-திருச்சி புலவர் இராமமூர்த்தி

நமக்கு ஐந்துபொறிகள்,அதாவது அறிவுக்கருவிகள் உள்ளன. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன! இந்த ஐந்து அறிவுக் கருவிகளாலும் ஐந்துவகைப் புலனறிவுகளை நாம்பெறுகிறோம். அவை தொடுதல், சுவைத்தல், காணுதல், முகர்தல்,கேட்டல் ஆகியவை. அவற்றால் உலகப் பொருளைகளைத் தொட்டு அறிகிறோம், சுவைப்பண்டங்களை சுவைத்து உண்கிறோம். காட்சிப் பொருள்களைக் கண்டறிகிறோம்.மணப்பொருள்களை முகர்ந்து இன்புறு கிறோம். இசை முதலிய ஓசைகளைக் கேட்டறிகிறோம். இவ்வாறு அறிவதற்கு உரிய ஐவகை பூதங்களே, நம்மை சூழ்ந்துள்ள பிரபஞ்சம் ஆகும். அவை நிலம், நீர், காற்று, தீ, வான் ஆகிய ஐந்தாகும். ஆகவே புறத்தில் உள்ள ஐம்பூதங்களையும் நம் ஐம்புலன்களால் அறிந்து கொள்கிறோம். இதனைத் தொல்காப்பியர் முகர்தலறிவு, சுவையறிவு, உற்றறிவு,கேட்டலறிவு , காணலறிவு என்று வகைப்படுத்துவார்.

ஒரு வியப்புக்குரிய நிகழ்வு என்ன வென்றால், கண் காணும் , ஆனால் கேட்காது, முகராது, சுவைக்காது, உணராது! அதுபோலவே காது கேட்கும், ஆனால் காணாது, முகராது, சுவைக்காது, உணராது! மூக்கு முகரும், ஆனால் கேட்காது, சுவைக்காது, காணாது, உணராது! வாய் சுவைக்கும், காணாது, கேட்காது, முகராது, உணராது! உடம்பு உணரும். சுவைக்காது, காணாது, கேட்காது ,முகராது! ஆம், ஒவ்வொரு புலனும் ஒவ்வோர் அறிவையே அறியும்! ஒவ்வொரு பூதத்தையே அறியும்.

நம் உடம்புக்குள் ஐம்பூதத்தையும் அறிந்துகொள்ளும் ஐந்தறிவையம், ஐந்து அறிவுக் கருவிகளையும் உலகின் புறத்து உறுப்பாக இறைவன் படைத்திருக்கி றார். அவ்வாறே, உடலின் உள்ளே ஐந்துவகை அறிவையும் அறிந்து கொள்ளும் மூளையையும் படைத்துள்ளார். இவ்வாறு அறிந்து கொள்ளும் அறிவை மேலாக அறிந்து கொள்ளும் மனத்தையும், அது இன்னது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் புத்தியையும், அதனை ஏற்றுக்கொள்வோம் என்று முயலும் அகங்காரத்தையும், அதை நிரந்தரமாக ஆக்கிக் கொள்ளும் சித்தத்தையும் இறைவன் நமக்கு அளித்துள்ளார். அவற்றை அந்தக் கரணங்கள் என்பர். இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் ராஜஸம் , தாமசம், சத்துவம் ஆகிய மூவகை குணங்களுடன் மனிதனை வாழ வைக்கிறார்!

இவற்றை அன்னையே நமக்குள் வைத்து வேதிவினை செய்து நம்மை உயிர்ப்புடன் திகழ வைக்கிறாள். இதனைத் திருவாசகம் ‘’வேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை! ‘’ என்று போற்றுகிறது. இதனை விரிவாக அபிராமி பட்டர் , அபிராமியந்தாதியில் பாடுகிறார்.

‘’பாரும் புனலும் கனலும் காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவையொளி யூறுஓசை ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி ‘’

என்பது அப்பாடல் பகுதி. இவ்வாறமைந்த ஐம்புலன், நான்கு அந்தக் கரணம், மூன்று குணங்கள் அனைத்தும் சுந்தர மூர்த்தி சுவாமிகளிடம் எவ்வாறு செயல் பட்டன என்பதைச் சேக்கிழார் பெருமான் விளக்குகிறார்.தில்லையம்பதிக்குள் நுழைந்து, அம்பலத்தை அடைந்து அணுக்கன் திருவாயிலில் புகுந்து ஆடல் அரசராகிய சிவபெருமானைச் சுந்தரர் கண்களால் காண்கிறார்! அக்கண்களால் காணும் போதே, பாதச் சிலம்பொலி கேட்டு, இறைவனைச் சூழ்ந்த நறுமணத்தை நுகர்ந்து, உடலார உணர்ந்து, இறைவன் திருவடிமலர்த் தேனைச் சுவைத்து விடுகிறார். இதனைச் சேக்கிழார்,

‘’ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள ‘’

என்று பாடுகிறார்.ஐந்துபேர் அறிவு – ஐந்துவகையாக ஐந்து வழிகளிலே பெயர்கின்ற அறிவு. அறிவு ஒன்றேயாயினும் ஐந்து வெவ்வேறு புலன்வழியே சென்று, ஐந்து வெவ்வேறு பொறிகளின்மூலம் ஐந்து வெவ்வேறு பொருள்களை அறியுமாதலின் ஐந்தறிவாம்.

கண்களே கொள்ள – ஐம்பொறி வழி அறியும் ஐம்புல அறிவும் கண்ணாகிய ஒரு பொறிவழி யறியும் காட்சியறிவின் மட்டிலே அமைந்துநிற்க.அதாவது ஏனைய, மூக்கு, நாக்கு, மெய், செவிகளின் வழியே அவற்றின் புலன்களிடத்து அறிவு செல்லாமையின் இவை நான்குந் தொழிற்படவில்லை. அதாவது : கண் கண்டுகொண்டே நிற்கக், காது கேளாது – மூக்கு முகராது – என்றபடி. அடுத்து, கண்களுக்குச் சொல்லியவாறே கரணங்கள் நான்கும் சிந்தையேயாக என்ற இடத்து அந்தக்கரணங்கள் நான்கினுள்ளே ஒழிந்த ஏனைய சிந்தை அகங்கார முதலியவைகள் தொழிற் படாது, நான்கும் சிந்தையின் தொழிலேயாகி நிற்க எனவும்; குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே யாக – சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற மூன்று குணங்களில் ஏனையிரண்டும் தொழிற்படாமல் சாத்துவிகத்துள் அடங்கி நின்றன எனவும் கொள்க.

இதனைச் சேக்கிழார் ,

‘’அளப்பரும் கரணங்கள் நான்கும்,
சிந்தையே ஆக , குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக’’

என்று பாடுகிறார். இறைவனின் திருக்கூத்துக் காட்சியை சுந்தரர் அப்படியே உள்வாங்கிக் கொண்டு விடுகிறார். அவர்கண்கள் ஐம்புலன்களின் அறிவையும் ஒன்றாக்கி விட்டன; உள்நுழைந்து மூளையில் எட்டிய அறிவு பேரறிவாகி விட்டது! அப்பேரறிவை அப்படியே மேற்கொள்ளும் மனமும் , ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் புத்தியும் , உடனே தனதாக்கிக் கொள்ளும் அகங்காரமும் அனைத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்ளும் சித்தமாகி விடுகிறது. எதனையும் முரட்டுத்தனமாக விரைந்து ஏற்றுக்கொள்ளும் ராஜஸம் என்ற குணம், மெதுவாக ஏற்றுக் கொள்ளும் தாமச குணத்துக்குள் அடங்கி , அதுவும் மிக மென்மையான ஞானமாகிய சத்துவகுணத்துக்குள் அடங்கி விடுகிறது.
குணம் மூன்றும் கரணம் நான்கினைத் தூண்டத் தனித்தனிப் பன்னிரண்டு நிலைகள் உண்டாம். இவை வெவ்வேறாய் ஐம்பொறி புலன்வழிக் கலக்க மேலும் பல செயல்கள் உண்டாம். இவற்றிலே பிற எல்லாம் ஒழித்துச் சாத்துவிகந் தூண்டக் கிளம்பிய மனநிலை கலந்த கண்ணின் செயல் ஒன்றே இங்குக் குறித்ததாம். இதனைச் சேக்கிழார்,

‘’வந்தபேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்’’

என்றுபாடுகிறார். மகிழ்ச்சி வந்தால் மாறுபட்ட வருத்தத்தின் துன்பம்இனி இல்லை என்ற இரட்டை நிலைஉண்டாகும். இங்கே மாறிலா மகிழ்ச்சி என்ற ஒரே நிலை உண்டாகி விட்டது! இந்நிலை முறையான பக்திநெறி வழியில் சென்று, நேர்மையான ஞானநெறிக்குள் இணைந்து, ஒரு தூண்போல கர்ம நெறியில்நின்று இறைவனை யன்றி வேறெதனையும் உணராத யோக நெறிக்குள் நிற்கும் பெருநிலை உருவாகும் ! இதனையே திருமூலர்

‘’நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணராக்
குறி, அறிவாளர்க்குக் கூடலும் ஆமே.“

என்று பாடுகிறார். அவ்வாறு இறைவன்ஆடும்கூத்து, ஆனந்தக்கூத்து, எல்லையில் கூத்து, தனிக்கூத்து , பெருங்கூத்து, தனிக்கூத்து எனப்பகுத்து உணரப்படும். வெளியே ஆடுகின்றாரைக் கண்களே கொண்டதனால் ஆடும் கூத்து என முதலிற் கூறினார். கண்டதன் விளைவு ஆனந்தமாதலின் அதனை ஆனந்தக் கூத்து என்றும் , அது அம்மட்டோடு நிற்கும் அளவுபடாமையின் எல்லையில்கூத்து என்றும், இது ஐங்கலைகளின் அதி தெய்வங்களையும் அதிட்டித்துப் பெத்த நிலையில் ஆடுங்கூத்து ஆகிய ஊனநடனம் போலன்றி மோனந்த மாமுனிவர்க்கு மும்மலத்தை மோசித்த முத்திநிலையிற் செய்யும் ஞானநடன மாதலின் தனிக்கூத்து என்றும், இதற்குமேல் வேறொன்றின்மையின் பெருங்கூத்து என்றும் கூறினார்.. பிறரை அதிட்டித்தலின்றித் தானே செய்தலின் தனிக்கூத்தென்பதாம்.இக்கூத்தையே

“மன்னுசிற் றம்பலத்தே, ஆதியு முடிவுமில்லா வற்புதத் தனிக்கூத்தாடும், நாதனார்“

என்று சேக்கிழாரே பின்னர்ப்போற்றியதுங் காண்க. ஆடுங்கூத்து இருவகைப்படும். அவை சாந்திக்கூத்து, விநோதக் கூத்து என்பன.

“அவைதாம், சாந்திக்கூத்தும் விநோதக் கூத்துமென்,
றாய்ந்துற வகுத்தன னகத்தியன் றானே“

என அடியார்க்குநல்லார் சிலப்பதிகார வுரையிற் காட்டியது காண்க.

இறைவனாடும் கூத்து சாந்திக்கூத்தின் பாற்படும். அவன் இன்ப சொரூபனாதலின் அவனதாடலும் இன்பம் பயப்பதாம். உயிர்களை ஆனந்தத்தில் அழுத்திவைக்குஞ் செயலுடைமையான் ஆனந்தக் கூத்தாயிற்று. அக்கூத்து இறைவனைப்போன்று முதல் நடு ஈறு அற்றதாதலின் எல்லையில் கூத்தெனப் பெற்றது. கூத்தாடுவோர் பல முத்திரைகளைக் காட்டுதல்போல இறைவனும் தமது இரு திருக்கரங்களில் உடுக்கையும், அங்கியும் பிடித்துக் காட்டியும், அபய, வரத திருக்கரங்களைக் காட்டியும், ஒரு திருவடி முயலகனை மிதித்தும், மற்றொன்றைத் தூக்கிக் காட்டியும், தாமே சிருட்டி, திதி, சங்காரம், திரோதம், அநுக்கிரகம் எனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்ய வல்லவர் எனப் புலப்படுத்துவாராயினார். இரு கால்களினாலாடாது ஒற்றைக் காலினால் புரியும் தாண்டவம் செய்பவராயினார். பிறர்போல் இருநிலத்தினின் றாடாது ஆகாய வெளியிலாடும் கோலமுடையவரானார். ஆடுவோர் பிறருக்கு நட்டுவன் இன்றியமையாதவனாம். ஆயின் இறைவன் தாமே உயிர்களை யாட்டிவைக்கும் விறலுடையாராய்த் தன்னிற் றொழிற்படுத்துவோன் வேறொருவனில்லாமையான் நட்டுவனார் ஒருவனைப் பெற்றாரில்லை.
“நட்டுவனாரை யறிகிலன்“ என வரும் பழமலையந்தாதிச் செய்யுள் காண்க. ஆதலினாலும் இது தனிக்கூத்தாயிற்று. இனி இப்பாடலை முழுமையாகப் பயின்று இன்புறுவோம்

ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

‘’இப்பாடலில் இந்துவாழ் சடையான் – சந்திரன் வாழ்வடைதற்கு ஏற்ற இடமாகிய சடையனை உடையான். சடையை அடைந்ததனால் சந்திரன் தனக்குத் தக்கன் சாபத்தால் வந்த குறை நோயும், இறப்பும், தீரப்பெற்றதுமன்றிப் பகைத் தீர்வும் ஏற்றமும் பெற்று நிலவினமையாலே வாழ் என்றார். இப்பாடல் திருச்செந்தில் முருகப்பெருமான தருள் (பெற்று, அவ்) வழியே சென்ற குமரகுருபரருடைய வாக்கு வன்மை, தருமபுர ஆதீனம் நான்காவது குருமூர்த்தியாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த குருமூர்த்திகளின் முன்னர்த் தடைபட்டதன்மூலம் அவரே ஞானகுரு என்று காட்டித்தரக் காரணமாயிருந்தது இத் திருப்பாட்டேயாம் என்பது வரலாறு. ஆதலின் இதன் பொருளை விளக்குதல் விதிப்படி ஞானோபதேசமும் குருவருளும் பெற்ற அநுபூதிமான்களுக்கே கூடுவதன்றி என்போன்ற எளியோர்க்கு இயல்வதன்று.’’ என்று உரையாசிரியரும் , பின் வந்த ஞானியரும் கூறி, சேக்கிழாரின் பா நயத்தை மிகுவித்தனர்.

மேலும் ஐந்து புலங்களால் நாம் பெறும் அறிவைச் சிற்றறிவு என்று பெரியோர் உரைப்பர்.’ ‘’சில்வாழ்நாள் சிற்றறிவு பெரும்பிணி யுடைய மனிதப்பிறவி ‘’ என்பது சான்றோர் கூற்று. ஆனால் சேக்கிழார் இங்கே ‘ஐந்து பேரறிவு ‘ என்று அறிவுக்குஓர் அடைமொழி தந்து சிறப்பித்திருப்பதை நோக்க வேண்டும். ஐம்புலன்களால் அறியும் புலனறிவு, மேலும் ஆழமாகி அப்புலன்களின் வழியே உணரும் மெய்யுணர்வைக் குறிக்கும்போது , ‘பேரறிவு’ எனச் சிறப்பிக்கப் பெறுகிறது. இதனை ,

‘’ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவற்கு‘’

என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் உரை விளக்குகிறது. மெய்யுணர்வினை அவர் தாரணை என்பர். தாரணை என்பது யோகத்தின் ஓர் அங்கம். அது, கண்டம், இதயம், நெற்றி, கபாலம், நாபி இவற்றுள் ஓன்றில் எப்போதும் சிந்தை வைத்திருத்தல். இதனையே சேக்கிழார் ‘’ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள ‘’ என்று தியானமுறைப்படி ஐந்து பேரறிவும் கண்களில் நிலைத்த அழகை விளக்குகிறார்.

இதனை மேலும் தெளிவாக ‘’அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’’ என்று கூறும் நயம், எண்ணியெண்ணி மகிழ்தற்கு உரியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *