கொசுவே நீ வாழ்க, உன் குலம் வளர்க

2

சு.கோதண்டராமன்

பறவைகளுக்கெல்லாம் இரண்டு கால், நடப்பனவற்றிற்கு நான்கு கால் ஏற்படுத்திய இறைவன், உனக்கு மட்டும் ஆறு கால் தந்து சிறப்பான உயிரினமாகப் படைத்திருக்கிறான். உன் பெருமையை அறியாமல் உன்னை அழிக்க நாங்கள் செய்த முயற்சிகளெல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீராகி விட்டதைப் பார்த்த பின் தான் எங்களுக்குப் புத்தி வந்தது.

மின் விசிறியை வேகமாகச் சுழலவிட்டால் நீ அருகில் வரமாட்டாய் என்று நம்பினோம். உன் தோழர்களில் ஓரிருவர் அடிபட்டு, விசிறி இறக்கைகளின் விளிம்பில் ரத்தக்கறை படிந்தது என்னவோ உண்மை தான். ஆனால் சில நாட்களிலேயே அணையிலிருந்து வெளிவரும் நீர்ச்சுழலில் நீந்தும் மீன் கூட்டம் போல நீ அந்தக் காற்றுச் சுழலில் அனாயாசமாகத் திரிந்து பறந்து வந்து உன் திறமையை நிரூபித்தாய்.

புகை அறை முழுவதும் சுருள் சுருளாகப் பரவி, செருக்களத்தில் ராம பாணத்தால் தாக்குண்ட அரக்கர் படையினர் வீழ்ந்து கிடப்பது போலக் கொசுக்கள் தரையில் கிடக்கும் தொ.காக் காட்சியின் தாக்கத்திற்கு உட்பட்டு, கொசுக்களின் யமன் என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு திராவகப் புட்டி வாங்கி மின் இணைப்பில் பொருத்தினோம். ‘புஷ் பண்ணுங்க, குஷியா இருங்க’ என்று அந்த விளம்பரக் குட்டிப் பெண் சொல்கிறாள். ஆனால் குஷியாக இருப்பது நீ தான், நாங்கள் அல்ல. புகை வரும் இடத்தின் மேலேயே நீ ஆனந்த நடனம் ஆடுகிறாய்.

சன்னல்களுக்கெல்லாம் வலை வைத்து அடித்தோம். அந்தி சந்தி என்றும் பாராமல் வாசற் கதவைச் சாத்தி வைத்தோம். நீ காஷ்மீர் தீவிரவாதி போல எப்படியோ உள்ளே நுழைந்து விடுகிறாய்.

இளம் வயதில் நான் வெடித்த தீபாவளி வெடி வகைகளில் நாடா போல ஒன்று உண்டு. அதை ஒரு ஓரத்தில் தேய்த்துக் கீழே போட்டு விட்டால் சடபுடா என்று வெடித்துக் கொண்டே குதிக்கும். அதை நினைவு படுத்தும் வகையில் நாங்கள் வாங்கி வந்து வீசிய மின் வலை மட்டையில் உன் கூட்டத்தாரில் சிலர் படபடவெனப் பொரியும் சத்தம் காதில் தேனாகப் பாய்ந்தது. அழிந்தான் பகைவன் என்று நிம்மதியாக நான் தூங்கப் போகும் சமயத்தில் என் காதருகில் இன்னிசை எழுப்பி உன் அமரத்துவத்தைப் பறை சாற்றினாய். உன் மனதில் உள்ள உற்சாகமும் ‘நான் சாகாதிருப்பேன் காண்பீர்’ என்ற தன்னம்பிக்கையும் தான் இசையாக வெளிப்படுகிறதோ?

தின்ன வரும் புலியை அன்புடன் நோக்கச் சொன்ன பாரதி இன்று இருந்திருந்தால்  உன்னைப் பற்றி,

மூக்கிலே வேலேந்தும் எங்கள் முத்து மாரியம்மா

நாக்கினால் உனைப் பாட நல்லருள் தந்திடுவாய்

குருதியும் தசையும் நினக்கெனத் தந்தேன்

அருந்தியே செல்க, அனந்தமா வாழ்க

என்று போற்றியிருப்பாரோ?

நாங்கள் செய்த தவறுகளின் விளைவாகத் தான் நீ தோன்றினாய் என்பதை அறிகிறேன். நாங்கள் கிராம வாசிகளாக இருந்த போது, காந்திய முறைக் கழிப்பறைகளைப் பயன்படுத்தினோம். நிலத்தடி நீரையும் மாசு படுத்தாமல், அசுத்த நீர் தேங்கவும் இடம் கொடாமல் இருந்த அந்த முறையை மேலை நாட்டாரைப் பார்த்துக் காப்பியடித்துக் கை விட்டோம். இன்று கிராமங்களிலும் வீட்டுக்கு வீடு கான்கிரீட்டினால் நிலத்தடி மலப் பேழைகளை அமைத்து நீ பெருக வழி வகுத்துள்ளோம். முன்பு, மழைக் காலங்களில் நீ தோன்றினாலும் எங்கள் வீட்டில் அடுப்பிலிருந்து வரும் புகை உன்னை வீட்டுக்குள் பதுங்க விடாமல் விரட்டி விடும். புகையாத அடுப்பு நாகரிகமாகிவிட்ட இன்று, உன்னை விரட்ட நாங்கள் பயன்படுத்தும் புட்டித் திராவகப் புகையைக் கண்டு நீ எள்ளி நகையாடுகிறாய்.

நாங்கள் எங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை . எனவே, கொசுவே நீ வாழ்க, உன் குலம் வளர்க என்று வாழ்த்துவது தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கொசுவே நீ வாழ்க, உன் குலம் வளர்க

  1. எந்திரக் கொசுக்களை உருவாக்கி, கொசு மொழியிலேயே கொசுக்களுக்குப் பகுத்தறிவையும் அதன் பிறகு அகிம்சையையும் ஊட்ட வேண்டும். அல்லது, கொசுக்களின் மூக்கில் ஒரு பூட்டுப் போடலாம்; அவற்றுக்குக் கருத்தடையும் செய்யலாம். இப்படியும் சரிவரவில்லை என்றால் அவற்றைப் பிடித்துப் பாதாளச் சிறைகளில் அடைத்துவிட வேண்டும். 

  2. நல்ல தோர் வலை செய்தே!
    அதனுள் நாம் தூங்குவோம்!

    மனித வலையில் மிருகங்களைக் கண்ட நாம்,
    இனி கொசு வலைக்குள் மனிதனைக் காண்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *