அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும் – வாழ்வியல் கட்டுரை

0

வித்யாசாகர்

ஆயிரம் கண்ணாடிகளில் பிரதிபலித்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சமாகவே இருக்கிறது வாழ்க்கை. நாம் தான் அதில் பொய்யையும் புரட்டையும் கலந்து வளத்தையும் நலத்தையும் இழந்து நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சோகத்தையும் சரிவையுமே கொண்டு ஒளியிழந்தும் மகிழ்விழந்தும் வாழ்கிறோம். சற்று சரிவரப் பார்த்தால் நமக்கான அனைத்தும் நம்மைச் சுற்றியே நிறைந்து கிடக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும் தெளிவில்தான் நாம் ஒருவரில் ஒருவர்   மாறுபட்டுப் போகிறோம்.

எடுத்துக்காட்டாக நம்மோடுள்ள பெரியவர்களின் பெரும்பான்மையான நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அவர்கள் நமக்கு நல்ல வழிகாட்டிகளாக மட்டுமல்லாமல் நல்ல தோழமையையும் அன்பையும் மனதில் சுமந்துத் திரிபவர்களாகவுமல்லவா இருக்கிறார்கள் ? அவர்களின் நெருக்கம் நம்மை எத்தனை வளர்க்கிறதோ அதே அளவு அவர்களைவிட்டுத் தள்ளிநிற்கும் இடைவெளியும் நமக்கான பெருங்குறைதான் என்பதையும் நாம் உணர வேண்டும்.

பிறந்து வளர்ந்து உலகை அறியும் அறிவுணர்ந்து, கைப்பட்ட இடத்திலெல்லாம் இருக்கும் தடைகளைக் களைந்து, முட்டிமோதி தன்னை நிலைப்படுத்தி, வாழ்க்கைத் துணையோடு ஒன்றி, பிள்ளைகள் பெற்று, வளர்த்து, தனக்கும் தன் குடும்பத்திற்குமான தேவைகளை நிறைவுசெய்து, சமுதாய நிலைப்பாட்டில் தனக்கானதொரு தனி மரியாதையினைத் தக்கவைத்து, தன் பிள்ளைகளின், தம்பித் தங்கைகளின், பேரக் குழந்தைகளின் மற்றும் தன்னோடுள்ள உறவுகளின் வளர்ச்சியினை தனது தலைமுறையின் வளர்சியினை தனது வளர்ச்சியாகவும் லட்சியமாகவும் வெற்றியாகவும் மகிழ்வாகவும் கொண்டு அதைக் காண கண்கள் கோடி பூத்து நிற்கும் அம்முதியவர்களை நம் தாத்தா பாட்டிகளை , அப்பா அம்மாக்களை நாம் எல்லோரும்  எங்கு வைத்திருக்கிறோம்

நமக்கென்று எண்ணற்ற ஆசைகளும் லட்சியங்களும் தீர்மானங்களும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கென்று இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு அமைதி! அதற்கான காரணம் முழுமையாக நாமாக மட்டுமே தானேயிருக்க முடியும்? ஒவ்வொரு நாளும் நாம் வேலைக்குச் செல்லும் முன் நம் வீட்டையும், நம் குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து செல்லும் வலிகளை உணராமலா இருக்கிறோம்? சிறுவயதுள்ள நம் மகனையோ மகளையோ நாம் பள்ளியின் வாசலில் கண்ணீர் ததும்பிக் கதறக் கதற விட்டுவந்த அந்த முதல்நாட்களின் வலியும், வேதனையும் நம்மை விட்டு நெடுந்தூரம் விலகியிருக்கும் , நம்மைப் பெற்றவர்களுக்கும் இருக்கும் அல்லவா?

பார்த்துப் பார்த்து ஆடைகளைத் தேர்வு செய்கிறோம் நம் பிள்ளைகளுக்கு. இது பிடிக்கும் இது பிடிக்காதோ என்றெல்லாம் அஞ்சி ஆராய்ந்து உணவளிக்கிறோம். நாளை அவர்கள் வளர இருப்பது பற்றி இன்றே கனவு காண்கிறோம், எங்கு அவர்கள் தடம் மாறிப் போவார்களோ, மதி கெட்டு விடுவார்களோ என்றெல்லாம் அச்சம் கொள்கிறோம்,’ உன் நன்மைக்கு தானேடா சொல்கிறோம்’ என்று நித்தம் நித்தம் சொல்லி அவர்களின் வளர்ச்சியை தனக்கு முளைத்த சிறகென்றே எண்ணி வளர்க்கிறோம். அப்படி நம்மை வளர்த்தவர்கள் தானே நம் பெற்றோர்களும்?

பொதுவாக ஒரு குழந்தைக்கு, தன் வளரும் பருவத்தில் பெரிதாக என்ன ஆசை இருந்துவிடப்போகிறது? நான் வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக ஆனதும் என் அப்பா அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என் அம்மாவிற்கு நிறைய புடவையும் அப்பாவிற்கு நிறைய வேட்டிச்சட்டையும் எடுத்துத் தருவேன் என்று எண்ணிய நம் நன்றி உணர்வை எங்கு சென்று எப்படித் தொலைத்தோம் நாம்?ஒரு ஆண் எப்படி நான் வளர்ந்தால் என் தாயையும் தந்தையையும் நன்றாக பாதுகாத்து, கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன்’ என்று எண்ணுகிறானோ அதே எண்ணத்தைத் தானே ஒரு பெண் தான் குழந்தையாக இருக்கும்போதும் எண்ணியிருப்பாள்? தன் தந்தை தன் இயலாமையினால் சோர்வுறும் போதெல்லாம் தனது கொடுக்கத் துடிக்கும் தோள்களைத் தானே அவள் கொடுக்க இயலாமல் மனதால் ஈரப் படுத்தி வைத்திருக்கிறாள்? பிறகு ஒரு ஆணுக்கெப்படி தன் பெற்றோரைப் பற்றிய அக்கறையும் அன்பும் தவிப்பும் இருக்கிறதோ அதே அக்கறையும் தவிப்பும் வலிகளையும் கொண்டுதானே பெண்கள் தன் கட்டப் பட்ட கைகளோடு நம்மோடு நின்றுக் கொண்டுள்ளனர், எனில் ஒரு ஆணுக்குத் தன் தாய் தந்தை குடும்பம் எப்படி முக்கியமோ அப்படி ,தனைச் சார்ந்து அமைத்துக் கொண்ட பெண்ணிற்கும் அத் தாய்தந்தையும் குடும்பமும் முக்கியம் என்பதையும் அவசியம் நாம் உணர வேண்டும். ஒரு பெண்ணின் அதாவது தன் மனைவியின் தாய் தந்தையின் குடும்பத்தின் நலனில் நமக்கும் மெத்த பொருப்பிருப்பதை சுயமாய் நாம் ஏற்க வேண்டும்.தனக்கான அதே தவிப்பும் ஆசையும் பெற்றோரைப் பாதுகாக்கும் நோக்கும் தன் தங்கைக்கும் இருப்பதுபோல், அது தன் மனைவிக்கும் இயல்பாக இருப்பதொன்றே, எனும் புரிதல் வேண்டும். ஒருவேளை சிலர், அப்புரிதல் நம் அனைவரிடையே தற்போது உண்டென்று எண்ணுவாரெனில், பிறகெப்படி நிறைய வீட்டில் மாமனாரோ மாமியாரோ அந்நியப் பட்டுவிட இயலும்?

 

பலருக்கு அவர்களைப் பற்றி கவலையின்றி வருத்தமின்றி எப்படி இருக்க முடியும் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். எனினும், இது சில இடத்தில் எதிர்மறையாகக் கூட நடப்பதுண்டு, பெண் குடும்பத்தில் சற்று வலிமையானவளாக இருந்தால் அங்கே அவள் தாய்தந்தை மட்டுமே இருப்பார்கள்,  அல்லது அவள் தன் கணவனோடு தன் தாய்வீட்டில் இருப்பாள், கணவனைப் பெற்றோர் எங்கோ எப்படியோ அவதியுற்றுக் கிடப்பர். அல்லது ஆண் தன் பெற்றோரை உடன் வைத்து மனைவியின் பெற்றோரைப் பற்றிய வருத்தமே இன்றி இருப்பான்’ ஏனென்றுக் கேட்டால் அவளுக்குத் தான் இது வீடு அவர்களுக்கல்ல; அவர்களுக்குத் தான் அவளின் அண்ணன் அல்லது தம்பியின் வீட்டில் யாரோ இருப்பார்களே’ என்கிறான். உண்மையில் இந்த எண்ணம் இந்த நிலை முற்றாக மாறவேண்டும். அப்படி தன் மனைவிக்கு இரண்டு அண்ணன்தம்பிகள் இருந்தால் அதையும் நாம் நான்கு அண்ணன் தம்பிகளோடு பிறக்கையில் நம் பெற்றோரை எப்படி நடத்துவோமோ அப்படி எண்ணி அவர்களையும் நடத்தவேண்டும்.ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தன்னை ,மனதாலும் உடலாலும் இணைத்துக் கொண்ட போதே அவர்களின் குடும்பத்தாலும் இணைந்துக் கொண்ட பண்பினை மையப் படுத்தியே நம் உறவு முறைகள் அமைந்திருக்கும் பட்சத்தில் பெற்றோர் மட்டும் அந்நியம் ஆகிறார்களே அதெப்படியென நாம் எல்லோருமே சிந்திக்கவேண்டும். அவர்கள் யார், நம் வாழ்வின் மகிழ்வின் இந்த உயிர்ப்பான தருணத்தின் மூலாதாரம் இல்லையா?

 

அவர்களை முழுக்க முழுக்க நம்கூட வைத்து அவர்களின் இயலாத பொழுதுகளில் அவர்களுக்கு உதவி, அவர்களோடு உரையாடி, நம் வாழ்வின் விடையில்லாத் தருணங்களுக்கு காரணம் கேட்டு, வழி கேட்டு, மனம்விட்டுப் பேசவைத்து, மனதை நல்லுணர்வினால் நிறையச் செய்து, மரியாதையும் செய்து, அன்பு காட்டி, தன் நன்றியுணர்வை அவர்களின் உடனிருந்து தீர்ப்பது நம் கடமையில்லையா?

கடமை தான். அது நம் கடன் தான். நம் பெற்றோரை நாம் காப்பது, நம் வீட்டுப் பெரியோரை நாம் காப்பது, நம் வீட்டின் வெளிச்சங்களை, மகிழ்ச்சியை, ஆசிர்வாதத்தை நாம் காத்து தக்கவைத்துக் கொள்வது நம் கடமை தான். இதை அனுபவப் பூர்வமாகவே நீங்கள் தன் சுற்றியிருப்போர் மூலம் பார்க்கலாம்,
எந்த வீடுகளில் பெற்றோர் பெரியோர் மதிப்போடும் அன்போடும் காக்கப் படுகிறார்களோ அந்த வீடு மென்மேலும் சிறக்கிறது. எந்த மனிதன் பெரியோரை மதிக்கிறானோ அவன் சிறக்கிறான். எனவே நாமும் சிறக்க பெரியோரை மதிப்போம், பெற்றோரை உயிரெனக் காப்போம் என்றுக் கேட்டு ஒரு சின்ன
சம்பவம் சொல்லி நிறைவு செய்கிறேன்.ஒரு ஊர். அந்த ஊரின் ஒரு வீட்டைப் பற்றிய பார்வை இது.

 

அன்று தீபாவளி. தீபாவளி வானவேடிக்கையோடும், தெரு நிறைந்த பட்டாசுகளோடும் மனதில் மழலைகளின் சிரிப்பாக அமர்ந்துக் கொண்டுள்ளது. தெரு நிறைந்த ஆர்ப்பாட்டமாக எல்லோராலும் தீபாவளி குதூகலிக்கப் படுகிறது. அதற்கு நடுவே ஒரு நடுத்தரக் குடும்பம் தன் உடைந்த வீடுகளை மெழுகி, கிழிந்த ஆடைகளுக்கு பதிலாக புதிது வாங்கி, கடன்பட்ட துன்பத்தை தின்பண்டங்களாய் செய்து எஞ்சிக் கிடைத்த காசில் பட்டாசும் வெடித்து மகிழுமொரு காட்சி அங்கே நிலவுகிறது.அக்காட்சியின் இடையே நேரும் வருத்தம் என்னவெனில், அந்த வீட்டின் திண்ணையில் அன்றைக்கும் பெருக்கப் படாத அந்த திண்ணையின் ஓரத்தில் ஒரு பழைய ஓலைப்பாய் விரித்து, அதன்மீது பழைய ஒன்றிரண்டு புடவைகளை விரித்து, அதன்மீது பல் கொட்டயிருக்கும் பருவத்து பாட்டியொருவர் படுத்துக் கிடக்கிறார். அவர் தன் அகலத் திறந்த கண்களோடு தன் அழுக்குச் சேலைக் கூட மாற்றப்படாமல், பிள்ளைகளும் பேரப் பிள்ளைளும் கூடி மகிழும் இடம் விட்டு விலகி சற்று தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.மனசு எதற்கோ ஏங்கி, எதை எதையோ எண்ணி அழுது, யாருமே தன்னை ஒரு பொருட்டாகக் கொண்டிடாத வருத்தத்தில் விம்மி, தன் பசி பற்றியோ’ தன் இயலாமை பற்றியோ’ தன் நோய்வாய்ப் பற்றியோ’ எழுந்தமரக் கூட இயலாத முதுமைப் பற்றியோ யாருமே ஏனென்றும் கேட்டிராத அக்கறை கொள்ளாதத் தன் வாழ்க்கையை நொந்து வலித்துக் கிடக்கிறது.

பாவியின் உயிரேனும் நின்றுத் தொலையவில்லேயே என்றொரு சலிப்பு உடம்பெல்லாம் பரவி அந்த பழுத்த இலையின் உடைந்த மனத்திலிருந்து ஒரு ஒரு சொட்டாக தன் பிறந்த பலனெல்லாம் கண்ணீராய் வழிந்து அவரின் கன்னத்தை நனைத்து அந்த அழுக்குத் தலையனையை நனைக்கிறது. அங்கே இப்படி பிறக்கிறதொரு கவிதை –

 

மௌனம் உடையா பொழுதொன்று

நிலவும்முகமெல்லாம் ஒரு சோகம் படரும்

நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும்

அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்;

உடை கூட ஆசை களையும்உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும்

உறக்கமது உச்சி வானம் தேடும்உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்;

பகலெல்லாம் பொழுது கணக்கும்சட்டைப்பை சில்லறைத் தடவும்

முந்தானை ஓரத்தில் ஒரு கல்லேனும் முடியும்

படுக்க அன்றாடம் சுடுகாடே தேடும்;

காதில் தனது பிள்ளை பேசினால் இனிக்கும்

வார்த்தை தடுமாறி பேரனின் ஒன்றோயிரண்டோ

கேட்கும்போகும்வரும் வாசலில் கண்கள் யாருக்கோ காத்திருக்கும்

போகாத உயிரை விட்டுவிட்டுப் பிடித்துவைக்கும்;

வாழ்நாள் கனவுகள் வந்துவந்து மறையும்

வாழ்ந்த நாட்களை அசைப் போட்டுத் திரியும்

வந்த துணையின் பிரிவதை எண்ணி –

பழுத்த மனமது பாவம் கண்ணீராய் கரையும்;

காலத்தை மனதால் கணமும் நொந்து நொந்தே சாகும்!!

————————————————————————————

படங்களுக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *