வாழ்க்கைப்பாடம்!

பவள சங்கரி

images (12)

பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் ஒரு புறமும் மற்றொருபுறம் மிக உயரமான சுவரும் இருந்த ஒரு இடத்தைக் கடந்து போய்கிட்டிருந்தார். நிறைய குரங்குகள் வாழ்ந்து கொண்டிருந்த இடம் அது. வாரனாசியின் குரங்குகள் பெரிய காட்டுமிராண்டிகளாகவும், சில நேரங்களில் கடுகடுப்பாகவும் இருக்கக்கூடியவை. அப்போது சுவாமிஜியை தங்கலோட சாலை வழியாக கடந்து செல்ல அனுமதிக்கக்கூடாதுன்னு மனதில் ஏற்றிக்கொண்டதால், அவைகள் அலறிக்கொண்டும், கிறீச்சிட்டுக்கொண்டும், அவர் அங்கு நடந்தபோது அவரோட பாதங்களை பிராண்டிக்கிட்டும் இருந்துச்சாம். அந்த குரங்குகள் மிக நெருக்கமாக வந்து அவர்மீது மோத எத்தனித்தபோது அவர் ஓட ஆரம்பித்தாராம். ஆனால் அவர் எவ்வளவு வேகமாக ஓடினாரோ அதைவிட வேகமாக ஓடி வந்த அந்த குரங்குகள் அவரை கடிக்க ஆரம்பிச்சிடுச்சாம். தன்னால் தப்பிக்கவே முடியாது என்ற நிலை வந்தபோது, ஒரு வழிப்போக்கர் அவரைக்கூப்பிட்டு , “அந்தக் காட்டுமிராண்டிகளை எதிர்த்து நில்லுங்கன்னு சொன்னாராம். உடனே சுவாமிஜி திரும்பி நின்று அந்த குரங்குகளைப் பார்த்தேன், அப்ப என்ன நடந்தது தெரியுமா.. அந்த குரங்குகள் பின்னால் தள்ளிச்சென்றதோடு இறுதியாக ஓடியும் மறைந்தது. ஆம், இதன் மூலம் சுவாமிஜி நம்வாழ்க்கைக்கான பாடம் சொல்றார் பாருங்க – அதாவது, கொடூரங்களை எதிர்கொள்ளுங்கள், துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். அந்தக் குரங்குகளைப் போல நம்முடைய வாழ்க்கைத் துயரங்களும் நாம் அதன்முன் துணிந்து நின்றால் அவைகள் புறமுதுகிட்டு ஓடும். நமக்கு சுதந்திரம் வேண்டுமென்றால், அதனை எதிர்கொண்டு வெற்றியடையும் இயல்பினால் மட்டுமே முடியுமே தவிர ஒருபோதும் அதனை விட்டு விலகி ஓடுவதால் அல்ல. கோழைகள் ஒருபோதும் வெற்றியைச் சந்திப்பதில்லை. நம் அச்சம். துன்பம் அறியாமை அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட வேண்டுமென்று நினைத்தால் அவைகளை எதிர்த்துப் போராடவேண்டும்.
அதற்கு நம்முடைய மனம் எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமில்லையா? இதைப்பற்றி ஒரு கதை பார்க்கலாமா?
ஒரு நாட்டில் ஒரு அரசன் நல்லபடியா ஆட்சி செய்துகிட்டிருந்தானாம். ஒருநாள் அந்த ராஜாவுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாயிடுச்சாம். அரச வைத்தியர் வந்து பார்த்துட்டு அதை குணப்படுத்த மலை உச்சியில் இருக்கும் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து கண்ணில் பிழிந்தால் தான் பார்வை தெரியும்னு சொல்றார். சஞ்சீவி மலைக்கு எப்படி போறதுன்னு யாருக்கும் வழி தெரியல. அந்த அரசனுக்கு மூன்று மகன்கள்.. அவங்க தங்களோட குல தெய்வம் கோயிலுக்குப்போய் அந்த அம்மன் கிட்ட மனம் உருகி வேண்டிக்கிறாங்க. அப்ப அந்த அம்மன் அந்த மலைக்குப் போற வழியைச் சொல்லி, அந்த மலையடிவாரத்தில இருக்கற தேவதை வழிகாட்டினால் தான் போகமுடியும். அங்குபோய் அந்த தேவதையை வணங்கி கேளுங்கன்னு சொல்லிச்சாம். அந்த அரசரோட முதல் மகன் நான் போய் அந்த மூலிகையை கொண்டுவருகிறேன் அப்பட்டீன்னு கிளம்புகிறான்..
தேவதைகிட்ட போய் கேட்கிறான். அதற்கு அந்த தேவதை ஒரு நிபந்தனை போட்டதாம்..”நான் உன்பின்னால் வருவேன்.. நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்பவேண்டும். வலதுபக்கம் திரும்ப வேண்டும்… நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.. நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும் பின்னால் திரும்பி பார்க்ககூடாது.” அப்பட்டீன்னு சொன்னதாம். சரீன்னு அவனும் கிளம்பினான். போயிட்டே இருந்தானா, தீடிரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை .. என்னாச்சுன்னு தெரியலையேன்னு தன்னையறியாமல் திரும்பி பார்க்கிறான்.. தேவதை சொன்ன நிபந்தனையை மீறிவிட்டான்.. உடனே கற்சிலையாகிவிடுகிறான்.
அடுத்தது இரண்டாவது மகன் கிளம்புகிறான்.. நிபந்னைகளை நல்லா கேட்டுக்கிட்டு அதன்படி பாதிதூரம் வந்துவிடுகிறான்.
தீடிரென சிரிப்பு சத்தம்கேட்கிறது. உடனே அவன் சட்டுனு ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்.. அடுத்தது மூன்றாமவன் அடுத்து வருகிறான்.
இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்.. பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பெற்று தன்னோட அப்பாவையும் குணப்படுத்திவிடுகிறான். என்ன தெரியுது உங்களுக்கு. அவங்களுக்குப் பின்னால் வந்த தேவதை அவங்களோட மனசுதான். மனசுங்கற அந்த தேவதை நிபந்தனையை போட்டுவிட்டு நம்ம செயல் உறுதியை தடுப்பதற்கு எல்லா வேலையும் பார்க்கும். அதை எப்படி நாம் எதிர்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுறோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கி உள்ளது. புரிந்ததா? மீண்டும் சந்திப்போமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *