய ஆதங்கம் எழுந்திருக்கிறது. இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் பெரும்பான்மையான காலங்களில் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் தான் கோலோச்சி வந்திருக்கின்றன. வலதுசாரக் கொள்கைகளைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியும், இடது சார்புக் கொள்கைகளைக் கொண்ட லேபர் கட்சிகளுமே இவையாகும் . இவற்றின் நடுவே எழுந்தும் , தாழ்ந்தும் நடமாடிக் கொண்டிருந்தது லிபரல் கட்சி.

1981ம் ஆண்டு லேபர் கட்சியின் போக்கு அதிதீவிரமான இடதுசார்பை நோக்கிப் போகிறது எனும் குற்றச்சாட்டில் நாலு மிதவாத பராளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறினர். ரோய் ஜென்கின்ஸ், சேர்லி வில்லியம்ஸ், டேவிட் ஓவன், பில் ரொஜேர்ஸ் எனும் நால்வரே அவர்கள் ஆவார்கள். இவர்கள் சோஸல் டெமகிரட்ஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார்கள். இவர்கள் 1983, 1987 பொதுத்தேர்தல்களில் லிபரல் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டுச் செய்து போட்டியிட்டார்கள். பின்பு 1988ம் ஆண்டு இரு கட்சிகளும் இணைந்து சோஸல் அன்ட் லிபரல் டெமகிரட்ஸ் எனும் கட்சியைத் தோற்றுவித்தார்கள். பின்பு சிறிது காலத்தில் இக்கட்சி லிபரல் டெமகிரட்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இங்கிலாந்து அரசியல் அரங்கில் பல காலமாக இம்மூன்று கட்சிகளே முன்னிலை வகித்து வந்தன. இவை தவிர பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வழமை இருந்தாலும் அவைகள் எதுவுமே அரசியல் அரங்கில் எந்தவிதமான மாற்றங்களையும் கொண்டுவரும் வல்லமை படைத்தவையாக இருக்கவில்லை.ஈதர கட்சிகளில் சில மிகத்தீவிரவாதமான வலதுசாரப் பிரச்சாரங்களை முன்வைப்பவைகளாக இருந்தன. வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்துக்கு எதிரான பிரச்சாரமே ஓரிரு கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்நிலையில் தான் ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து வகிக்கும் உறுப்பினர் அங்கத்துவத்தின் எதிர்மறையான பாதிப்புகள் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் கன்சர்வேடிவ் கட்சிக்குள் மிகத்தீவிரமாக ஒலித்தது.

இக்கோஷத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தீவிர வலதுசார இனத்துவேஷம் கொண்ட கட்சிகளும் ஜரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் குதித்து இவ்வங்கத்துவமே இங்கிலாந்தில் வெளிநாட்டவர் சுலபமாக வந்து குடியேற உதவுகிறது எனும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தமை இங்கிலாந்தின் வெள்ளை இனத்தவர்கள் அதுவும் குறிப்பாக மூத்தோர்கள் மத்தியில் இனத்துவேஷ உணர்வுகளையும், தேசியம் என்கிற உணர்வின் பெயரில் தன்னாட்டு ஆர்வத்தையும் முடுக்கி விடத் தொடங்கியது. இத்தகைய உணர்வுகளுக்குத் தூபமிடும் வகையில் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள் தம்மை இங்கிலாந்து வெள்ளைச் சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்தி ஒரு குழுநிலை மனப்பான்மையோடு வாழும்முறை கைகொடுத்தது என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.

எமது வாழ்வினை மேற்கொள்வதற்கு இங்கிலாந்து நாட்டினை தேர்ந்தேடுத்துவிட்டு அங்கு எமது வாழ்க்கைமுறைகளைத் திணிக்கும் முயற்சியில் பல சமூகங்கள் ஈடுபட்டதும் வெள்லை இனத்தவர் மனங்களில் தமது கலாச்சாரம் பறிபோவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்பதும் உண்மையே. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது கலாச்சாரமுறையில் வாழ்வதற்கு இங்கிலாந்து நாட்டு அரசியல் சட்டம் இடமளித்து இருக்கிறது. இத்தகைய ஒரு சகிப்புத் தன்மையை அதன் எல்லைக்கு இட்டுச் செல்லும் வகையில் பல வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மையே. இந்தப் பின்னனியில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அதாவது ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டும் எனும் கோஷத்துக்கு ஆத்ரவு பெருகிக் கொண்டு வந்தது. இந்த ஜரோப்பிய ஒன்றியப் பிரச்சனை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் நாலு தலைவர்களைக் காவுகொண்டதுகீதனிடையே கன்சர்வேடிவ் கட்சியின் போக்கில் அதிருப்தி கொண்ட உறுப்பினரான ஒரு செல்வந்தரான நைஜல் வரா௺ஜ் என்பவர் யூனைட்டட் கிங்டொம் இன்டிப்பென்டன்ஸ் கட்சியத் தோற்றுவித்தார். இக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சியின் வாக்குகளை அபகரிக்கத் தொடங்கியது. தமது கட்சிக்குள் இருக்கும் இம்முரண்பாட்டை தீர்க்கவில்லையானல் நைஜல் வராஜ் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட டேவிட் கமரன் உண்டு இல்லை என்று தீர்மானிப்பதற்காக அடுத்த பொதுத்தேர்தலில் டேவிட் கமரன் தாம் வெற்றி பெற்றால் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா, இல்லையா? எனும் தீர்வுக்கான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவோம் என்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய கொள்கையாக முன்மொழிந்து தேர்தலில் வெற்றியும் பெற்றார்

விளைவு!

2016ம் ஆண்டு நடைபெற்ற ப்றெக்ஸிட்டுக்கான பொதுஜன வாக்கெடுப்பு. சுமார் ஒரு மில்லியனுக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களிக்கப்பட்டது. இதை நைஜல் வராஜ் அவர்கள் தனது வெற்றியாகவே கொண்டாடினார். அதைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரச்சாரத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட யூகிப் எனும் நைஜல் வராஜ் அவர்களின் கட்சி தனது செயல்பாட்டை முடக்கி செல்வாக்கிழந்தது. இவ்வெளியேற்றத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த அப்போதைய பிரதமர் டேவிட் கமரன் இந்த வெளியேற்றத்தை முன்னெடுக்கும் தகுதியை இழந்து விட்டேன் என்று கூறி பிரதமர் பதவியிலிருந்து விலகிய டேவிட் கமரன் வர்கள் அரசியலிருந்தே முற்றாக ஒதுங்கி விட அவரது இடத்துக்கு அம்மையர் திரேசா மே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நாட்டு மக்கள் தமக்கு இந்த ப்ரெக்ஸிட் வெளியேற்றத்துக்கான முழு ஆணையைத் தரவேண்டும் என எதிர்பார்த்து தமது கட்சி முன்னனி உறுப்பினர்களின் கருத்துக்கு முரணாக ஒரு பொதுத்தேர்தலை நடத்தி தமது கட்சிக்கு இருந்த பெரும்பான்மை பலத்தைக் குறைத்ததினால், ஜக்கிய இராச்சியத்தின் அங்கமான் வட அயர்லாந்தின் வலதுசார தீவிரவாதக் கட்சியான டெமக்ரட்டிக் யூனியன் கட்சியின் தயவுடன் அரசாங்கம் அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவிதமான உடன்படிக்கையுமின்றி வெளியேற வேண்டும் என்பதுவே கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருந்த சிறுபான்மையான் தீவிரவாத பாராளுமன்ற உறுப்பினர்களின் வாதம். இதையே நைஜல் வராஜ் எனும் வணிகத்திலிருந்து அரசியலுக்குத் தாவிய நைஜல் வராஜ் அவர்களும் முன்மொழிந்தார். ஆனால் இங்கிலாந்தின் பல முன்னனித் தொழில் தலைவர்களும், பல நிதி நிறுவனங்களும் ஜரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து ஒழுங்கான வகையில் வெளியேறுவது ஒன்றே இங்கிலாந்தின் பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்கும் என்று வலியுறுத்தினார்கள். இதையே பிரதமர் தெரேசா மேயும் அவரது மந்திரி சபையின் பெரும்பான்மை அமைச்சர்களும் நம்பினார்கள்.

விளைவாக எதுவித உடன்படிக்கையுமின்றி வெளியேறுவது எனும் கொ:ள்கையைக் கைவிட்டு தெரேசா மே அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்துடன் மிக நீண்ட பேச்சுவார்த்தைகளின் வழி ஒரு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார்கள். இதுவே ஜக்கிய இராச்சியத்துக்கு தம்மால் அளிக்கக்கூடிய அதிகூடிய சலுகை என்பதில் ஜரோப்பிய ஒன்றியம் உருதியாக இருந்தது. இதற்கு மேல் எமக்குச் சாதகமாகப் எதையும் பெற முடியாது இது எமது அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர்வதற்கு எமக்கு உகந்தது என்று பிரதமர் இவ்வுடன்படிக்கையை ஆதரித்து பாரளுமன்றத்தின் அனுமதிக்காகப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டு சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவ்வுடன்படிக்கையை எதிர்க்கட்சிகள் உட்பட பிரதமரின் கட்சியில் இருந்த தீவிரவாத ஜரோப்பிய ஒன்றியத்துக்கெதிரான உறுப்பினரகளோடு அரசாங்கத்தில் இணைந்திருந்த வட அயர்லாந்து பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தமையே இத்தோல்விக்குக் காரணம். அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரதமர் தனது பதவியை இராஜினாமச் செய்ய வேண்டும் எனும் கோஷம். ஆயினும் தனது கொள்கையில் உறுதியாக இருந்த பிரதமர் தனது செயற்பாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டு சிறு சிரு மாற்றங்களுடன் மூன்று முறை இவ்வுடன்படிக்கையை பாரளுமன்றத்தின் முன் வைத்து மூன்று முறையும் தோல்வியுற்றார்.

இங்கிலாந்துப் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோட்பாடுகளை அதன் எல்லைகள் வரை நகர்த்தி பரிசோதிக்க ஆரம்பித்தது. எதுவித உடன்படிக்கையுமின்றி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் விலகுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைந்தது. இது பிரதமரை மேலும் சிக்கலுக்குள் தள்ளியது. எவ்வகியிலாவது ஜரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கையின் வழிதான் விலகுவது எனும் முடிவுக்கு பிரதமரைத் தள்ளியது. அவரது கட்சிக்குள் இருந்த தீவிரவாத உறுப்பினர்கள் இதனால் கொதிப்படைந்தனர் ஏனெனில் ஜரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்பை அறவே துண்டிக்க வேண்டும் என்பதுவே அவர்களது கொள்கை. இவர்களோடு நைஜல் வராஜ் என்பவரும் சேர்ந்து பிரதமரின் செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். ஜனநாயக மரபின்படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என ஆணையிட்ட மக்களின் தீர்ப்பை ஏறக்குறைய மூன்று வருடங்களாகியும் நிறைவேற்றவில்லை எனும் வாதத்தை முன்வைத்து பிரதமருக்கு எதிரான ப்ரச்சாரத்தை முன்னெடுத்த நைஜல் வராஜ் போன்றவர்களின் வாதம் வலுப்பெற்றது. நைஜல் வராஜ் “பிரெக்ஸிட்” எனும் கட்சியை ஆரம்பித்தார்.

எதற்காக என்கிறீர்களா?

2016 சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனும் முடிவை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று கூறி ஜக்கிய இராச்சியம் தாம் 2019 மார்ச் மாதம் 29ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் என்று சட்டப்பிரகாரம் அறிவித்தது. அப்படி வெளியேறியிருந்தால் கடந்த மாதம் நடைபெற்ற ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தல்களில் ஜக்கிய இராச்சியம் பம்குபற்ற வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் நீண்டு கொண்டிருக்கும் பிரச்சனையால் வெளியேற வேண்டிய காலக்கெடுவுக்கு அவகாசம் வேண்டி இத்திகதி 2019 அக்டோபர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நடந்து முடிந்த ஜரோப்பிய தேர்தலில் ஜக்கிய இராச்சியம் பங்கு பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமானது. மக்களின் எதிர்பார்ப்பு ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவித தொடர்புமில்லாமல் வெளியேறுவதே என்பதை தமக்கு அவர்கள் தரும் ஆதரவின் மூலம் நிரூபிக்கப் போவதாக நைஜல் வராஜ் கூறி அதற்காக இப்புதுக்கட்சியை ஆரம்பித்தார்.

இன்றைய இங்கிலாந்து அரசியல் அரங்கின் முன் முக்கியமாக தலைவிரித்தாடும் கேள்வி கரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதா? இல்லை தொடர்ந்து நிலைபெறுவதா? என்பதுவே. இதனை எந்தக் கட்சிக தெள்ளத்தெளிவாக வலியுறுத்துகின்றனவோ அக்கட்சியே மக்களின் ஆதர்வைப் பெறும் எனும் நம்பிக்கை நிலவியது. இங்கு நைஜல் வராஜ் அவர்கள் ஆரம்பித்த கட்சி அனுகூலமான் நிலையிலிருந்து. தெள்ளைத் தெளிவாக எதுவித உடன்படிக்கையுமில்லாமல் அக்டோபர் 31ம் திகதி வெளியேற வேண்டும் என்பது ஒன்றே அவர்களது கொள்கையாகவிருந்தது ஆனால் ஜரோப்பிய ஒன்ரியத்துடனான உறவு சுமுகமான் முறையில் நீடிக்க வேண்டும் எனும் கருத்தை தெளிவாக முன்வைத்த கட்சிகள் இரண்டு , மூன்றெனப் பிளவு பட்டிருந்தன. இதுவரை அரசியல் அரங்கின் முக்கிய கட்சிகளாக இருந்த கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது நிலைப்பாட்டில் தெளிவாக இல்லாததினால் கருத்துக் கணிப்புகளில் மிகவும் ஓரங் கட்டப்பட்டிருந்தார்கள்.

நடந்து முடிந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதையே ஊர்ஜிதப்படுத்தின;. நைஜல் வராஜ் அவர்களின் பிரெக்ஸிட் கட்சி அதுகூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெர்ற கட்சியாக வலுப்பெற்றது இருப்பினும் ஜரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் எனும் கருத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளைக் கூட்டினால் அதுவே அதிக வாக்குகளைக் கொண்டிருந்தது இருப்பினும் இவை பல கட்சிகளுக்கிடையே பிரிக்கப்பட்டதினால் அவர்களுக்கு கிடைத்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இத்தேர்தல் முடிவு எமது பிர்தமர் தெரேசா மே அவர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. அவரது கட்சியின் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கும் சபை அவர் எப்போது பதவி விலகுவார் என்று அறிவிக்கும்படி அவருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தது. இரும்பு மனுசியாக இருந்த பிரதமர் தளர ஆரம்பித்தார். தான் யூன் மாதம் 7ம் திகதி தனது கட்சியின் தலைமைபதவியிலிருந்து விலகுவதாகவும் அடுத்த தலைவரின் தெரிவு வரை பிரதமராக நீடிப்பதாகவும் கண்ணிருடன் அறிவித்தார். இதுவரை சுமார் 11 கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சில அமைச்சர்கள் உட்பட தாம் தலைமப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். யார் புதிய பிரதமர் ஆவார்கள் என்பது யூலை மாத இறுதியில் நிர்ணயிக்கப்படும்.

இந்த மார்றங்கள் இன்றைய ஜக்கிய இராச்சியத்தின் அரசியல் நிலையை எந்தத் திசையை நோக்கி செலுத்துகிறது? இதுவரை மாறி, மாறி அரசமைத்து வந்த கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது செல்வாக்கினில் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றன. தேசியம், நாட்டுப்பற்று எனும் கோஷங்களை முன்வைத்து தலைதூக்கியிருக்கும் நஜல் வராஜ் அவர்க:ளுடைய பிரெக்சிட் எனும் கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. தாம் எதிர்பார்த்தவகையில் ஜக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய உன்ரியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கை இடன்பெறவில்லையானல் தாம் இங்கிலாந்தின் பொது அரசியலில் ஒரு புது விசையாக இயங்கப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். இவரது இந்த தேசியம், நாட்டுப்பற்று எனும் கோஷம் வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடுப்பதை முக்கியமாக்க முடிவெடுக்குமானல் அதுவே இனத்துவேஷமாக மாறும் வாய்ப்புகள் பல உண்டு.

இந்தச் சூழலில் ஜக்கிய இராச்சியத்தில் புலம்பெயர் வாழ்க்கையை மேற்கொண்டுவரும் பல சமூகத்தினரின் பங்களிப்புகள் எவ்வகையில் இந்த ரசியலில் இருக்கப் போகிறது என்பதுவே முக்கியம். சமூகங்களுக்கிடையிலான பிரிவினைகளை முதன்மைப் படுத்தும் வகையில் கலாச்சாரப் பாதுகாப்பு எனும் நடவடிக்கையில் ஒதுச் சமுதாயத்திலிருந்து தம்மை அந்நியப்படுத்தும் வகியிலான குழுநிலை மனோபாவங்கள் தலைதூக்கப் போகின்றதா? என்பது முக்கியமான கேள்வியாகிறது. எமது அடையாளங்களைத் தொலைக்காமல் அதேசமயம் எமது நடவடிக்கைகள் சிரிதாக சுவாலை விட்டுக் கொண்டிருக்கும் இனத்துவேஷத்துக்கு எண்ணெய் வார்க்காத வகையில் இருக்குமாறு செய்வதற்கு ஒவ்வொரு சமூகத்திலும் அதன் காவலர்களாகத் தம்மை இனங்காட்டி நடந்து கொள்பவர்கள் எவ்வகையில் பங்க;இப்புச் செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Pic courtesy: https://en.wikipedia.org/wiki/File:Theresa_May_portrait.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *