கெடுவான் கேடு நினைப்பான்!

-விசாலம்

gurusishyaஒரு துறவியின் ஆஸ்ரமத்தில் பல சீடர்கள் படித்துவந்தனர். துறவியான குருவும் அவர்களுக்கு நன்கு போதித்து வந்தார். ஒரு நாள் ஒரு பேராசை கொண்ட மாணவன் இவரிடம் சீடனாகச் சேர்ந்தான். குருவினிடம் அமிர்தம் கொண்ட குடம் ஒன்று இருந்ததைத் தெரிந்து கொண்டு அவரிடம் சீடனாக வந்து சேர்ந்திருந்தான். அவரிடம் நல்ல சீடன் என்ற பெயர் எடுத்தபின் நைசாக அந்த அமிர்தக் குடத்தை அபகரிக்க எண்ணினான். குருவுக்கு விழுந்து விழுந்து பணிவிடைகள் செய்தான். அவரிடம் நற்பெயரைச் சம்பாதித்துக்கொண்டான்.

குருவும் ஒரு நாள் மனம் மகிழ்ந்து  “மகனே நீ எனக்குச்செய்யும் தொண்டில் மனம் மகிழ்ந்து போனேன். உனக்கு என்ன வேண்டும் சொல் தருகிறேன்!” என்றார்.   இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே  காத்திருந்த அவன் விடுவானா? உடனே “குருவே எனக்கு உங்கள் தொண்டு செய்வதே முக்கிய வேலை ஆனாலும் நீங்கள் கேட்டதனால் நான் விரும்பியதைக் கேட்கிறேன். எனக்கு உங்களிடமுள்ள அமிர்தக் குடம் வேண்டும் தருவீர்களா?”                                      

துறவி உண்மை நிலையை அறிந்துகொண்டார். “நல்லவன் போல் நடித்தது இதற்குத்தானா?” என எண்ணினார். ஆனாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அமிர்தம் குடத்துடன் தர ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். “சீடனே நீ இந்தக் குடத்தை  தரையில் வைக்கக்கூடாது; அப்படி வைத்தால் அதன் சக்தி போய்விடும்”   
“அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் அமிர்தக் குடம் கொடுங்கள். “

அவன் கையில் குடம் வந்தது .நினைத்த காரியத்தைச் சாதித்த பெருமை அதுவும் குருவையே ஏமாற்றிவிட்டோம் என்ற அகந்தை இரண்டும் சேர்ந்து திமிருடன் நடந்தான்.  தன் பெருமையை ஊர் முழுவதும் சொல்லி ஒருவருக்கும் தராமல் அமிருதம் குடித்துப் பேரானந்தம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை. வீடு நோக்கி நடக்கையில் நடுவில் ஒரு சிற்றாறு வந்தது.  அங்கு ஒரு தோணி இருந்தது; ஆனால் படகோட்டி  இல்லை. சரி தானே அதை ஓட்டிக்கொண்டு செல்லலாம் என்று பார்த்துத் தன் குடத்தை  தான்  தோணியை நகர்த்தும் வரையில் யாராவது ஒருவரிடம் கொடுத்துப் பின் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தான். அங்கு மரத்தடியில் ஒருவன் வருத்தமாக அமர்ந்துகொண்டிருந்தான்.

சீடன் அவன் அருகில் சென்று “இந்தத் தோணியை ஆற்றில் இறக்கி விடவேண்டும். என் கையில் ஒரு குடம் உள்ளது . அதைக் கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளுங்கள் ஐயா, ஆனால் தரையில் வைத்துவிடாதீர்கள்! தவிர அதற்குள் இருப்பதைக் குடித்து விடாதீர்கள்!” 

“ஏன்  அதற்குள் என்ன இருக்கிறது?”’  

”அதுவா வந்து….வந்து   அது ஒரு விஷம்.  ஒரு மருந்து செய்யக் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். ”

மரத்தடி மனிதனும் அதை வாங்கிக்கொண்டான். அவனுக்குப் பல வருடங்களாக  வயிற்றுவலி மிகுந்த தொல்லை  கொடுத்து கொண்டிருந்தது. அவனுக்கு இதனால் உயிர் வாழவே விருப்பமில்லை. நல்ல வேளையாக கையில் தற்போது விஷம் இருந்தமையால் அதைச் சீடன் வருவதற்குள்  மடமடவெனக் குடித்து விட்டான். ஆனால் அவன் சாகவில்லை. அவன் குடித்தது அமிருதம் அல்லவா? மளமளவென ஆற்றில் இறங்கினான்.

தோணியை இறக்கிய சீடன் வேகமாகத் தன் குடத்தைப் பெற்றுக்கொள்ள கரைக்கு வந்தான். அங்கு அந்த மரத்தடி மனிதனில்லை. குடம் மட்டும் கீழே கிடந்தது. அமிருதம் எல்லாம்  காலி.  கோபத்துடன் சீடன் வழிபோக்கனைத்தேட அவன் அமிருதத்தைக் குடித்து விட்டு ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருந்தான்.  பின் அவன் சீடனைப் பார்த்து,
“எனக்கு வாழ்வு கொடுத்த  ஐயா! என் வயிற்றுவலி பொறுக்காமல் என் உயிரைப்போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் தான் நான்  இங்கு வந்தேன். உங்கள் குடத்தில் விஷம் இருக்கு என்று தெரிந்தவுடன் நான் அதைக்குடித்துவிட்டேன். ஆனால் உங்கள் விஷம் என் வயிற்றுவலியைப் போக்கி விட்டது. இப்போது ஆனந்தமாக நடனம் ஆடுகின்றேன். மிக்க நன்றி ஐயா! “

குருவை ஏமாற்றி  அமிருதக் குடம் வாங்கியதற்குக் கை மேல் பலன் கிட்டிவிட்டது. தான் சொன்ன சின்னப் பொய்யால் தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதை எண்ணி மனம் வருந்தினான். குரு என்பவர்  நம்மிடமிருக்கும் இருளை நீக்கி ஒளியைத் தருபவர். அவரை ஏமாற்றுவது தவறல்லவா? தவிர, பொய் பேசுவதும் கூடாது என்றும், பேராசை பெருநஷ்டம் என்றும் இந்தக் கதையிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.

3 Responses to கெடுவான் கேடு நினைப்பான்!

  • Murugesan says:

    Nice story

  • Jeyaraj Daniel says:

    நல்ல கதை. சிறுவர்களுக்கான இத்தகைய கதைகள் சிறுவர் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும்.
    வாழ்த்துக்கள்.
    அன்பன்
    ஜெயராஜ் டேனியல்

  • Manikandan says:

    அருமை…

    பொய் மற்றும் பேராசை வாழ்க்கையில் இருக்கவே கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *