ஔவையும் அதியமானும்

பவள சங்கரி

800px-adhiyaman_avvaikku_nellikani_vazhanguthal

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா..

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு – குறள் 786

இதன் அர்த்தம் என்ன தெரியுமா.

முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே அல்ல. மனத்தோடு மனம் மகிழும்படி கொள்ளும் நட்பே சிறந்தது. அதாவது நட்பு என்கிற அந்த உணர்வு அடி மனதிலிருந்து ஊற்றெடுத்து வரவேண்டும். அதுதான் சிறந்த நட்பு.

நம் ஔவை அதியமான் நட்பு அது போலத்தான்..

முன்னொரு காலத்தில், அதியமான் என்ற மிகச் சிறந்த மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது நாட்டு மக்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். அந்த மன்னர்கிட்ட வீரத்தோட பணிவும், மக்களுக்கு நன்மை செய்கிற நல்ல குணமுமிருந்தது. மன்னர் அதியமான் தன்னோட நாட்டு மக்கள் மீது எந்த அளவிற்கு அன்பு வச்சிருந்தாரோ அதே அளவிற்குத் தம் தாய்மொழி தமிழ் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாராம். அவரோட அரசவையில் நிறைய அமைச்சர்களும் புலவர்களும் , ஞானிகளும் இருந்தார்கள். நல்ல அமைச்சர்கள், அவர் நாட்டு மக்களையும் நாட்டையும் சிறப்பாக ஆட்சி புரிய உதவினர். புலவர்கள் எல்லாம் நல்ல தமிழ் மொழியில் நூல்கள் நிறைய எழுதவும் அதன் மூலம் மக்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கவும், மொழியை வளர்க்கவும் தங்கள் பொன்னான நேரங்களை செலவிட்டனர். அரசவையில் ஏராளமான புலவர்கள் இருந்தாலும்,மன்னன் அதியமானுக்கு மிகவும் பிடித்த புலவர் ஒருவர் இருந்தார். அவர் யார் தெரியுமா..அவர்தான் நம் அவ்வையார். மிகுந்த தமிழ் ஞானமும், புலமையும் கொண்டவர் நம் அவ்வைப்பாட்டி. அவரோட புகழ் நாடு முழுவதும் பரவி இருந்தது. அவரோட பாடல்களை அதியமான் விரும்பி கேட்பது வழக்கம். அரசர்கள் வேட்டையாட எப்போதும் காட்டுக்குப் போவது வழக்கம் இல்லையா. அப்படி ஒருமுறை அதியமான் வேட்டைக்காக காட்டிற்குச் சென்று இருந்தான். அந்த காட்டில் சில பழங்குடியின மக்களைச் சந்தித்தார். அவர்கள் அரசர் அதியமானுக்கு ஒரு அதிசயமான கருப்பு நெல்லிக்கனியை கொடுத்தனர். அந்த அதிசய நெல்லிக்கனியை சாப்பிடறவங்களுக்கு இளமையோட நீண்ட நாள் வாழவைக்கும் மகிமையும் இருந்தது. எல்லோரும், அந்த நெல்லிக்கனியை அதியமான் தான் சாப்பிடுவார் என நினைத்து இருந்தனர். ஏனெனில் அது நீண்ட ஆயுள் தரும் கனி இல்லையா.நிறைய நாள் வாழனும்னு யாருக்குத்தான் ஆசையிருக்காது. அதனால அரசர் அந்த நெல்லிக்கனியை தானே சாப்பிடுவார்னு நினைத்தார்கள். ஆனால் அதியமான் என்ன பன்னினார் தெரியுமா. அக்கனியை அவ்வையார்கிட்டக் கொடுத்து அவரை உண்ண வைத்துவிட்டார். எல்லோருக்கும் ஆச்சரியமா இருந்தது. அதியமான் ஏன் அப்படி அந்த அதிசயமான பழத்தை தான் சாப்பிடாமல் ஔவையாருக்குக் கொடுத்தார் தெரியுமா. ஔவையார் மேல் வைத்திருந்த மனமார்ந்த நட்பு மட்டும் காரணமல்ல.அந்தப் பழத்தை தான் சாப்பிட்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்தால் , தானும் தன் நாட்டு மக்களும் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் அக்கனியை அவ்வையார் சாப்பிட்டால் அவர் பாடும் பாடல்கள் மற்றும் எழுதும் நூல்கள் மூலமாக நம் தமிழ் மொழி வளர்வதோடு, பின் வரும் சந்ததினரையும் அது வாழவைக்கும் அப்படீன்னு நினைக்கிறார். அதனால்தான் அதியமான் அந்த கனியை அவ்வை பாட்டிக்கு கொடுத்தார்.அதியமான் போல அந்த காலத்துல பல மன்னர்கள், மக்கள் அனைவருமே சிறந்த தாய் மொழி பற்றோடு இருந்தார்கள்.

இதுபோல நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்யறவங்க இன்னைக்கும் இருக்கிறாங்க.

1_67-590x237

சமீபத்துல பிரேசி்ல் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ‘ரியோ ஒலிம்பிக்’ தொடர் நடைபெற்று முடிந்த பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்காக பாராலிம்பிக் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளையில வேலை செய்துகிட்டு, காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். அப்பவும் மனம் தளராமல் பயிற்சி செய்து தங்கப்பதக்கம் வென்றுவிட்டார். அதோட அவருக்கு பரிசுத் தொகை குவிந்த வண்ணம் உள்ளன. பரிசுத்தொகை குவிந்த போதிலும் அவர், தான் படித்த பள்ளிக் கூடத்தை மறக்கவில்லை. தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தான் ஏழையா இருந்தாலும் பணத்தைப் பார்த்தவுடன் தான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும்னு நினைக்காமல் தன்னோட ஊர் பிள்ளைகளும் நல்லாயிருக்கனும்னு சமூக அக்கறையோட அவர் செய்த காரியம் பாராட்டிற்குரியது அல்லவா. நாமும் நம் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டுமில்லையா.. மீண்டும் சந்திப்போமா..

11 Responses to ஔவையும் அதியமானும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *