உண்மையின் சக்தி

–விசாலம்.

image - guruஹரித்துவார் ஆசிரமத்தில்  பல சீடர்கள்  தங்கி தங்கள் குருவினிடமிருந்து கல்வியைக்கற்று வந்தனர்.  குருகுலம் போன்று குருவுக்கு சேவையும்  செய்து வந்தனர். அப்போது அந்த ஆசிரமத்துக்கு ஒரு புதிய பையன் வந்து  வாசலில் தயங்கியபடி   நின்றான். பின் நேராக குரு இருக்கும் இடத்திற்குச்சென்று சாஷ்டாங்கமாக அவரை நமஸ்கரித்தான் .

“குரு அவர்களே என்னையும் தங்கள் மாணாக்கனாக சேர்த்துக்கொள்ளுங்கள். நான் சமீபத்தில் என் பெற்றோர்களை இழந்து நிற்கிறேன். தற்போது எனக்கென்று யாருமில்லை. வசதியாக இருந்த என்னை சொத்துக்காக உறவினர்கள்  வஞ்சனை செய்து வீட்டைவிட்டு துரத்தி விட்டனர். மனம் வெறுத்து ஓடி வந்து விட்டேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.”

குருவும் அவனை அணைத்தபடி ” நான் இருக்கிறேன் உனக்கு. இனி கவலைப்படாதே ” என்றார்.

அந்த ஆசிரமம்  வாரம் ஒரு நாள் எல்லோரும் விரதம் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக்  கடைப்பிடித்து வந்தது. ஒவ்வொரு செவ்வாயும் விரதம் இருக்க வேண்டும். புதிதாக வந்த பையனுக்கு எல்லோரும் இதை விளக்கி வைத்திருந்தனர்.

அன்று செவ்வாய்க்கிழமை. எல்லோரும் பூஜை செய்து விரதம் இருக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்தப்புது மாணவன்  நேராக ஒரு உணவகம் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான்.

அவன் உணவகத்திலிருந்து  வருவதைப்பார்த்த  ஒரு மாணவன் இதை  குருவினிடம் போய் சொல்லிவிட்டான். மற்ற மாணவர்களும் “இந்த மாதிரி பையன் இங்கு வேண்டாம் அவனை வெளியில் அனுப்பிவிடுங்கள்” என்று குருவின் முன்னால் கத்த ஆரம்பித்தனர்.

” சற்று  பொறுமையாக இருங்கள். என்ன நடந்தது என நான் அவனைக்கேட்கிறேன்” என்ற குரு  அந்தப்புது மாணவனை அன்புடன் அழைத்தார் .

” கண்ணா, என்னப்பா வெளியிலே சாப்பிடப்போனாயா?”

“ஆமாம் குருவே ”

“உனக்கு இன்று விரதநாள் என்று தெரியாதா?”

“தெரியும் குருவே”

“ஏன் உன் உடம்புக்கு என்ன? நலம்தானே. இல்லை உடல் நலம் சரியில்லையா?”

“அதெல்லாம் ஒன்றுமில்லை நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் குருஜி”

“பின் ஏன் ஆசிரம விதிமுறைகளைத்தெரிந்தும் ஏன் சாப்பிடப்போனாய்?”

“எனக்கு பசி எடுத்தது. எனக்கு என் வீட்டில் விரதமிருந்து பழக்கமில்லை கொஞ்சம் பொறுத்துப்பார்த்தேன் பசி பொறுக்கமுடியவில்லை அதனால் தான் போய் உண்டு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் என்னைப் பழக்கப்படுத்தி கொள்கிறேன் குருஜி, என்னை மன்னித்து விடுங்கள்”

“கண்ணா நீ  உண்மையைப்பேசி பெரிய இடத்தைப்பிடித்துவிட்டாய்.”

மாணவர்களே உண்மை பேசிய இவனே எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.உண்மையின் பலத்தின் முன் விரதத்தின் பலம் குறைந்துவிட்டது. உண்மைக்கு அதிக சக்தி உண்டு. உண்மையே தெய்வம்.  எனவே இந்த புதுமாணவன் கண்ணா இங்கு இருப்பவர்களில் அதிக தகுதி வாய்ந்தவனாக தென்படுகிறான்”

மாணவர்கள் ஒருவர்க்கொருவர் பார்த்துக்கொண்டனர்  உண்மையின் சக்தியை   புரிந்துக் கொண்டனர்.

படம் உதவிக்கு நன்றி: https://chinnuadhithya.files.wordpress.com/2014/04/images-29.jpg?w=474

One Response to உண்மையின் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *