-மேகலா இராமமூர்த்தி

தமிழிலக்கிய வரலாறு படைத்த பேராசிரியர் மு. வரதராசனார் எனும் மு.வ.வை நம்மில் பலர் நன்கறிவோம். அதேசமயம் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவாக 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டுவரை நூற்றாண்டு வாரியாக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிய இலக்கிய வரலாற்றறிஞர் மு. அ. எனப்படும் மு. அருணாசலனாரை நம்மில் பலருக்குத் தெரியாது.

அருணாசலனார் இலக்கிய வரலாற்றறிஞர் மட்டுந்தானா? இல்லை! கட்டுரையாளர், சொற்பொழிவாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், தமிழிசை ஆய்வாளர், சைவசமய அறிஞர், காந்தியச் செயற்பாட்டாளர் எனும் பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞராவார்.  அவரையும், அவருடைய செயற்கரிய பணிகளையும் இன்றைய தமிழ்மக்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சிற்றூரான திருச்சிற்றம்பலத்தில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29ஆம் நாள் முத்தையாப் பிள்ளை கௌரி இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் அருணாசலம். தொடக்கக் கல்வியைத் திருச்சிற்றம்பலத் திண்ணைப் பள்ளியில் முடித்துக் குத்தாலம் எனும் ஊரில் உயர்பள்ளிக் கல்வியை முடித்தார்.

சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் கணக்கியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து அதில் பட்டம்பெற்றார். இக்கல்லூரியே பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது என்பது குறிப்பிடத்தக்கது. புகுமுக (Intermediate) வகுப்பில் சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படித்திருந்ததால் கல்லூரிக் காலத்திலேயே தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் நல்ல புலமை பெற்றவராய்த் திகழ்ந்தார் அவர்.

1930ஆம் ஆண்டு இராஜராஜேஸ்வரி எனும் அம்மையாரை மணம்புரிந்த அருணாசலனார், 1931இல் சென்னையில் அரசுப்பணி கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தார். சென்னை இடமாற்றம் அவர் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் விளைய வழிவகுத்தது.

தியாகராய நகரில் அவர் குடியிருந்த இல்லத்துக்கு அருகில் மூதறிஞர் இராஜாஜி, இரசிகமணி டி.கே.சி, வே. சாமிநாத சர்மா போன்ற சிறந்த அறிஞர்கள் வசித்துவந்தனர். அவர்களுடன் பழகவும், உ.வே.சா., திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்களுடன் நெருக்கமான உறவைப் பேணவும் சென்னை வாழ்க்கை அருணாசலனாருக்கு வாய்ப்பளித்தது.

பட்டம்பெற்றது கணிதம்சார்ந்த துறையாக இருந்தபோதினும், தமிழிலக்கியங்கள்பால் தணியாத காதல் கொண்டிருந்த மு. அருணாசலனார், தமிழறிஞர்களின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்குச் சென்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழறிஞர்கள் பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தாலும் 1933-34ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையுடன் ஏற்பட்ட தொடர்பே அவருடைய வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

சென்னை மயிலையில் சைவசித்தாந்த சாத்திர நூலான சிவபிரகாசத்திற்கு வையாபுரிப்பிள்ளை பாடம் சொல்வதை அறிந்து அங்குச் சென்று வையாபுரியாரிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, அவர் அப்போது செய்துவந்த ’புறத்திரட்டு’ எனும் தொகைநூல் ஆராய்ச்சிப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் அருணாசலனார். மேலும் சில தமிழ்நூல்கள் பதிப்புப்பணியிலும் வையாபுரிப் பிள்ளைக்கு உதவிய அவருக்குத் தமிழ் இலக்கியத் தளத்தில் பரந்த வாசிப்பை மேற்கொள்ளவேண்டும், தமிழ்க்கல்வியாளராகத் தம்மைத் தரம் உயர்த்திக்கொள்ளவேண்டும் என்ற வேட்கை எழுந்தது. அதனை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கு வசதியாக 1936இல் சென்னைப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையே பொறுப்பேற்கவும், அவரிடம் நேரடித் தமிழ் மாணவராக இணைந்த அருணாசலனார், 1940இல் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தம்முடைய பதிப்புப் பணியின் தொடக்கமாக 1940ஆம் ஆண்டு ’முக்கூடற்பள்ளு’ என்ற நூலைப் பதிப்பித்தார் அருணாசலனார். வையாபுரியாரின் பணிகளில் உதவிய அனுபவம் இதற்குப் பெரிதும் கைகொடுத்தது.

வையாபுரிப்பிள்ளையின் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்திலேயே தம் இல்லத்திற்கு அருகில் குடியிருந்த இரசிகமணியுடனும் நெருங்கிய தொடர்பு அருணாசலனாருக்கு ஏற்பட்டது. அதன் பயனாய் மிகச்சிறந்த இலக்கிய இரசனை வாய்க்கப்பெற்றவரானார்.

டி.கே.சி.யின் இல்லத்தில் வார இறுதிநாட்களில் நண்பர்கள் ஒன்றுகூடி தமிழிலக்கியங்கள் குறித்து விவாதிப்பர். அவ்வாறு வட்டமாக ஆர்வலர்கள் அமர்ந்து விவாதிக்கும் அக்குழுவுக்கு ’வட்டத்தொட்டி கூட்டம்’ என்று பெயர். இலக்கிய இரசனையில் புதிய நோக்கும் போக்கும் கொண்டவர்களை ’வட்டத்தொட்டி மரபினர்’ என்று அழைக்கும் வழக்கம் இலக்கிய வட்டத்தில் அப்போது ஏற்பட்டது.

அருணாசலனார் படைத்த கட்டுரைகளான கன்னிமான், நடந்த காவேரி, சாதிப் பலாப்பழம், சிறு நெருஞ்சில் முதலியவற்றில் இரசிகமணி டி.கே.சி.யின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட இலக்கிய இரசனையின் வெளிப்பாட்டை நாம் தெளிவாய்க் காணமுடியும்.

டி.கே.சி.யின்மீது மிகப்பெரிய மதிப்பும் அன்பும் கொண்டிருந்த அருணாசலனார் தம்முடைய ஒரே மகனுக்கு டி.கே.சி.யின் பெயரான சிதம்பரநாதனைச் சூட்டி அழகுபார்த்தார்.

சைவ சித்தாந்த மகா சமாஜத்தைத் தோற்றுவித்த ஞானியாரடிகளுடன் அருணாசலனாருக்கு அப்போது தொடர்பு ஏற்பட்டது. அடிகள் நடத்திய சைவ சமய வகுப்புகளுக்குச் சென்று தம்முடைய சைவ சமயச் சாத்திர அறிவை மேம்படுத்திக்கொண்டார்.

மும்மொழிப் புலமை, சைவ சித்தாந்தச் சாத்திரக் கல்வி, சைவ மடங்களுடனான தொடர்பு, தமிழில் முதுகலைப் பட்டம் போன்ற தகுதிகள் காரணமாகத் திருப்பனந்தாள் காசிமடத்தின் அறக்கட்டளை இருக்கையில் காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் (Banaras Hindu University) சைவ சித்தாந்தத் தத்துவவியல் துறையிலும், தமிழ்த்துறையிலும் பேராசிரியராக 1944இல் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார் அருணாசலனார்.

பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தராக இருந்த  சர்வபள்ளி டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களால் மு.அருணாசலனார் அப்பணியில் நியமிக்கப்பட்டார்.

காசிப் பல்கலைக்கழக வாழ்க்கை அருணாசலனாரின் சிந்தனையை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு மாற்றியது. தமிழறிஞர்களின் தொடர்பிலிருந்து விடுபட்ட அவருடைய உள்ளத்தைக் காந்தியம் முற்றாய் ஆட்கொண்டது.  இயல்பிலேயே காந்தியவாதியான அருணாசலனார், காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, நிர்மாணத் திட்டம் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு 1946இல் காசிப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகி, மகாராட்டிர மாநிலத்திலுள்ள வர்தா நகர்  சேவா கிராமத்தில் ஆதாரக் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பதற்கான பயிற்சியை முறையாகப் பெற்றார். ஆதாரக் கல்வி சார்ந்து இயங்கிய பெருந்தகையாளர்களான ஜாகீர் ஹுசைன், வினோபா பாவே, ஆசாரியக் கிருபாளனி, ஜே. சி. குமரப்பா போன்றோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அருணாசலனாருக்கு அப்போது கிட்டியது.

வர்தா நகரில் ஆதாரக் கல்விக்கான பயிற்சியைப் பெற்ற அவர், அக்கல்விமுறையைத் தம் சொந்த கிராமத்திலும் செயற்படுத்த விரும்பி திருச்சிற்றம்பலத்தில் ’காந்தி வித்யாலயம்’ என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

பெண்களுக்கான தங்கும் விடுதி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அநாதை இல்லம், ஆடவர் பெண்டிருக்கு ஆசிரியர் பயிற்சிச் சாலை ஆகியவற்றைத் தொடங்கினார். ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலம் இக்கல்விப்பணியில் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டார் அருணாசலனார். திருச்சிற்றம்பலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த எளிய மக்கள் கல்விபெறுவதற்கு மு. அருணசாலனார் ஏற்படுத்திய கல்விக்கூடங்கள் பெருந்துணை புரிந்தன எனில் மிகையில்லை. அவர் தொடங்கிவைத்த கல்வி நிறுவனங்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் இன்றும் இயங்கிவருகின்றன; அவருடைய குடும்பத்தார் அவற்றை நிர்வகித்து வருகின்றனர்.

கல்விப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டகாலத்திலும் எழுத்துப்பணிக்கு  ஓய்வளிக்கவில்லை அருணாசலனார். 1946 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் அவர் எழுதிய கட்டுரைகளும் நூல்களும் காந்தியச் சிந்தனைகளை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன.

1963ஆம் ஆண்டு ‘சித்தாந்தம்’ என்ற சைவ சமய இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று ஏறக்குறைய 19 ஆண்டுகள் அதில் பணியாற்றினார் அருணாசலனார். சைவ சமயம் சார்ந்த சிந்தனைகள், தத்துவங்கள், மரபுகள் தொடர்பான பல கட்டுரைகளை அவ்விதழில் தொடர்ந்து எழுதிவந்தார். 1969 முதல் 1977 வரையிலான காலக்கட்டதில் அவருடைய அருஞ்சாதனை என்று கருதத்தக்க தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களை நூற்றாண்டு வாரியாக எழுதிக் காந்தி வித்தியாலயம் வாயிலாக வெளியிட்டார்.

தம் இலக்கிய வரலாற்றுப் பணிகளுக்கான ஆதாரங்கள் அனைத்தையும் தம் நூலகத்திலிருந்தே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு 15000க்கும் மேற்பட்ட அரிய நூல்கள், சுவடிகள், இதழ்களின் தொகுப்புகள் ஆகியவை அடங்கிய தகவல் களஞ்சியமாக அருணாசலனாரிடம் நூலகம் இருந்தது என்று வரலாற்றாய்வாளர் முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதி தெரிவிக்கும் செய்தி நம்மை வியப்பிலாழ்த்துகின்றது.

9-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றைக் கால முறைப்படி மிக விளக்கமாக ஆராய்ந்து, பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறைக்குப் புத்தொளி பாய்ச்சிய சாதனையாளர் அருணாசலனார்.  எந்த இலக்கிய வரலாற்று நூலுடனும் ஒப்பிடவியலாத வகையிலும் வேறெவராலும் செய்ய இயலாத முறையிலும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள இவ்வரலாற்று நூல்களின் வாயிலாகப் பலருக்கும் பெயர்கூடத் தெரியாத தமிழ் நூல்களைப் பற்றியும், தமிழ்ப்புலவர்களைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

பரந்த வாசிப்புத் தளத்தில் நின்று ஆழ்ந்தும் அகன்றும் நுணுகியும் எழுதப்பட்டுள்ள இந்நூல்களை வெறும் இலக்கிய வரலாறு என்ற சிமிழிக்குள் நாம் அடைத்துவிட முடியாது. அதனையும் தாண்டி இலக்கியம் உருவாவதற்குக் காரணமான சமூக வரலாறாகவும் இவை விரிகின்றன.

பதிப்புத் துறை முன்னோடிகளான உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் தொடர்பு காரணமாக பதிப்புத்துறையிலும் ஆர்வத்தோடு திகழ்ந்த மு.அருணாசலனார், முக்கூடற்பள்ளு என்ற நூலை முதலில் பதிப்பித்ததைத் தொடர்ந்து, கூளப்ப நாயக்கன் காதல், திருவானைக்கா உலா, திருமலை முருகன் பள்ளு, அம்பிகாபதிக் கோவை, சிதம்பரக் குறிஞ்சி, தத்துவப் பிரகாசம், பிரபந்த மரபியல் உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

செவ்வியல் இலக்கியங்களுக்கு முன்னோடியாகக் கருதத்தக்க வாய்மொழி இலக்கியம் குறித்த சிந்தனைகள் தமிழகத்தில் பரவலாக்கப்படாத 1940களிலேயே வாய்மொழிப் பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் அருணாசலனார் ஈடுபட்டு அத்துறையின் முன்னோடியாகவும் திகழ்ந்திருக்கின்றார். காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம், Ballad poetry போன்றவை அவர் வாய்மொழி இலக்கியம் சார்ந்து எழுதிய நூல்களாகும்.

தோட்டக்கலையிலும் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த மு.அ., காய்கறித் தோட்டம், பழத்தோட்டம், பூஞ்செடிகள், வாழைத்தோட்டம் போன்ற தலைப்புகளிலும் நூல்கள் படைத்துள்ளார். காய்கறித் தோட்டம் எனும் நூல் வெளிவந்த சில ஆண்டுகளுக்குள் மூன்று பதிப்புகள் கண்டு, விற்பனையில் சாதனை படைத்த நூலாகும். இந்து, தினமணி, சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் இந்நூலைப் பாராட்டி மதிப்புரை எழுதியுள்ளன. தமிழக அரசின் பரிசையும் இந்நூல் வென்றுள்ளது.

1974ஆம் ஆண்டு ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களால் தொடங்கப்பெற்ற தமிழ் சமஸ்கிருதம் மற்றும் பன்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று  ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அருணாசலனார் அங்கே பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கர்நாடக இசையாக இக்காலத்தில் வளர்ச்சிபெற்றுள்ள இசை, அன்றைய தமிழிசையே என்பதைச் சான்றுகாட்டி நிறுவும் வகையில் ’தமிழிசை இலக்கிய வரலாறு’ மற்றும் ’தமிழிசை இலக்கண வரலாறு’ எனும் இரு நூல்களை எழுதித் தமிழிசை ஆய்வாளராகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர் மு. அருணாசலனார்.

தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரே கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று அறியப்பட்ட வரலாற்றை மறுக்கும் வகையில் காலவரையறையுடன் கூடிய ஆராய்ச்சியை மேற்கொண்டு, அவர்களுக்கு முன்பே முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் ஆதி மும்மூர்த்திகளாக இருந்துள்ளனர் என்பதை ‘கருநாடக சங்கீதம் தமிழிசை – ஆதி மும்மூர்த்திகள்’ என்ற தம் நூலில் நிறுவியுள்ளார்.

காந்தியாரின் ஆதாரக்கல்வி சார்ந்து ஆங்கிலத்தில் வெளிவந்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தம்மைத் தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகவும் வெளிப்படுத்தியவர் அருணாசலனார்.

எழுத்தோடு நில்லாது நாவீறு படைத்த பேச்சாளராகவும் பரிமளித்த அவர், தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் மடைதிறந்த வெள்ளமெனப் பேசும் ஆற்றலாளர். பன்முகச் செயற்பாடுகளில் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும் அவை அனைத்திற்கும் அடிநாதமாய் வெளிப்பட்டு நிற்பது அவருடைய ஆராய்ச்சி அணுகுமுறையே ஆகும்.

அருணாசலனாரைச் சிறப்பிக்கும் வகையில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு அவருக்குத் ’தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டத்தினை நல்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு ’முதுமுனைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

பன்முக ஆளுமையாகத் திகழ்ந்து தம்முடைய நிறைந்த அறிவாலும் குறையாத ஆர்வத்தாலும் அற்புதமான நூல்களைப் படைத்தளித்திருக்கின்றார் பேரறிஞர் மு. அருணாசலனார். அவருடைய அரிய உழைப்பின் விளைச்சல்களாய்க் கிடைத்திருக்கும் நூல்களைத் தமிழர்களாகிய நாம் தேடிக் கற்பது, தமிழின் விரிவான இலக்கிய வரலாறு குறித்தும், இசை வரலாறு குறித்தும் பல அரிய உண்மைகளை நாம் அறிய உதவும்.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1.https://ta.wikipedia.org/wiki/ மு._அருணாசலம்
2.https://www.dinamani.com/editorial-articles/ 2009/aug/16/ அறிஞர்களின்- அறிஞர்-முஅருணாசலம்-58762.html
3.https://www.geotamil.com/pathivukal/images/magazine_puththakampesuthu_january2011.pdf

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *