சீக்கியர்களின் குரு பக்தி

விசாலம்.

 

குரு பக்திக்கு ஓர் உதாரணம் தேவை என்றால் நாம் சீக்கியர்களை எடுத்துக் கொள்ளலாம். சீக்கியர்களிடம் வீரம் அதிகம். தன் குருவுக்காகவும் நாட்டிற்காகவும் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள். ஓர் உண்மை சம்பவம் பார்க்கலாமா?

Guru-Tegh-Bahadurஒரு சமயம் மொகலாய மன்னன் ஔரங்கசீப் தன் தந்தையையே கொடுமைப்படுத்தி பின் எல்லோரையும் இஸ்லாம் மதத்தைத் தழுவக் கட்டளை இட்டான். அந்தநேரத்தில் சீக்கியர்களுக்கு மத குருவாக இருந்தார் குரு தெஜ்பஹாதூர். அவர் தன் மதத்தை விட மறுத்ததால் ஔரங்கசீப்பினால் கொலை செய்யப் பட்டார். அத்துடன் நில்லாது அந்த உடலுக்கு முறைப்படி இறுதிக் கடன் ஒன்றும் செய்ய முடியாதபடி அங்கேயே மண்ணில் மக்கி மடிய வேண்டும் என்று உத்தரவு இட்டுக் காவலும் போட்டுவிட்டான் மன்னன்.

காவல் மிகக் கடுமையாக இருந்தது அவரது மகன் ஸ்ரீ குருகோவிந்தசிங் ஒரு சிறுவனாக இருந்தான். அவனுக்குத் தன் தந்தையை அந்த மாதிரி நிலையில் காண இயலவில்லை. அவனுக்குப் பதினாலு வயதுதான் ஆகி இருந்தது. எப்படியாவது தன் தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று திட மனம் கொண்டு பஞ்சாபிலிருந்து தில்லி நோக்கிப் புறப்பட்டார் (அவர் சீக்கியரின் குரு என்பதால் வயது பதினாலு ஆனாலும் அவர் என்றே இங்கு அழைக்கிறேன்).

Guru-gobind-singhமக்களுக்கு ஒரே கவலை அந்தக் குரூர மஹராஜா ஔரங்கசீப் என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவானே என்று கவலையுடன் ஏங்கினர். ஆனாலும் குரு கோவிந்த சிங் தான் நினைத்ததை முடிக்கக் கூடியவர். அவரை எப்படித் தடுத்து நிறுத்துவது? ஒருவருக்கும் தைரியம் வரவில்லை.

இதையெல்லாம் ஒரு சீக்கிய குதிரை வண்டிக்காரன் கேள்விப்பட்டு தன் மகனுடன் அங்கு வந்தான். அவர்கள் இருவரும் குரு கோவிந்த சிங்கைக் கண்டனர் அந்தச் சடலத்தைக் கொண்டு வரும் காரியத்தை அவர்கள் இருவரும் செய்து முடிப்பதாகவும் இவரைத் தலைமறைவாய் இருக்கும்படியும் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். குருஜியும் ஒப்புத்துக்கொண்டார். வண்டிக்காரனும் சீக்கியன் அல்லவா ? அவன் உடலிலும் வீர ரத்தம் அல்லவா ஓடுகிறது.

பின் வண்டிக்காரன் தன் மகனுடன் தில்லி வந்தான். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு, மாறு வேஷம் தரித்து எப்படியோ சடலத்தைக் கண்டுப் பிடித்து விட்டனர். அதை எப்படி வண்டியில் எடுத்து வருவது?….யோசித்தனர். காவலர்கள் நன்கு குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தனர். அந்தச் சடலத்தின் துற்நாற்றம் அதிகமானதால் மக்கள் அந்த வழியாகப் போகாமல் இருந்தனர். தவறி வந்தவர் கூட முகத்தை மூடிக்கொண்டு சென்றனர். அப்போது தந்தை சொன்னார், “மகனே நம் இருவருள் ஒருவர் உயிரைவிட்டு இங்கு குரு தெஜ்பஹாதூர் போல் படுக்க வேண்டும். அப்போது தான் சந்தேகம் வராது. பழைய உடலை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் வேறு உடலை வைக்க வேண்டும். என் மகனே, நீயோ இளைஞன். உடல் வலிமையுடன் செயல் பட முடியும். நானோ கிழவனாகி விட்டேன். ஆகவே குருதேவரின் உடலை நீ எடுத்துச்செல் . நான் இங்கு இறந்து விடுகிறேன்” என்றான்.

மகனின் பதில் வருவதற்கு முன்னாலேயே தந்தை தன் வாளினால் தன்னை மாய்த்துக் கொண்டார். மகன் தந்தையை அந்த இடத்தில் வைத்துப் போர்த்திய பின்னர் தெஜ்பஹாதூரின் உடலை தன்வண்டியில் வைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு குரு கோவிந்தசிங்கிடம் கொடுத்தான். தான் சபதம் இட்டப்படியே குரு கோவிந்த சிங்ஜி தன் தந்தையின் அந்திம கிரியைகளைச் செய்தார்.

இந்தக் கதையில் குரு பக்தி, தேச பக்தி, பித்ரு பக்தி என்று பல காணலாம் தவிர சிறுவனாக இருந்தாலும் பயம் இல்லாமல் வீரத்துடன் செய்யும் திறன் நமக்குப் புலப்படுகிறது. எல்லா குழந்தைகளுக்குள்ளும் இந்த மூன்று பக்திகள் இருக்குமானால் மிகவும் உயர்ந்த நிலைக்கு அவர்கள் எட்டிவிடுவார்கள்.

Pictures Courtesy: http://centralsikhmuseum.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *