ராம தரிசனம்

–விசாலம்

வீர சிவாஜியின் இஷ்ட தெய்வம் பவானி அம்பாள்தான். எப்போதும் அவர் வாயில் “ஜெய்பவானி” என்றே வரும், தவிர யுத்தபூமியிலும் “ஜெய் பவானி” என்றே வீர முழக்கம் கேட்கும். அவர் பவானி அம்மனுக்காக கோயிலும் எழுப்பியிருக்கிறார். வீர சிவாஜி பவானி அம்மனின் மிகசிறந்த பக்தர். அவர் காலையில் தவறாமல் பவானி அம்மன் கோயிலுக்குப்போவார். கடவுள் பக்தி என்பதை அவரது தாயார் சிறுவயதிலிருந்தே புகட்டியிருந்ததால் அவருக்கு இறைச்சிந்தனை எப்போதும் இருக்கும். அன்னை பவானியைத்தவிர அவருக்கு ஸ்ரீபண்டரிநாதர் மீதும் அபரிமிதமான பக்தி இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பண்டரிபுரம் சென்று சேவை செய்வார். அந்தக்கோயிலுக்கும் நிறைய உதவிகள் செய்துள்ளார்.

Samarth Ramdasசிவாஜியின் குரு ஸ்ரீ ஸமர்த்த ராம்தாஸ். குருவுக்கு எப்போதுமே ராமநாமம் தான். ராமரைவிட்டு அவர் வேறு எவரையுமே நினைக்கமாட்டார். ஆனால் சிவாஜிக்கோ தன் குருவைப் பண்டரிபுரம் அழைத்துப்போக வேண்டும் என ஆசை.

ஒருநாள் குருவிடம் பேசிக்கொண்டிருக்கையில் மெள்ள அவர் தன் ஆசையைத்தெரிவித்தார்.

“ஸ்வாமி, எனக்கொரு ஆசை வெகு நாட்களாக இருந்து வருகிறது”

“அப்படி என்ன ஆசை”

“தங்களை அழைத்துக்கொண்டு பண்டரிபுரம் செல்ல வேண்டும், அங்கு தாங்கள் பாண்டுரங்கனைக் காணவேண்டும்”

“சிவாஜி, என் ராமன் தான் என் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறான். அதிலேயே எனக்குப்பேரானந்தம் கிடைக்கிறது. ஆகையால் நான் பண்டரிபுரம் வர விரும்பவில்லை”

“குருஜி, தாங்கள் என் ஆசைக்காவது வரவேண்டும். தங்களுடன் பிரயாணம் செய்ய தயவு செய்து எனக்கு இந்தச்சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்”

ஸமர்த்த ராமதாஸ் அவர்கள் சிறிது நேரம் யோசித்தப்பின்னர் ஒப்புத்துக்கொண்டார்.

Pandurangaபண்டரிபுரம் கோயிலுக்கும் வந்தார். அங்கு எங்கும் “விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல, பண்டரிநாத விட்டல”என்ற கோஷம் கேட்டபடியே இருந்தது.

சத்ரபதி சிவாஜியும் பண்டரிநாதனை வணங்கியபடி உள்ளே நுழைந்தார். கூடவே மிகவும் மெதுவாக தயங்கியபடியே குருஜியும் உள்ளே நுழைந்தார். பின் தன் தலையைத்தூக்கியபடியே கர்ப்பகிரஹ மூர்த்தியைப்பர்த்தார்.

அங்கு அவர் கண்ட காட்சி …….. நீல வர்ணம், கையில் வில், அத்துடன் சங்கு சக்கரம், கழுத்தில் துளசிமாலை. அங்கு ஸ்ரீராமபிரானே அவர் முன் தெரிந்தார். அப்படியே சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்தார்.

“அப்பா விட்டலா, என்ன கருணை உனக்கு. எனக்காக நீ ராமனாகவே மாறி எனக்குத் தரிசனம் தந்துவிட்டாயே” என்றபடி கண்களில் நீர் வழிய இரு கரங்களையும் கூப்பி வணங்கினார். அன்றைய தினத்திலிருந்து அவரும் விட்டலனை வழிபட ஆரம்பித்தார்.

ஆகையால் நம்பிக்கையுடன் கடவுளை மிகவும் சிரத்தையாக வழிப்பட அவர் நம்மிடம் ஓடி வருவார் . .

கீதையில் கண்ணன் “நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நான் ஆகிவிடுவேன்”என்று சொன்னது எவ்வளவு உண்மை !

Picture credits:
http://en.wikipedia.org/wiki/Vithoba#mediaviewer/File:Panduranga.jpg
http://visvaksena.blogspot.com/2010/11/samarth-ramdas.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *