மயிலே … மயிலே!

பவள சங்கரி

DSC_00861

மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக பழமையான அலங்கார பறவையாக இருக்கிறது. சரி, அதன் இனம் இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து வாழ்ந்து வருவதற்கான ரகசியம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? மயில் இனம் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வருவதை சுற்றி பின்னப்பட்டுள்ள சில கட்டுக்கதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். இந்து மதத்தில் மயிலையும் அதன் தோகைகளையும் பற்றி இந்து மத புராண கதைகள் நிறைய இருக்கின்றன. மயூரா என்ற மயில், கருடனின் இறகுகளில் ஒன்றில் இருந்து உருவானது . பாம்பை கொல்லும் புராண காலத்து பறவையாக சில ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது மயில். இந்து மதத்தில் மயில் தோகை மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய கிரீடத்தில் மயில் தோகையை அணிந்திருந்தார். சக்தி தேவியின் அம்சமான குமரி தேவி மயிலின் மீது பவனி வந்தார். முருகப் பெருமான் மயிலை தன் வாகனமாக பயன்படுத்தி வந்தார்.

ஒரு முறை ஒரு மயில் பிரம்மாவிடம் போய், எனக்கு மட்டும் ஏன் குரலை இவ்வளவு மோசமாக படைத்தாய். குயில் மட்டும் இத்தனை அழகாகக் பாடுகிறதே என்று வாக்குவாதம் செய்ததாம். அப்போது பிரம்மா குயிலைப்பார்த்து பொறாமைப்படுகிறாயா நீ என்று கேட்டாராம். அதற்கு அந்த மயில் நான் பொறாமையெல்லாம் படவில்லை சாமி, எனக்கு வருத்தமாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன் என்றதாம். பிரம்மதேவன் அந்த மயிலுக்காக மட்டும் அல்ல நமக்கும்கூட புரியும்படி பொறுமையாக பதில் சொன்னார். அதாவது, கிளிக்கு பேசும் திறமையும், பருந்துக்கு வலிமையும், ஆந்தைக்கும் அறிவும், குயிலுக்கு குரலும், உனக்கு அழகான தோகையும், கண்ணைக்கவரும் வண்ணங்களும், நாட்டியத் திறமையும் கொடுத்திருக்கிறேன். அவரவர்க்கு உரியதைக் கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாமே வேண்டுமென்று நினைக்கமுடியுமா? உனக்கு உண்டானது கிடைத்திருப்பதை நினைத்து திருப்திபட வேண்டுமேயொழிய அடுத்தவருக்கு கிடைத்ததைப் பார்த்து வருத்தம் கொள்ளக்கூடாது என்றாராம். மயில் புரிந்துகொண்டு தன் தவறை உணர்ந்து திருந்திவிட்டதாம். நாம்கூட சில நேரங்களில் இப்படித்தானே அடுத்தவரைப்பார்த்து தேவையில்லாமல் ஒப்பிட்டு குழப்பிக்கொள்கிறோம்….

இதைச் சரியாகப் புரிந்துகொண்ட இந்த மயில் தான் உண்டு தன் வேலையுண்டுன்னு அமைதியா வாழ ஆரம்பிச்சுதாம். அந்த மயில் வாழ்ந்துகிட்டிருந்த மலை பச்சைப்பசேல்னு பட்டுக்கம்பளம் விரிச்சமாதிரி அழகான மலையாம். எப்பவும் குளுகுளுனு இருக்குமாம். மயிலுக்குத்தான் இப்படியிருந்தா கொண்டாட்டம் ஆச்சே. அடிக்கடி தோகைவிரித்து அழகா ஆட ஆரம்பிச்சுடுமாம். அதுமட்டுமா, அங்கே இருக்கிற குளத்துல போய் தன்னோட அழகை தானே ரசிச்சுக்கிட்டே இருக்குமாம். இப்படியும் அப்படியுமா தலையைத் தலைய ஆட்டி அழகு காட்டிட்டே இருக்குமாம். அப்ப ஒரு ஆமை அதைப் பார்த்துட்டு, அடடே மயில் அண்ணாச்சி இவ்ளோ அழகா இருக்கீங்களே.. இந்த உலகத்துலயே அழகான பறவை நீங்கதான் அப்படீன்னு சொன்னவுடனே அப்படியே உச்சி குளிர்ந்துபோயிடுமாம் அந்த மயில். இன்னும் அழகா ஆடி அந்த ஆமையை மகிழ்விக்குமாம். இப்படித்தான் இரண்டு பேரும் அவ்ளோ நட்பாயிட்டாங்களாம். இந்த சமயத்துலதான் ஒருநாள் ஒரு வேடன் இந்த மயிலை ரொம்ப நாளா கவனிச்சிக்கிட்டு இருந்தவன், அதோட தோகைமேல கண்ணு வச்சிட்டான். எப்படியும் அந்த மயிலு குளத்துல தன்னோட அழகைப் பார்க்க வரும்னு தெரிஞ்சிக்கிட்டு வலையை விரித்து வச்சுட்டு மறைஞ்சிக்கிட்டானாம். நம்ம மயில் அண்ணாச்சியும் வழக்கம்போல தலையை சிலுப்பிக்கிட்டு அந்த குளத்துக்கிட்ட வந்துச்சாம். ஐயோ பாவம், அந்த வலையிலயும் மாட்டிக்கிச்சாம். ஒன்னும் புரியாம அலற ஆரம்பிச்சுதாம். நண்பனோட அலறல் சத்தம் கேட்ட ஆமை வேகமாக வெளியே வந்துச்சாம். அப்பதான் அந்த வேடன் வலையைச் சுருட்டி மயிலோட தூக்கிக்கிட்டு கிளம்பினானாம்.

ஆமை உடனே அந்த வேடன்கிட்ட போயி ஐயா வேடரே, என் மயில் நண்பனை விட்டுடுங்க, பாவம் அவன் நல்லவன் அப்படீன்னு கெஞ்சிக் கேட்டுதாம். அந்த வேடன் அதெல்லாம் முடியாதுன்னு மறுத்தப்ப, அந்த ஆமையும், ‘மயிலை விட்டுட்டா விலையுயர்ந்த பொருள் ஒன்னு தருவேன்’ அப்படீன்னு சொல்லிச்சாம்.

அதுக்கு அந்த வேடனும், என்ன பொருள்னு காமி முதல்ல, பார்த்துட்டு முடிவு செய்யலாம்னு சொல்லிச்சாம். உடனே ஆமை தண்ணிக்குள்ள போயி ஒரு முத்தோட வெளியே வந்துச்சாம். பளபளன்னு அந்த முத்தைப் பார்த்ததும் அந்த வேடன் சட்டுனு அந்த வலையை விட்டுட்டானாம். மயிலும் வெளியே வந்து பறந்துபோய் மரத்துல ஏறி உட்கார்ந்துக்கிச்சாம். ஆனா அந்த வேடனுக்கு பேராசை வந்துச்சாம். அந்த ஆமைகிட்ட இன்னொரு முத்து கொடுத்தாகனும்னு அடம் பிடிச்சானாம். அந்த ஆமையும் சரி அந்த முத்தைக்கொடு திரும்பபோய் இன்னும் கொஞ்சம் முத்துகள் எடுத்துவந்து தறேன்னு சொல்லிச்சாம். அவனும் அதை நம்பி அந்த ஒற்றை முத்தைக் கொடுக்க அதை வாங்கிட்டு தண்ணிக்குள்ள போன ஆமை திரும்ப வரவேயில்லையாம்.. பேராசை பெரு நட்டமா போயிடுச்சேன்னு நொந்துபோய் அந்த வேடன் வந்த வழியே திரும்பி போயிட்டானாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *