ராம சந்திரன்

-விசாலம்

lord_rama4

“பாட்டி இன்னிக்கு என் ஸ்கூல் பிரண்ட் ராம் சந்தர் நம்மவீட்டுக்கு வரேன்ன்னு சொல்லியிருக்கான். அவன் வந்தாக்க நீங்க ஒருகதை சொல்லணும்”’

“அதுக்கென்ன! சொன்னாப்போச்சு. இந்தமட்டும் பாட்டிக்கிட்டே கதைகேட்டுண்டுவரேளே. அதுவேசந்தோஷம்தான்!”

“என்ன பாட்டி அப்படி சொல்றே!”

“ஆமாண்டா இப்பல்லாம் நீங்க எப்போ பாத்தாலும் செல்லில   ஒருகாசுக்கும் உதவாம ஏதாவது பேசிண்டேஇருக்கேள். அதான் சொன்னேன்”

“பாட்டி! நான்உங்க பேரன். ரொம்ப சமத்துப் பேரன். நீங்களும் ரொம்ப சமத்துப்பாட்டி.

“போதுண்டா ரவி ரொம்ப ஐஸ் வைக்காதே! ஜலதோஷம் பிடிச்சுக்கப் போறது. கிளம்பு கிளம்பு ஸ்கூலுக்கு நாழியாச்சு!”

மாலையில் ரவி தன்னுடைய நண்பன் ராம சந்திரனை அழைத்து வந்தான். தில்லியில் பல வருடங்கள் அவன் இருந்ததால் தன் பெயரை இந்திக்காரனைப்போல் “ராம் சந்தர்” என்று சுருக்கி வைத்திருக்கிறான். உள்ளே நுழைந்தவுடன் பாட்டியைக் கண்டு அவரது காலைத் தொட்டு நமஸ்கரித்து “பிரணாம்” என்றான்.

“ஏண்டா ரவி. உன் நண்பனுக்குத் தமிழ் தெரியுமா?”

“ஓ! ரொம்ப நன்னாத் தெரியும். அவன் தமிழ்காரன்தான் பாட்டி. ரொம்ப வருடம் தில்லியிலேயே இருந்தானோல்லியோ…அதனாலே அந்தஊர் வழக்கம் நன்னாப் பழகிப் போச்சு.”

 “சரி! உள்ளேபோய் இரண்டுபேரும் டிபன் சாப்பிடுங்கோ;  அப்பறம் கதை சொல்றேன்”’

அரைமணி நேரம் ஆனபிறகு இருவரும் பாட்டி அருகே அமர்ந்து கொண்டனர். பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.  

”ராம சந்திரன்ங்கற பேர் பலருக்கு இருக்கும். ராமரோட  கிருஷ்ணனின் பெயர் சேர்ந்திருக்கும்.  ராமகிருஷ்ணன், முகுந்தராமன், சிவராமன், கோவிந்தராமன், ஜானகிராமன், யக்ஞராமன், முரளிராமன்,  சுப்பராமன், கல்யாணராமன்னு எல்லாம் நாம் பாத்திருக்கோம். ஆனால் ராம சூரியன்னோ, சூரிய ராமன்னோ பேரை ஒத்தரும்  வச்சுண்டதில்ல ஏன் தெரியுமா?”

“தெரியாதே பாட்டி”

”இதுக்கு  ஒருபுராணக்  கதை  உண்டு.”

ஸ்ரீராமருக்குப் பட்டாபிஷேகம். எங்கப்பாத்தாலும் கொண்டாட்டம்.

ஜேஜேன்னு ஒரே கூட்டம். நவ கிரகங்கள் எல்லாரும் வந்திருக்க 
ஸ்ரீராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சியைப் பார்க்கச் சூரியன் ரொம்பவே முன்னாடிவந்து  அமர்ந்து தன்னோட ஒளியை அங்க  வீசிண்டிருந்தான். அப்போஅங்க சந்திரன் வந்தான். ஆனா சந்திரனுக்குக் கொஞ்சம்கூட ராமர் தெரியல. 

சந்திரனுக்கு மறைக்கற மாதிரி சூரியன் வியாபகமாக விரிஞ்சு 
இருந்ததப் பார்த்து சந்திரன் சூரியனைக்  கூப்பிட்டான். 

 “சூரியமஹாபிரபுவே! எனக்கு ஸ்ரீராமர் கொஞ்சம்கூடத் தெரியலை…கொஞ்சம்நகரமுடியுமா?”

“இத்தனை கூட்டத்துல என்னால கொஞ்சம்கூட நகரமுடியலை. ஸ்ரீராம சந்திரரின் அழகைப் பாக்கத்தான் முதல்லவந்து இடம்பிடிச்சேன். என்னால் நகரமுடியாது “

இதனால் மனம்வருந்தித் தன் மனசுக்குள்ளேயே  
ஸ்ரீராமரிடம் முறையிட்டான், “ஸ்ரீராமா! நான் உன்தரிசனத்தைப் பார்க்க மிக ஆவலாக வந்தேனே;ஆனால் இந்தச்சூரியனோ நகராமல் மறைப்பது முறையா?”

“கவலை வேண்டாம் சந்திரனே! சூரியன் தன்கடமையைச் செய்ய மாலை மேற்குத்திசையில் மறைந்துவிட வேண்டும். அப்போது நீ என்அருகே இருக்கஅருளுகிறேன்”ன்னுசொன்னார் ராமர்.

அதேபோலச் சூரியனும் மாலைஅந்த இடத்தைவிட்டுப் போனானா, அப்போ சந்திரன் ஓடோடி ஸ்ரீராமரிடம் போய்  நமஸ்காரம் செஞ்சான்.   ஸ்ரீராமரும்  சந்திரனுக்கு ஆசிகள் வழங்கினார். சந்திரன் அருள்பெற்றான். இதனால் ராமரின் பெயரும் ராம சந்திரன் என்று ஆயிற்று.

“ஆஹா பாட்டி! என் பிரண்டோடபேரவச்சே ஒருகதை சொல்லிட்டேள். ரொம்ப நன்னா இருந்தது .ரொம்ப தாங்க்ஸ்பாட்டி”

 “ஆமாம் பாட்டி! எனக்கும் இந்தக் கதை ரொம்பப் பிடிச்சுது; தேங்க்யூ பாட்டி!”

பாட்டி இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *