கொலு வைக்கலாமா?

-விசாலம்

goluகுழந்தைகளே! உங்கள் அம்மா கொலு வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்  இல்லையா?

வரிசையாகப் படிகள் அமைத்து அதன் மேல் அழகான வெண்மை நிறத்தில் துணி விரித்துப் பின் முதற் படியிலிருந்து பல அழகு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பாள். அநேகமாகக் கடவுள் பொம்மைகள் அதிகமாக இருக்கும். தசாவதாரம், சிவன் பார்வதி, நடராஜர், கணபதி, கிருஷ்ணர், கோபிகள் தவிர நாட்டின் தலைவர்கள், மஹான்கள் என்று பல அதில் இருக்கும்.

இந்தக்காலத்தில் கொலு வைப்பது மிகவும் எளிது. ஏனென்றால் இப்போது உடனடியாக ரெடிமேட் அலுமினியத்தட்டுப்  படிகள்  கிடைக்கின்றன. தட்டுகளைப் பொருத்தி பின் நட்டுகளை முடிக்கிவிட்டால் போதும், அப்படியே வலிவுடன் நிற்கும். முன்பெல்லாம் அப்பப்பா! அதாவது என் காலத்தில்  நாங்கள் கொலுவிற்குப்  படி கட்ட  வீடே இரண்டு படும். அரிசி டின்,  கோதுமை மாவு டப்பாக்கள், மற்ற அண்டா, பிளாஸ்டிக் டப்பா என்று அளவுக்குத் தகுந்தாற்போல் அடுக்கி அதுவும் போதாமல் சரியாகச்  சமப்படுத்த பல தடிமனான  புத்தகங்களும் வரும். பின் மேலே ஒரு வெண்மையான  விரிப்பைப் போட்டு மூடி  எப்படியோ ஒரு ஒன்பது படிகள் நிறைவுப் பெற்று விடும்.

இந்த நவராத்திரி, புரட்டாசி மாதம் வளர்ப்பிறைப் பிரதமையிலிருந்து ஆரம்பித்துத் தசமி வரைச் செல்லும். அம்பாளைச் சிறப்பாகப் பூஜை செய்யும் நாட்கள் இவை. முதல் மூன்று நாட்கள் துர்கா அல்லது பராசக்தி.  பின் வரும் மூன்று நாட்கள் லட்சுமி.  கடைசி  மூன்று நாட்கள்  ஸரஸ்வதி  என்று ஆவாஹனம்  செய்கிறார்கள். பத்தாவது நாள்தான் விஜயதசமி.

மகிஷாசுரனைப் பார்வதி  ஒன்பது நாட்கள் போர்புரிந்து பின் 
விஜயதசமி அன்று வதம்  செய்கிறாள்; வெற்றி பெறுகிறாள். ஸரஸ்வதி பூஜையின் போதுதான் வாத்தியங்கள்,  புஸ்தகங்கள் போன்ற எல்லாவற்றுக்கும் பூஜை செய்யப்படும். ஆயுத பூசை அன்று கார்கள் இயந்திரங்கள், ஆட்டோக்கள் போன்றவைகளுக்கும் பூஜை நடத்தப்படும்.

முன்பு, இந்த நவராத்திரியை மிகவும் சிரத்தையாக  ஒன்பது நாட்களும்   அம்பாளைப் பூசித்து, அந்தந்த நாட்களுக்கு  ஏற்றவாறு பிரசாதம் (சுண்டல்) தயாரித்து அன்னைக்குப் படைப்பார்கள். கூட்டுக் குடும்பம் இருந்ததால்  தடை இல்லாமல் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது எல்லா அம்மாக்களும் வேலைக்குப் போவதால் இதை மிக குறைவாக ஆக்கிக் கொண்டு விட்டனர். சிலர் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை எல்லோரையும்  அழைத்து மஞ்சள், குங்குமம்  கொடுக்கின்றனர். சிலர்  கடைசி மூன்று  நாட்கள் மட்டும்  கொண்டாடுகின்றனர்; அன்று   லலிதா ஸஹஸ்ர நாமம் படிப்பது மிகச்  சிறந்தது.

குழந்தைகள், மாணவ மாணவிகள் எல்லோரும்  சொல்லலாம். லட்சுமி, ஸரஸ்வதி, துர்க்கை பற்றிப் படிக்கலாம். இந்தக் கொலுப் படியில் முதலில் கடவுள் பொம்மைகள், பின் மஹான்கள், தலைவர்கள், மிருகங்கள், பறவைகள் என்று வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். நீங்களும்  உங்கள்  அம்மாவுக்கு  உதவலாம்.

உங்கள்  பள்ளியின்  மாடல் அல்லது ஏதாவது ஒரு கோவில், மலையிலிருந்து விழும் அருவி, உச்சிப் பிள்ளையார் என்று களிமண்ணில்  கட்டி, நிறைய சிறு பொம்மைகளையும் உபயோகித்து அசத்தலாம். இதனால் உங்கள்  அறிவுத்திறன்,  கற்பனை வளம், கைத்திறன் எல்லாம்  வளரும்.

நம்  நாட்டுக் கலாசாரத்தில் பங்குபெற்று மன நிறைவைப் பெறலாம். நிறைய பாராட்டுப் பெற இன்னும் நிறைய புதிதாகச் செய்ய ஊக்கம்  கிடைக்கும். பலர் வந்து போவதால்  உறவு வளரும். அம்மாவுக்கு உதவி புரிய ஒரு வாய்ப்புக் கிடைக்கும். பெரியவர்களுக்குப் பணிந்து நமஸ்கரிப்பதால் வினயம் பெருகும்; மரியாதையுடன் நடக்க அல்லது கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.

நவராத்திரிக்கென்று  பல பாடல்கள் கற்றுக்கொண்டு அம்பாள் முன் பாடலாம். மாலை, குத்துவிளக்கு ஏற்றி மெய்ம்மறந்து பாட, அந்தச் சக்தியான அம்பாள் நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவாள்.

பாரதியார்  நவராத்திரி பாடல் ஒன்று பாடியிருக்கிறார்; நீங்களும் இதற்கு  ஒரு ராகம் போட்டுப் பாடுங்கள்.

பல்லவி 

உஜ்ஜயினி  நித்ய கல்யாணி
ஓம்சக்தி  ஓம்சக்தி ஓம்சக்தி  ஓம்சக்தி (உஜ்ஜயினி)

அனுபல்லவி

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா சரஸ்வதி  ஸ்ரீ  மாதாஸா (உஜ்ஜயினி)

சரணம் 

வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி பதங்கள்  பணிந்து துணிந்தனம்
சத்ய யுகத்தை அகத்திலிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும்   உத்தமி   (உஜ்ஜயினி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *