மூக்கை நுழைக்காதே!

 

விசாலம்

நாம் சில சமயம் பிறர் வேலையிலோ பேச்சிலோ அனாவசியமாக மூக்கை நுழைப்போம். அவர்கள் நம்மிடம் ஒன்றும் கேட்காமல் இருந்தாலும் நாமே உள்ளே புகுந்து விஷயம் தெரியாவிட்டாலும் தெரிந்தது போல் காட்டிக்கொண்டு ஸ்டைல் விடுவோம். இது எவ்வளவு தவறு ? எப்போதும் பொது இடத்திலோ நாலு பேர் மத்தியிலோ கூடிய வரை அமைதி காக்க வேண்டும். ஏதாவது தனிப்பட்ட முறையில் கேட்டால் ஒருவர் மனதும் பாதிக்காதபடி கண்ணியமாக பதில் தரவேண்டும் . இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு குரங்கின் கதையைப் பார்க்கலாம்.

ஒரு ஊரில் ஒரு விஷமக்காரக் குரங்கு ஒன்று இருந்தது . குரங்கே விஷமம் தான். ஒரு நிமிடம் சும்மா இருக்காது அதிலும் இந்தக் குரங்கு ரொம்ப சூப்பர் . ஒரு நாள், அந்தக் குரங்கு ஒரு தெருவழியாக என்ன விஷமம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு சிறுமி ஸ்கிப்பிங் விளையாடியபடி போய்க்கொண்டிருந்தாள். அவளிடம் போய் அந்தக் குரங்கு என்ன விளையாடுகிறாய் ?என்று கேட்டது.

அவள் “இது உனக்குப்புரியாது போ” என்றாள்.

கோபத்துடன் குரங்கு அவள் மேல் பாய்ந்து அவள் கயிறைப் பிடுங்கிக் கொண்டது. அவள் அழுதபடி சென்று விட்டாள்.

குரங்கு மஜாவாக தான் கயிறைக் குலுக்கியபடி நடந்து வந்தது அங்கு ஒரு தச்சன் ஒரு மரப்பலகையை நடுவில் அறுத்துக்கொண்டிருந்தான் குரங்கு அங்கும் தன் மூக்கை நுழைத்தது.

“தச்சனே என்ன செய்கிறாய் ?
“நான் பலகையை நடு பாதியில் ரம்பத்தால் அறுத்துக்கொண்டிருக்கிறேன் . நான் இப்போது எழுந்து ஒரு டீ குடித்துவிட்டுவருவேன். இந்தப்பலகையை ஒன்றும் செய்யாதே “என்றபடி அந்தப்பலகையின் நடுவில் ஒரு உருண்டயான கட்டையைச் சொருகினான். பின் அந்தக்குரங்கைப்பார்த்தபடியே நகர்ந்து சென்றான்.

அவன் சென்ற பின் அந்தக் குரங்கு அந்த ரம்பத்தைப் பரிசோதித்தது. பின் மெள்ள அந்தப் பலகையின் மேல் அமர்ந்தது. நடுவில் இருந்த இடுக்கில் அதன் வால் தொங்கியது , பின் அந்தக் குரங்கு தனக்கு ரொம்பத்தெரிந்தாற்போல் நடுவில் புகுத்தி வைத்த உருண்டுக் கட்டையை பலம் கொண்டு உறுவியது அவ்வளவுதான்.

அந்தக்கட்டை மேலே வர பாதி அறுக்கப்பட்டப் பலகை ஒன்று சேர, அதன் வால் நன்றாக நசுங்கியது.

அதன் “வீல்… வீல்” என்ற சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்தனர். ஆனாலும் அதன் வாலைக் காப்பாற்ற முடியவில்லை உயிருக்கே அபாயமாகி பின் எப்படியோ பிழைத்துக்கொண்டது . ஒரு வாலில்லா குரங்கு ஆனது.

பிறர் வேலையில் நாம் நுழைந்து அதிகபிரசங்கித்தனமாகப் பேசுவது அல்லது நடந்து கொள்வது எத்தனை தவறானது என்று இந்தக் கதையிலிருந்து விளங்கும் எல்லோர் முன்னிலையிலும் பணிவாக அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அளவுடன் பேச வேண்டும். நிறைய சிந்திக்க வேண்டும்.

 

படத்துக்கு நன்றி: http://us.123rf.com/400wm/400/400/freud/freud0806/freud080600059/3205824-a-happy-monkey-with-a-big-smile.jpg

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *