தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

0

பகுதி -9 ஆ  : ‘கள் ‘ போடலாமா? – ‘கள்’ -இன் பயன்கள்.
பேரா. பெஞ்சமின் லெபோ
‘கள்’ -இனால விளையும் மயக்கம் என் சொல்லினால் சிறிது தெளிந்திருக்கும். இந்த நம்பிக்கையில்  என்றன் கட்டுரையைத் தொடர்கிறேன்.

ஒன்றாகத் தெரிவது (ஒருமை) ‘கள்’ போட்டால் பலவாகத் தெரியும் (பன்மை) என்று சென்ற பகுதியில் பார்த்தோம்.
ஆக,

1
‘கள்’ -இன் முதல் பயன்பாடு ஒருமையைப் பன்மையாக மாற்றுவது. இப்படி வரும்  ‘கள்’ என்னும் சொல் (பன்மை)  விகுதி.
ஒருமைச் சொல்லோடு  ‘கள்’  விகுதி சேர்ப்பதால்  பன்மைச் சொல் விளையும்
(காடு – காடுகள் ; செடி-செடிகள் )
இந்தக் கருத்தை நன்றாக மனத்துள் கொள்க ; அடுத்த கட்டுரையில் இதனை நினைவு கூர்தல் வேண்டும்.
(மனதுள் இல்லை மனத்துள் என்பதே சரி ; இதனைப் பற்றி ஏற்கனவே விளக்கி இர்ருக்கிறேன்).

2
இதன் இரண்டாவது பயன்பாடு என்ன?
உயர்திணைப் பன்மைக்கு உரிய ‘அர்‘ விகுதியுடன் சேர்ந்து, ‘அர்கள்’ என்னும் இரட்டைப் பன்மை விகுதியாக அமைந்து உயர்திணைப் பன்மையை உணர்த்துவது.

‘அர்'(‘ஆர்’, இர், ஈர், ..) பன்மை விகுதி என அறிவீர்கள்.
புலவன் (ஒருமை) ; புலவர் (பன்மை) > புலவர்கள் (‘அர்’+’கள்’)
உயர்திணை ஒருமை, பன்மை ஆகும்போது இப்படி இரட்டைப் பன்மை விகுதி(கள்) சேர்வது இயல்பே! ஆனால் இதனைக்  காட்டி அவை > அவைகள் என எழுதுவது பிழை.
அவை என்பது  அஃறிணை ;  ஆகவே,  அந்த விதி இங்குப் பொருந்தாது.

3
உயர்திணையைப் பன்மையாக மாற்றவும் இது உதவுகிறது ; இதுவே மூன்றாவது பயன்  :
ஆண் (உயர்திணை ஒருமை) ; ஆண்கள் (உயர்திணைப்  பன்மை)
சிறுமி (உயர்திணை ஒருமை) ; சிறுமிகள் (உயர்திணைப் பன்மை)


‘கள்’ என்னும்  விகுதி  பன்மையைக் குறிக்காமல் ஒருமையைக் குறிக்கவும் பயன்படும். எப்போது?
உயர்திணைச் சொல்லுக்குத் தனி உயர்வைத் தரும் போது.
காந்தி> காந்தி அடிகள் ; இங்கே உள்ள ‘கள்’ பன்மையை உணர்த்தவில்லை,
காந்தி என்ற சொல்லுக்குப் பெருமை சேர்ப்பதற்காக  வருகிறது.
‘கள்’ போடுவதிலும் நன்மை  இருக்கிறது!

(ஆப்ப மாவில் ‘கள்’ சேர்த்தால் ஆப்பம் மெதுவாகவும் சுவையாகவும் வரும். அதைப் போல! எங்கள் புதுச்சேரியில் இப்படித்தான் ஆப்பம் சுடுவார்கள்).

அவர்கள் என்பதில் உள்ள ‘கள்’  பன்மை விகுதியாக இருந்தாலும் இச்சொல்லுக்கு முன் வரும் சொல் உயர்திணை ஒருமையாக் இருந்தால்
இந்தக் ‘கள்’ பன்மை விகுதி  ஆகாது. இப்படி வருவதை இக்காலத் தமிழில் மரியாதைப் பன்மை (விகுதி) என்பர்.காட்டாக : ‘தலைவர் அவர்கள் வருகிறார்(கள்)!’ ; ‘அமைச்சர் அவர்கள் பேசுவார்(கள்)’.

5
வேறு  சில  இடங்களிலும்  இப்படி  வரும்  ‘கள்’  பன்மையை  உணர்த்துவது கண்கூடு.
யாம் + கள் = யாங்கள்
நாம் + கள் = நாங்கள்
நீ + கள் = நீங்கள்
நீயிர் + கள் = நீயிர்கள்
தாம் + கள் = தாங்கள்
எம் + கள் = எங்கள்

6
இக் ‘கள்’ விகுதி கடந்த ஆண்டுகளைச் சுட்டும்போது பயன் பாட்டுக்கு வருகிறது.
‘அறுபதுகளில் வந்த தமிழ்ப் படங்கள் வெகு அருமை’
முக்காலங்களையும் குறிக்கும் இடங்களிலும் இது பயன்படுகிறது
:

‘ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாள்கள’
(நாள்களா? நாட்களா? – விரைவில் பதில் வரும்!).

‘கள்’ -உக்கு இத்தனைப்  பயன்பாடுகளா என வியக்கக் கூடும். உண்மை இதுதான்.இவற்றை விட வியப்பான செய்தி  பன்மை விகுதியான ‘கள்’ சேர்க்காமலே பழந்தமிழைப் போலவே எழுதுவது இக்காலத் தமிழிலும் செல்லும் என்பதுதான்.‘பல நாள் பார்த்திருந்தேன் ; ஒரு நாளும் நீ வரவில்லை!’

இதில் முதல் ‘நாள்’ பன்மை ; இரண்டாம் ‘நாள்’ ஒருமை.
‘கோள் சொல்லும் வழக்கம் எனக்கில்லை’ – இங்கே ‘கோள்’ என்னும் சொல் பன்மை.எனவே தேவை இன்றிக் ‘கள்’ போடுவதைத்  தவிர்க்கலாமே!

என் கட்டுரைகளை மறுபடி கவனித்துப் பாருங்கள்

சில இடங்களில் ‘கள்’ விகுதியை அடைப்புக் குறிக்குள் ( )
இட்டிருப்பேன். இது பற்றி எவருமே இதுவரை வாய் திறந்தது இல்லை.
இப்படி இட்ட காரணம் :
தேவை இன்றிக் ‘கள்’ போடுவதைத்  தவிர்க்கலாமே என்பதுதான்.


வாலி வதை போல முடியா வழக்காக
நெடுங் காலமாகவே தொடர்ந்து வரும் சிக்கல் இரண்டு  உண்டு :
‘கள்’ -உம் போட்டு அதற்கு முன் ஒற்றும் போடலாமா என்னும் கேள்விதான் அது!
பாட்டுகள்? பாட்டுக்கள்?
வாழ்த்துகள்? வாழ்த்துக்கள்?
தோப்புகள்? தோப்புக்கள்?

கூடவே கொசுறாக
நாள்கள்? நாட்கள்?
ஆள்கள்? ஆட்கள்?

கட்டுரையை முடித்துப் போடவில்லை என்றாலும் தொடர்வதற்கு முடிச்சு போட்டாச்சு….
(இங்கே ஒற்று மிக்கது, வராது, வரக் கூடாது!
ஒற்று மிகுமா? மிகாதா? –

இது அடுத்தத்  தலைவலி.
‘கள்’ மயக்கம் தீரட்டும் ; ‘தலைவலி’ வரும்.
அப்போது பார்த்துக் கொள்ளலாம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *