குழக்கட்டை தின்ன வா!

-விசாலம்

 

ganesh-ganapathi

சில சிறுமிகள் தாங்கள் விளையாடும் போது ஒரு கல்லைக்கொண்டு வைத்து அதைக் கடவுளின் சிலைப்போல் பாவித்துப் பல பூக்களால் அர்ச்சனை செய்வதை நான் பார்த்திருக்கிறேன் . கோயில் சிலை என்றால் ஆகம சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யவேண்டும். ஆனால் பல குழந்தைகள் மனம் ஒன்றிப் பூஜிக்கும்போது அங்கு கல்லே  அவர்கள் பூஜிக்கும் இஷ்ட தெய்வமாகிறது. ஒரு தந்தை தன் மகனிடம், “மகனே! நான் இன்று என் இஷ்ட கணபதிக்குப் பூஜை செய்ய முடியவில்லை. என் உடல் நலம் சரியில்லை. அதனால் நீ போய்ப் பூஜை செய்து பிரசாதத்தையும் நைவேத்தியம் செய்துவிட்டு வா” என்றார்.

“சரி அப்பா…ஆனால் அந்தப் பிரசாதத்தை அந்தப் பிள்ளையார் உண்பாரா?” 

“நீ மனம் ஒன்றிப் பூஜை செய்ய அவரும் உண்பார்” என்று விளையாட்டுக்கு பதில் சொன்னார்.

மகனும் மகிழ்ச்சியுடன் அந்தக் கோயிலுக்குப்போய் “கணேசாய நம” என்று சொல்லியபடியே பால் அபிஷேகம் செய்தான். பின் பூக்களால் அர்ச்சனை செய்தான். பின் தாயார் கொடுத்த குழக்கட்டை பிரசாதத்தைப் பிள்ளையார் முன் வைத்துக் “கணேசா, இதைச் சாப்பிடு! என் அப்பா நீ சாப்பிட வருவாய் எனக் கூறியிருக்கிறார்” என்றபடி அதன்முன் அமர்ந்தான். ஒரு மணி நேரமாயும் பிள்ளையார் வரவில்லை. சிறுவனுக்குப் பசித்தது. ஆனாலும் கணபதி வந்து உண்டபிறகுதான் தான் தின்ன முடியும் என்று பொறுமையுடன் அமர்ந்திருந்தான். ஆனால் பிள்ளையார் வரவில்லை. இதனால் மனம் வருந்தி “என்ன கணேசா! நீ ஏன் வரவில்லை? நான் என்ன தவறு செய்தேன்? இன்னும் ஐந்து நிமிடங்களுக்குள் நீ வரவில்லை என்றால் என் தலையை  நீ அமர்ந்திருக்கும் மேடையில் மோதிக்கொள்வேன்.”

ஐந்து நிமிடங்களும் கழிந்தன. சிறுவன் உண்மையாகவே தலையை மோதிக்கொண்டான். இரத்தம் கசிந்தது; ஆனாலும் நிறுத்தவில்லை. இது பொறுக்குமா கடவுளுக்கு? உடனே அவன்முன் வந்தார்.

“போதும் மகனே! நீ வைத்திருக்கும் குழக்கட்டைகளை நான் சாப்பிட்டு விடுகிறேன், உன் மண்டையை உடைத்துக்கொள்ளாதே!” என்றபடிச் சாப்பிடத் தொடங்கினார். மகனுக்கு ஒரே குஷி; மகிழ்ச்சியில் குதித்தான். பின் வீடு திரும்பினான். அவனது பெற்றோர்கள் கவலையுடன் வாசலில் கவலையுடன் நின்றிருந்தனர்.

தன் மகனைப் பார்த்தவுடன் தாய் ஓடோடி வந்து “ஏன்டா  இவ்வளவு நேரம்? நைவேத்தியம் செய்தாயா? குழக்கட்டைகள் எங்கே? என்று பிரசாதப் பாத்திரத்தைத் திறந்தாள்.அங்கு ஒரு குழக்கட்டையும் இல்லை.

“எங்கேடா எல்லா குழக்கட்டையும்?”

“அம்மா!  அப்பா சொன்னபடி  பிள்ளையார் வந்து தின்னுட்டார்.”

“பிள்ளையார் வந்து தின்னாரா? ஏன்னா இங்கே வாங்கோ! உங்க புள்ள என்ன சொல்றான் பாருங்கோ!  பிள்ளையார் வந்து எல்லாப் பிரசாதமும் தின்னுட்டாராம்!”

அப்பா வந்தார். அவனைப் பிடித்து இழுத்தார் . “ஏண்டா  பிள்ளையார் குழக்கட்டை தின்னாரா? ஏன் பொய் சொல்றே?

“இல்லப்பா! நிஜம்தான். என் கண்முன் தின்னாரே. நீங்கள்தான் பிரசாதத்தைப் பிள்ளையார் தின்பார்னு சொன்னீர்களே! இப்போ என்னைத் திட்றேளே!”

“நான் விளையாட்டுக்குச்  சொன்னேன். எங்கேயாவது கல்லா இருக்கும் சிலை பிரசாதம் தின்னுமா?”

“இல்லப்பா நிஜம்தான்!” 

“ஏண்டா என்னிடமே பொய் பேசறயா? பசிக்கு எல்லா குழக்கட்டைகளையும் நீ தின்னுட்டுப் பிள்ளையார் தின்னுட்டார்னு சொல்றாயே. இரு இரு நாலு சாத்து சாத்தினாதான் உண்மையை ஒப்புக்குவே” என்று அவனை அடிக்க ஆரம்பித்தார். 

அவனும் அழுதபடியே நடந்ததையெல்லாம் சொல்லித் தன் தலையில் இருந்த காயத்தையும் காண்பித்தான் . அப்படியும் அவர் நம்பாமல், “நாளைக்கும் நீயே போறே. இதேபோல் பிரசாதத்தை உன் பிள்ளையாரைத் திங்கச்சொல்லு!” என்றபடி கோபத்துடன் சென்றுவிட்டார்.

மறுநாள் மகன் சுண்டல் பிரசாதத்துடன் பிள்ளையார் கோயிலுக்குப் போனான். நடந்ததையெல்லாம் சொல்லி அழுதான். பின், “அப்பா…பிள்ளையாரப்பா! என் மானத்தைக் காப்பாற்ற நினைத்தால் உடனே வந்து சுண்டலைத் தின்னு! எனக்கு இன்னிக்கும் அடி வாங்கித் தராதே!”

உண்மையாகவே தன் மகன் என்ன செய்கிறான் என்று கண்டிப்பிடிக்கத் தந்தை மகனுக்குத்தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து ஒளிந்துக்கொண்டு நடப்பதைக் கவனித்தார். ஒரு நிமிடம் அப்படியே ஆடிப்போய்விட்டார் . கணபதி மகன் அருகில் வந்து சுண்டல் தின்றுக்கொண்டிருந்தார்.  தந்தை மனம் நெகிழ்ந்து  மகனிடம் ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டார்.

“நான் பல வருடங்களாகப் பூஜை செய்தும் வராத வினாயகர் உனக்கு ஒரு நாளிலேயே தரிசனம் தந்துவிட்டார். உன்னை மகனாக அடைந்தது நான் செய்த பாக்கியம் தான்!” 

அவர் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. தன் மனைவியிடம் இதைச் சொல்ல வீட்டிற்கு  ஓடினார். பின் என்ன! அந்த மகன் உயர்ந்த நிலை அடைந்து விட்டான்.  

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *