நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

54. பொச்சாவாமை

குறள் 531:

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

ரொம்ப சந்தோசமா இருக்குதப்போ அயத்துப் (மறதி) போவுதது கடுங்கோவத்தக்காட்டிலும் கொடும.

குறள் 532:

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

தெனைக்கும் வாட்டுத ஏழ்ம,  புத்திய மழுங்கடிக்கது கணக்கா அயத்துப் போவுத கொணம் புகழ அழிச்சுப்போடும்.

குறள் 533:

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு

அயத்துப் போவுத கொணம் உள்ளவுகளுக்கு புகழ் இல்ல. இது எல்லாந்தெரிஞ்ச அறிவாளிங்களோட முடிவான கருத்து.

குறள் 534:

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

மனசுல பயம் இருக்கவங்களுக்கு சுத்திவர பாதுகாப்பா மதில்சுவர் இருந்தாலும் ஒபயோகமில்ல. அதுகணக்கா ஒசந்த நெலையில இருந்தாலும் அயத்துப் போவுத கொணமிருந்தா அந்த நெலையால ஒரு பிரயோசனமுமில்ல.

குறள் 535:

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்

வருத சங்கடங்கள முன்னமே தடுக்க அயத்துப் போனவன் சங்கடம் வந்த   பொறவு தன் தப்ப நெனச்சி வெசனப்படுவான்.

குறள் 536:

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்

யார்கிட்டயும் எந்தக்காலத்திலயும் ஓர்ம கெட்டு அலையுத கொணம் (ஞாபக மறதி) இல்லாமப் போச்சுதுன்னா அதப்போல நன்ம வேற இல்ல.

குறள் 537:

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்

அயத்துப் போவாம ஓர்மையோட(ஞாபகமா) செய்யுதவனுக்கு செய்யமுடியாததுனு எதுவும் இல்லாமப் போவும்.

குறள் 538:

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்

படிச்ச பெரிய மனுசங்க சொல்லுதத விரும்பிச் செய்யணும். அப்டி செய்ய அயத்து அலுத்து இருக்கவங்களுக்கு ஏழு பொறப்புலயும் நன்ம கெடைக்காது.

குறள் 539:

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

இறுமாப்போட பூரிச்சுப்போயி கடமையச் செய்ய அயத்து அலையுதவங்க,  முன்ன இது கணக்கா அலஞ்சி அழிஞ்சவங்கள நெனச்சிப் பாத்துக்கிடணும்.

குறள் 540:

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்

ஒருத்தன் தான் அடைய நெனக்குதத நாட்டத்தோட அசராம தொடர்ச்சியா நெனச்சிக்கிட்டே இருந்தாம்னா அவன் நெனச்சத சுளுவா அடஞ்சுக்கிடலாம்.

(அடுத்தாப்லயும் வரும்….)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *