குரு காணிக்கை

-விசாலம்

ஆசிரியர் தினம் மிகவும் ஒருசிறப்பான தினம். நாம் தினமும் குருவை நினைத்து எல்லா காரியங்களையும் செய்ய வேண்டும்.

“குரு பிரும்மா குரு விஷ்ணு குருர் தேவோ மகேஷ்ஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மைஸ்ரீ குருவே நம:”

குரு கடவுளுக்குச் சமமானவர் ஆகிறார். அவரே எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் நமக்கும் பாலமாக அமைகிறார்.

முற்காலத்தில் இருந்த  மாணவர்கள் தங்கள் குருவிற்காகத் தங்கள் உயிரைக்கூடக் கொடுக்கச் சித்தமாக இருந்தார்கள். குருவின்  ஆணையை சிரமேற்கொண்டு  நிறைவேற்றினார்கள்.
ஒரு குரு தன் சிஷ்யனிடமிருந்து குரு காணிக்கையாக அவனது
கட்டை விரலையும் கேட்டார். அவனும்  மறுபேச்சு இல்லாமல் உடனே வெட்டிக் கொடுத்தான். அவன்தான்  ஏகலைவன்.  அவன் ஒருவேடன். அவனுக்கு வெகுகாலமாக வில்வித்தை கற்றுக்கொள்ள ஆசை. அதற்கு நல்ல குரு வேண்டுமே! எல்லாவிதமான கலைகளும் குருவின்மூலமே
வரவேண்டும்; ஆகையால் துரோணர் என்ற ஆசார்யாரிடம் போனான்.
பின் தன் ஆசையைத் தெரிவித்தான். அவர் பாண்டவர்களுக்கும்,
கௌரவர்களுக்கும் வில் வித்தைப் பயிற்சி அளித்து வந்தார்.

ஏகலைவன் அவரிடம் மிகவும் பணிவாக, “குருவே என்னையும்  ஆசீர்வதித்துத் தங்களின் மாணாக்கனாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.”   என்றான். “எனக்குத் தற்போது நேரமில்லை. நான் ராஜகுமாரர்களுக்கு வில்வித்தைப் பயிற்சி  அளித்து வருகிறேன். ஆயினும், மனதால் உன்னை என் மாணவனாக ஏற்கிறேன்.  நீ வில்வித்தையில் மிகவும்
சிறந்தவனாவாய்!” என்று சொல்லிவிட்டார் குரு.

ஆனாலும், குரு சொன்னபடி ஏகலைவன் அவரையே தன்குருவாகக்
கொண்டான். காட்டில் துரோணரைப் போல் ஒரு சிலை செய்துவைத்தான். அதன்முன்   தினமும் சென்று கண்கள் மூடிக் குருவிற்கு
வந்தனம் செலுத்தினான். குருவிற்குச் செய்யவேண்டிய  எல்லா
உபசரிப்பும் அந்தச்சிலைக்குச் செய்தான்.  பின் வில்லை வளைத்து
அம்புவிட விடாது பயிற்சி செய்தான். குருவின் பக்தியின் காரணமாக அவனுக்கு எல்லாவிதமான குறிபார்த்தலும் மிகவும் எளிதாக வந்துவிட்டது .

ஒரு சமயம் கௌரவர்களும் பாண்டவர்களும் கானகம் சென்றனர்.
வேட்டையாடிக் கொண்டு வரும்போது ஏகலைவன் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது ஒரு வெறிநாய் ஏகலைவன் பக்கம் வந்தது; பின் அவனைத் துரத்தியது;  அவனைக் கடிக்கவும் வந்தது.
ஆனால் ஏகலைவன் ஒரே நேரத்தில் அதன் வாயில் ஏழு அம்புகளைக் கொத்தாக ஏவிவிட்டான்; அது கீழேசாய்ந்தது. அந்தப்பக்கம் வந்த ராஜகுமாரர்கள் இந்தநாயைக் கண்டனர், “இது என்ன? ஒரு நாயின் வாயில் ஏழு அம்புகள் ஒன்றாகச் சேர்ந்து பாய்ந்திருக்கிறது. இதை எய்தவன் சாதாரணமானவன் இல்லை. வில் வித்தையில் மிகவும் திறமைசாலியாக இருக்கவேண்டும்”என்று நினைத்து அவனைத் தேடியபடி நடந்தனர்.  

அங்கு, ஏகலைவனை வில்லும் அம்புமாகக் கண்டு, ” அன்பனே நீ தானா அந்த நாயின் மீது ஏழு அம்புகளை ஒரே நேரத்தில் எய்திருக்கிறாய்?” உனக்கு யார் குரு ?” என்று வினவினர்.

”நான் வேடராஜன்.   இரண்ய தனுசுவின் மகன் ஏகலைவன். என்னுடைய குரு துரோணாசார்யார் அவர்கள்.”

ராஜகுமாரர்களுக்கு மிகவும் வியப்பு ஏற்பட்டு “இவன் எங்கே நம் குருவினிடம் படித்தான்?   இவனை நாம் ஒரு நாள்கூடப் பார்க்கவில்லையே? என்று எண்ணி தன் குருவிடம் போய்க்கேட்டனர்.

அர்ஜுனன்ஆரம்பித்தான், “குருவே பணிவான வணக்கங்கள்!  எனக்கு   ஒரு சந்தேகம்!”

“என்னஅர்ஜுனா சொல்லு! “
“உன்னைவிட மேம்பட்ட திறமைசாலியான மாணவன் இல்லை” என்றீர்களே இன்று  என்னைவிடத் திறமைச்சாலியாய் ஒரு வேடனைக் காட்டில் கண்டோம். “

“அப்படியா அவனைக் காணவேண்டும்; வாருங்கள் போகலாம்!”

எல்லோரும் திரும்பவும் காட்டிற்குப் போய் அந்த ஏகலைவனைக்
கண்டனர். ஏகலைவன் ஓடோடிவந்து குருவின் காலில் விழுந்து
நமஸ்கரித்தான். பின் தான் அவரைப்போல் சிலைசெய்து அவர் நேராக இருப்பதுபோல் எண்ணித்தான் வில் வித்தை கற்றதாகச் சொன்னான்.

குருவோஅர்ஜுனனிடம் அவனுக்குச் சமமான வில்லாளி இல்லை என்றிருக்கிறார். இப்போது அது பொய்யாகிவிடும் என்பதால்  யோசித்தார். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். ஆகையால் ஏகலைவனிடம்,  ”அன்பு
மாணவா! வில் வித்தையில் மிகவும்தேர்ச்சி அடைந்துவிட்டாய்.   இந்தக் குருவிற்கு குரு காணிக்கை தரவேண்டமா?”

“குருவே  ஆணை இடுங்கள்! எதையும் தருகிறேன்! “

“ஏகைலவா  நீ உன் வலதுபெரு விரலைக் காணிக்கையாகக் கொடுத்துவிடு! “

ஏகலைவன் மனமகிழ்ந்தான்.  மனம் கலங்காமல் தன் வலது
கட்டைவிரலை வெட்டித் தந்தான்.  அவனது குருபக்தியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். குருவும் தன் ஆசிகளை வழங்கினார்.
அவனுக்கு எல்லா நன்மைகளும் உண்டாக ஆசீர்வதித்தார்.

இப்போது அவன் அர்ஜுனனுக்குச் சமமாக அம்பு எய்யமுடியாது! என்று எல்லோரும் சமாதானம் அடைந்தனர்.

இந்தக் கதையில் குருபக்தியின் சிறப்பைப் பார்க்கவேண்டும்.
அவர் இட்ட கட்டளையை சிரமேற் தாங்கும் மாணவனைப்போல்
ஒவ்வொரு மாணவனும் இருக்க வேண்டும்.

பாடம் படிப்பதில் மிகவும் கவனம், ஆர்வம் இருக்கவேண்டும்.
அதை எப்படியும் செய்து முடிக்கும்இலட்சியம் இருக்கவேண்டும்.
பணிவு, அடக்கம் இருக்கவேண்டும். கர்வத்தைத் தவிர்க்க வேண்டும். எல்லாம் குருவுக்கே அர்ப்பணம் என்ற நினைப்பில்
படித்தால் அவரது ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஆசார்ய தேவோ பவ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *