சாகர்
அது இரவா பகலா என்று தெரியவில்லை ஒரே இரைச்சலும் சத்தமும் மனதை கலங்கடித்தது . எங்கும் காரிருள், கறுமுகில் சூரியனைக் காணாமல் அடித்துவிட்டதா அல்லது இது அமாவாசை இருட்டா புரியவில்லை தேவா என்ற தேவசேனாதிபதிக்கு. கண்பார்வை கொஞ்சம் பழகியதும், தான் இருப்பது அலை கடலில் ஒரு சிறிய படகில் என்பது புரிந்தது. ‘நாம எப்படி படகிலே இருக்கோம், தலை மன்னார் ஏதும் போறதா கூட பேசலேயே! அப்படியே இருந்தாலும் பெரிய பெர்ரி போட் மெயில் வந்தவுடன் போகுமே, அதிலே தன் நாம இருக்கனும். அது சரி சுவாமி எங்க போனார்?’ அப்பொழுது தான் அந்தச் சிறு படகில் தான் மட்டும் தனியாக இருப்பது புரிந்தது.
வந்தியத்தேவனை பூங்குழலி இலங்கை அழைத்துச் சென்றது போல ஒரு சிறிய படகு. ‘பூங்குழலியும் இல்லை தான் வந்தியத்தேவனும் இல்லை ஆனால் கடல் கொந்தளிப்பதை பார்த்தால் நிச்சயம் வந்தியத்தேவன் பயந்தது போல நான் நிச்சயம் இந்த கடலில் மூழ்கிவிடுவேன் போல இருக்கே!’ கடலின் இரைச்சல் காதைப் பிளந்தது, பளீரிட்ட மின்னலில் கண் கூசியது.அலைகள் மர உயரம் எழும்பி அடுத்த கணமே அந்த சிறு படகை பாதாளத்தில் தள்ளியது. தேவா தன் இரு கைகளாலும் படகை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் . இன்னமும் தான் எப்படி இங்கே வந்தோம் என்று புரியவில்லை. கூடவந்தவர்கள் மூழ்கி விட்டார்களோ என்று என்னும் சமயம் ஒரு பெரிய அலை அந்தப் படகை தூக்கி குப்புற அடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தேவா கடலில் தத்தளித்தான். சற்றும் எதிர் பாராமால் விழுந்ததால் வாயிலும் மூக்கிலும் தண்ணீர் புகுந்து மூச்சு முட்டியது. மூச்சைப் பிடித்து கைகளை வேகமாக துழாவி நீந்த முயன்றான் தேவா.
காவேரித் தண்ணீரில் எதிர்நீச்சல் அடித்து பழக்கமிருந்தாலும், கொந்தளிக்கும் கடலின் ஆக்ரோஷத்திற்கு முன்பு தான் அதிகநேரம் தாக்குப்பிடிக்க மாட்டோம் என்று தோன்றியது. கண் முன்னால் மனைவி ரங்கநாயகியும் மகள் சரோஜினியும் வந்து தோன்றினார்கள். ‘இனி அவர்களை காண்போமோ என்னவோ! ஸ்வாமி இங்கே என்னை இப்படி தனியாக பொலம்ப விட்டுட்டீரே? நீர் எப்பவும் பேசற கடவுள் இப்ப என்ன பன்றது? பெண்னை அனாதையாக்கி, பெண்டாட்டியை விதவையாக்குறது தான் கடவுளா? ரங்கநாயகி நீ அந்த அய்யனாருக்கு செய்த பூஜை எல்லாம் வீண் என்று இப்போது தெரிந்துகொள்ளப்போற..அதைப் பார்க்க நான் இருக்கமாட்டேன்..பிறக்கப் போவது பெண்ணா ஆணா என்றும் தெரிஞ்சுக்க நான் இருக்க மாட்டேன்…இதோ கீழேபோய்கிட்டே இருக்கேன், மூச்சு முட்டுது இதுதான் முடிவா? கடவுளே! அய்யனாரப்பா! நீ எங்க குடும்ப காவல் தெய்வம்னு சொல்றாங்க இதுதான் நீ காவல்காக்கும் லட்சணமா?’ அப்போது யாரோ தன் தலைமயிரை பற்றி இழுப்பது போல் தோன்றியது. யாராக இருக்கும்? நாம் பிழைத்துவிடுவோமா? திடீரென்று தான் வெகுவேகமாக மேலே இழுக்கபடுவது புரிந்தது. ‘ஆஹா வானம் தெரியுறது..மூச்சு விடமுடியுது..யாரு நம்பளை காப்பாத்தியது’ என்று தேவா பார்த்தான். தன் தலைமயிரை இன்னமும் பற்றிக் கொண்டிருப்பது ஒரு வெள்ளை குதிரை. நல்ல அராபிய குதிரை! ‘குதிரையா நம்மளை காப்பாதிச்சு’ என்று யோசிக்கும் முன்னரே அந்தக் குதிரை தன் புரடியை சிலுப்பியவாறு தேவாவை உயர தூக்கி கரைநோக்கி விசிறியது. கொந்தளிக்கும் கடல் மேலே பறந்த தேவா இத்துடன் தன் கதி அதோகதிதான் என்று எண்ணியவாறு, கண்மூடி ‘அம்மா!’ என்றலறினான். குதிரை எறிந்த வேகத்தில் தான் கடலை தாண்டி கரையில் தொப்பென்று விழுந்ததை உணர்ந்து கண் விழித்தான்.
இது என்ன நாம் நம் அறையில் அதுவும் தரையில் கிடக்கிறோம்? உடம்பெல்லாம் இன்னமும் ஈரமாக இருக்கிறது.
“என்ன தேவா கனவு கினவு கண்டீரா?” ஆஹா இது ஸ்வாமிநாதனின் குரல்.
“கனவா?” தேவாவுக்கு ஒன்னும் புரியவில்லை.
“பின் என்னவாம் தூக்கத்தில் எதாவது கனவா?” கைத்தாங்கலாக அவனை எழுப்பி கட்டிலில் உட்காரச் செய்தான் ஸ்வாமிநாதன்.
“பாரும் எப்படி தொப்பலா வேர்த்துப் போச்சு!”
தேவா குழப்பதில்லாழ்ந்தான். உடல் பயங்கரமாக வலித்தது. பயங்கரமாக குளிர் அடித்தது. வேர்வையைத் துடைத்த அவன் நண்பன் ஸ்வாமி அவன்மேல் ரயில்வே கம்பளியை போர்த்தினான்.
“இரும் சூடா டீ போட்டுட்டு வரேன்.”
தேவா யோசித்தான், நிஜமா இது கனவுதானா? நேற்று ராத்திரி இருவரும் பேசிக்கொண்டிருந்தது மெல்ல ஞாபகம் வந்தது.
அவர்கள் நட்பு ஒரு வித்தியாசமான நட்பு. திருவையாற்றில் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்வாமிநாதனும், சூரக்கோட்டையில் ஒரு குடியானவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தேவசேனாதிபதியும் ரயில்வே மெயில் சர்வீஸில் ஒன்றாக பணியில் சேர்ந்தார்கள். தினமும் ரயிலில் தபால்களை எந்த ஊர் என்று பாகுபாடு படுத்தி அந்தந்த ஊரில் வண்டி நிற்கும் போது பிரிக்கப்பட்ட (ஸார்ட்) தபால்களை தனிப் பையில் போட்டு அந்த ஊர் ஆர்.எம்.எஸ் ஊழியரிடம் ஒப்படைத்து அந்த ஊரிலிருந்து அந்த ரயில் செல்லும் ஊர்களுக்கு இருக்கும் தபால்களை அவர் தரும் பைகளில் வாங்கிக் கொள்வார்கள். மீண்டும் அதே ஸார்ட்டிங் படலம். அவர்கள் இருவரும் ஸார்ட்டர்கள்.வெவ்வேறு ஊர்களுக்கு ரயில்வண்டியில் பயணம் செய்தவாறு தபால் பிரிக்கும் தொழில் அவர்களது. இருவருக்கும்
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்.சீனப்போர், இந்தி மொழி திணிப்பிலிருந்து வேட்டைக்காரன் வரை அலசுவது அவர்கள் வழக்கம். பின்கோடை மட்டும் பார்த்து தபால்களை பிரிப்பது ஒரு நல்ல வித்தியாசமான வேலை. மேலும் பல்வேறு ஊர்களையும் மக்களையும் பார்க்கும் வாய்ப்பு வேறு. வேலை நேரத்தில் ஸார்ட் செய்தவாறு இருவரும் வெவ்வேறு விஷயங்களை அலசுவார்கள். ஸ்வாமி ஐதீக பரம்பரையில் பிறந்த தீவிர பக்திமான். தேவா கடவுள் இல்லை என்னும் பகுத்தறிவுவாதி,தேவசேனாதிபதி என்ற பெயரை தேவா என்று சுருக்கிக் கொண்டான். இத்தனைக்கும் அவன் குடும்பம் ஊர் அய்யனார் கோயிலின் தர்மகர்த்தா பதவியை தலைமுறை தலைமுறையாக சிறப்பாக செய்துவந்தனர், அவருக்கு பின் என்ன ஆகுமோ என்று தேவாவின் அப்பா ஸ்வாமி நாதனிடம் மிகவும் கவலை படுவார். அது குறித்து தான் நேற்று இருவரும் வாதம் செய்தனர்.
விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளின் பயணம் முடித்து இலங்கை வழியாக வந்து இந்திய மண்ணை மிதித்த தனுஷ்கோடிக்கு போட்மெயிலில் வந்த இடத்தில தான் இந்த வாதம். கடற்கரையிலிருந்து சிலோன் தெரிந்தது. அவர்கள் வந்த ரயிலில் வந்த பயணிகள் காத்திருந்த கப்பலில் சிலோன் போய்க்கொண்டிருந்தனர். மெட்ராஸ் தனுஷ்கோடி விரைவு வண்டிக்கு அதனாலே போட் மெயில் என்று பெயர். தபால்களை கொண்டுவருவதால் மெயில். அவர்களுக்கு இன்னும் மூன்று நாட்களுக்கு ஒய்வு. பிறகு மீண்டும் போட் மெயில், ஸார்ட் செய்யும் வேலை. பொழுது போக வாக்குவாதம்.
“ நீங்க என்னதான் சொன்னாலும் ஸ்வாமி, கடவுள் இருக்கார், காப்பாத்திறாரு எல்லாம் வெறும் பொய்.”
“தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் சிலைதான். எல்லாம் நம்ம மனசில தான் இருக்கு தேவா.”
“ அது சரி வேதம் உபநிஷத் அப்படி சொல்லுதுன்னும் சொல்லுங்க..அப்படி தான இதனை வருஷம் மக்களை அடக்கி மிதித்து வாழ்ந்திருக்காங்க நம்ம ஊரிலே!” தேவா கொதித்தான்.
“ நீர் சொல்வது தப்புன்னு நான் சொல்லலை. கடவுள் பாகுபாடு பாக்கிறது இல்லை, மக்கள் கடவுள் பேரில் செய்யற தப்புக்கு கடவுளை ஏன் குறை சொல்கிறீர் நண்பரே? கோவிலில் இருக்கும் சிவா விஷ்ணுவாகட்டும், கிராமத்தில் இருக்கும் அய்யனாராகட்டும் எல்லாமே மக்களை ரட்சிக்கும். உம் குடும்பத்தையே எடுத்துக்கொள்ளும் உம் தோப்பனார் அந்த அய்யானார் எப்படி மக்களை காப்பாத்தியிருக்குன்னு எவ்வளவு சொல்லியிருகிறார் .”
“என்னை எந்த கடவுளும் காப்பாத்தச் சொல்லி நான் வேண்டலை..யாரும் காப்பாத்தவும் வேண்டாம்!”
“நீர் வேண்ட வேண்டாம் நண்பரே உமக்கும் சேர்த்து தான் தங்கை வேண்டுகிறதே!” சுவாமிநாதன் ரங்கநாயகியை பெயர் சொல்லி அழைப்பது கிடையாது.கூடப் பிறந்தவர்கள் எல்லாமே ஆண்பிள்ளைகள், தங்கை இல்லாத குறை தீர்த்தவள் என்பான்.
அந்த உரையாடலின் பாதிப்பாக இருக்குமோ நாம் கண்ட கனவு?
“இந்தாரும் சூடான சாய்!” அவனிடம் டீ கிளாசை கொடுத்துவிட்டு எதிரே நாற்காலியில் உட்கார்ந்தான் ஸ்வாமி.
“கொடுமையான கனவு…” என்று தான் கண்ட கனவை தன் நண்பனுக்குச் சொன்னான் தேவா. அவன் உடல் மேலும் நடுங்கியது, மீண்டும் வியர்வை அருவியாக வழிந்தது. சுவாமி எழுந்து மீண்டும் துடைத்து விட்டான்.
“என்னப்பா அனலா கொதிக்கிறதே ஈஸ்வரா!” என்று நண்பனை அணைத்துக் கொண்டான். கடிகாரம் ஐந்தடித்தது.
“மணி அஞ்சாயிடுத்து! விடிந்ததும் டாக்டரிடம் போகலாம் கொஞ்சம் தூங்கும்.” அவனை படுக்க வைத்துவிட்டு குளித்து பூஜை செய்யச் சென்றான் ஸ்வாமி.
“என்னைக் கேட்டால் நீங்க அடுத்த வண்டியிலே மண்டபம் போயிடுங்க. நான் மருந்து கொடுக்கிறேன், அங்கிருக்கும் பெரிய டாக்டர்களுக்கும் கடிதம் எழுதித் தறேன். அவங்க பரிசோதனை செய்து விட்டு சுகமென்று நினைத்தால் போட்மெயிலில் ஊருக்கு அனுப்பிவைப்பார்கள் ” என்றார் தேவாவை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்.
“சரிங்க டாக்டர்! உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்றான் ஸ்வாமிநாதன், பின்பு “தேவா கவலைப்படும்படியா ஒன்னும் இல்லை ! ஊசி போட்டிருக்கிறார் மருந்தும் கொடுத்திருக்கிறார், நம்மை எதுக்கும் மண்டபம் போய் மருத்துவமனையில் மேலும் சோதனை செய்யச் சொல்லியிருகின்றார்.” என்று ஆறுதலாகச் சொன்னான் ஸ்வாமி.
“ எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஸ்வாமி, எனக்கு ரங்குவையும் குழந்தையையும் பார்க்கமாட்டோமோ என்று தோணுது.” மிகவும் ஈனஸ்வரத்தில் சொன்னான் தேவா.
ஸ்வாமி கவலையோடு டாக்டரைப் பார்க்க, அவர் அவனைப் பார்த்து கண்ஜாடை செய்தவாறு, “ தம்பி கவலைப்படாதிங்க நிச்சயம் ஊருக்குப் போய் அவங்களை பார்ப்பீங்க, பொங்கல் வேறு வருது.” என்றவாறு அறையை விட்டு வெளியேச் சென்றார். அவரைத் தொடர்ந்து சென்றான் ஸ்வாமி.
“ தம்பி நீங்க அடுத்த வண்டியிலே இவரை மண்டபம் கூட்டிட்டுப் போங்கள், சுர வேகத்தைவிட மனபிராந்தி அதிகமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கரம் குடும்பத்தினரிடம் போய்ச் சேர்கிறாரோ அவ்வளவு நல்லது.”
“ சரிங்க.நான் தஞ்சாவூர் வரை கூடபோகமுடியுமான்னு தெரியலே ஏன்னா நாங்க ரெண்டு பெரும் இல்லேன்னா யார் வேலை செய்யுறது? நான் மேலதிகாரியிடம் பேசிப்பார்கிறேன். நிச்சயம் மண்டபம் வரைக்கும் போய் ஆஸ்பத்திரியில் காட்டிவிட்டு அனுப்பி வருகிறேன்.”
வங்கக்கடலோடு இந்துமஹாசமுத்திரம் இணையும் தனுஷ்கோடி மெல்ல அவர்கள் கண்பார்வையிலிருந்து மறைந்தது. தூரத்தில் தெரிந்த இலங்கையும் மிக சிறியபொட்டாக மாறிற்று. அந்தப் புகைவண்டி மிக மெதுவாக பாம்பன் பாலத்தின் மேலே ஊர்ந்து சென்றது.
ஜன்னலோரம் அமர்திருந்த தேவா, “ எனக்கென்னமோ திரும்ப இந்த ஊரை பார்க்கமாட்டேன்னு தோணுது ஸ்வாமி.” என கூறினான் அவன் உடம்பில் ஊரை பார்க்கப் போகிறோம் என்றதால் ஒரு புதிய தெம்பு.
“ என்ன ஓய் சின்ன புள்ள மாதிரி பிதற்றல், பொங்கல் முடிந்து நாம் வாரனாசி போய்வந்தபிறகு அடுத்த டியூட்டி போட் மெயில் தான் மறந்துட்டீரா?”
“தெரியல்லை அய்யா, ஏதோ உள்ளுணர்வு” என்றான் தேவா. அன்று 21 டிசம்பர் 1964.
மண்டபம் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் எல்லாம் செய்தபின் எட்டு மணிநேரம் கழித்து, இருவரும் மீண்டும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்தனர். வண்டியில் அமர்ந்திருந்த தேவா கையில் பழமும் தண்ணீரும் கொடுத்து, “ பத்திரமாகப் போய்வாரும், நான் தஞ்சாவூர் வந்ததும் வந்து பார்க்கிறேன். தங்கைக்கு தந்தி கொடுத்துவிட்டேன் அநேகமாக அப்பா ரயிலடிக்கு வந்துவிடுவார்.” என்றான்
பிளாட்பாரத்தில் நின்ற ஸ்வாமிநாதன்.
“என்னால் உங்களுக்கு எவ்வளவு சிரமம்” தேவாவின் கண் கலங்கியது. மண்டபத்தில் டாக்டர்கள் போட்ட ஊசிக்குப் பிறகு ஜுரம் கொஞ்சம் குறைந்திருந்தது.
“ என்ன இது, நான் செய்யாம வேற யார் செய்வா? எனக்கு உம்கூட தஞ்சை வரை வரமுடியலேயே என்றுதான் வருத்தம் ஆனால் நம் வேலை இருக்கிறதே.” என்றான் ஸ்வாமிநாதன்.
“நீங்கள் இவ்வளவு செய்ததே பெரிது, மேலும் சபாபதி தான் என்னோடு வருகிறாரே!”
சபாபதி அவர்களோடு நெடுநாள் பழகியவர், இருவரும் வேலைக்குச் சேர்ந்தபோது தொழில் கற்றுத்தந்தவர். அவர் அன்று வண்டியில் தஞ்சை செல்வது அதிர்ஷ்டவசமாக தெரிந்தது. ஸ்வாமிநாதனின் பாரம் குறைந்துது.
“ அய்யா பார்த்து கூட்டிப் போங்கள், ரொம்ப களைத்திருக்கிறார்” என்று அவரிடம் சொன்னான்.
“ தம்பி நீங்க கவலைப்படாதீங்க நான் பாத்துக்கிறேன்.” என்றார் சபாபதி.
“ நீங்க எப்படி தனுஷ்கோடி போவிங்க நேரம் ஆகிவிட்டதே? காத்து வேற கொஞ்சம் பலமாக அடிக்கிறது ” என்றான் தேவா.
“ நான் இன்றைக்கு இங்கே இருந்துவிட்டு காலையில், ராமநாதசுவாமி தரிசனம் பண்ணிய பின்னர் இரவு 653 ஐப் பிடித்துப் போகலாம் என்றிருக்கிறேன், நீர் இல்லாமல் அங்கே எனக்கு எப்படிப் பொழுது போகும்? யார் என்னோடு வாதடுவார்கள்?” என்றான் ஸ்வாமிநாதன் சிறு புன்னகையுடன்.
பச்சைவிளக்கு மாறியதும் புகைவண்டி ஒரு பெரும் கரும் புகையை கக்கி பெருமூச்சு விட்டு கூ என்று கூவியது.
“பத்திரமாகப் போய்வாரும்.” என்று ஸ்வாமிநாதன் கையசைக்க ரயில்வண்டி மெதுவாக மண்டபம் ரயில் நிலையத்தை விட்டு தேவசேநாதிபதியைத் தாங்கி தஞ்சை வழியே சென்னை நோக்கிச் சென்றது.
கிராமத்தில் பொங்கல் கொண்டாடப்படும் அழகே தனி தான் அதுவும் விவசாயிகள் நிறைந்த ஊர்களின் பொங்கல் இன்னமும் விசேஷமாக இருக்கும். ஸ்வாமிநாதன் எப்போதும் மாட்டுப் பொங்கலுக்கும், காணும் பொங்கலுக்கும் தேவாவின் வீட்டில் தான் இருப்பான்.
மாடுகளுக்கு காலையில் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, சந்தனப் பொட்டும் குங்குமப் பொட்டும் இட்டு, கழுத்தில் சாமந்திப் பூமாலை இட்டு விமரிசையாக அலங்காரம் செய்வார்கள். காலையிலிருந்து விரதம் இருந்து, அந்தி சாய்ந்ததும் அந்த ஆண்டு எந்த வீட்டில் முதல் மாட்டு முறையோ அவர் வீட்டிற்கு ஊர்கூடி மேளதாளத்துடன் சென்று சமைத்த சிறப்புப் பொங்கலை பசுவுக்கும் காளைக்கும் ஊட்டிய பிறகு அந்த வீட்டார் சாப்பிட்டு வந்தோருக்கும் வழங்குவார்கள். இப்படி ஊர்வலமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மாடுகளுக்கு ஊட்டிப் பின்னர் மக்கள் உண்ணுவதைக் காண்பதில் ஒரு அலாதி ஆனந்தம்.
காணும் பொங்கலன்று நடக்கும் ஜல்லிக்கட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை, கொம்பு சீவப்பட்ட காளைகள் பவுனும் பணமும் கொம்புகளில் தாங்கி துள்ளி வர அதை அடக்கும் வீர இளைஞர்களும், அந்த இளைஞர்கள் மனதை அள்ளிப்போகும் மஞ்சள் பூசி, மருதானி இட்டு, மைஎழுதி மல்லிகைப் பூச்சூடிய மங்கையரும் கிராமத்தையே திருவிழாக்கோலம் கொள்ளச் செய்யும். தஞ்சைத் தரணியில் பொங்கலில் தொடங்கும் ஜல்லிக்கட்டும் ஒவ்வொரு கிராமமாக தை மாதம் முழுவதும் நடக்கும்.
இந்த முறையும் அப்படியே ஸ்வாமி நண்பனின் ஊர் வந்து சேர்ந்தான் . ஆனாலும் இந்தமுறை தை மிகவும் சிறப்பு அல்லவே, இந்த பொங்கலுக்கு இங்கே இருப்பதே அந்த ராமநாதசுவாமி தந்த அருட்பிட்சை அல்லவோ!
“வாங்க ஸ்வாமி” வெள்ளை வேட்டி சட்டை, நெற்றியில் திருநீறும் குங்குமமும், புது மனிதனாக காட்சியளித்தான் தேவா. “வாங்கண்ணா” நிறைமாத கர்ப்பிணியாக ரங்கநாயகி அவனை அன்போடு வரவேற்றாள்.
“வரேம்மா நேற்று பொங்கலெல்லாம் நல்லபடி நடந்ததா?” என்று வினவினான் சுவாமிநாதன்.
“ ரொம்ப விமரிசையாக நடந்தது..இருங்க குடிக்க எதாவது கொண்டுவரேன்.” என்றவாறு உள்ளே போக ஆரம்பித்தவளை நிறுத்தினான், ஸ்வாமிநாதன்.
“வேண்டாம்மா குழந்தையே மாட்டுக்கு சோறு ஊட்டாமல் பசியோடு இருக்கு நான் எப்படி சாப்பிடுவது,ஆமாம் தேவா, அப்பா எங்கே?”
“ஊரோடு பொங்கல் ஊட்ட போயிருக்கின்றார்.” என்றன் தேவா.
“உடம்பு நல்லா இருகின்றதா தேவா?”
“ இங்கே வந்து ரெண்டு நாள் நாயகி கையால் சாப்பிட்டதும் எல்லாம் சரியாயிற்று. ஆமாம் நான் வந்த பிறகு என்ன நடந்தது செய்திகள் ஒன்றும் சுகமாக இல்லையே” இதுவரை பேசாமல் இருந்த விஷயத்தை ஆரம்பித்தான் தேவா. சில நிமிடங்கள் எதுவும் பேசமால் இருந்த ஸ்வாமிநாதன், “நாம் இருவரும் இப்போது இப்படிப் பேசுவது அந்த கடவுள் கிருபையினால் என்று சொன்னால் அது மிகையில்லை.”
தேவா மறுத்துப் பேசவில்லை , ரங்கநாயகியை நோக்கினான், அவள் கூடத்தில் இருந்த கடவுள் படங்களை நோக்கி தலை வணங்கினாள்
“ அய்யா நீர் கிளம்பியதும் நான் அன்றிரவு மண்டபம் ஸ்டேஷனில் தங்கினேன், இரவெல்லாம் ஒரே பலமான காற்று அங்கு இருந்தவர்கள் அப்படி காற்றடித்து வெகு வருடங்கள் ஆயின என்றார்கள். காலையில் எழுந்து நான் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலுக்குப் போனேன். திவ்ய தரிசனம், ஆனால் காற்றின் வேகம் கடலின் கொந்தளிப்பு இரண்டும் மிக அதிகமானது. கோவிலை விட்டு வெளியே வந்தால் நடக்கமுடியாத அளவு புயல் தாக்கியது. எப்படியும் நாளைக்கும் டே ஆப் தான் இந்த மழையிலும் காற்றிலும் ஏன் திரும்பிப் போவனும், இரவு கோவிலில் இருந்து காலையில் கிளம்பலாம் என்று முடிவுசெய்தேன். இல்லாவிட்டால் ….”
சிறிதுநேரம் மௌனமாக இருந்தான் சுவாமிநாதன். அவன் காதில் சூறாவளியின் ஓங்காரம் ஒலித்தது, மக்கள் வெள்ளமாகக் கோவிலில் சரண் புகுந்தது கண்முன் மீண்டும் தோன்றியது , வந்தவர்கள், எப்படி தென்னைமர உயர அலைகள் தோன்றியது எப்படி வீடுகள் குடிசைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் அடித்துச் சென்றது என்று கூறியது நினைவிற்கு வந்தது.
“நான் இப்போது இங்கே இருக்க மாட்டேன் … நான் போக இருந்த 653 லிருந்த 110 பயணிகள் மற்றும் 5 ரயில்வே பணியாளரோடு தனுஷ்கோடி ரயில்நிலையத்தில் நுழையும் தருவாயில் புயல் அடித்து மூழ்கியது.நம் ஆபிஸ் ரயில் நிலையம் எல்லாம் தொலைந்து போனது. மொத்தம் 2000 பேர்கள் இறந்தனர் என்று சொன்னார்கள். மிஞ்ஞியிருக்கும் தனுஷ்கோடி ஆள் அரவமற்ற ஒரு சூன்ய நகரம் ஆகிவிட்டது. கடலலைகள் மண்டபம், வவுனியா, ராமேஸ்வரம் எல்லாவற்றையும் ஒரு பாடு படுத்திவிட்டது. கோயில் மட்டும் சில கட்டடங்கள் தப்பிப் பிழைத்தன. கடவுள் அருளால் நானும் பிழைத்தேன்.”
“ எல்லாம் ராமநாதசுவாமி அருள் தான் அண்ணா” என்றாள் ரங்கநாயகி கலங்கிய கண்களோடு.
“இல்லையம்மா! அது உன் அய்யனார் அருளும் தான். தேவாவின் கனவில் வந்தது போலவே சூறாவளி வந்தது, அவரைக் காக்க கனவில் குதிரை வந்தது. அதன் விளைவாக வந்த சுரத்தின் காரணமாகத் தானே இருவரும் தனுஷ்கோடியிலிருந்து கிளம்பினோம். எனவே உன் காக்கும் கடவுள் கைவிடவில்லையம்மா. கூடவே என்னையும் காப்பாற்றியது. மேலும் கோவிலுக்கு அழைத்து ராமநாதசுவாமி ரட்சித்தார்.” என்றான் சுவாமிநாதன்.
“உண்மைதான் ஸ்வாமி! அந்த கனவில் உயிர் போகும் தருவாயில் நான் கடவுளை அழைத்தது உண்மை.. கடவுள் இருக்கிறது ஸ்வாமி அதன் செயல்பாடு மிக விநோதமானது” தேவாவின் குரலில் தொனித்த உருக்கும் அவன் மனமாற்றத்தை உணர்த்தியது.
“ ஆமாம் தேவா! தெய்வம் என்றால் அது தெய்வம் என்றும் காக்கும். நாம் என்ன பேர் சொல்லி அழைத்தாலும் அது ஒன்று தான், நம்பினோரை கைவிடாது.”
“ மிகவும் உண்மை ஸ்வாமி, இதோ எல்லோரும் சோறு ஊட்ட வந்துவிட்டார்கள் ” என்றான் திண்ணையிலிருந்து எழுந்தவாறு.
மேளதாளத்துடன் வீடுவந்த ஊர்மக்கள், அவன் வீட்டையடைந்தனர். அனைவரும் காளைகளுக்கும், பசுவிற்கும் பொங்கல் ஊட்ட மகிழ்ச்சியோடு சென்றனர். தன் மகன் மீண்டு வந்து கடவுள் பக்தி கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு அனைவரையும் அழைத்துச் சென்றார் தேவாவின் தந்தை.
படங்களுக்கு நன்றி : http://www.stamfordadvocate.com/weather/slideshow/1985-Hurricane-Gloria-30521.php#photo-1552252
http://www.tamilolli.com/?p=772
Good story.. You are taken to the “Boat mail” period ‘mail sorters’ – which old people like me still remember, and connecting the intutive feeling of Deva to Vandhiyathevan is a good insertion. The conversion of Deva
to a ‘theist’ is a good twist!!
intimateSethu
Well this story is stylistically similar to RK Narayanan, sequence of events weaved around a simple theme. Good One.
Thank you both for your kind words! The boat mail is a nostalgic train…and the life of sorters was an intruiging traveller’s one.