-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

52. தெரிந்து வினையாடல்

குறள் 511:

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

நன்ம எது தீம எது னு தெரிஞ்சுக்கிட்டு நல்லதுல மட்டுமே நாட்டம் செலுத்துதவன் எந்த வேலைய செய்யுததுக்கும் ஏத்தவன்.

குறள் 512:

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை

வருமானம் வருத வழிய விரிவாக்கி வளத்த பெருக்கி வார தொந்தரவெல்லாத்தையும் கண்டுக்கிட்டு நீக்கி இருக்கவன் தான் காரியத்த செய்யணும்.

குறள் 513:

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

நேசம், புத்திசாலித்தனம், திறம, பேராச இல்லாத கொணம் இந்த நாலையும் இருக்கவங்கள தேர்ந்தெடுக்கது தான் நல்லது.

குறள் 514:

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

எம்புட்டுத்தான் ஆராஞ்சு தேர்ந்தெடுத்தாலும் எதிர்பாக்குத அளவு சிறப்பா நடந்துக்கிடாதவங்க பல பேர் இருக்காங்க.

குறள் 515:

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று

செய்யுத வழிய தெரிஞ்சு எத்தன தடங்கல் வந்தாலும் செஞ்சு முடிக்கவன தவித்து மத்தவன ஒசந்தவன்னு நெனச்சி ஒருவேலையும் ஏவக்கூடாது.

குறள் 516:

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்

காரியத்த செய்ய வேண்டியவனோட தகுதிய அறிஞ்சுக்கிட்டு, காரியத்தோட தன்மயையும் புரிஞ்சுக்கிட்டு அத செய்யுத காலத்தையும் உணந்து காரியத்த செய்ய வைக்கணும்.

குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்

இந்தக் காரியத்த இவன் இன்னின்ன ஆள் பலத்தாலையும், பொருள் பலத்தாலையும் செஞ்சு முடிப்பான் னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு காரியத்த ஒப்படைக்கணும்.

குறள் 518:

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

ஒருத்தன ஒரு காரியத்துல ஈடுபடுத்துதக்கு முன்ன அவன் அதுக்கு ஏத்தவனானு அறிஞ்சுக்கிட்டு செய்யணும்.

குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு

எடுத்த காரியத்த கண்ணும் கருத்துமா செய்யுத ஒருத்தன சந்தேகப்பட்டு தப்பா நினைக்குத தலைவனோட செல்வம் அவன் கையவிட்டு போவும்.

குறள் 520:

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

உழைப்பாளிங்க மனசு நோவாம இருந்தாங்கன்னா தான் ஒலகம் செழிப்பா இருக்கும். அதனால ராசா தெனைக்கும் அவங்க நெலம பத்தி தெரிஞ்சுக்கிட்டு வேண்டியத செய்யணும்.

(அடுத்தாப்லயும் வரும்….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *