திருக்குறள் கூறும் ’வாழும் கலை’ – பயிலரங்கம்

திராவிடர்கள் தங்களின் படைப்புகளின் மூலம் மனித குலத்திற்கு ஆற்றியுள்ள சேவைகள் அளப்பரியவை.  அப்படி படைக்கப்பட்ட பல படைப்புகளில் மிக முக்கியமானவைகள் ‘திருக்குறள்’ மற்றும் ’திருமந்திரம்’ முதலியன.  மனிதராய்ப் பிறந்த அனைவரும் படித்து அறிந்து, உணர்ந்து வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒப்பற்ற படைப்புகள் இவையாகும்.

உலக இலக்கியங்களிலேயே, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.  உலகின் பெரும்பாலான முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கிய படைப்பாகத் திகழ்கிறது திருக்குறள்.  திரு + குறள் = திருக்குறள். ’திரு’ என்றால் ‘மரியாதைக்குரிய’ அல்லது ‘புனிதமான’ என்று பொருள். ’குறள்’ என்றால் ‘சிறிய செய்யுள்’ என்றும் பொருள் வரும்.

திருக்குறள் ஒரு சிறந்த கலைப் படைப்பாக மட்டுமின்றி, வாழும் முறைமையை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு ஞானப் படைப்பாகவும் விளங்குகிறது.  ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள்கள் வீதம் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் அடங்கிய இலக்கியமாக விளங்குகிறது குறள்.  ஒவ்வொரு அதிகாரமும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நீதி பற்றியோ அல்லது மனிதன் செய்யக் கூடாத செயல்கள் பற்றியோ சிறந்த கருத்துகளைத் தெரிவிக்கின்றது.  வரலாற்றின் நீண்ட நெடிய பயணத்தில் எத்தனையோ படைப்புகள் அழிந்து போயிருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ள ஒரே இலக்கியம் திருக்குறள் மட்டுமே!

இத்தகைய பெருமைகள் வாய்ந்த திருக்குறள் கூறும் வாழ்க்கை நெறிகள் பற்றிய வகுப்புகளும் பயிலரங்கமும்,  கோலாலம்பூர், ப்ரிக்ஸ் ஃபீல்ட், ஜாலன் தம்பி அப்துலா 1ல் உள்ள சிட்ரா கலையரங்கத்தில் 08 அக்டோபர் 2011 தொடங்கி, ஒவ்வொரு சனிக்கிழமையும், மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை, மூன்று மாதங்கள் நடைபெறவுள்ளது.

இந்த பயிலரங்கில் வகுப்புகள் நடத்துபவர் மருத்துவர். எம். பால தருமலிங்கம், எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்சி., இவர் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றை தலைமையேற்று திறம்பட நடத்தி வந்துள்ளார்.  மேலும் தனி மனித சுகாதார மேம்பாட்டிற்கான பல திட்டங்களுக்கும் தலைமை வகித்துள்ளார்.  மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் இவர், மருத்துவம் அல்லாது தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இசையிலும் ஆராய்ச்சிகள் பல செய்து தமிழ் மொழி மற்றும் தமிழிசையின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார்.

பயிலரங்கம் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க : 019-2127003

 

கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


7 + 9 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.