அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (30.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி – 218

  1. பதுமைகள் உயிர் பெற்றால்…
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    சில்லென்ற சாரலும்..
    வெண்பனித் தூரலும் கண்டேன்..!
    உள்ளத்தைக் கிள்ளிடும்..
    உன்னத சூழ்நிலை கண்டேன்..!
    ஊர்வலம் போவோம்.. வா.. வா..!!
    உள்ளது மகிழூந்து.. வா.. வா..!!

    விடுமுறை நாளன்றும்..
    தொடுதிரையே உலகாக வேண்டாம்..!
    வண்ணத்துப் பூச்சியாய்..
    எண்ணத்தில் மகிழ்ச்சியே கொள்வோம்..!
    சோம்பலைப் புறந்தள்ளி.. வா.. வா..!!
    ஆம்பலைப் போல்மலர.. வா.. வா..!!

    குறிக்கோளில் வென்றிட..
    நெறியுடனே நாமென்றும் உழைப்போம்..!
    தறிகெட்டுத் திரிந்தாலே..
    தடம்மாறும் வாழ்வென்று அறிவோம்..!
    தடைகளைத் தாண்டிட.. வா.. வா..!!
    விடைகளைத் தேடிட.. வா.. வா..!!

  2. ஏக்கம்…

    செப்பு வைத்து விளையாடிய
    சிறுவர் சிறுமி யெல்லோரும்
    ஒப்பனை செய்த பொம்மைகளுடன்
    ஒன்றாய்ச் சேர்ந்தே ஆடியதெலாம்
    இப்போ திங்கே நடப்பதில்லை
    இவர்கள் கைகளில் தொடுதிரையே,
    எப்போ திவர்கள் நமைத்தொடுவார்
    ஏங்கித் தவிக்கும் பொம்மைகளே…!

    செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *