இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(258)

-செண்பக ஜெகதீசன்

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

-திருக்குறள் -444(பெரியாரைத் துணைக்கோடல்)

புதுக் கவிதையில்…

அறிவு ஒழுக்கம்
ஆகியவற்றில்
தம்மைக்காட்டிலும் உயர்ந்த
பெரியோரை
உறவாக்கி ஒழுகுதல்,
மன்னர்தம்
வல்லமை அனைத்திலும்
உயர்ந்த
முதன்மையானதாகும்…!

குறும்பாவில்…

தம்மைவிட அறிவாற்றலுடைப் பெரியோரை
உறவாக்கி ஒழுகுதல், அரசர்தம்
ஆற்றல் அனைத்திலும் முதன்மையானதே…!

மரபுக் கவிதையில்…

அறிவு ஒழுக்கம் ஆற்றலென
அனைத்திலும் தமைவிட உயர்ந்திருக்கும்
நெறியது மிக்கப் பெரியோரை
நன்றாய்த் தெரிந்து தேர்ந்தெடுத்தே,
உறவெனப் பழகித் துணையாக்கிடும்
உயர்ந்த ஒழுக்கம், மன்னர்தம்
நிறைந்த ஆற்றல் அனைத்தினிலும்
நிலையில் முதன்மை பெற்றிடுமே…!

லிமரைக்கூ..

அறிவாற்றல்மிகு பெரியோரைத் துணையாய்
ஏற்றொழுகும் மன்னர்தம் ஆற்றலதனுக்கே
உயர்வானது ஏதுமில்லை இணையாய்…!

கிராமிய பாணியில்…

வச்சிக்கோ வச்சிக்கோ
தொணைக்கு வச்சிக்கோ,
தெறமயுள்ள பெரியவங்களத்
தொணைக்கு வச்சிக்கோ..

அறிவுலயும் ஒழுக்கத்திலயும்
தம்மவிட ஒசந்த
பெரியவங்களத்
தொணைக்கு வச்சிக்கிறது,
தேசமாளும் ராசாவோட
தெறமயிலயெல்லாம் ஒசத்தியானதுதான்..

அதால
வச்சிக்கோ வச்சிக்கோ
தொணைக்கு வச்சிக்கோ,
தெறமயுள்ள பெரியவங்களத்
தொணைக்கு வச்சிக்கோ…!

Comment here