நிர்மலா ராகவன், மலேசியா 

நலம்…நலமறிய ஆவல்….(162)

இளமை எல்லோரது வாழ்விலும் இயற்கையாகவே இருப்பது. ஆனால், முதுமையிலும் இளமையாக இருக்க, சற்று முனைந்து செயல்பட வேண்டும். சிலருக்குத்தான் அது முடிகிறது.

இளமை என்பது எழில் தோற்றத்தில் மட்டுமல்ல, சில குணங்களிலும் கூடத்தான். மூன்று வயதான குழந்தை ஓயாமல் கேள்வி கேட்பான். எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனை அப்படித் தூண்டும். சிலர் பொறுமையாக அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்குவார்கள்.

இது இளமையின் ரகசியம். எதையும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை எப்போதும் காத்தால், மனம் சோர்வு அடைய வாய்ப்பில்லை.

ஆனால், எல்லாத் தாய்மார்களும் தம் குழந்தையினுடைய ஆர்வத்துக்குத் தீனி போட இசையமாட்டார்கள். `தொணதொணப்பு’ என்று அடக்குவார்கள். சில முறை கேட்டுவிட்டு, பிறகு தானே அடங்கிவிடுவான்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களும் அப்படியே நடப்பார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள், `நம்மை இவர்கள் கேள்வி கேட்பதா!’ என்று எரிச்சல் அடைந்து, பாடத்தை மட்டும் நடத்துவதற்குத்தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதுபோல் செயல்படுவார்கள். இதனால் மாணவர்கள் ஆர்வத்தை இழந்து, பள்ளிக்கூடம் என்றால் பிற மாணவர்களுடன் கலந்து பழகுவது, சண்டைபோட்டுப் பொழுதை `உல்லாசமாக’ப் போக்குவது என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள்.

கதை

நான் ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, என் ஆற்றலை எடைபோட, பேராசிரியர் ஒருவர்  வருவதாக இருந்தது.

முதல் நாளே, நான் மாணவிகளிடம், “எக்கச்சக்கமாக ஏதாவது கேட்டு, என்னை மாட்டிவிடாதீர்கள், ப்ளீஸ்!” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

“When we ask the questions, we don’t know if they are funny,” என்றாள் ஒரு பெண்.

தாம் கேட்கும் கேள்விகளால் ஆசிரியர்களைத் தடுமாற வைப்பது அவர்கள் நோக்கமல்ல. தமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவ்வளவுதான். இது புரிந்தால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள உறவு பலப்படும்.

`என்ன வேண்டுமானால் கேட்கலாம்,’ என்று சிறிது நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் மனப்போக்கு புரியும். களங்கமற்ற அவர்களுடைய உற்சாகம் ஆசிரியர்களையும் தொற்றிவிடும். எத்தனை வயதானாலும், ஆசிரியர்கள் சிலர் இளமைத் தோற்றத்துடன் இருக்கும் ரகசியம் இதுதான்.

இப்போதெல்லாம், தாய்மார்களுக்குச் சிறு குழந்தைகளுடன் என்ன பேசுவது என்று தெரிவதில்லை. இவர்கள் பேசாவிட்டால், மொழி வளம் எப்படி வரும்?

நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதையாவது வேடிக்கை காட்டி விளக்கினாலே போதும். சுற்றுச்சூழலில் ஆர்வம் பிறக்கும். `ஒன்று, இரண்டு,’ என்று அவர்கள் விரல்களை மடக்கி எண்ணவும் சொல்லிக் கொடுக்கலாம்.

`நான் பேசினா இதுங்களுக்கு விளங்காதே!’ என்று அலுத்தபடி, தொலைக்காட்சியின் முன்னால் உட்கார வைத்துவிடுகிறார்கள், அல்லது தங்கள் கைத்தொலைபேசியை அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள், வங்கி, மருத்துவமனை, பேரங்காடி போன்ற இடங்களில். சிறு குழந்தைகளை அடக்க, கைத்தொலைபேசி ஒரு சுலபமான வழி.

சிறு வயதில் தம் வயதொத்தவர்களுடன் விளையாடி, தம் விளையாட்டுச் சாமான்களையோ, தின்பண்டங்களையோ பகிர்ந்துகொண்டால்தானே பிறருடன் பழகும் ஆற்றல் வரும்?

இப்போதோ, மனிதர்களின் இடத்தில் கைத்தொலைபேசி! இம்மாதிரியான குழந்தைகளுக்கு வயதுக்குரிய இளமைகூட வாய்ப்பதில்லை.

திரைகளில் காண்பதை வைத்துப் புதிய விஷயங்களைக் கற்கலாம் எனினும், தீமைகளே அதிகம்.

ஒரு சாதனத்தின் திரையையே வெறித்துக்கொண்டு இருந்தால், மூளையின் நடுப்பகுதி மட்டும்தான் வேலை செய்யும். பக்கவாட்டிலுள்ள இரு புறமும் அதிகமாக உபயோகிக்கப்படாது போக, பல பிரச்சினைகள் எழுகின்றன.

வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடதுபுற மூளையை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள். மொழி, பேசுவது, புரிந்துகொள்வது எல்லாம் இது அளிக்கும் திறன்.

இன்னொரு புற மூளையானது இசை, மகிழ்ச்சி, படைப்பாற்றல், பிறர் பேசும்போது அவர் அடையும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது ஆகியவற்றில் ஈடுபடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் இயற்கையிலேயே இப்படித்தான்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓயாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கோ, இந்த இரு பகுதிகளுமே முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அப்புறம், காதால் கேட்பதைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவது ஏது! எதுவும் படம் அல்லது எழுத்து வடிவில் கண்முன் இருந்தால்தான் புரிகிறது.

போதாக்குறைக்கு, தொலைக்காட்சியில் தாம் பார்த்ததை எல்லாம் சிறுவர்கள் நம்புவார்கள். வன்முறை இருந்தால், அதையே தாமும் செய்து பார்க்கும் ஆவல் வந்துவிடும்.

ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனைத் தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் பார்க்க அவன் உறவினர் அழைத்தபோது, மறுத்தான்.

அவன் கூறிய காரணம்: “அப்புறம் நான் தம்பியை உதைப்பேன்!” அவன் செய்வது தவறு என்று புரிய வைத்திருந்தாள் தாய். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் வன்முறை எதற்கு?

“நம்மைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களின் அன்பு நம்மை இளமையாக வைத்திருக்கிறது,” என்று சொல்கிறார் சோபியா லாரென். அழகிற்கும் இளமைத் தோற்றத்திற்கும் இந்த நடிகை பெயர் போனவர். பல விருதுகளைப் பெற்றவர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர், ஒரு சிறந்த பாடகியும்கூட.

அமைதியான மனம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய அனைத்துமே முதுமையிலும் நம்மை இளமையாகக் காட்டும். இவை நிலைத்திருக்க முக்கியமானவை ஆக்கப்பூர்வமான செயல்கள்.

உடற்பயிற்சியின் மகிமை பலருக்கும் தெரிவதில்லை. இங்குச் சில பள்ளிக்கூடங்களில், அதற்காகக் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கணக்கு, விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பிக்கிறார்கள். மாணவிகள் பெரிய பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, பள்ளிக்கூடத்திற்கு நற்பெயர் ஈட்டித் தருவார்களே! ஆரம்பப் பள்ளியிலேயே இது நடக்கிறது.

கண்ணுக்கும், மூளைக்குமே வேலை கொடுத்துக்கொண்டிருந்தால் உற்சாகம் குன்றிவிடுமே!

கை, கால், தோள் ஆகிய மற்ற அவயவங்கள் அதிகப் பயிற்சி இல்லாது விரைவில் வலுவிழந்துவிடாதா?

படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் கல்வியில் உயர்ந்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன இறுக்கம், வயிற்றுக் கோளாறு என்று பல்வித உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

“என் மகன் பதின்ம வயதில் நான் எவ்வளவு அழைத்தாலும் என்னுடன் உலவ வரமாட்டான். `எனக்கென்ன வியாதியா!’ என்றுவிடுவான். இப்போது, நாற்பது வயதுக்கு மேல் `ஜிம்’மிற்குப் போகிறான்!” என்று ஒரு முதியவள் என்னிடம் சொல்லிச் சிரித்தாள்.

இருபது வயதில் நாட்டியம், `ஸ்கிப்பிங்’ போன்ற ஏதாவது உடற்பயிற்சியிலோ, அல்லது விளையாட்டிலோ ஈடுபட்ட பெண்கள் திருமணமான பின், `எல்லாவற்றிற்கும் வயது இருக்கிறது!’ என்று அலட்சியப்படுத்திவிடுவார்கள்.

`வயதுக்கேற்றபடி இல்லாவிட்டால் பிற பெண்கள் பழிப்பார்களே!’ என்று பயம் வேறு! பிறருக்குப் பயந்து, நீங்கள் கஷ்டப்படப் போகிறீர்களா? `முன்போல் முடியவில்லை!’ என்ற சாக்கு எதற்கு? முடிந்தவரை செய்யலாமே! முதுமையுடன் ஆரோக்கியமின்மை தொடர, மனமும் சோர்ந்துவிடும்.

அறுபதைத் தாண்டிய லூசில் பால் (Lucille Ball) என்ற அமெரிக்கச் சிரிப்பு நடிகையைக் கேட்டார்கள், “நீங்கள் இவ்வளவு இளமையாக இருப்பதன் ரகசியத்தைப் பிறருக்கும் சொல்லுங்களேன்!”

பதில்: “நேர்மையாக நடந்து, மெதுவாகச் சாப்பிடுங்கள். அத்துடன், வயதையும் குறைத்துச் சொல்லவேண்டும்!”

வயதைக் குறைத்துச் சொல்வது நேர்மைதானா?!

=========================

Photo by Wikimedia Commons

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *