எவரேனும்

சாந்தி மாரியப்பன்

விருந்தினர் வரவைக்

கரைந்தறிவிக்கும் காக்கை

தானே ஒரு

விருந்தினரானது;

அப்பாவின் திதியன்று..

 

அவரே வந்ததாய் எண்ணி

பரிமாறிக் கொண்டிருக்கிறாள் அம்மா,

அப்பாவுக்குப் பிடித்ததையெல்லாம்..

தலை சாய்த்து உண்ணும்

காகத்தின் பார்வை

மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது

மின்கம்பத்தில் முன் தினம்

கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்

கருகாத கேள்வியொன்றையும்..

 

பகிர்ந்துண்ணவும் பாசம் கொள்ளவும் மட்டுமன்றி,

பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்

அவற்றின் உலகிலும்

எவரேனும் இருக்கக் கூடுமோ?

 

படத்திற்கு நன்றி

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்.

திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


1 + 4 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.