கதிரியக்கம் கண்ட கியூரி அம்மையார்

3

கேப்டன் கணேஷ்

மேரி கியூரி அம்மையார் வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய இரண்டு துறைகளுக்கான நோபல் பரிசு வென்ற ஒரே பெண்மணி ஆவார்.  இவரது 144-வது பிறந்த தினம் 07 நவம்பர் 2011 அன்று கொண்டாடப்படுகிறது.

மேரி கியூரி அம்மையார்

மேரி கியூரி அம்மையாரின் இளவயதுப் பெயர் மேரி சலோமியா ஸ்க்ளோடோவ்ஸ்கா.  போலந்து நாட்டின் தலைநகரான வார்சாவில் 1867-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7-ம் நாள் பிறந்தார்.  இவரின் தந்தை ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.  மேரி தனது பள்ளிப் படிப்பை போலந்து நாட்டின் பள்ளிகளில் பயின்றார்.  அறிவியல் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக அவர் தனது தந்தையிடம் இருந்தும் அறிவியல் பயின்றார்.

இளவயதில் இவர் மாணவர் புரட்சி அணியில் சேர்ந்தார்.  அந்நாட்களில் போலந்து நாடு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.  தனது புரட்சி நடவடிக்கைகளைத் தொடர மேரி கிராக்கௌ (Cracow) என்ற ஆஸ்திரிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நகருக்கு இடம் பெயர்ந்தார்.  1891-ம் ஆண்டு பாரிஸுக்குச் சென்ற மேரி அங்கு சார்பொன் (Sorbonne) கல்லூரியில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார்.  அங்கிருந்த இயற்பியல் கல்லூரியில் பேராசியர் பியரி கியூரி என்பவரைச் சந்தித்தார்.  1984-ம் ஆண்டு மேரி, பியரி -ன் திருமணம் நடைபெற்றது.  மேரி சலோமியா, மேரி கியூரி ஆனார்.  அச்சமயம் பியரி கியூரி சார்பொன் கல்லூரியின் இயற்பியல் ஆய்வுக்கூடத் தலைவராய் இருந்தார்.  அவரைத் தொடர்ந்து அப்பதவிக்கு மேரி கியூரி வந்தார்.  1903-ம் ஆண்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார் மேரி.

இந்நிலையில் 1906-ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று நடந்த ஒரு சாலை விபத்தில் பியரி கியூரி மரணமடைந்தார்.  இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மேரி தன்னை முழுவதுமாக ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.  பியரி கியூரிக்குப் பின் அதே கல்லூரியில் அவர் வகித்த பொது இயற்பியல் துறையின் தலைவர் மற்றும் பேராசியர் பதவியை ஏற்றுக் கொண்டார் மேரி.  ஒரு பெண்மணி அப்பதவியை வகிப்பது அதுவே முதல் முறையாக இருந்தது.  1914-ல் பாரிஸ் பல்கலைக்கழகம் ஒரு ரேடியம் ஆய்வுக்கூடத்தை நிறுவி அதற்கு பியரி கியூரியின் பெயரிட்டது மட்டுமின்றி அதற்குத் தலைவராக மேரி அம்மையாரையே நியமித்தது.

மேரி தனது கணவருடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆரம்ப நாட்களில் போதிய ஆய்வுக்கூட வசதிகள் இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.  1896-ம் ஆண்டு ஹென்றி பெக்கொரல் என்பவர் கதிர்வீச்சைக் கண்டுபிடித்தார்.  இது கியூரி தம்பதியினரை உற்சாகப்படுத்தி மேலும் பன்மடங்கு ஆர்வத்துடன் ஆய்வுகளை நடத்த உதவியாக இருந்தது. கியூரி தம்பதிகள் தங்களின் அறிவுப்பூர்வ ஆய்வுகளால் ஒரு புதிய கதிர்வீச்சுத் தனிமத்தை பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர்.  மேலும், மேரி பிறந்த நாடான போலந்தின் நினைவாக அந்தத் தனிமத்திற்கு பொலோனியம் என்று பெயர் சூட்டினர்.  ரேடியத்தையும் பிரித்தெடுப்பதில் கியூரி தம்பதியினர் வெற்றி கண்டனர்.  மேலும் ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளையும் ஆய்வு செய்து உலகிற்கு அறிவித்தனர்.

பியரியின் மறைவிற்குப் பிறகு ரேடியத்தின் பயன்பாடுகளை அதிகரிக்கவும், ரேடியத்தை ஆக்கப்பூர்வப் பணிகளுக்குப் பயன்படுத்துவதிலும் மேரி தனிக் கவனம் செலுத்தினார்.  முதல் உலகப் போருக்கு முன்னதாகவே மருத்துவத் துறையில் ரேடியத்தின் பயன்பாடுகள் என்ன என்பதைக் கண்டறிந்திருந்தார் மேரி அம்மையார்.  தனது மகள் ஐரின் உதவியுடன் முதல் உலகப் போரில் காயமடைந்த போர் வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டார்.  தனக்கும் தனது கணவருக்கும் வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பதக்கங்களை போரில் காயமடைந்தோருக்காகச் செலவிட நன்கொடையாக வழங்கினார்.

அறிவியல் மீதான தனது ஆர்வத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் தக்க வைத்திருந்தார் மேரி.  தன் கடின முயற்சிகள் மூலம் தனது சொந்த நகரான வார்சா -வில் ரேடியம் கதிர்வீச்சு ஆய்வுக் கூடத்தை நிறுவினார்.  1929-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதி திரு. ஹூவர் அவர்கள் 50,000 அமெரிக்க டாலர்களை மேரி அம்மையாருக்கு, அவரின் பணிகளைப் பாராட்டி அன்பளிப்பாக வழங்கினார்.  அந்தப் பணத்தை ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகள் நடத்தத் தேவையான ரேடியம் வாங்குவதற்கு மேரி பயன்படுத்திக் கொண்டார்.

மேரி கியூரி அம்மையாரின் அறிவியல் அறிவும் ஆர்வமும், அவரது மனிதநேய சிந்தனைகளும், உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில், மேரிக்கான மதிப்பைப் பன் மடங்கு உயர்த்தியது.  மேரி அம்மையார் 1911 முதல் அவரது கடைசி நாட்கள் வரை பல அறிவியல் சார்ந்த அமைப்புகள் மற்றும் மனிதநேய அமைப்புகளின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.  பல அறிவியல் சார்ந்த அமைப்புகளில் மேரி கியூரி அம்மையாரின் ஆய்வுக் கட்டுரைகள் அச்சிடப்பட்டன.  மேரி அம்மையார் 1904 மற்றும் 1910 ம் ஆண்டுகளில் இரண்டு புத்தகங்களையும் எழுதினார்.

இவரின் அறிவியல் ஆர்வத்தையும், திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளையும் பாராட்டி பல பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மேரி அம்மையாருக்கு கவுரவ முனைவர் பட்டங்கள் வழங்கின.  1903-ம் ஆண்டு பியரி கியூரியுடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.  1911-ம் ஆண்டு பியரியின் மறைவுக்குப் பின் தனது இரண்டாம் நோபல் பரிசினை வென்றார் மேரி.  இம்முறை அவருக்கு வேதியியல் துறைக்காக இப்பரிசு வழங்கப்பட்டது.  1921-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதி திரு. ஹார்டிங் , அனைத்து அமெரிக்க மக்களின் சார்பாக மேரி அம்மையாருக்கு மிகவும் விலையுயர்ந்த ரேடியம் ஒரு கிராம் எடையளவு பரிசாக வழங்கினார்.

ஒரு இயற்பியல் அறிஞர், வேதியியல் துறையிலும் நோபல் பரிசு வென்றவர், உலகின் பல பகுதிகளில் முதலாம் உலகப் போரின் போது மனிதநேய மற்றும் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட , பன்முகங்கள் கொண்ட மேரி கியூரி அம்மையார் 1934-ம் ஆண்டு ஜுலை 4-ம் நாள் காலமானார்.

போலந்து, ஷார்ஜா போன்ற பல நாடுகளும் மேரி அம்மையாரின் நினைவாக தபால் தலைகளை வெளியிட்டுக் கவுரப்படுத்தியுள்ளன.

எண்ணிலடங்கா சாதனைகள் பல புரிந்த மேரி கியூரி அம்மையார் பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த ஒரு மாணிக்கம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கதிரியக்கம் கண்ட கியூரி அம்மையார்

  1. நான் ‘மின் தமிழ்’, ‘தமிழ்வாசல்’ இரண்டிலும் ‘அன்றொரு நாள்’ என்ற தொடர் எழுதி வருகிறேன். அதை அன்றைய தினம் தான் எழுதுவது வழக்கம். இன்று மேரி க்யூரியும், ஸர்.சி.வி.ராமனும் தலைமாந்தர்கள். எழுதத் தொடங்கும்போதே இந்து முழுமையான கட்டுரையை படிக்க நேர்ந்தது. இதையும்,அங்கு உசாத்துணையாக, பதிவு செய்கிறேன், கேப்டன் கணேஷ். ஓகே?

  2. காலமறிந்து எழுதப்பட்ட அழகான வரலாற்றுக் காவியம்! வாழ்த்துகள் கேப்டன் கணேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *