தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

பகுதி 10-அ    : அதுவா? இதுவா?


பேரா. பெஞ்சமின் லெபோ

என் கட்டுரைத் தொடர் பகுதி -9 இ   : ‘கள் ‘ போடலாமா? – வாழ்த்துகளா? வாழ்த்துக்களா  ?  -இல்

_’ஏற்கனவே என்  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, கட்டடம் கட்டுவோர் செங்கற்களை அடுக்கி இடையே இணைப்பியை (cement) அப்புவது போல, இரு சொற்களை இணைக்க அச் சொற்களுக்கு இடையில் எழுத்துகள் சில தோன்றலும் திரிதலும் கெடுதலும் புணர்ச்சி எனப் படும்’. என எழுதி இருந்தேன்.

பம்பாயில் இருந்து, நண்பர் தேவன்,
‘நீங்கள் கட்டடம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்.

கட்டடம் – கட்டிடம் இதில் எது சரி?
கட்டு + இடம் = கட்டிடம்

கட்டப்பட்ட இடமான கட்டிடமே சரியானது என்று கருதுகிறேன்.’
என எழுதி இருந்தார். (https://mail.google.com/mail/?shva=1#search/Govindan/13349e1e6432c976).

நண்பர் செம்மல்,
‘நண்பர் தேவன் நல்ல வினாவைத் தொடுத்துள்ளார். பல நாள்களாக எனக்கும் இந்த ஐயம் இருந்தது,. கட்டடம் என்பது வீடு மாளிகை அலுவலகம் போன்றவற்றைக் குறிக்கும். கட்டிடம் என்பது கட்டுகிற இடத்தைக் குறிக்கும்.

பேரா. நன்னன் தம் நூல் ஒன்றில் இதனை விளக்கி இருக்கிறார். இனி பேரா.பெஞ்சமின் அவர்களின் விளக்கத்தை எதிர்நோக்குவோம்’.

எனக் குறிப்பிட்டு இருந்தார். அந்த எதிர்பார்ப்பின் விளைவே இந்தக் கட்டுரை.

இந்த இடத்தில் மட்டும் ஆங்கிலத்தைக் கொஞ்சம் அழைத்துக்கொள்வோம் முதல் நண்பர் ‘கட்டிடம்’ என்பதற்கு’ building’ எனப் பொருள் கொள்கிறார்.
இரண்டாம் நண்பர் ‘கட்டிடம்’ என்பதற்கு ‘site’ (‘plot’) என்று  பொருள் சொல்கிறார்.

இவற்றில்  இருந்து  தெரிவது என்ன? ‘கட்டிடம்’ என்ற சொல்லுக்குச் சரியான வரையறை இல்லை எனப் புரிகிறது. அகரமுதலிகள் என்ன சொல்லுகின்றன? ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்திய நிகண்டு, அகரமுதலிகளில் ‘கட்டிடம்’ என்னும்  சொல்லே இல்லை!
காண்க :

Vocabulaire français-tamoul par les Missions étrangères de Paris (1850)
Kapruka : dictionnaire tamoul-anglais & singhalais
http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
Anglo-Tamil dictionary : dictionnaire anglais-tamoul par Peter Percival (1867)
Comprehensive Tamil and English dictionary of high and low Tamil : dictionnaire tamoul-anglais par Miron Winslow (1862)
English and Tamil dictionary : dictionnaire anglais-tamoul par Joseph Knight & Levi Spaulding (1852)
English and Tamil dictionary : dictionnaire anglais-tamoul pour les écoles, par Joseph Knight, Levi Spaulding & Samuel Hutchings (1844)
Phrasebook : phrases de conversation anglais-tamil, par P. Ramasawmy (1854)

அகராதிகள் பலவும்  , ‘கட்டிடம்’, கட்டடம்” இரண்டுமே ஒரு பொருளெனவேக் குறிக்கின்றன. இன்றைய உரைநடையில், ‘building’  என்பதைக்  குறிக்கவே  இவை  பயன்படுகின்றன. இச்சொற்கள் மிக அண்மைக் காலத்தியவை. எனவே இவற்றுக்கு  இலக்கிய,  இலக்கணச் சான்றுகள் இல்லை. இவற்றுக்கான  வரையறைகள் இனிமேல்தான் உருவாக்கப்படவேண்டும். எனினும் இவை பற்றிய விவாதம் நன்மை பயக்கும் ; பின்னொரு காலத்தில் நல்லதொரு தீர்வுக்கு வழி வகுக்கும். இந்த வாதம், விவாதங்கள், அலசல்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது..

காண்க :  திரு மயூரநாதன் அவர்களின் கட்டுரை :
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%

E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%

95%E0%AE%B2%E0%AF%88.

வாதம் தொடருகிறது :

‘கட்டிடம் ‘என்னும் சொல் building’ என்பதைக்  குறிக்கும் என்போர் பலர் உளர். அவர்களுள் திரு மயூரநாதன் ஒருவர். இவர் விக்கிபீடியாவில் இதுவரை 3000 கட்டுரைகள் வரைந்து சிறப்பைப்  பெற்றவர்.

காண்க :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mayooranathan

‘கட்டிடம் ‘ பற்றிய இவர் கருத்து :
‘Building என்பது ஒரு இடம். வாழ்வதற்கு, வேலை செய்வதற்கு, இளைப்பாறுவதற்கு மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்குப் பயன்படும் இடம். அத்துடன் இது உருவாக்கப்பட்ட, அதாவது கட்டப்பட்ட இடம் (built place). அதனால் அதைக் கட்டிடம் என்று சொல்வதும் பொருத்தமாகவேபடுகிறது’.
Mayooranathan 19:29, 6 ஏப்ரல் 2007 (UTC)

இணையதள அன்பர்கள் நன்கு அறிந்த பெயர் ‘செயமோகன்’ . இவர் கருத்து :

கட்டிடம் [கட்டு+இடம்] என்பதே சரியான சொல்லாக இருக்கும் என்றும் கட்டடம் என்பது அதன் மரூஉ என்றும் நான் நினைக்கிறேன். நீங்கள் விக்கி அகராதியில் இதைச் சரிபார்க்கலாம் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பேரகராதியில் கட்டிடம் என்ற சொல் வீட்டைக் குறிக்கும்சொல்லாக உள்ளது. கட்டடம் என்ற சொல்லானது எல்லா வகையான கட்டமைப்புக்கும் பொருந்தும் சொல்லாகக் குறிக்கப்படுகிறது.’

‘கட்டிடம் ‘ என்பது கட்டுகின்ற  இடம்,  (காலி) மனை, என்பதைத்தான்  குறிக்கும்    என்போரும் இருக்கிறார்கள் – ‘கட்டிடம் என்பது கட்டுகிற இடத்தைக் குறிக்கும் எனப்  பேரா. நன்னன் தம் நூல் ஒன்றில் இதனை விளக்கி இருக்கிறார். மேலே  குறிப்பிட்ட  செம்மல்  அவர்களின்  மடலைக்  காண்க

– ‘கட்டிடம் என்றால் கட்ட வைத்திருக்கும் இடம். கட்டுவதற்குரிய இடம் (Plot, Site)’.
http://www.mypno.com/index.php?option=com_content&view=article&id=3286:2010-08-30-11-38-42&catid=44:mypnoguest&Itemid=௮௮

கட்டிடம்’ என்பது கட்டுமானப் பொருளுக்குரிய இடத்தைக் குறிக்கும். http://www.tamilvu.org/courses/degree/d051/d0511/html/d05111a1.htm

இனி, ‘கட்டிடம்’ என்ற  சொல்லை அலசிப் பார்ப்போம் :
கட்டும் +இடம் ;  மகர  ஒற்று கெட்டு, கட்டு+இடம்  என்றாகி  இறுதியில் கட்டிடம் ஆகும். (நன்னூல் விதிகள் செல்லும்)
கட்டும் இடம் = கட்டுவதற்காக உள்ள (இன்னும் கட்டப்படாத) இடம். இதனைத் தமிழில் (வெற்று, காலி) மனை என்பர். இதுதான் ‘site’, ‘plot’.

– கனடிய நாட்டுப் பல்கலைகழகத்தில் அறிவியல் பேராசிரியராகப் பணி புரியும் என் நண்பர் செல்வக்குமார்  (செல்வா) சிறந்த தமிழறிஞர் கூட. தமிழ் விக்கிபீடியாவில் முக்கிய பணி வகிப்பவர். இவர் கூற்று :
‘கட்டிடம் என்பது கட்டடம் இருக்கும் நிலத்தையும் சூழ்ந்த புறத்தையும்…………குறிக்கும்’.

-இராம.கி அவர்களுடைய “வளவு” BLOG இல் காணப்படும் கருத்து :
‘கட்டடம் என்பது தொழிற்பெயர்; கட்டிடம் என்பது இடப்பெயர்; பொருளை  மாற்றிப் பயன்படுத்தக் கூடாது.’ கட்டுவதற்கு உரிய இடத்தைக் குறிப்பிடுவது ‘கட்டிடம்‘  என்னும் கருத்தைப் பொறிஞர் இராம.கி முன் மொழிகிறார்.

இவற்றை எல்லாம் ஒருங்கு வைத்து நோக்குகின்ற  போது, ‘கட்டிடம்’ =  site’, ‘plot’.என்பதே  சரியான பொருள் என்று தோன்றுகிறது. எனவே, இதுவே சரியான  பொருள் என முடிவுகட்டிவிடலாம்.

அப்படியானால், ‘கட்டடம்’ என்ற  சொல்தான் ‘building’ என்பதற்கு நிகரானது. இக்கருத்தையே  நண்பர் செல்வா வலியுறுத்துகிறார் :
‘கட்டடம் என்பது கல்லாலும் மரத்தாலும் பிற பொருட்களாலும் எழுப்பப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கும். ‘

‘கட்டப்பட்ட இடம் என்பதைக் குறிக்க கட்டடம் எனச்சொல்லலாம் (Building)’

காண்க : http://www.mypno.com/index.php?option=com_content&view=article&id=3286:2010-08-30-11-38-42&catid=44:mypnoguest&Itemid=88

இதனையே பொறிஞர் இராம.கி அவர்களும் வலியுறுத்துகிறார் ;
‘கட்டிடத்தின் மேல் கட்டடம் நிற்கிறது. அடம் என்பது அடுக்குதல் என்ற வினையில் கிளர்ந்த ஓர் ஈறு. கட்டுதல் என்பது சேர்த்தல்; கட்டி அடுக்குவது கட்டடம். குடில், குடிசை, மாளிகை, கோயில், அரண்மனை என எல்லாமே கட்டி அடுக்குவது தான்.’

Tamil virtual university (TamilVU) கருத்து :
கட்டடம் என்பது கட்டுமான வடிவம் என்ற பொருள் தரும்’;

இன்றைய தமிழ் உரைநடையில் ‘கட்டடம்’ என்னும் சொல்லே மிகப் பரவலாகப்   பயன்பட்டுவருகிறது. காட்டாக ‘Tamil virtual university ‘  -இல் உள்ள நகர அமைப்பும், அதன் வகைகளும்’ என்னும் தலைப்பு கொண்ட கட்டுரையில் ‘கட்டடம்’ என்ற சொல் எத்தனை முறை வந்துள்ளது!

ஓர் ஊரோ நகரமோ அமைய வேண்டுமெனின், அதற்கேற்பப் பல வீடுகளோ கட்டடங்களோ இருத்தல் வேண்டும். வெட்ட வெளியாக இருக்கும் மைதானமோ, புதரும் காடுமாக மண்டிக் கிடக்கும் இடமோ, சமப்படுத்தப்பட்டுத் திருத்தஞ் செய்த நிலையில் பல வீடுகளோ, கட்டடங்களோ கட்டப்பட்டால், ஊராகவோ நகரமாகவோ ஆகிவிடுவதை இன்றும் காணலாம்.

இவ்வளவு சிறப்பிற்கும் அடிப்படைக் காரணம், பல படிநிலைகளில் அமைந்த கட்டடக்கலை என்பது தெரிய வரும்.

நாட்டு வளத்தைப் பொறுத்தே வளமனைகளும், பிறதொழிலகங்களும் அமைவது நியதி. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் பல்வகைக் கட்டடக் கூறுகளைப் புலப்படுத்திக் காட்டுகிறார்.’

மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கட்டடம் என்பதை முதன்மைப் படுத்தி எழுதி இருப்பதில் வியப்பில்லை. இன்ன பிற காரணங்களால் ,
(கட்டடம் கட்டும்போதுதான் செங்கற்களை அடுக்கி வைத்துப்  பூசுவார்கள்.) எனவேதான் ‘கட்டடம் ‘ என்ற சொல்லைப்  பயன்படுத்தினேன்  முந்திய என் கட்டுரையில்.

ஆகவே ‘building’ என்ற சொல்லுக்கு நிகரான  தமிழ்ச்  சொல் கட்டடம்’தான்.
என்னைப் பொருத்தவரை இதுதான் முடிவு!
உங்களைப் பொருத்தவரை?

அடுத்த ‘இதுவா? அதுவா?’ என்னும் தலைப்பில் இன்னும் தொடரும் சிக்கல் ஒன்றைக் காண்போம்.

 

Share

About the Author

பெஞ்சமின் லெபோ

has written 53 stories on this site.

இயற் பெயர் : பெஞ்சமின் குடும்பப் பெயர் : லெபோ (LE BEAU = அழகு) பிறப்பு & வளர்ப்பு : ஆனந்தரங்கம் பிள்ளை முதல் பாவேந்தர் பாரதிதாசனார் ஈறாகத் தமிழ்ப் பயிர் வளர்த்த புதுச்சேரி படிப்பு : அனைத்தும் புகழ் பெற்ற கல்விக் கூடங்கள் - புதுச்சேரி : பெத்திசெமினரி உயர்நிலைப் பள்ளி ; தாகூர் கலைக் கல்லூரி - சென்னை : இலயோலா (இளங்கலை அறிவியல்) ; பச்சையப்பன் (முதுகலை - தமிழ்) - பாம்பே : (அஞ்சல் வழி) BIET (British Institute of Engineering and Technology) மின்னியல் (Electronics) - திருப்பதி : (அஞ்சல் வழி) முதுகலை - ஆங்கிலம் - திருவனந்தபுரம் : கேரளப் பல்கலைக்கழகம் (பட்டயப் படிப்பு ) மொழி இயல் - சென்னைப் பல்கலைக் கழகம் : முனைவர் மு.வ அவர்களின் மாணாக்கன் - கேரளப் பல்கலைக் கழகம் : முனைவர் வி.ஐ சுப்பிரமணியன் அவர்களின் மாணாக்கன் - புதுத் தில்லி : (அஞ்சல் வழி) Academie française de Delhi : முதுநிலை பட்டயப் படிப்பு : பிரஞ்சு. பணிகள் : - புதுச்சேரி, காரைக்கால் அரசினர் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் - கிழக்கு ஆப்பிரிக்க (ழிபுத்தி) நாட்டில் பிரஞ்சு வங்கி 'Banque Indosuez' -இல் முது நிலை அதிகாரி - பிரான்சு : பாரீசில் உள்ள புகழ் பெற்ற (La mode) நிறுவனம் 'Christian Lacroix' -இன் நிர்வாகத் துறையில் உயர்பதவி (Aminstrator) - இந்த ஆண்டு முதல் பணி நிறைவு. பொதுப் பணிகள் : - பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் ​ - இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் செயற்குழு (மூத்த) உறுப்பினர்) - கலை, இலக்கிய, அறிவியல் எழுத்தாளர். (இணைய தளங்கள் பலவற்றில் எழுதி வருபவர்) - முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத் தேடல், பிரான்சு கண்ணதாசன் கழகம் ...போன்ற பல சங்கங்களின் ஆலோசகர் - (இலக்கிய) மேடைப் பேச்சாளர், கலை, நாட்டிய நிகழ்ச்சிகள்... தொகுப்பாளர், பட்டி மன்றங்களில் நடுவர் , கருத்தரங்குகளில் தலைவர், கழகங்களுக்கு வழிகாட்டி ... - ஆன்மீகப் பணிகள் : கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவர் ; பிரஞ்சுப் பங்கில் (white parish) உறுப்பினர். - கணி வல்லுநர் : கணிப் பொறியை அக்கக்காய்ப் பிரிக்கவும் பூட்டவும் அறிந்தவர், இணைய தளங்களை உருவாக்குபவர், ' graphics' தெரிந்தவர் - சிறு வயது முதலே ஒளிப் படக் கலையில் ('photography') ஈடுபாடு உண்டு. இப்போதும் அது தொடர்கிறது. - பிரான்சில் தமிழ் வளர்க்கும் பணி . எழுத்துப் பணிகள் : - முதல் படைப்பே முதல் பரிசை வாங்கித் தந்தது ; 1965 - இல் கல்லூரி மாணவர்களுக்காகக் கலைக்கதிர் என்னும் அறிவியல் பத்திரிகை கட்டுரைப் போட்டி நடத்தியது. 'ஆக்க வேலையில் அணுச் சக்தி' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது. - 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு விழா பாரீசில் நடைபெற்றது அதன் தொடர்பாக உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கட்டுரைப் போட்டியில் இவருடைய கட்டுரை 'கவிஞனின் காதலி' முதல் பரிசைப் பெற்றது. - இவை இரண்டுக்கும் இடையே ஏராளமான கதைகள், கட்டுரைகள் பல பரிசுகளை வென்றுள்ளன. - 'எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கு அது பொருத்தமா? ' என்னும் தலைப்பில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 -இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. பிரான்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே. அவர்களுள் இவரும் ஒருவர்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.