பேரா. பெஞ்சமின் லெபோ

 

பகுதி 10-ஆ : அதுவா? இதுவா – பொருத்து? பொறுத்து?

கடந்த பகுதியில், இறுதிப் பத்திக்கு முன், ‘என்னைப் பொருத்தவரை இதுதான் முடிவு! உங்களைப் பொருத்தவரை?’ என்று கேட்டிருந்தேன்.

இப்போது நாம் அலசப் போகும் அடுத்த சிக்கல் இதுதான். இங்கும் கொஞ்சம் ஆங்கிலத்தைத் துணைக்கு அழைப்போம் :

‘as far as i’m ‘you are, he, she is…) concerned’ என்ற பொருளில் தமிழில் என்னைப்  பொருத்த வரை … என எழுதுவதா? என்னைப் பொறுத்த வரை என்று எழுதுவதா? இதுதான் இப்போதைய சிக்கல், குழப்பம். தீர்வு? கிடைக்கிறதா எனக் காண்போம். முதலில், ‘பொறுத்த வரை’ என்ற சொல்  நான் தேடிய அகரமுதலிகளில் கிடைக்கவில்லை:

http://www.tamildict.com
http://www.lifcobooks.com/tamildictionary/
J.P Fabricius  Tamil and English Dictionary
David W McAlpin A Core Vocabulary for Tamil
Na. Kadhirvelu Pillai Tamil Moli Agarathi
Miron Winslow A Comprenhensive Tamil And English Dictionary
http://www.tamildict.com
http://www.lifcobooks.com/tamildictionary/
http://crea2.in/dictionary_1992.php

ஆனால் Pals Dictionary -இல்பொறுத்த வரை’ என்ற சொல் கிடைத்தது :
‘as far as that point is concerned, அதைப் பொறுத்தவரையில்” என இந்த அகரமுதலி  சொல்கிறது.
http://www.agaraadhi.com/dict/OD.jsp?w=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&Submit.x=13&Submit.y=19&ln=ta
epending on : based on. (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை)சார்ந்து:அடிப்படையாக் கொண்டு.


‘பொருத்து’ என்னும் சொல்லைச் சில அகரமுதலிகள் தருகின்றன.காட்டாக

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search?search=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&fulltext=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search?search=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&fulltext=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

 

http://www.eudict.com/?lang=tameng&word=%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

http://www.agaraadhi.com/dict/OD.jsp?w=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&Submit.x=9&Submit.y=10&ln=ட

http://hi.openoffice.org/OOG_Tamil.txt
‘Adapt matrix area அணிப்பகுதியைப் பொருத்து
Adapt object size பொருள் அளவைப் பொருத்து
Adapt Objects பொருளைப் பொருத்து
Adapt row height வரிசையுயரத்தைப் பொருத்து’

இங்கே    எல்லாம் ‘பொருத்து’ எனற சொல் ‘இணைத்தல்’,  ‘சேர்த்தல்’ என்னும் பொருளில் வருகிறது.

அகரமுதலிகள் துணை கொண்டு இச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை. ‘பொறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் எழுந்த சொற்களைப் பழந்தமிழ் இலக்கியத்தில் காணலாம். குறிப்பாகத் திருக்குறள் ‘பொறையுடைமை’ அதிகாரம் காண்க:

‘பொறுத்தல்’ (151, 152), பொறுத்தாரை (155), பொறுத்தார்க்கு (156), இங்கெல்லாம் ‘தாங்குகின்ற’, ‘பொறுத்துக் கொள்வது’, ‘பொறுத்துக் கொள்பவர்’, ‘பொறுத்தவர்க்கு’ என்ற பொருளில்தான் ‘பொறுத்து’ என்ற சொல் கையாளப்படுகிறது. ‘as far as i’m ‘you are, he, she is…) concerned’ என்ற பொருளில் ‘பொறுத்த’ என்னும் சொல் இலக்கியத்தில் புழங்கியதாகத் தெரியவில்லை.

‘பொருத்த’ என்ற சொல் ‘பொருந்து’ என மெலிந்து வந்து இலக்கியத்தில் காணப்படுகிறது:

”திருந்தடி பொருந்த வல்லோர்” -புறம் 61

“மெல்லவே வந்தென் நல்லடி பொருந்தி” -புறம்73. (நன்றி பேரா. முனைவர் பா. இறையரசன் )
‘பொருந்துவன போமினென்றால் போகா’ – ஔவை நல்வழி 5

‘பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்’ – கம்ப இராமாயணம்-பாலகாண்டம் பாடல் 68.

இங்கேயும்,
‘as far as i’m ‘you are, he, she is…) concerned’ என்ற பொருளில் ‘பொருத்த’ என்னும் சொல் இலக்கியத்தில் புழங்கியதாகத் தெரியவில்லை. 

இவ்விரு சொற்றொடர்களுக்கும்  இலக்கண இலக்கிய வழக்குகள் இன்மையான், இவை அண்மைக்காலத்தில்தான் வழக்கில் புகுந்திருக்கவேண்டும். எனவே இவற்றுள் எது சரி என்பதைத்  தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் ஆய்ந்து முடிவு செய்து அகரமுதலிகளில் ஏற்ற முன் வரவேண்டும். ஆனால் இது குறித்துப் பேராசிரியர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளனவே!

பொறுத்த வரை’ என்னும் சொல்லுக்கு ஆதரவு தருகிறார்  பேரா.கவிக்கோ ஞானச் செல்வன். ‘தினமணி’  இதழில்,  மொழிப் பயிற்சி – 16: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்! என்னும் தலைப்பில் அவர் தரும் பொருத்து-பொறுத்து: ஒரு விளக்கம் காண்க :

‘பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல். “செய்’ என்னேவல் வினை முற்று என்பர் இலக்கணப் புலவர். பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்). இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும்.நீரின் அளவைப் பொறுத்து தாமரை உயரும். இந்த எடுத்துக்காட்டில் பொறுத்து எனும் சொல் உயரும் என்ற சொல் கொண்டு முடிந்தது. என்னைப் பொறுத்தவரையில் என்றால் நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு பார்க்கும்போது எனும் பொருள் தருவதைக் காணலாம். என்னைப் பொருத்தவரையில் என்றெழுதினால் என்னைப் பொருத்த (ஒன்று சேர்க்க) வரையில் (அளவில்) வாக்கியம் சரியாக எப்பொருளும் தராமல் சிதறிப் போகிறது.’

இணைய தளத்தில் இலவசக் கொத்தனார் என்னும் புனைபெயரில் எழுதி வருபவரும் ‘பொறுத்த வரை’க்கும் வக்காலத்து வாங்குகிறார் :

‘என்னைப் பொருத்த வரையில் அப்படின்னு எழுதும் எழுத்தாளர்களையும் நான் பார்த்து இருக்கேன். பொருத்து அப்படின்னு சொன்னா சேர்க்கறது. சரியா பொருந்துதா அப்படின்னு கேட்கறோம். இல்லையா? இந்த வார்த்தை இங்க சரியா பொருந்துமா? அப்படின்னு கேட்கும் பொழுது கூட இணைந்து வருமா அப்படின்னுதானே அர்த்தம். அதனால் பொருப்பு அப்படின்னு சேர்க்கறது.

ஆனா பொறுத்து அப்படின்னா தாங்கிக்கறது. பொறுமைன்னு சொல்லும் பொழுது நாம ற போடறோம்தானே. அதே அர்த்தத்தில் வர பொறுத்துக்கும் நாம ற தானே போடணும். பொறுத்தார் பூமி ஆள்வார் அப்படின்னு பழமொழி இருக்கு. இனிமேலாவது பொறுத்துப் போக வேண்டிய இடத்தில் பொருத்துப் போகாம இருக்கணும்!’ (http://www.tamilpaper.net/?p=1738) .

‘பெரியாரைத் துணைக்கோடல்’  நலம் என்னும் திருவள்ளுவர் வாக்குக்கு ஏற்ப, எனக்குத் தெரிந்த தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் சிலரிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன். அனைவருமே ஆயிரம் அலுவல்களுக்கு இடையிலும்  தத்தம் கருத்துகளை உடன் அனுப்பி உதவினர். அவர்கள் அனைவருக்கும் எளியேனின் அன்பு கலந்த நன்றிகள். அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் :

புதுச்சேரியின் தமிழறிஞர்களில் முன் நிற்பவர்  செவாலியே இராச வேங்கடேசனார். அவர் உரைத்த கருத்து :

‘என்னைப் பொருத்தவரை என்பதே சரி. பொருள் என் கொள்கைப்படி, என் எண்ணப்படி இதே பொருள் கொண்டது’

பேராசிரியர் பா. இறையரசன் அவர்களும் ‘பொருத்த வரை’ என்பதே  பொருத்தம் என்கிறார்:

‘என்னைப் பொருத்து “என்னைப் பொருத்து” என்பதே சரி.

பொருத்த அளவில் –  (என்னைச்) சேர்ந்த அளவில், (என்)அளவில்,  (நான்) கருதும் அளவில்
பொரு – பொருந்- பொருந்து – பொருந்தல் – பொருத்தம்.

 

பொருத்தம்- பொருத்த – பொருத்த அளவில்
பொருவய், பொருதுவாய், பொருநர்’ 

 

என் இனிய நண்பர் பேராசிரியர் செல்வா, கனட்டாவில் இருந்து விடுத்த பதிலில், முதலில் இடையின ரகரம் வரும் பொரு என்பதை எடுத்துக் கொண்டால், அது பொருத்தம் ஈடு (match) என்பதாகும்.

படைகளிலே மோதும் பொழுது அது ஈடால வலுவுடையவர்

 

மோதிப் போராடுவது என்பதாகும். பொருநர் என்றால்

 

போராடும் போராளி.  திருமணத்தில் 10 பொருத்தம் என்பார்கள்.

 

அங்கே 10 கோணங்களிலே ஈடான, ஏற்பான நிலை உள்ளது

பொருந்தி இருப்பது என்றால் மிக ஏற்ற வகையில்  சேர்ந்து இருப்பது என்று பொருள். ஆகவே என்னைப் பொருத்தவரை என்றால் என் கருத்துக்கு ஏற்ற, உகந்த அளவில் என்று பொருள். எனவே இடையின ரகரம் வருதல் வேண்டும்’ என்று எழுதிருந்தார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகப் பணிபுரிந்து பணி நிறைவுசெய்த தமிழறிஞர் திரு திருவள்ளுவன் இலக்குவனார், பேரா. சி; இலக்குவனார் அவர்களின் மகனாவார். ‘எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்’ எனச் சூளுரைத்துத் தமிழ்ப் பணி ஆற்றிவரும்  இவர்  எனக்கெழுதிய கருத்து :
பொருத்தல் என நாம் இடையின ரகரத்தைப் பயன்படுத்துகையில் பொருந்துதல், அதன் அடிப்படையிலான உடன்படுதல், ஆதலின் பொருத்தமாக அமைதல்  என்ற வகையில் பொருள் வெளிப்படுகின்றன.

பொறுத்தல் என வல்லின றகரத்தைப் பயன்படுத்துகையில் பொறுமை, அதன் விளைவான பொறுத்துக்கொண்டு மன்னித்தல் ஆகிய பொருள்களைத் தருகின்றன.

எனவே, இன்னாரைப் பொருத்தவரை என்பதுபோல் குறிப்பிடும் இடங்களில்  இடையினமே சரி.

பொறுத்தவரை என்பது மன்னித்தவரை என்னும் பொருள் வருவதால் தொடரில் சரியான பொருளைத் தராது.

எனினும் பொருத்தவரை என்னும் சொல்லாட்சி இக்காலத்தில்தான் வந்திருக்க வேண்டும். இச் சொல்லைக் கையாளாமலேயே  நம்மால் பொருளை விளக்க முடியும். அதுவே சரியானது. எனவே, பொருத்தவரை என்பதைச் சரியாகவோ தவறாகவோ எழுதும் பழக்கத்தை நிறுத்துவதும் முன்னரே வந்த மேற்கொளில் இடம் பெற்றிருப்பின் அதனை எடுத்தாளும் பொழுது இடையின ரகரம் பயன்படுத்துவதே சரி என்றும்  அன்புடன் தெரிவிக்கின்றேன்’. 

 

இங்கே இவர் குறிப்பிடும் நெறிகள் இரண்டைக் கூர்ந்து கவனித்தல் நல்லது :


1.
இச் சொல்லைக் கையாளாமலேயே  நம்மால் பொருளை விளக்க முடியும். அதுவே சரியானது. பொருத்தவரை என்பதைச் சரியாகவோ தவறாகவோ எழுதும் பழக்கத்தை நிறுத்துவது‘.

2. ‘
முன்னரே வந்த மேற்கொளில் இடம் பெற்றிருப்பின்  அதனை எடுத்தாளும் பொழுது இடையின ரகரம் பயன்படுத்துவதே சரி”. 

 

ஆகவே இவரும் ‘பொருத்த வரை” சரியே என ஏற்றுக்கொள்கிறார்.

இறுதியாக என் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய இனிய நண்பர் பேரா. மறைமலை இலக்குவனார் (இலக்கணச்  செம்மல் பேரா. சி இலக்குவனார் அவர்களின்  இன்னொரு  மகனார்) நடு நிலையில்  நின்று சொல்லும் கருத்து :

பொறுத்தவரை என்பதே இலக்கணத்திற்குப் பொருந்திவரும் என்பது வாதம்.
கேட்டான்>கேட்ட>கேட்ட வரை
பார்த்தான்>பார்த்த>பார்த்த வரை
என்பது போலப் பொருத்தான்>பொருத்த> எனக் கூற இயலுமா?
எனவே பொறுத்த என்பதே சரி என்பர்.
ஆயின்,” பொறுத்த என்பதன் பொருள் பொருத்தமுறவில்லையே? ”என்பர் எதிர்க்கட்சியினர். 

 

”எனக்குப் பொருந்திய மட்டில், சிறுகதை இலக்கிய ஆய்வுக்குப் பொருந்தியவரையில்” என்பன போன்ற வழக்காறுகளைக் காண்க. எது எப்படியானாலும் பொருத்தவரை இதழ்களாலும் ஊடகத்தாலும் பெருவாழ்வு பெற்றுள்ளது.‘ இதற்கு முத்தாய்ப்பாக அவர் உரைப்பது :

ஒருவர் கூறினாராம்.என்னைப் பொருத்தவரை ’பொருத்தவரை ’பயன்படுத்திக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதிக் கொள்ளுங்கள் என்றாராம். ‘ஒருக்கால் இதுவே இச் சிக்கலுக்கு நல்ல தீர்வாக அமையுமோ? யார் கண்டது,  காலம்தான் முடிவுரை எழுதவேண்டும். அதுவரை, என்னைப் பொருத்த அளவில் ‘பொருத்த வரை ‘ என்பதே பொருத்தமாகப் படுகிறது. உங்களுக்கு?

பி.கு : இங்கே கருத்துரை வழங்கிய திருமிகு செவாலியே இராச வேங்கடேசனார், பேராசிரியர் பா. இறையரசன், பேராசிரியர் செல்வா, தமிழறிஞர் திரு திருவள்ளுவன் இலக்குவனார், பேரா. மறைமலை இலக்குவனார்  முதலியோர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

  1. பல்வேறு பணிகளுக்கு இடையே விளக்கம் அளித்த அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நன்றி. 

    வணக்கம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *