அப்பா சொன்னா கேக்கணும்!

பவள சங்கரி

தாயிற் சிறந்த கோயில் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம் என்பது இந்த ஆய்விலிருந்து தெளிவாகிறது. லண்டன் நியூகாஸில் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இப்போது சொல்லுங்கள், தந்தை சொல் மிக்க மந்திரமில்லைதானே!

dholakiyyaone

இப்ப நான் சொல்லப்போறது சமீபத்துல நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு பணக்கார அப்பாவிற்கு ஒரே மகன். அவன் அப்பா பேச்சை தட்டாத ஒரு நல்ல பையன். ஒழுக்கமா வளர்ந்து, நல்லா படிச்சான். 21 வயதான அவன் அமெரிக்கா போய் எம்.பி.ஏ படிப்பும் படிச்சு முடிச்சுட்டு வந்தான். வரும்போது அவனுக்கு ஏகப்பட்ட கனவு.. அப்பாவோட சேர்ந்து வியாபாரம் பண்ணப்போறோம்னு. ஆனா வீட்டிற்கு வந்ததும் நடந்ததே வேறு. அவனோட அப்பா என்ன சொன்னாரு தெரியுமா? வேலை தேடுவதும் அந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள படும் சிரமங்களையும், சம்பாதிக்கும் பணத்தின் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். அதனால் நமது மாநிலம் அல்லாத ஊருக்குச் சென்று உன்னுடைய திறனால் வேலை தேடி சம்பாதித்து ஒருமாதம் வாழ்ந்து காட்டு. எதற்கும் என்னுடைய பெயரை செல்வாக்கை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது . அவனும் சம்மதிச்சு கிளம்பிட்டான். நேரே கேரளா போய் வேலை தேடரான். கொச்சி முழுக்க 60 நிறுவனங்களில வேலை கேட்டு கிடைக்காம கடசியா ஒரு ரொட்டி தயாரிக்கும் கடையில வேலைக்குச் சேர்ந்தான். ஆனாலும் மனம் தளரவில்லை மலையாளம் தெரியாது. அங்கு அதிகம் இந்தி மொழி தெரிந்தவர்களும் இல்லை. அடுத்துஅழைப்பு மையம் ஒன்றிலும், மெக் டொனால்ட் கடையிலும் வேலை பார்த்தான். எல்லாமே சிறு சிறு வேலைகள்தான். ஒரு மாதத்தில் ரூ.4000 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. வேலை இல்லாமல் இருப்பதும் அதைத் தேடி அலைவதும் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து கொண்டான். இந்தச் சமயத்தில்தான், அவன் வேலை செய்யும் பேக்கரிக்கு வந்த ஒருவர் இவனோட வேலையைப் பார்த்து பிடிச்சுப்போய் தான் வேலைசெய்யும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்தார். ஆனால் அப்போது அவருடன் இருந்த நபர்கள் ‘இவரைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அவருக்கு வேலை வாங்கித் தரவேண்டாம்’ என்று கூறினர். இருப்பினும் அவனோட வேலைத்திறன் அவருக்குப் பிடித்துப் போகவே புதிய வேலைக்குப் பரிந்துரைத்தார். நம்பிக்கை வைத்து வேலைக்கு ஏற்பாடு செய்த அவருக்கு நன்றி சொல்றான். அப்பதான் அவனோட அப்பாகிட்டயிருந்து போன் வருது. அப்பா கொடுத்த ஒரு மாத கெடு முடிந்துவிட்டது. அவன் உடனே தனக்கு வேலைக்கு பரிந்துரை செய்தவர்கிட்ட உண்மையை சொல்றான் .. என்ன உண்மை அது தெரியுமா.. அவன் ட்ராவ்யா தொலாக்கியா என்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன். அவனோட அப்பா யார் தெரியுமா.. குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. ஹரே கிருஷ்ணா என்ற பெயரில் வைரம் மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சூரத் நகரில் பெரிய கம்பெனி வைத்து நிர்வகித்து வரும் சாவ்ஜி, உலகின் 71 நாடுகளில் வைர வியாபாரம் செய்து குஜராத் மாநிலத்தின் முன்னணி செல்வந்தராக வளம் வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளர் என்று குஜராத் மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. 6 ஆயிரம் கோடி. பணம் மற்றும் சமூக அந்தஸ்து, எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பின் அருமையைப் புரிய வைக்கவேண்டும் என்று சாவ்ஜி விரும்பியுள்ளார். இதனை மகனிடமும் கூறியுள்ளார். அவரும் தந்தைப் பேச்சிற்கு மதிப்புக்குக் கொடுத்து தந்தையின் சொல்படி நடந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு அனுபவம் கிடைச்சி ஊருக்குத் திரும்பினப்பறம் டிராவ்யா என்ன சொல்றார் தெரியுமா , வாழ்க்கையில மனிதர் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பும், நேசமும்தான் விலைமதிப்பில்லாதது – உண்மைதானே?

maxresdefault

இன்னொரு சம்பவம் சொல்றேன் கேளுங்களேன்.. ஆப்பிரகாம் லிங்கன் தெரியுமில்லையா.. ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியோட மகனாப் பிறந்து அமெரிக்காவின் அதிபராக உயர்ந்தவர் அவர். ஒரு தடவை அவர் பாராளுமன்றத்துல இருக்கும்போது, எதிர்க்கட்ட்சி தலைவர் ஒருத்தர் அவரை எப்படியும் அவமானப்படுத்தனும்னு முடிவோட வந்திருக்கார். லிங்கன்கிட்ட போய் தன்னொட கால்ல போட்டிருக்கிற செருப்பைக் காட்டி, இது உங்க அப்பா தச்ச செருப்புதான். 3 வருஷமா போட்டிருக்கேன். நல்லா தச்சிருக்காரு அப்படீன்னு சொன்னாராம். அதற்கு ஆபிரகாம் லிங்கன் என்ன சொல்லியிருப்பாரு யோசிச்சுப் பாருங்க… அவர் அடுத்த நொடி கொஞ்சமும் தயங்காம அவர்கிட்ட போய் கீழே குனிந்து அந்த செருப்பைப் பார்த்து, அப்படியா, மிக்க மகிழ்ச்சி. என் அப்பா வேலையில் மிகவும் திறமைசாலி. நானும்கூட என் அப்பா போல நன்றாக செருப்பு தைப்பேன். இந்த செருப்பில் ஏதாவது பிரச்சனை இருந்தா; என்கிட்ட சொல்லுங்க, நான் சரிசெய்து தறேன்னு சொல்றார். அவரை அவமானப்படுத்த்னும்னு வந்தவரு முகத்துல ஈயாடலையாம்..

டேல் கார்னீகுன்னு ஒரு எழுத்தாளர் சொன்ன ஒரு வாசகம் பாருங்கள்..

TWO MEN LOOKED OUT FROM PRISON BARS
ONE SAW MUD AND THE OTHER SAW STARS

அதாவது ஒரே இடத்துல இருந்து இரண்டு பேர் ஒரே வெளியை பார்க்கிறாங்க.. ஒருத்தர் வானத்துல இருக்கற நட்சத்திரத்தையும், இன்னொருத்தர் தரையில் கிடக்குற களிமண்ணையும் பார்க்கிறார்.. எல்லாமே நம்மோட பார்வையிலதான் இருக்கு இல்லையா செல்லங்களா.. நல்லா யோசிச்சுப் பாருங்க. மீண்டும் சந்திப்போமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *