செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(333)

அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

– திருக்குறள் – 936 (சூது)

புதுக் கவிதையில்...

தன்பெயர் மறைத்து
சூதென்ற பெயரில் வரும்
மூதேவியால்
விரும்பிக் கொள்ளப்பட்டவர்கள்
வயிற்றுக் உண்ண உணவின்றியும்,
உலகில்
பலதுன்பம் பெற்றே
அல்லலுறுவர்…!

குறும்பாவில்...

சூதென வரும் மூதேவியால்
முடக்கப்பட்டவர்கள் உண்ண உணவின்றித் தவிப்பர்
அல்லல் அதிகம்பட்டு அவதியுறுவர்…!

மரபுக் கவிதையில்...

தன்பெயர் மறைத்து மூதேவி
தரணியில் வருவாள் சூதெனவே,
அன்னவள் தன்னை விரும்பியேதான்
அவளிடம் தானே அகப்பட்டோர்,
மன்பதை தன்னில் பசியதனை
மாற்றும் உணவு பெற்றிடாமல்
இன்னல்; பலவும் பெறுவதுடன்
இன்னும் துன்பம் பெறுவாரே…!

லிமரைக்கூ..

மூதேவியாய் வந்திடும் சூதே,
விரும்பியதனிடம் அகப்பட்டோரைப் பசிக்குணவின்றி ஆக்கிப்
பலதுன்பம் தருமித் தீதே…!

கிராமிய பாணியில்...

கொடியது கொடிய,து
சூதாட்டம் கொடியது,
ஓன்னையே அழிச்சிடும்
சூதாட்டம் கொடியது..

சூதாட்டமுங்கிறது வேற ஒண்ணுமில்ல,
மறஞ்சி வருற மூதேவிதான்,
தானாப் போயி அவகிட்ட
விரும்பி மாட்டுறவனுக்கு
ஒலகத்தில திங்கிற
சோத்துக்கும் வழியிலாமப் போயிடுமே,
தொடந்தாப்புல
துன்பந்தான் வந்திடுமே..

தெரிஞ்சிக்கோ,
கொடியது கொடிய,து
சூதாட்டம் கொடியது,
ஓன்னையே அழிச்சிடும்
சூதாட்டம் கொடியது…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *