தாமிரபரணியும் காவேரியும்கூட‌ அப்படித்தான் இருந்தது – மதுமிதா நேர்காணல்

0

நேர்காணல் –  ஜெயந்தி சங்கர்

தமிழ்க் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்), மேகதூதம், ருதுசம்ஹாரம் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக, ஒடியக் கவிஞர் பிரதீபா சத்பதியின் கவிதைகளை ‘வசீகரிக்கும் தூசி’ என்ற பெயரில் தமிழில் பெயர்த்துள்ளார். 

மதுமிதாவின் மொழியாக்க முயற்சிகளை அங்கீகரித்தும் பாராட்டியும் 2020ஆம் ஆண்டின் ஸ்பாரோ இலக்கிய விருதினை அவருக்கு அளித்துள்ளனர். ஸ்பாரோ (SPARROW -Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பினை எழுத்தாளர் அம்பை நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. 

இந்தத் தருணத்தில், 2019  ஆகஸ்டில் கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதாவுடன் வாட்ஸாப்/ மின்னஞ்சல் வழியே ஜெயந்தி சங்கர் உரையாடிக் கண்ட நேர்காணலை இப்போது முதன்முறையாகப் பதிப்பிக்கிறோம்.  ஸ்பாரோ  விருது பெறும் மதுமிதாவை வல்லமை சார்பில் பாராட்டுகிறோம். இந்த நல்ல உரையாடலை நிகழ்த்திய  ஜெயந்தி சங்கருக்கு நன்றி. 

—————————————-

மதுமிதாவின் மொழிபெயர்ப்பு நூல்கள்:

1. நீதி சதகம் – 2000, அம்ருதா பதிப்பகம்

2. பர்த்ருஹரி சுபாஷிதம் – 2005, சந்தியா பதிப்பகம்

இவை இரண்டும் சமஸ்கிருதத் திலிருந்து தமிழாக்கம்.

3. தைவான் நாடோடிக் கதைகள் – 2007, உதயகண்ணன் வெளியீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்

4. வசீகரிக்கும் தூசி – ஒரிய கவிதைத் தொகுப்பு ப்ரதீபா சத்பதி 2010, சாகித்திய அகாதெமி வெளியீடு – ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்

5. அக்கமகாதேவி வசனங்கள் – கன்னடத்திலிருந்து தமிழாக்கம் 2010, திரிசக்தி பதிப்பகம் (டாக்டர் தமிழ்ச்செல்வியுடன் இணைந்து)

6. மேகதூதம் – 2013, தமிழினி பதிப்பகம் (ருது சம்ஹாரம்) சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம்.

7. நிஜ இளவரசி – 2014, சாந்தி நூலகம் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்.

8. தசாவதாரம் – 2014, சாந்தி நூலகம்

தமிழ், ஆங்கிலம் அனைத்தையும் கலந்து எழுதியது

9. கவிஞர் சித்தலிங்கய்யா 40 கன்னடக் கவிதைகள் – 2014, (பேராசிரியை கே. மலர்விழி அவர்களுடன் இணைந்து), புதுப்புனல் பதிப்பகம்

10. வேமன மாலை – 2016, தெலுங்கிலிருந்து 1000 பாடல்கள் தமிழாக்கம், தமிழினி பதிப்பகம். தெலுங்கிலிருந்து தமிழாக்கம்

11. பூக்களை விற்ற ஊர் – 2016, சந்தியா பதிப்பகம், தெலுங்கிலிருந்து தமிழாக்கம். பெருகு ராமகிருஷணாவின் கவிதைத் தொகுப்பு நூல் தெலுங்கிலிருந்து தமிழாக்கம்

12. தெலுங்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பெத்திபொட்ல சுப்பராமய்யா அவர்களின் 34 கதைகள், சிறுகதைத் தொகுப்பு முதல் பாகம் தமிழாக்கம் – 2018, சாகித்திய அகாதெமி வெளியீடுதெலுங்கிலிருந்து தமிழாக்கம்.

—————————————-

ஜெயந்தி சங்கர்: வணக்கம் மதுமிதா. 2019இல் அமெரிக்காவுக்குச் சென்று இரண்டு மாதங்கள் தங்கியிருந்துவிட்டு இந்தியா திரும்பினீர்கள்? அமெரிக்கா உங்களுக்குள் ஏற்படுத்திய சிந்தனைகள் எப்படியானவை?

மதுமிதா:  வணக்கம் ஜெயந்தி. ஏப்ரல், மே இரண்டு மாதங்கள், 60 நாட்கள் அமெரிக்காவில் இருந்திட்டுத் திரும்பினோம். அமெரிக்கா எனக்குள்ளே ஏற்படுத்திய சிந்தனைகளை ஒற்றை வரியில் சொல்லிவிட முடியுமானு தெரியல. ஆனாலும், சொல்லப் பார்க்கிறேன்.

பலவகையான சிந்தனைகளை இந்தப் பயணம் எனக்குக் கொடுத்தது. ஒரு பயணம் போகும்போது நாம் சில விஷயங்களத் தேடிப் பார்த்து, இந்த இந்த தேதிகளில் இந்த இந்த இடங்களுக்குப் போகணும், இவங்க இவங்களையெல்லாம் போய்ப் பாக்கணும் என்னும் திட்ட வரைவு இருந்தால், நம்ம பயணத்தோட நோக்கமும் சிந்தனையும் வேற விதமாக இருந்திருக்கும்.

ஆனா இது நாங்க போனது, மகனைப் பார்க்க, மகனோட இருப்பதற்காகப் போன காரணத்தினால் அங்க இருந்தப்ப எதெதெல்லாம் பாக்க முடியுமோ எதெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் மட்டுமே செய்ய முடிஞ்சது. இருந்தாலும்  விசாலமான பார்வையை இந்தப் பயணம் கொடுத்ததுன்றத இப்ப உங்களுக்குப் பதில் சொல்றப்பவும் நான் புரிஞ்சுக்கறேன். அங்கே தங்கியிருந்த நாட்கள்லயும் அது எனக்குத் தெரிஞ்சது, என்னன்னா, நாம போய் அங்கே இறங்கறோம்; விமானப் பயணத்துல நடந்தது, விமான நிலையத்துல நடந்தது அதெல்லாம் நான் இதுல சேர்க்கல்ல. அங்கே போய் இறங்கிய பிறகான விஷயங்களை மட்டும் சொல்றேன்.

வாஷிங்டன் டி சி இல் அர்லிங்டன் பகுதியில் நாங்க தங்கி இருந்தோம். கொலம்பியா பைக் என்ற மிக நீண்ட சாலை. சாலையின் இரண்டு பக்கங்களிலும் வீடுகள், கடைகள், பலவிதமான கடைகள் எல்லாமே இருக்கின்றன. எங்கே சுற்றி வந்தாலும் சாலையில் நடைபாதை தனியாக இருக்கும்.

ஒவ்வொரு இடத்துலயும் வெவ்வேற நிறத்துல அஞ்சல் பெட்டி போல இருக்கும். முதலில் அது என்னன்னு எனக்குப் புரியல. அப்புறம் கேட்டப்பதான் அது தீயணைப்புக்கான நீர்க்குழாய்னு புரிஞ்சது. இது ரொம்பப் பிடிச்சது எனக்கு.

ஒரு நாற்பதைந்து நிமிடங்கள் நடக்கப் போவோம். நேர்ச் சாலை தான். போக நாற்பத்தைந்து நிமிடம், வர நாற்பத்தைந்து நிமிடம். ரொம்ப சிறப்பான அனுபவமாக இருந்தது. அதேபோல இப்போ நம்ம ஊர்லகூட சாலைகளில் மண் கிடையாது. அங்கேயும் அப்படித்தான். மழை பெஞ்சு நின்ன பிறகு மழைபெய்த தடமே இருக்காது. சாலையோரங்கள்ல நடைபாதை தொடங்கற இடத்துல இருக்கற சின்ன இடைவெளிகளில் மொத்த மழைநீரும் அது வழியா நிலத்துக்குள்ள போய்டுது.

தீயணைப்புக் கருவி ஒரு கிலோமீட்டருக்கு ரெண்டுனு நெனைக்கிறேன். அதேபோல, மழைநீர் சாலையில் தேங்காமல், வீணாகாமல் இந்த முறையில் வடிந்து போயிடுது.

அதேபோல சாலையின் இரு புறங்களிலும் மரங்களுக்கு இடம் இருந்துகிட்டே இருக்கு. இதையெல்லாம் பாக்கறப்போ எந்தெந்த நாட்டுல இது இருக்குன்றதைக் காட்டிலும், நான் பார்த்த, இந்த நாட்டைப் பாத்துட்டு நம்ம ஊருக்கு வந்த அரசியல்வாதிகள் ரொம்ப சிறப்பான கட்டடங்களை, சென்னையை மட்டும் எடுத்துக்கோங்க, சென்னையில் அதற்கு நிகரான கட்டடங்களை வானுயர எழுப்பியிருக்காங்க. விசாலமான சாலைகூட அமைச்சிருக்காங்க. ஆனா, எங்கயாச்சும் அதுபோல தீயணைப்புக் கருவி இருக்குதா, இல்ல. மழை நீர் வழிந்து வடிஞ்சி போக அங்கங்கே சின்ன அவுட்லெட் இருக்குதா, அதுவும் இல்ல.

அதேபோல, இங்கே நம்ம ஊர் நெடுஞ்சாலைகளில் ரெண்டு பக்கமும் இருக்கற மரங்கள நீக்கிட்டு நடுவுல அரளி மட்டும் வச்சிருக்காங்க. அங்கே போன உடனே எனக்கு இது மட்டும் தான் முக்கியமா பளிச்சென்று தெரிஞ்சது.

நாம பாடங்கள்ல படிச்சிருக்கோம் இல்லையா, கற்காலம் தொடங்கி நதிக்கரை நாகரிகம் வரை. நதிக்கரை நாகரிகம் தான் நம்ம மக்களோட வாழ்க்கையாக அந்தக் காலங்களில் இருந்திருக்கும்.  இங்க போடோமேக் ரிவர் எனக்கு பைத்தியம் பிடிச்சா மாதிரி மனசுல நிறைஞ்சு இருக்கும். ஒரு தடவை ஃபிலடெல்ஃபியாவுக்கு காரில் பயணம் போகிறோம். போற பாதைகள்லாம் ஓவ்வொரு ஊரை, இடத்தைப் பிரிக்கிறதும் நதிகளா இருக்கு. அந்தத் தண்ணியப் பாக்கறப்போ அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு. இப்டிதான் நம்ம ஊரும் முன்னாடி இருந்திச்சி. இப்ப அது இல்லாம போயிடுச்சே. இதப் பாதுகாக்கத் தவறிட்டோமே, இவங்க எப்படி இதைப் பாதுகாக்கறாங்கனு இது மாதிரியான இயற்கைச் சூழல்களோட இந்த சிந்தனைதான்மா இருந்தது.

அதுக்கடுத்து புயல் வருதுன்னு வைங்களேன், உடனே அறிவிப்பு. உடனே அறிவிப்பு, உடனே அறிவிப்பு. உடனே அறிவிப்பு, உடனே அறிவிப்பு.

வாஷிங்டன் டிசில நாங்க மெமோரியல், அப்புறம் மியூசியம் நினைவிடங்கள் எல்லாம் பாத்துகிட்டே இருக்கறப்ப அதைப் பற்றித் தனியாப் பேசுவோம். பிறகு, எனக்கு ஏற்பட்ட சிந்தனையை மட்டும் இப்ப சொல்லறேன்.

ஒரு மியூசியத்துல இருக்கோம். ஆஃப்ரிகோ அமெரிக்கன் மியூசியம். அது மாலை ஐந்து, ஆறு மணிக்கு  மூடிடுவாங்க. மியூசியத்துக்குள்ள பார்த்துட்டு இருக்கிறோம். மியூசியத்துக்குள்ள அனௌன்ஸ்மெண்ட் எங்களுக்கு. இப்போ பெரிய புயல் ஒண்ணு வருது, இன்னும் அரைமணி நேரத்துக்கு நீங்க வெளிய போகவேண்டாம், உள்ளேயே இருங்க அப்படின்னு. இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு பாக்கறதுக்கு எங்களுக்கு உள்ள நேரமிருக்குது. இருந்தாலுமே நாங்க அங்க உள்ள இருக்கறப்பவே அந்த அறிவிப்பு வருது. அரைமணி நேரம் கழிச்சு, இப்ப புயல் போயிடுச்சு, வெளியே போக நினைக்கறவங்க போகலாம்னு அறிவிப்பு. இதுமாதிரியான பாதுகாப்பு விஷயங்கள் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது.

தண்ணியைப் பாதுகாக்கறது, சாலையின் இருபுறமும் மரங்கள் இருக்கறது, அந்தத் தீயணைப்புக் கருவி அங்கங்கே நிலத்துல பதிக்கப்பட்டு வச்சிருக்கறது, புயலுக்கான அறிவிப்புகள் இதெல்லாமே மனிதர்களை, மனித உயிர்களை எப்படிப் பாதுகாக்கணும்ன்ற அக்கறை சார்ந்த அந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது.

சாலையில் போறப்போ, இங்க நான் சொல்றது, நம்ம ஊரில் வாகனங்கள் போகறப்போ, மனிதர்கள் காத்துக்கிட்டே இருக்கணும். இரு சக்கரங்கள், பேருந்து, கார் எல்லாமே போன பிறகு நாம போக வேண்டியதா இருக்கும். அங்க அப்படி இல்லை. நாம தனியா போயிட்டிருக்கும்போது ஒரு சிக்னல் இருக்குன்னு வைங்களேன். பெரிய சாலையில் வண்டிகள் போயிட்டிருக்கு. குறுக்குச் சாலைகள் பெரிய சாலையில் இணையறப்ப, அந்த இடத்தில்  நாம அந்த சாலையைக் கடக்கணும். அதேமாதிரி சிக்னலுக்காக வண்டிகள் காத்திருக்குதுன்னு வைங்களேன். சரி, காத்திருக்க வேண்டியதில்ல. வண்டிகள் நாம நிக்கறதப் பார்த்துட்டு நின்னு கையைக் காட்டி நம்மை போகச் சொல்லிட்டு அப்புறமா வண்டிகள் போகுது. இதுபோல பலமுறை நாங்க நடந்துபோறப்போ நேரடியா சந்திச்சது இது. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதேபோல, சிக்னல்ல நாம காத்திருக்கறப்போ நம்ம ஊர்ல ஒரு எடத்துல கூட, ஒண்ணு டிராஃபிக் போலிஸ் நின்னு வழி நடத்தணும். இல்லைன்னா, சிக்னல்ல அந்த பச்சை வர்றப்ப நாம கடந்து போகணும்.  அங்க நடந்து போறப்ப, தெருவிளக்கு இருக்கற எடத்துல பெரிய ரௌண்டு பட்டன் மாதிரி இருக்கு. அத நாம அழுத்துனோம்னா, இங்க சாலையைக் கடந்து கிராஸ் பண்ணிப் போக வேண்டியதிருக்குதுன்றத நாம சொல்றோம். அப்படி சொல்றதுக்கான வாய்ப்பிருக்கு. அப்போ ஐந்து அல்லது பத்து நொடிகள்ல வாகனங்களை நிறுத்திட்டு, நடக்கறவங்களுக்கு வழிவிடறாங்க. இது நடக்கறவங்களுக்கு மிக அனுகூலமான விஷயமா காட்டுது.

அப்புறம், தண்ணியைப் பத்தி சொல்லிருந்தேன்ல. அந்த போடோமேக் ரிவர்லருந்துதான் எடுக்கறாங்களா, இல்லன்னா தண்ணியோட இதையெல்லாமே எப்படி பாக்கறாங்க அப்படிங்கறது நமக்குத் தெரியல. கண்கொள்ற மட்டும் தண்ணீர். தாமிரபரணி அப்படிதான் இருந்தது; காவேரி அப்படிதான் இருந்தது. இந்த வைகையில் அப்படிதான் இருந்தது. அப்படி இப்போ இங்கே பாக்க முடியலையேன்ற ஏக்கம் தான் இருந்துச்சி. நாகரிகமாகப் போயிட்ருக்கறப்போ, இங்க எதையெல்லாம் இழக்கறோம், அங்க எப்படி இயற்கை வளங்களைப் பாதுகாக்குறாங்கன்றது தான் ரொம்ப முக்கியமான விஷயமாகப் பட்டது.

ரெண்டாவது, இந்தக் கணினில நம்மளோட பயன்பாடு எந்தளவுக்கு முன்னேறி இருக்குதுன்றதைப் பார்க்கலாம். பேருந்துக்கு நாம காத்திருக்கற நேரத்துல, அந்த இடத்துல எந்த எண் கொண்ட பேருந்துக்கு நாம காத்திருக்குறோமோ, அங்கே சின்ன பட்டன் இருக்கும். எந்த எந்த வழித்தடத்துல எந்தப் பேருந்து எத்தனை மணிக்குப் போகும்ன்றது இருக்கும். நாம பட்டன அழுத்தினா, பேருந்து ரெண்டு நிமிஷத்துல வரும், மூணு நிமிஷத்துல வரும்னு பதில் குடுக்குது. அந்த அளவுக்கு அபரிமிதமான முன்னேற்றம் இருக்கு.

அர்லிங்டன்லருந்து வாஷிங்டன் டிசியில இருக்கற மியூசியம் போகப் போறோம்னு வைங்களேன். நாங்க இருக்கற எடத்துலருந்து பேருந்துல தான் போகணும். அங்கிருந்து கெளம்பி, பெண்டகன் சிட்டில இறங்கி, அங்கிருந்து  டிரைன்ல போகணும் வச்சிக்கங்களேன். பேருந்து ஓட்டுநர்கள் பெண்களா இருக்கறப்போ எனக்கு மிகுந்த மகிழ்ச்சியா இருக்கு. ஆஃப்ரிக்க, அமெரிக்க எல்லாப் பெண்களுமே ஓட்டுநர்களா இருக்குறாங்க. பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கிக்கணும். இல்லைனா, கார்ட்டை வச்சி எடுத்துக்கணும். கார்ட்னா ஏறும்போது ரெண்டு டாலர் எடுத்துக்கும். நம்ம ஊர்ல காரணமில்லாம டிரைன் சங்கிலியப் புடிச்சு நிறுத்தினா ஃபைன் இருக்கில்ல. அங்க, நாம அடுத்த நிறுத்தத்துல எறங்கப் போறோம்னா அங்க இழுக்கற பட்டன் இருக்கும். எங்க போறோம், எங்க எறங்கணும்னு எதுவுமே சொல்லவே வேணாம். அந்தக் கயிற்றைப் பிடித்து இழுத்தா போதும். ஸ்டாப் ரெக்வெஸ்டட்னு சொல்லி நிறுத்திடுவாங்க. இறங்கிக்கலாம். இது ரொம்ப நல்ல விஷயமா இருந்தது. நான் சொல்லவந்தது அது இல்ல. ஒரு பேருந்துப் பயணம் மட்டும்னா ரெண்டு டாலர் எடுக்கறாங்க. அதுக்குப் பிறகு டிரைன்ல போகும்போது ஒன்னரை டாலர் தான் எடுக்கறாங்க. நாம அந்த பேருந்துல வரும்போது கார்டைப் பயன்படுத்தின பிறகு டிரைன்ல அதை வைக்கிறப்போ ஒன்னரை டாலர் எடுக்குது. அதேபோல திரும்பி வரும்போது டிரைன்லைருந்து பேருந்துக்கு வரும்போதும் இதேதான். டிரைனுக்கு ரெண்டு டாலர், பேருந்துக்கு ஒன்னரை டாலர் எடுக்குது. அவ்ளோ கணக்குப் பார்த்து எடுக்கிற அளவில் கச்சிதமான நெட்வொர்க் பாருங்க.

இதைவிட இன்னொரு விஷயம். டிரைனுக்கு ரெட் லைன், யெல்லோ லைன், சில்வர் லைன் என்று இரயில்வண்டிப் பாதைக் குறிப்புகள் எல்லாம் இருக்கு. நாங்க யெல்லோ லைன்ல வரணும். அந்த இடத்துலருந்து பெண்டகன் சிட்டிக்கு வரதுக்கு மூணு ஸ்டாப் தான் இருக்கும் யெல்லோல. புளூ லைன்ல வந்தோம்னா 12 ஸ்டாப் இருக்கும். ஒருநாள் வாசிங்டன் டிசியில் மியூசியம் பார்க்கப் போய்விட்டு, வீட்டுக்குத் திரும்ப யெல்லோ லைன்ல வர்றதுக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு ஸ்டேஷன்குள்ள வர்றோம். கால்மணி நேரமா யெல்லோ லைன் வரவே இல்ல. ஏன் அப்படின்னு தெரியல எங்களுக்கு. எப்பவும் அப்படி ஆகாது. அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு டிரையின் வந்துகிட்டே இருக்கும். ஆறேகால், ஆறரை மணி ஆயிடுச்சு. அதுக்குள்ள மூணு புளூ லைன் வண்டிகள் போயிடுச்சி. ரெண்டு பக்கமும் இந்தப் பக்கம் அந்தப் பக்கமா போகிற யெல்லோ லைன் வண்டிகள் வரல்ல. அதனால ஏதாச்சும் பிரச்சினை இருக்கலாம். அதனால, புளூ லைன்ல ஏறிப் போய்டலாம்னு ப்ளூ லைன் இரயிலில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டோம். என்ன பிரச்சினைன்னு ஏதாச்சும் நியூஸ்ல ஒருவேளை வரலாம்னு நெனச்சிகிட்டு இருக்குறோம். பார்த்தால், மறுநாள் என்னாகுது, நம்ம பயணச் சீட்டுக்கான கார்ட் இருக்கில்ல, அதுதொடர்பா மெயில் ஒண்ணு மகனுக்கு வருது. அந்த மெயிலில், நேத்திக்கி நீங்க யெல்லோ லைன் ட்ரெயினுக்காகக் காத்திருக்க வேண்டியதா போச்சி. அதுக்கு அந்த இன்கன்வீனியன்ஸுக்கு சாரி கேட்டுக்குறோம். அந்தப் பயணத்துக்கு உண்டான டாலர் திருப்பிக் கொடுக்கப்படும்னு. இது ரொம்ப ஆச்சரியமான விஷயமா தெரிஞ்சது. டீமானிடைசேஷன்ல இழந்த உயிர்கள் நினைப்பு வந்தது. நம்ம ஊரில் எப்போ, எந்த யுகத்துல நாம மாறப் போறோம்னு மனிதர்களுக்கான விஷயங்களுக்கு வரப் போறோம்னு இதுபோன்ற பல சிந்தனைகள் தொடர்ந்து வந்துகிட்டே இருந்தது பாருங்க.

பொது இடங்கள்ல கழிப்பறைகளும் குடிநீர் வசதியும் வாஷிடன் சிட்டி முழுக்கவே, மால்களில் மியூசிம்களில், மெமோரியல்களில் எங்கயுமே அதற்கான வசதிகளுக்கு எந்தக் குறையுமில்லாமல் முழுமையாகச் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். வரலாற்றை அவர்கள் திரிப்பதே இல்லை. போரில் இறந்த வீரர்களுக்கு நினைவிடம் அமைப்பதிலாகட்டும் அதற்கு முன்னால் ஆரம்பத்திலிருந்து ஆட்சி புரிந்தவர்களுக்கான நினைவிடங்களாகட்டும் மியூஸியங்களும் அவ்வளவு சிறப்பாக வாஷிங்டனில் இருக்கின்றன. தாங்கள் செய்த வரலாற்றுப் பிழைகளை அவர்கள் மாற்றி எழுதவில்லை. அந்தப் பிழைகளை அப்படியே பதிவு செய்கிறார்கள். அதுதான் ரொம்ப முக்கியமான விஷயம். ஆஃப்ரிக்கோ அமெரிக்கன் மியூசியத்துல எல்லாம் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு குழுக்களாக வருவதையும், ஐந்து நிமிடம், பத்து நிமிடம் பதினைந்து நிமிடத் திரைப்படங்களாகவும் போட்டுக் காட்டுகிறார்கள். நாம் அந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு என்ன கூற நினைக்கிறோம் என்பதையும் பதிவு செய்ய தனி அறையில் கம்ப்யூட்டர் வசதி, வீடியோக்களுடன் தயாரிக்க முடியும். தனியாக நாமே அதை செய்துவிடலாம். ஓரிடத்தில் நான் பேசும்போது நெகிழ்ந்துபோய் எனக்குக் கண்களில் கண்ணீர் ததும்பி வந்துவிட்டது. அது வீடியோ என்றே எனக்குத் தெரியல தோணலை. ஆடியோவில் குரல் பதிவாகிறதுன்னு நினைச்சிருந்தேன். பிறகு தான் தெரிந்தது, அது வீடியோ என்று அதற்குள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நாம ரொம்பவும் ஸ்ட்ராங் வுமன்னு நெனச்சிகிட்டாலும் இந்த மாதிரியான சின்ன செண்டிமென்ட்ஸ்ல கண்ணீர் வர்றத கட்டுப்படுத்திக்க முடியல. அவர்கள் வரலாற்றை இவ்வளவு அழகாகப் பதிவு செய்து காட்சிக்கு வைத்திருப்பது மிகவும் அருமையான விஷயம்.

கோள்களைப் பார்ப்பதற்கு தனியான இடங்கள், விமானங்கள் எப்படி வந்தன, ரயில் வண்டிகள் ஒவ்வொன்றுக்கும் நாம என்ன தெரிஞ்சுக்க, கற்றுக்கொள்ள நினைக்கிறோமோ அதை அங்கே போய்க் கத்துக்கிட்டு வந்துவிடலாம். உழைத்தால் முன்னேறுவதற்கான அனைத்து வழிவகைகளும் அங்கே இருக்கின்றன.

இதெல்லாமே ஒவ்வொரு இடத்தையும் காணும்போது தோன்றிக்கொண்டிருந்த சிந்தனைகள்தான். வாகனம் விபத்துக்குள்ளானால் ஐந்து நிமிடங்களுக்குள் வந்து அந்த விபத்துக்குள்ளான வாகனங்களை ஒதுக்கி வைத்து, ஆம்புலன்ஸ் விரைவாக வந்து உயிரைக் காப்பாற்றுவது, அந்த மனித உயிர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

இதைத் தவிர பணிகளில் சிரமப்படுபவர்களையும் பார்க்கிறோம். மனசுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது. கையேந்துபவர்களையும் பார்க்கிறோம். வீடிழந்து சாலையோரத்தில் குடியிருப்பவர்களையும் பார்க்கிறோம். ஓவியங்களை வரைந்து அதற்குள் வசிப்பவர்களையும் பார்க்கிறோம். எல்லா இடங்களிலும் இவ்வாறு இருப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், மக்களைக் காக்க, அவர்களைக் காப்பாற்ற அவர்கள் எடுத்துக்கொள்ளும் பணிகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

60 நாட்களும் ஒவ்வொரு நாளும் பெற்ற அனுபவங்களையும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஜெயந்தி சங்கர்: அமெரிக்காவில் தமிழர்கள், தமிழ் அமைப்புகளுடன் அளவளாவும் வாய்ப்பு கிட்டியதா?

மதுமிதா:  பயணத்தின்போது ஆங்காங்கே தமிழர்களைச் சந்தித்தோம். தமிழில் சிறுகதைகள், திரைப்படத் துறையில் வசனம், திரைக்கதை போன்றவற்ற பங்களிப்புகளைச் செய்திருக்கும் எழுத்தாளர்  நண்பர் சத்யராஜ்குமாரைச் சந்திக்க முடிஞ்சது. அவர் சிறந்த படைப்பாளியா இருக்காங்க. இதில் முக்கியமா என்ன சொல்லணும்னா, அமீரகத்துலருந்து எழுதறவங்க, சிங்கப்பூர் மலேசியா, ஈழம் போன்ற நாடுகளிலிருந்து எழுதறவங்க அந்தந்த தேசத்து, எளிய மக்களின், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைத் தங்களோட படைப்புகள்ல கொடுத்திட்டிருக்காங்க. அதுபோல அமெரிக்காவிலிருந்தும் சிறப்பாக எழுதறவங்க இருக்கிறாங்க இல்லையா, அவங்கள்ல இவர் சிறப்பான படைப்புகளைக் கொடுத்திருக்கார். அவரைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

அதைத் தவிர, தமிழர் அமைப்புன்னு சொன்னா, அவர் மூலமாக,  ‘வள்ளுவர் தமிழ் மையம்’ என்ற அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவங்க பள்ளிகளில் குழந்தைகள், இளம் தலைமுறையினருக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்கும் பணிகளைச் செய்யறாங்க. தன்னார்வலர்களாகத்தான் அவங்க  இதைச் செய்யறாங்க. அவங்களுக்கானது எதையும் வாங்கிக்கறதில்லை. சனி, ஞாயிறுகளில் ஒரு இரண்டு மணிநேரத்துக்கு பள்ளியில் வைத்துத்தான் சொல்லித் தராங்க. தன்னார்வலர்கள் பலர் இருக்காங்க, இதைச் சொல்லிக் கொடுக்கறதுக்கு. அதுக்கு ஃபீஸாக ஒரு வருஷத்துக்கு இவ்வளவுன்னு வாங்கிக்கறாங்க, அவ்வளவு தான். அந்த அமைப்பினரைச் சந்திச்சது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   ஒருமுறை அவங்க வீட்டுல சந்திச்சோம். அப்போ நம் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி வாசித்துத் தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்களைப் பற்றி விசாரித்த அவர்களின் ஆர்வம் பிடித்திருந்தது. அடுத்தது அந்தப் பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்வாக  அதை வைத்திருந்தாங்க. சின்னதாக ஒரு உரை நிகழ்த்தினேன். வாஷிங்டன் டிசியில் பார்த்த விஷயங்களையும் தமிழில் பேசிப் பகிர்ந்துகொண்டேன். குழந்தைகள் கவனமாகக் கேட்டாங்க. பிறகு விழா நிகழ்வில் குழந்தைகள் அருமையான நடனங்கள், உரைகள், பேச்சுகள் நிகழ்த்தினாங்க. எல்லாமே தமிழ்ல அந்த தேசத்துல தமிழ் பேச வாய்ப்பில்லாத ஒரு சூழலில் அதை எப்படி வளர்த்தெடுக்கணும்ன்றத பாக்கறப்ப, ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அங்கே தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களும் என்னை அழைக்கவில்லை. நானும் போக முடியவில்லை. வள்ளுவன் தமிழ் அகாடமி, இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஆண்டுவிழா  நிகழ்ச்சியை ஒரு நாள் முழுவதும் நடத்தறாங்க. இங்கே நடக்கும் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வு அளவுக்கு எந்தக் குறையுமில்லாமல் அங்கே சிறப்பாக நடந்தது. அர்ப்பணிப்பு உணர்வோடு செஞ்சிருந்தாங்க. அது முடிந்த பிறகு, திருமண விருந்து போல அனைவரும் இருந்து உணவருந்திவிட்டுப் போவதற்கு ஏற்ப பல இடங்களிலிருந்தும் விளம்பரதாரர்களின் துணையுடன் நடத்தி இருந்தாங்க. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது என்கிறதைப் பாக்கறப்போ பொங்கல் விழா, சந்திப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டாறதுபோல தமிழை அங்க எடுத்துட்டுப் போற விஷயம் அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது.

ஜெயநதி சங்கர்: ராஜபாளையத்தில் நூலகம் உருவாக நீங்கள் பட்ட சிரமங்கள், சந்தித்த சவால்கள் ஏராளம். அமெரிக்காவில் எந்தெந்த நூலகங்களுக்குப் போனீர்கள்? அப்போது உங்களுக்குள் ஏற்பட்ட உணர்வுகள் எப்படியானவை?

மதுமிதா: நூலகம்ன்றது சிறுவயசுலருந்தே எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சமான விஷயம்.  சின்ன வயசுலருந்தே நூலகங்கள்ள புத்தகங்கள இரவல் வாங்கி வந்து வாசிச்சது. அப்பா வீட்ல நூலகம் போல அடுக்கிவச்சிருக்கற புத்தகங்கள வாசிச்சது, தென்காசி, புளியங்குடி, ராஜபாளையம்னு ஒவ்வொரு ஊர்லயும் நூல்களை வாசிச்சது நினைவுக்கு வருது. அதுதவிர,  இராஜபாளையத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான நூலகத்துக்காக  1991 ஆம் ஆண்டு முதல் போராடிட்டு இருக்குறோம் இல்லையா? அதுனால நூலகத்து மேல எனக்கு ரொம்ப ரொம்ப பிரியம் அதிகமா இருக்கும்.

சரி, அதை விட்ருவோம், அமெரிக்கால ஐந்து நூலகங்களுக்கு நான் போயிருக்கேன். மொதல்ல அர்லிங்டன் நூலகத்துக்குப் போனது. அடுத்து நண்பர் சத்யராஜ்குமார் அழைச்சிகிட்டுப் போன இன்னொரு நூலகம். லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் தான் எனக்கு எப்பவுமே பிரமிப்பான விஷயமா இருக்கும். அதைத் தவிர இன்னொரு நூலகம். இப்படி போறப்போ, ஒவ்வொரு நூலகத்துலயும் அந்த நூலகத்தோட கட்டடம் எப்படி இருக்குது, நூல்களை எப்படி அடுக்கி வச்சிருக்காங்க, குழந்தைகள் கூட்டமா வந்து எப்படி வாசிக்கிறாங்க இதெல்லாம் பாக்கறப்போ அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

என்ன சொல்றது? லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் இருக்கில்லையா, அதுபோலதான் ராஜபாளையத்துல ஒரு நூலகம் வேணும். சென்னைல ஒரு நூலகம் வேணும். கன்னிமரா நூலகம், அண்ண நூற்றாண்டுக் கட்டடத்துல இப்ப நடக்கற நூலகம்  பிரிட்டிஷ் கௌன்சில் போன்ற மாநகரத்துல குழந்தைகளுக்கு இருக்கற வசதி ராஜபாளையத்துல இருக்கறவங்களுக்குக் கிடைக்கணும்ன்றதுக்காக தான் அந்தப் போராட்டம். அந்த செயல்பாடு.

நான் அங்கே பார்த்த ஒவ்வொரு நூலகத்துலயும் அவ்வளவு சிறப்பான விஷயங்கள் இருக்குன்னு வச்சிக்கோங்களேன். விசாலமான அறைகள். அர்லிங்டன்ல இருக்கற அந்த லைப்ரரி மிகப்பெரிய அறை. தனித்தனியா அறைகளா இல்லாம ஒரே அறை இருப்பதுபோல  ரொம்ப அழகான கட்டடம் அது. எந்த எடத்துலருந்து எங்க வேணும்னாலும் குழந்தைங்க எங்க என்ன செய்றாங்கனு எல்லாத்தையும் பாத்துரமுடியும். புத்தகம் அதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த ரேக்குகளுக்கு இடைல தான் பார்க்க முடியாது. மத்தபடி எந்த வரிசைக்கு எப்படிப் போறாங்கனு எல்லாத்தையுமே பாத்துரமுடியும். எல்லா இடங்கள்ளயும் சிசிடிவி வச்சிருக்காங்க. அதனால எந்தப் பிரச்சினையும் இல்ல. புத்தகங்கள் எந்தப் பிரிவுன்னு மேல எழுதி வச்சிருக்காங்க. இங்கயும் இருக்குது.

ஒலிப்பிரிவு இருக்குது. அது ரொம்பப் பிடிச்சிருந்தது எனக்கு. கணினிப் பிரிவு இருக்கு. கணினிகள் வச்சிருக்காங்க அத உபயோகிக்கலாம். எழுத நெனச்சா எழுதிக்கலாம். அது தவிர ஆடியோ, வீடியோ சிடிக்கள் எல்லாமும் இருக்கு. அதையும் எடுத்து அங்கயே வாசிச்சிக்கலாம், பார்த்துக்கலாம். ரொம்ப அற்புதமான முறைகள் இந்த நூலங்கங்கள்ள. லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் சொல்லவே வேண்டியதில்ல. ஷேக்ஸ்பியர் பிரிவு அங்க இருக்குது.

சத்யராஜ்குமார் ஒரு நூலகத்துக்கு அழைச்சுட்டுப் போனாரு. அங்க நம்ம தமிழ்ப்புத்தகங்கள, அந்த வள்ளுவன் தமிழ் அகாடமி அமைப்பாளர்கள், இருக்காங்கல்லையா, அவங்க அரசாங்க அனுமதி பெற்று தமிழ்நூல்கள அந்த நூலகத்தில் வச்சிருக்காங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அங்க கீழே, மாடி, அதுக்கும் மேல அறைகள்னு இருக்கு. நாம வெளிலருந்து உள்ள போறோமில்லையா, அங்கேயே, நாம எடுத்துட்டு போற புத்தகதங்களை, வாசிச்ச பிறகு, திரும்பக் கொண்டுவந்து, போடறதுக்குன்னு வசதியா ஒரு இடம் இருக்குது. நாம உள்ள வந்து நூலகர்கிட்ட புத்தகத்தைக் கொடுத்துட்டோம்னு கையெழுத்து வாங்கிட்டுப் போகவேண்டிய தேவையே இல்ல. அதன்வழியா புத்தகத்தப் போட்டுட்டு நாம பாட்டுக்கும் போய்ட்ருக்கலாம்.

புத்தகத்தை எடுத்துட்டு போய்ட்டோம் வீட்டுக்கு. குறிப்பிட்ட இத்தன நாட்கள்ள கொடுக்கணும்னு சொல்வாங்க இல்லையா? கொடுக்க முடியலைன்னா வீட்டுலருந்தே போனில் அதை எக்ஸ்டெண்ட் பண்ணிக்கலாம். எனக்கு எக்ஸ்டெண்ஷன் வேணும்னு கேட்டா அவங்க பண்ணிக் கொடுத்துடறாங்க. பத்து நாளோ பதினஞ்சி நாளோ எவ்ளோ தேவையோ அவ்ளோ நாளைக்கு எக்ஸ்டெண்ஷன் பண்ணிக் கொடுக்கறாங்க. இந்த வசதிகள் இருக்கு. அவரு அழைச்சிட்டுப் போனது விர்ஜினியா லைப்ரரி. மொதல்ல சொன்னது அர்லிங்டன் நூலகம். நண்பர் சத்யராஜ்குமார் அழைச்சிட்டுப்போனது விர்ஜினியா லைப்ரரி, தமிழ்புத்தகங்கள் வச்சிருக்காங்க இல்லையா, வள்ளுவன் தமிழ் மையம், அந்த எடம். அங்க குழந்தைகளுக்கான எல்லா வசதியும். அதாவது, படிக்கறதுக்கு, எழுதறதுக்கு, வரையறதுக்கு கணினிகள் எல்லாமே இருக்குது. அங்க வெளியிலிருந்து, பள்ளிகள், யுனிவெர்சிட்டிலருந்து வந்து அங்க வேல பண்றதுக்கு தனி அறை இருக்குது. 3டினு இருக்கில்லையா அதுல இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்து வடிவமைக்க பிரிண்ட் அவுட் எடுக்கும்போது ரொம்ப அற்புதமா இருந்ததுங்க.

இதுமாதிரி எல்லாம் பார்க்கும்போதுதான் நம்ம ராஜபாளையத்துல இதுபோல நூலகம் வேணும். இதே மாதிரி எல்லா வசதிகளும் இருக்கற நூலகம் வேணும்னு விருப்பம் அதிகமாகிட்டு இருக்கு.

ஒவ்வொரு நூலகத்துலயும் கழிப்பறைகள் இருக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக. அதேபோல குடிப்பதற்கு தண்ணீர் வச்சிருக்காங்க. இந்த இதெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதெல்லாம் ராஜபாளையம் நூலகத்துக்கு வந்துட்டா நம்ம ஊர் குழந்தைகளும் இந்த விஷயங்கள சிறப்பா பாத்துப்பாங்களே அப்படிங்கறது.

அடுத்தது, குட்டிக்குட்டி போஸ்டர்ஸ் வைக்கிறது, ஓவியங்கள் வரைஞ்சி வைக்கிறது. சிலரப் பத்தி அதாவது இவங்க இந்த எழுத்தாளர்கள் அப்படினு சின்னச்சின்ன குறிப்புகளோட படம் வச்சிருக்காங்க. இசை பாடறவங்களப் பத்தியும் எழுதிருக்காங்க.

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த தேதில இந்த நேரத்துல குறிப்பிட்ட எழுத்தாளர் இங்க வந்து கொஞ்ச நேரம் இருப்பாங்க, பேசுவாங்க, நீங்களும் வந்து கலந்துக்கலாம் பேசலாம்ன்ற அறிவிப்புகளும் அங்கங்க இருந்தது. அது ரொம்பவே நல்லா இருந்தது. ஆனா எந்த ஆங்கில எழுத்தாளரையும் சந்திக்கும் வாய்ப்பு அமையல.

ஜெயந்தி சங்கர்: 2018ல் இலங்கைக்கு சென்றதுதான் உங்களுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இல்லையா? அப்போது எங்கெல்லாம் சென்றீர்கள்? யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?

மதுமிதா:  ஆம், இலங்கைக்குப் போனது தான் என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம். கொழும்பு, யாழ்ப்பாணம், நுவெரெலியா, ஹட்டன் அப்படி பல இடங்களுக்கு சென்றிருந்தோம் நாங்க. ஒவ்வொரு இடத்திலும் நாங்க முக்கியமான இடங்களுக்குப் போனோம். முக்கிய நபர்களை சந்தித்தோம். மக்களை சந்தித்தோம். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரையாற்றினோம். கவின்கலை பயிலகத்தைப் பார்த்தோம். கொழும்பில் இறங்கியதுமே நடனப்பெண்மணி திவ்யா அவர்களை சந்தித்தோம். அவங்க வீட்லதான் தங்கி இருந்தோம் நாங்க. அங்க துவாரகி, ஃபாத்திமா ரெண்டு பேரையும் சந்திச்சிட்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்துக்குப் போயிட்டு வந்து, இரவு யாழ்ப்பாணத்துக்குப் போறோம். அந்த வண்டில, நம்ம ஊர்ல இருப்பதை போலவே தமிழ்ப் படால்களை போட்டுட்டு போட்டிருந்தாங்க. அது ரொம்பப் பிடிச்சது. யாழ்ப்பாணத்தில் வாலண்டினா தான் வந்து எங்கள அழைச்சிட்டுப் போயி யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுத்திக் காட்டினாங்க. அங்க இருந்த நிகழ்ச்சிநிரல்களும் அவங்க தான் ஏற்பாடு பண்ணிருந்தாங்க. சிறந்த பெண்மணி, மாணவர்களுக்காக உத்வேகத்தோடு இருக்குறாங்க. அங்க அவங்க பண்ணின பணிகளையெல்லாம் விலாவாரியா சொன்னாங்க. அடுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துல புஸ்பரட்னம் அய்யாவை சந்தித்தோம். அவர்தான் அங்கும் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து தமிழ் மரபு அறக்கட்டளை சார்பா தான் நாங்க அங்க போயிருந்தோம். தோழி சுபாஷிணியோட டாக்டர் கண்ணன் அவர்களும் நானும் போயிருந்தோம். அப்போது தமிழ் மரவு அறக்கட்டளை சார்பா அங்க இருக்குற உறுப்பினர்கள், அவர்கள் செய்யும் பணிகள் பற்றிப் பேசினார்கள். புஸ்பரட்னம் அய்யா அவர்கள் பல இடங்களுக்கு அழச்சிட்டுப் போனாரு. மியூசியம், யாழ்ப்பாணக் கோட்டைக்கும் அழச்சிட்டுப் போனாங்க. ஒவ்வொரு இடத்திலும் அவ்வந்த இடத்தைப் பற்றிய ஆவணப்படுத்தகூடிய விவரங்கள் அனைத்தையுமே சொல்லி நல்லூர் முருகன் கோயில், பிரதேச சபை எல்லா இடங்களுக்கும் அழைச்சிட்டுப் போயி காட்டினாங்க. கந்தரோடையோட சிறப்பு, விகாரையோட சிறப்பு ஆகியவற்றைக் காட்டி, பௌத்த விகாரைகளைக் காட்டினார். ஓர் ஆய்வு நூலாக எழுதினால், அவரைப் பற்றியும் அவர் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டிய இடங்களைப் பற்றியும் தான் அதிகளவுல எழுத வேண்டியிருக்கும் என்கிற அளவுல மூன்று நாட்களுக்கு ஆவணப்படுத்த வேண்டிய இடங்கள் அனைத்தையும் சுற்றிக் காட்டினார். தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பல விஷயங்களையும் பதிவு செய்தோம், போர் நடந்த சமயத்தில், அதாவது எப்பவுமே போர் என்கிற போது, பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், நூலகங்கள் ஆகியன பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் இருக்கும். அதை மீறி யாழ்ப்பாண நூலகம் சிதைக்கப்பட்ட போது ரத்தக்கண்ணீர் வடித்தவர்கள் நாம் இல்லையா. அங்க போனப்போ மெய்சிலிர்த்தது. அங்கே சென்றபோது செருப்பைக் கழட்டிவிட்டு அந்த நூலகத் தரையில் தொட்டு வணங்கிவிட்டுத் தான் போனேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோல பல இடங்களையும் பார்த்தோம்,. மாவிட்டபுரம் கந்தசாமிகோவில், துர்காதேவி கோயில், சைவ ஆராய்ச்சி நூலகத்தையும் பார்த்தோம். எல்லாமே ரொம்பப்பிடிச்சிருந்தது. சிவன் கோவிலுக்குப் போனோம். அப்புறம் சிதிலமடைந்த வீடுகள் பார்த்தோம். அரசு தமிழ் மக்களுக்குக் கட்டிக் கொடுத்த வீடுகளைப் பார்த்தோம். எல்லாமே எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. கடைசியா நாங்க சங்கமித்ரை வந்து இறங்கிய இடத்துக்குப் போனோம். இப்படி எல்லா இடங்களையும் பார்த்தோம். சிவாலயங்களையே பார்த்துட்டு வந்தவங்க வைஷ்ணவ விஷ்ணு ஆலயத்தைப் பார்த்ததும் அதுவும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. சரியான நேரத்தில் பூஜை சமயத்தில் உள்ளே போய் தரிசனம் செய்து வந்தோம். இதெல்லாமே புஸ்பரட்னம் அய்யா தான் ஏற்பாடு பண்ணிருந்தாங்க. திருமுறை, கலைமன்ற ஸ்தாபகர் பாதிரியார் அவர்களை சந்தித்தோம். அவங்க மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓர் அருமையான நேர்காணல் நடத்தினார்கள். கலை மூலமாக அனைத்து மதம் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்து தேச நலனுக்காக எப்படி ஈர்ப்பது என்பது பற்றி. ஒரு கிறித்துவப் பாதிரியார் அதை நடத்துகிறார். இஸ்லாமிய மக்கள் அனைவரும் அதுல இருக்குறாங்க.  போராட்டகாலங்களில் அவர்கள் நடத்திய நாடகமும் எப்படி சிங்களவர்கள் கண்ணீர் விட்டார்கள் என்பதையெல்லாம் சொல்லியிருந்தாங்க. அதையெல்லாம் ரொம்பவே சிறப்பான நேர்காணலாகச் செய்திருந்தோம். அதை இன்னும் அங்கே சந்தித்த ஜெயகாந்தன், சேவியர் எல்லாருமே, அனைவரும் சிறந்த நேர்காணலை எடுத்து சிறந்த புரிதலை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தாங்க.

அடுத்து கொக்குவில் நூலகத்துக்குப் போயிருந்தோம். அங்கிருந்த மக்கள், அந்த நூலகத்தை நடத்துகிற உறுப்பினர்கள் எல்லோரும் அந்த நூலகத்தை எப்படி நடத்தறாங்க, புலம் பெயர்ந்தவர்கள் மூலம் எந்தவழிகள்ல உதவிகள் பெறுகிறார்கள் அப்படின்னு அனைத்தையும் சொல்லிருந்தாங்க.  பள்ளிக்கூட விழா நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வரும்பொழுது தோழர் சஜ்ஜீவன் அவர்களை சந்தித்தோம். அவர்கள் மூலமாக (முன்னாள்) முதலமைச்சர் விக்னேஸ்வர் அவர்களையும்  சந்தித்தோம். நாங்கள் சென்னையிலிருந்து கொழும்பில் சென்று இறங்கிய மாலை அங்கே ஆட்சி மாற்றம் நடந்ததால் அவர் முன்னாள் முதலமைச்சர் என்றே குறிப்பிட வேண்டும். மிக சிறப்பான ஒரு நேர்காணலை (முன்னாள்) முதலமைச்சர் விக்னேஸ்வர் அவர்கள் கொடுத்திருந்தார். அதை அச்சுப்புத்தகத்திலும் கொண்டு வந்து விட்டோம். பிறகு, கல்வி அமைச்சரின் உடனிருக்கும் தியாகு அவர்களை சந்தித்தோம். அத்துடன் கிருஷ்ணன் அவர்களையும் நேர்காணல் செய்திருந்தோம். எந்த சந்திப்பும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அங்கிருந்து வட்டக்கொடை ஆவணக்காப்பகம், அதாவது தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் மக்களின் வாழ்க்கை, கலை, நாட்டுப்புறக்கலை, செய்தித்தாள்களில் வந்த செய்திகள் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தியிருந்த ராஜசேகர் அவர்களை சந்தித்தோம். அந்த சந்திப்பு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் பாடல்கள் பாடினார்கள். நாங்களும் அதில் பங்கேற்றோம். பாடல்களை அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்திருந்தார். அதை அந்தக் குழந்தைகளும் பாடினார்கள். தனிமனிதராக அந்த ஆவணக்காப்பகத்தை அவர் வைத்திருப்பது மிகவும் அபூர்வமான விஷயம். கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு, ஒரு சின்னப்பொண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.  இது சிங்களப்பொண்ணு என்று சொல்லி அழைச்சிட்டு வந்து பேசினால் அந்தப் பெண் அவ்வளவு அருமையாக தமிழ் பேசுகிறாள். பக்கத்தில் இருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொன்னால், தமிழை வாசித்தார். வியப்பாக இருந்தது அந்தப் பெண்ணின் தமிழ். அந்த ராஜசேகர் அவரையும் மறக்கவே முடியாது. ஹட்டனிலிருந்து நுவரேலியாவுக்கு எங்களை ஆட்டோவில் அழைச்சிட்டுப் போனது நிஷாந்தன். அவர் மசூதிக்கும் அழைத்துச் சென்றார். நாங்கள் இஸ்லாமியரை போல துவா செய்து வந்தோம். சீதைக்கு கட்டியிருந்த கோவிலைப் பார்த்தபோது அந்த இடத்துக்கு சென்ற மகிழ்ச்சி இருந்தாலும் சீதையின் துயரம் அங்கே தெரியல. அங்கும் ராமர், இலக்குவனர், சீதை என்று சேர்த்துதான் வைத்திருக்கிறார்களே தவிர சீதை தனியாக வைக்கப்படவில்லை. இருந்தாலும் அந்த இடத்துக்குப் போய்ட்டு வந்தது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்திச்சு. இலங்கையை ஒரு போராட்ட பூமியாகப் பார்ப்பதைக் கடந்து ஒரு சுற்றுச்சூழல் மிக்கதாகப் பார்க்க, அங்கே மிக அழகான இடங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். நுவரேலியாவில் சுற்றிப் பார்த்தபிறகு தேயிலை தோட்டத்துக்குப் போய் தேயிலை சேகரிப்பதையும் பார்த்தோம். சத்தியா அவர்கள் ஓர் ஆவணக்காப்பகத்துக்கு அழைத்துப் போனார். மிகவும் உபயோகமாக இருந்தது. அதையும் ஆவணப்படுத்தியிருக்கிறோம். அவர் குழந்தைகளுக்காக பணிகள் செய்துகொண்டிருக்கிறார். இரவு கண்டிக்கு செல்லும் பேருந்தில் ஒரு சிங்கள தம்பதியைப் பார்த்தோம். அவர்களிடம் பேசினது மகிழ்ச்சியாக இருந்தது. எப்படிக் மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று தொலைக்காட்சியில் அவர்களோடு பேசிய விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். கண்டி போய் சேர்ந்தோம். அங்கே பேராதனை பல்கலைக் கழகத்தை சேர்ந்த மகேஷ்வரன் அவர்கள் எங்களை வரவேற்று பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அங்கே உரை நிகழ்த்தவும் ஏற்பாடு செய்தார். அங்கே நூலகம் முழுவதும் சுற்றிப்பார்த்தோம். ஓலைச்சுவடிகளைப் பார்த்து எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டோம். ஆசியர் பயிற்சிப்பள்ளில சிறந்த வரவேற்பளித்தார்கள். நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்த போது இடையில் உரை நிகழ்த்தினோம். சிறுகுழந்தைகள் படிக்கும் மூன்று பள்ளிகளுக்குப் போயிருந்தோம். நான்கு நூலகங்களைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பள்ளியிலும் தேவாரப்பாடல்களைப் பாடும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் முக்கியமாக முன்னால் நின்று இரண்டு குழந்தைகள் சொல்ல சொல்ல அமர்ந்திருந்த குழந்தைகளும் அதை சொல்லும் போது இன்பத்தமிழின் சுவையை அறிந்து கொள்ள முடிந்தது. கண்டி பேராதனை பல்கலைக் கழக நூலகம் பற்றியும் அங்கே நாங்கள் சென்ற இடங்களைப் பற்றியும்கூட சொல்ல வேண்டும். மிக நீண்டுவிடும். அதன்பிறகு நாங்கள் கண்டி பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினோம். மிகவும் மகிழ்வாக இருந்தது. அந்த மக்கள், தமிழ் மீதான ஆர்வம், தமிழை நேசிக்கிறவர்கள் வருகிறோம் என்பதை அறிந்த அவர்கள் தந்த வரவேற்பு அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தது. வழியில் எங்களிடன் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறோம் என்று அறிந்து கண்டிக்கு தான் செல்கிறீர்களா என்று கேட்டு, கண்டி அல்ல கொழும்புக்கு செல்கிறீர்களா என்று கேட்டு கொழும்புக்கு செல்கிறோம் என்று சொன்னதும், எங்களிடம் சொல்லாமல் பயணச் சீட்டை அவரே எடுத்தார் என்பது மிகவும் வியப்பாக இருந்தது.  உமா மகேஷ்வரன் எனும் நண்பர் அவர். என் மகளைப் போன்ற துவாரகை அவர்கள் கொழும்பு சென்றதும் திவ்யா வீட்டில் தான் தங்கி இருந்தோம்.  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சுபாஷிணியின் நேர்காணல் முடிந்ததும் என்னையும் ஒரு நேர்காணல் செய்திருந்தார்கள். ஆலவெட்டியிலிருந்து வந்திருந்த அருண் ஆரோக்கியநாதன் என்ற இளைஞர் மிகத் துடிப்போடு, ஒரு நேர்காணலை ஆர்வமாக எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்தார். தொழில்நுட்பக் காரணத்தினால் பதிவு செய்வது நின்று விட்டது. இரவெல்லாம் அவர் விழித்திருக்க வேண்டியிருந்தாலும் அவற்றைப் பதிவு செய்து நாங்கள் விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் மிக குறுகிய காலத்திற்குள் அவர் அந்த நேர்காணலை முடித்துக் கொடுத்தார். அங்கிருந்து விமலேந்திரனும், கௌரி விமலேந்திரனும் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று புத்தகங்களை எங்களுக்குக் கொடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தான் எங்களை இறக்கி விட்டார்கள். தூவாரகையோடு கொழும்பு கடற்கரையில் நாங்கள் நடக்கும் போது சீனா எப்படி அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தது என்பதை கண்ணாரக் கண்டோம். ஆக, இலங்கைப் பயணம் மிக அற்புதமான மனிதர்கள் எங்களை சந்திக்க வைத்தது. உள்ளூர் அரசியலை உணரவும் வெளியிலிருந்து வந்து ஆக்கிரமிப்பு செய்ததையும் பார்க்க முடிந்தது. இப்படியான வாய்ப்புகளை இலங்கைப் பயணம் அளித்தது.

ஜெயந்தி சங்கர்: இலங்கைப் பயணத்தில் நீங்கள் கற்றதும் பெற்றதும் என்று எவற்றையெல்லாம் சொல்வீர்கள்?

மதுமிதா: இலங்கைப்பயணத்துல கற்றதும் பெற்றதும்னு அதைப் பத்தி சொல்லணும்னா விமானத்திலிருந்து இறங்கி விமான நிலயத்திலிருந்து வெளியே வாடகை வண்டி ஓட்டுநரிலிருந்து சந்தித்த ஒவ்வொரு நபரிடமிருந்தும் கற்றுக் கொள்ள அவ்வளவு விஷயங்கள் இருந்தன. என்னவொரு தமிழ் உச்சரிப்பு, தமிழ் மொழி மீதான எத்தனை ஆர்வம், தமிழ் மக்கள் மீதான ஆர்வம். சந்தித்த சிங்களவர்கள் இரண்டு மூன்று பேரும்கூட மிகுந்த  சுவாரசியம். ஒரு பெண்மணி சிங்களத்தில் பேசுகிறார். இளம்பெண். பள்ளிகளில், குண்டு போட்டு பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் முகத்தைப் பார்க்க வேண்டும். இங்கே தமிழகத்தில் பள்ளிகளில் நடக்கும் விழாக்களை விட அங்கே சிறப்பாக நடந்தன விழாக்கள். தமிழ் உச்சரிப்பும் பாடல்களும் நடனமும் பேச்சும் அவ்வளவு அருமை. அந்தக் குழந்தைகளின் முகங்களில் அவ்வளவு தெளிவு, அவ்வளவு முதிர்ச்சி. அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், பெற்றோர் முகங்களில் சிரிப்போ மலர்ச்சியோ இல்லவே இல்லை. சந்தித்த ஒவ்வொரு மனிதர்களிடமிருந்தும் கற்றதுதான் அதிகம். சோம்பிக் கிடக்காதீர்கள், அழிவிலிருந்து எங்களால் இவ்வாறு நிமிர்ந்து எழமுடியுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியவை எவ்வளவு உண்டு என்பதை ஒவ்வொருவரும் கற்றுத்தந்துகொண்டே இருந்தார்கள். கண்ட வளங்கள், அவர்கள் அழைத்துச் சென்று காட்டிய பாதைகள், இடங்கள்! புஸ்பரட்னம் அய்யா, யாழ்ப்பணத்தில் பேராசிரியர் அழைத்துச் சென்ற இடங்கள் அத்தனையையும் ஆவணப்படுத்தினோம். தமிழ்மரபு அறக்கட்டளைக்காக நாங்கள் பார்த்த ஒவ்வொரு இடத்தையும் நாங்கள் பதிவு செய்தோம். மலைத்தோட்டத்தொழிலாளிகள் ஒவ்வொருவருமே முக்கியமானவர்கள். அவர்களிடமிருந்து கற்றதும் பெற்றதும்தான் அதிகம். தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கற்றுத் தந்தபடி இருந்தார்கள். அவர்கள் கண்களில் தெரிந்த ஒளி இப்போதும் மனத்தை மயக்கிக் கொண்டிருக்கிறது. வாழவேண்டும், வாழ்க்கையில் பிறருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உழைத்து வாழ வேண்டும் என்று போரில் கணவரை இழந்தவர்கள் இணைந்து நடத்தும் உணவுக்கடை ஒரு உதாரணம்.

தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யும் சில பெண்களைச் சந்தித்தோம். அவர்களிடமும் நேர்காணல் எடுத்திருந்தோம். வயதான அழகான பாட்டி ஒருவர், அருகில் என்னை அழைத்து உட்கார வைத்துத் தடவிக் கொடுத்து பாசத்துடன் முத்தம் கொடுத்தார். உழைத்துத் தேய்ந்த உடலுடனும் சுருங்கிய தோலால் மூடப்பட்ட அந்தக் கைகளின் தொடுகை அளித்த மகிழ்ச்சி… இதைவிட பெரிய அன்பு நமக்கு எங்கே கிடைக்கும் சொல்லுங்க. ஆட்டோ ஓட்டுநர்கூட அவர்கள் எடுத்துக்கொண்ட பணியும் எங்களை நடத்திய விதமும், அவர்கள் சொன்ன வரலாற்று விஷயங்களும் ஒவ்வொருவரும் அதில் தெளிவாக இருக்கறாங்க. அதைத்தான் அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவர்களுடைய அன்பும் விருந்தோம்பலும், அடுத்த தலைமுறைக் குழந்தைகள் வாழ வேண்டும் என்று அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதில் ஒரு பத்து சதவிகிதத்தையாவது இங்கே நாம் செய்திருந்தாலே நாம் இன்னும் முன்னேறியிருப்போம் என்பதைத்தான் காட்டியது.  அன்பே சிவம் சிவம் என்பதை போகுமிடத்தில் எல்லாம் உணர்ந்தோம். எனது ஒரு உரையிலும் அன்பே சிவத்தைச் சொல்லிதான் ஆரம்பித்தேன். இலங்கையில் கற்றதையும் பெற்றதையும் அந்த ஒருவாரப் பயணத்தையும் மறக்கவே முடியாது.

ஜெயந்தி சங்கர்: உங்களுடைய இலங்கைப் பயணம் அமெரிக்கப் பயணம் இரண்டிற்குமிடையே ஒற்றுமைகள் வேற்றுமைகளாக நீங்கள்  எவற்றையெல்லாம் உணர்ந்தீர்கள்?

மதுமிதா:  இலங்கைப் பயணம் அமெரிக்கப் பயணம் இரண்டிற்குமிடையே ஒற்றுமைகள் வேற்றுமைகள் அப்படின்னா நீங்க கேக்கறவரைக்கும் அத  யோசிச்சிப்பாக்கல. இருந்தாலும், இப்போ யோசிச்சுப் பாக்கறப்போ மரங்கள் இருக்கில்லையா, ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலைய வாசலிலும்கூட மரங்கள் இருக்கின்றன.  பேருந்தில் ஏறிப் பயணப் படுவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்திற்குப் போகிறோம். நாம் உள்ளே நுழையும் இடத்தில், சரியாக உள்ளே வண்டி எப்படி வரணுமோ அந்த இடத்ததில் அவ்வளவு பெரிய மரம். அந்த மரத்தை எடுக்காமல் அப்படியே பாதுகாத்து தான் வச்சிருக்குறாங்க. அந்த மரத்தோட ஒருபக்கமாக

பேருந்துகள் உள்ள நுழைஞ்சி, மறுபக்கமாக  வெளியே வருவது மாதிரி அமைச்சிருக்காங்க. ரயில் நிலையத்துலேயும் அதேதான்.  பல சாலைகளிலும் அப்படி தான் இருக்கு. இதையே தான் அமெரிக்காலயும் பார்த்தேன் நான். இயற்கைக்கும் மரங்களுக்கும் அவங்க கொடுக்கற மரியாதை அவ்வளவு பிடிச்சிருந்தது.

அதேபோல நீர்நிலைகளப் பாதுகாக்கிறது, வளம் கொழிக்கிறது இரண்டு இடங்களிலுமே. சுத்தமான காற்று, தூயகாற்று. நடைப்பயணம் போகிறபோது தெரியும் அந்த தூயகாற்று. அமெரிக்காவிலும் சரி இலங்கையிலும் சரி அந்த காற்றுத் தூய்மையை நன்றாக உணர முடிந்தது. நல்ல நீர், மரங்களைப் பேணி வளர்த்தல் இவற்றை எல்லா இடங்களிலும் பார்த்தோம்.

நடந்துசெல்லும்போது, இலங்கையில்  காலை நடை போறப்போ அங்கே எங்கேயுமே ப்ளாஸ்டிக் கவரை நாங்க பார்க்கவே இல்ல. எத்தனையோ ஜனங்கள், வீடுகள் இருக்கிற இடம்தான். ஆனாலும் அது இல்ல. ஏதோ ஓரிரு இடங்கள சின்னதா இருந்ததே தவிர ரொம்ப நல்லா இருந்தது. அதே மாதிரிதான் அமெரிக்காவிலும்.

நூலகங்களுக்குக் கொடுக்கற முக்கியத்துவம் ரொம்ப சிறப்பா இருக்குது. ரொம்பப் படிச்சிருந்தது. விருந்தோம்பும் முறை பிடித்தது.

வேற்றுமைனு பார்த்தா பெரும் அழிவை சந்தித்து அதிலிருந்து இலங்கை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. ஊழிக் காலத்திலிருந்து மீள்வதைப் போல அந்த போரழிவிலிருந்து மீண்டு வருவது எவ்வளவு பெரிய விஷயம்?! அதைப் பார்க்கிறோம். பல்லினமக்கள் சிறப்பாக வாழ்கிறார்கள். தங்களுக்குள்ள நட்புடனும் சுமுகமாகவும் வாழ்கிறார்கள். அரசியல் ரீதியான காரணங்களால் அவர்கள் வேறுபடுவதையும் பார்க்கிறோம். குடிமக்களை அரசு கவனித்துக் கொள்கிற விசயத்தில் சிங்கள அரசு பாதகத்தை தான் செய்கிறது. சீனாவிலிருந்து இங்கே வந்து அனுமதி பெற்று கட்டடம் கட்டும்போது, கடலுக்கு நடுவே, இங்கே என்ன செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை. சிங்கள அரசுக்குகூடத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தெரிந்தே இந்தக் கொடுமையை அனுமதிக்கிறார்களோ என்னவோ. அரசியல் மிகவும் ஆபத்தானதும்கூட. நாட்டு மக்கள் எனும்போது தமிழ்மக்கள் மட்டுமே இல்லையே, சிங்கள மக்களும் இருக்கிறார்கள்தானே தீமை இருந்தாலும் பரவாயில்லை, அந்த நாட்டு இதை கொண்டு வந்து இங்கே வைக்கணும் என்பதும், அதன்வழி இந்திய அரசுக்கு ஏதேனும் கெடுதல் செய்யவேண்டும் என்றும் நினைக்கிற அந்த அரசின் எண்ணம் கொஞ்சம் வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், அமெரிக்காவில், டிரம்ப் ஆட்சியில் என்னுடைய மக்கள் நன்றாக இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் இங்கே இருக்கிற குடிபெயர்வாளர்கள் எல்லாம் வெளியே போய்விடுங்கள் என்று சொல்லப்படுகிறது. பாஸ்போர்ட் விசா இல்லாதவர்களும் குடும்பங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் போய்விடுங்கள் என்பது. என் மக்கள் நன்றாக இருந்தால் போதும். அதற்கு பிற தேசத்தினர் வெளியே போய்விடுங்கள் என்பதைதான் சொல்கிறார்கள்.

மக்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்று கவனித்துக் கொண்டே தான் அவர்கள் இருக்கிறார்கள். அரசுதான் கவனிக்கவில்லை. நம்மிடம் பேசும்போது புன்னகைப்பதை கவனிக்கிறோமே ஒழிய அவர்கள் மனங்கள் பெரும்போராட்டத்துக்கிடையேதான் இருக்கின்றன. கடுமையான மனச்சிக்கல்கள். ஒருகோவிலில் பார்த்தோம். 500 பேருக்கு மேலாக இறுகிய முகங்களோடு சேர்ந்து அமர்ந்து வழிபாடு செய்ததையும் இலங்கையில் பார்த்தோம். அனைத்துப் பெண்களும் போரில் தம் உறவினர்களை இழந்தவர்கள்.

அமெரிக்காவில் பார்க்கும் போது, சாலையில் நடந்து கொண்டிருக்கும் போதே, அதாவது இரண்டு மாதங்கள் தங்கியிருந்ததை வைத்து ஒருநாட்டைப் பற்றி நாம் சொல்ல முடியாது. இருந்தாலும் அங்கே தங்கியிருந்தபோது நாம் சந்தித்த விஷயங்களின் அடிப்படையில் சொல்கிறேன். அமெரிக்காவில் நடந்துபோகும்போது, பேருந்துகளிலோ, ரயில்களோ, சாலையில் நடந்து போகும்போதோ நம் அருகில் அமரும் மக்கள் எந்த இனத்தைசார்ந்தவர்களாக இருந்தாலும் கண்ணோடு கண் பொருத்த நேர்ந்தால், ஒரு புன்னகையை பரிசளித்துவிட்டு, பேசினாலும் பேசாவிட்டாலும் போய்  விடுவதைப் பார்க்கலாம். பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், இலங்கையில் அந்த மலர்ச்சியையோ அந்தப் புன்னகையையோ பார்க்கமுடியவில்லை. அமெரிக்காவில் மரங்களையும் பலவண்ண மலர்களையும் பார்த்தாலும்கூட நம்முடைய வாசமலர்களைப் போன்ற நளினமும் அழகும் தெரியல. செயற்கையாக செய்யப்பட்ட மரங்களைப் போல, செயற்கையாக செய்யப்பட்ட பூக்களைப்போலத்தான் தெரிகிறது. சாலைகளில் நாம் செல்கையில் பச்சைப்பசேல் என்று மரங்கள் இருந்தாலும் அந்த மரங்களின் பெயர் என்ன, பயன்கள் என்ன என்பது எதுவுமே அமெரிக்காவுல தெரில. இங்க எட்டு வழித்தடச் சாலைனு சொல்ற மாதிரி, இந்தப்பக்கம் போகவர நான்கு, அந்தப்பக்கம் போகவர நான்குனு சில இடங்களில் சாலைகள் இருக்குது. அதத்தவிர சைட்லயும் சாலைகள் வந்து சேருது. அங்க பார்க்கறப்போ அந்த இடத்தைத் தவிர சுற்றி இருக்கும் அனைத்துமே பச்சைப்பசேல் என்று தான் இருக்கின்றது. எதையும் அவர்கள் அழிக்கவில்லை.  அந்தப்பாதைக்குண்டான இடங்கள் மட்டும்தான் அழிக்கப் பட்டிருக்கின்றன. அதை அங்கே பார்க்க நேர்ந்தது. அதைப் போன்ற விசாலமான நெடுஞ்சாலைகளை இலங்கையிலோ வேறு எங்கேயும் நான் பார்க்கவில்லை. நெடிதுயர்ந்த கட்டடங்கள், சாலைப்பராமரிப்பு, தூய்மை எல்லாமே சரியாகதான் இருந்தன.

இலங்கையிலும் சரி, அமெரிக்காவிலும் சரி தயிர் அதிகமாக உபயோகிப்பதில்லையோ என்னவோ. இலங்கையில் ஹோட்டல்களில் மதிய உணவு சாப்பிடும்போது கூட தயிர் இல்லை. உபயோகப்படுத்தறதில்ல போல. அதேமாதிரி இங்கே அமெரிக்காவிலும் அப்படிதான். வேணும் என்கிறவர்கள் கேட்டு தனியாக வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், மதிய உணவுக்குக் கூட அதை உபயோகிக்கிற மாதிரி தெரியல.

இலங்கையில் மலையக, தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்க்கை இன்னும் மேம்படவே இல்லை. அங்கேயும் சாலையோரத்தில் சிரமப்படும் மனிதர்கள் இருக்கிறார்கள். சிங்கள அரசு தன் மக்களைக் காப்பதுபோலவே இவர்களையும் காக்கவேண்டும் என்ற எண்ணம் தான் எழுந்தது.

இலங்கையில் பல நடவடிக்கைகள் உள்ளன. ஆதரவற்றோருக்கு ஆதரளிப்பது. குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது, ஆன்மிகப் பணிகளுக்கு கலாசாலைகளை வைத்து செய்வது விஞ்ஞானரீதியாகவும் தொழில் ரீதியாகவும் இத்தனை சின்ன நாடாக இருந்துகொண்டு இத்தனை வளர்ச்சி இருக்க முடியுமென்றால் இந்த போர்கள் இல்லாதிருந்தால் இன்னும் எத்தனையோ செழிப்பாக இருந்திருக்கும்.

அமெரிக்காவில் இந்தப் பிரச்சினைகள் ஏதுமில்லை. அங்கிருந்து வேறு எங்காவது போராட தங்களது ராணுவத்தை அனுப்புகிறார்களே தவிர அங்கே எல்லாமே நன்றாக தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இப்போது இருப்பதைவிட இன்னும் சிறப்பாக மென்மேலும் வளருவதற்கான சிறப்பான இயற்கை மற்றும் விஞ்ஞான வளங்களும் அவர்களுக்கு அங்கே பொதிந்திருக்கின்றன என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டியதிருக்கிறது. ஆனால் இங்கும் வேலை இல்லா மக்கள் சாலையோரங்களில் இருக்கும் மக்களை சில இடஙகளில் பார்க்க நேர்ந்தது வருத்தமான விஷயம்தான்.

இரு நாடுகளிலும் குழந்தை செல்வங்களைப் பார்க்கும்போதே அத்தனை மகிழ்வைத் தருகிறார்கள். வயதானவர்களும் கூட சிறப்பாக இயங்குகிறார்கள், அதுதான் தேவையும் கூட.

அங்கே இலங்கையில் எல்லா வரலாற்று ஆவணங்களையும் அழிக்கப் பார்க்கிறாங்க. இங்கே வாசிங்டன் டிசியில் நிறைந்த ஆவண காப்பகங்கள் இருக்கின்றன. தாங்கள் செய்த வரலாற்றுத் தவறுகளையும் பாதுகாக்கும் பல இடங்கள் உள்ளன. பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் வந்து பார்வையிட்டுச் செல்லும் அளவில் சிறப்பாகப் பாதுகாத்து வைத்திருக்கிறாங்க.

ஒருவாரகாலம் பயணித்த இலங்கையில் எங்கேயும் திரைப்பட அரங்கங்களைப் பார்க்கவில்லை. ஒரே ஒரு இடத்தில் இது திரைப்பட அரங்கம் என்று நாங்கள் பார்ப்பதற்குள் வண்டி போய்விட்டது. ஒருபோஸ்டர், ஒருபேனர் எதுவுமே கிடையாது. ரொம்பப் பிடிச்சிருந்தது அது.

அதேபோல அமெரிக்கா, அர்லிங்டனில் நாங்க தங்கி இருந்த இடத்துக்கு அருகில் நடந்து போகும் தூரத்தில் ஒரு தியேட்டர் உண்டு. சாலையில் நடந்து போகையில் நாம் உற்றுப் பார்த்தால்தான் அது ஒரு திரைப்பட அரங்குன்னு தெரியும். வெளியிலிருந்து பார்த்தால் சட்டென்று தெரியாது. இலங்கையிலும் ஒருபோஸ்டரோ ஒருபேனரோ எதுவுமே இருந்ததில்லை.

அமெரிக்காவில் அர்லிங்டனில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகில் தான் சர்ச் இருக்குது. இங்க இருக்கறதுபோல டௌட் ஸ்பீக்கர் வச்சி சத்தம் அதிகமாகக் கேட்பதுபோன்ற எதுவுமே அங்கே இல்ல கார் ஹாரன் அடிப்பதில்லை.

இலங்கை ஹட்டனில் மட்டும்தான் ஒரு பேருந்து நிலையத்துல இருக்கும் போது பௌத்த ஆலய ஒலி கேட்டதே தவிர மசூதிகளிலோ, தேவாலயங்களிலோ நாங்கள் இருந்த பகுதிகளில் தென்படவில்லை.

நல்லூர் முருகன் கோயில் உள்ளே போகும்போது அருமையாக நாதஸ்வரம் வாசித்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றுப்புற அமைதியில் அந்த நாதஸ்வர இசை மனத்தில் ஒருவித அமைதியை அளித்தது.

அமெரிக்காவில், நியூஜெர்ஸி கோவிலுக்குப் போயிருந்தோம். குஜராத்திலிருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கினால் ஆன கோவில். எந்தவித பூச்சூ சிமிண்டோ எதுவுமே இல்லாமல் காற்றழுத்தத்தால் வேலைப்பாடு நிறைந்த பளிங்குக்கற்கள் பதியப்பெற்ற அந்தக் கோவில் மிக சிறப்பாக இருந்தது.

எங்குமிருக்கும் மக்கள் இயற்கை வளத்துடன் சிறப்பாக வாழணும். அது ஒன்றுதான் எந்த தேசத்திலிருந்தாலும் அந்த மக்களுக்கு நலம் தரக்கூடியதாக இருக்கும்.

அமெரிக்கா, அர்லிங்டனில் ஒரு மாலை நேரம் நடைப் பயிற்சிக்குப் போயிருந்தோம். ஒரு வழியாகப் போயிட்டு இன்னொரு வழியா திரும்பறதுனுன்னு எல்லா இடங்களையும் பாக்கற நோக்கத்துல திட்டமிட்டு நடந்து போவோம். ஒவ்வொருமுறை நடக்கறப்பவும் ஒவ்வொருமுறையும் வித்தியாசமாத் தெரியும். ஒருமுறை அப்படிப் போகறப்போ ஒரு வீட்டு வாசல்ல, போஸ்ட் பாக்ஸ விட கொஞ்சம் பெரிய பெட்டி இருக்குது. அதுக்குமேல பத்துப்பதினைந்து புத்தகங்கள் வச்சிருக்குறாங்க. விரும்பறவங்க எடுத்து வாசிக்கலாம். எடுத்துட்டுப் போய் வாசிச்சிட்டு திரும்ப வந்து வைக்கலாம்ன்ற மாதிரி. இதுமாதிரி மூன்று இடங்களில் அமெரிக்கால பார்த்தேன்.

பார்த்துட்டே சந்தோஷமா நடந்துட்ருக்கறப்போ ஒரு வீட்டு வாசலில் இரண்டு ஆண்கள் உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க. நாங்கள நடந்து போயிட்டிருக்குறோம். எங்களுக்கு முன்னாடி ஒருத்தரு சின்னக் கொழந்தைய தூக்கிட்டுப் போயிட்டிருக்காரு. திடீர்னு அவரு உள்ளபோய்ட்டு வந்தாரு. பாத்தா அவரு தோள்ல ஒரு கிளி இருக்குது. கொஞ்சம் பெரிய கிளியா இருக்குதே, அமெரிக்கால இப்படிதான் இருக்குமா அப்படினு பாத்துட்ருக்கறப்போ சட்டுனு அந்தக் கிளி பறந்து வந்து என் தோளில் உக்காந்துடுச்சி. ரொம்ப ஆச்சரியமான விஷயமா இருந்துச்சி. எத்தனையோ தொலைவுலருந்து எத்தனையோ கண்டங்களையும் கடல்களையும் கடந்து வந்துருக்குறோம். இங்க ஒரு கிளி நம்மகிட்ட வந்து ஒட்டிக்குதேனு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.

சென்னையில் என் தோழி மாலா வீட்டில் ஒரு கிளி இருக்கும். நாங்க மீனாட்சினு கூப்டுவோம். பேசிகிட்டே தத்தி வந்து கன்னத்துல அலகை வச்சிட்டு பேசும். அதேபோல அங்க ஒரு  கிளியைப் பார்த்ததுமே அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது.

அதேபோல அமெரிக்கால கொஞ்சம் பெரியதாக இருக்கும் அணில்களோட முதுகுல மூணு கோடுகள் இருக்காது. மால்கள்ள குதிச்சு விளையாடிகிட்டு இருக்கும் அணிகளுக்கு கையில் ஒரு பாதாம் பருப்பு வச்சிகிட்டு காட்டினோம்னா, நம்ம கையிலருந்து வாங்கி எடுத்துகிட்டுப் போய் சாப்பிடற அந்த அழகு. நாம எத்தன தூரத்துலருந்து வந்திருக்குறோம், இங்க இந்தக் குழந்தைங்க இப்டி இருக்குறாங்கன்ற அந்த மகிழ்ச்சி இருந்தது.

இலங்கையில் ஆட்டுக்குட்டியப்பாத்தோம். அது ஒட்டிகிச்சு. ஒருத்தரு எடுத்துட்டுப் போறப்போ அதுகூடப் பேசிட்டு வந்தோம். இதுவும் நினைவுக்கு வந்துச்சு. அதான் சொல்லிடலாம்னு சொன்னேன்.

எங்களுக்கு  முன்னால கிளியப்பாத்தோம்னு சொன்னேன் இல்லையா, அந்தக் குட்டிப்பைய அவங்கப்பா அழச்சிட்டு வந்துட்ருந்தாரு. பேசிகிட்டு இருந்த நாங்க கெளம்பறோம்னு சொல்லிட்டு கெளம்பறோம். பைனு சொல்லிட்டு நாங்க கெளம்பினவொடனே அந்தக் கிளி மறுபடியும் பறந்து வந்து தோள்ள வந்து ஒக்காந்துடுச்சு. ஒரே ஆச்சரியமா இருந்துச்சு, என்ன பந்தம் இது, என்னவொரு பிரியம், பக்கத்துல இருந்ததில்ல, எதுவும் சாப்பிடக் கொடுத்ததில்ல, பேசினதில்ல, எங்கயோ இருந்த வந்த நம்மகிட்ட எதுக்கு வரணும், என்ன அவசியம்னு பார்த்துட்டிருந்தேன். அது மறுபடியும் வளக்கறவங்க கிட்ட போன பிறகு மறுபடியும் போட்டோ எடுக்க முடியுமானு நெனச்சி, அப்புறம் வேண்டாம்னு யோசிச்சாலும் பை சொல்லிட்டு கெளம்புனா மறுபடியும் தோள்ள வந்து ஒக்காந்தது. இப்படி மூன்று முறை அது நடந்தது. அளவில் பெரியதாக இருந்தது அந்தக் கிளி.

அதேபோல வாஷிங்டன்ல நாங்க பாத்த அந்த அணிகள் எல்லாமே அளவில்  பெரிதாக முதுகில் மூன்று கோடுகள் இல்லாமல் இருந்தன.

அந்த அணிலுக்கும் அந்தக் கிளிக்கும் நம்மள யாருன்னு எப்படித் தெரியும்? தூரத்திலிருந்து வந்திருக்கற எங்ககிட்ட மனிதர்களைப் போல பிரியத்தைக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

அதேபோல அமெரிக்கால ஒரு நாய்க்குட்டி ஒண்ணு. பக்கத்துல வந்து கண்ணுக்குள்ள கண்ணு வச்சிப்பாத்துட்டு மேல அப்படியே வந்து படுக்கும். என் நாத்தனார் அகளின் வீட்டுல வளர்க்கிற நாய் தான். கண்ணு பக்கத்துல வந்து பேசறது. அதெல்லாம் ரொம்ப சந்தோஷமான விஷயங்களா இருந்தன.

இலங்கைல ஆட்டுக்குட்டி மட்டும் தான் பாத்தோம். வந்து ஒட்டிக்கிச்சு. போட்டோ எடுத்துக்கல.

இந்த உயிரினங்களோட, இந்த நிபந்தனையில்லாத இந்த அன்பை அவங்களுக்கு யாரு சொல்லிக் கொடுத்தாங்க? நாம எதுவுமே பண்ணாம இந்தப் பிரியம் அவங்களுக்கு எப்படி வந்தது அப்படிங்கறத இந்தத் தருணத்துல நான் நெனச்சிப்பாக்கறேன்.

இன்னும் ரொம்ப விஷயங்கள் இப்போ தனித் தனி நிகழ்வுகளாக நினைவுக்கு வருது. ஒரு புத்தகம் எழுதும் அளவில் சொல்லலாம் போலிருக்குது. அதனால இதோடு முடிச்சுக்கலாம்.

ஜெயந்தி சங்கர்: கவிதையில் தான் உங்கள் தொடக்கம். சமீபகாலமாக கவிதைவெளியில் உங்களை அதிகமும் காண முடியாததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா?

மதுமிதா:  ஆமா. இலக்கியப்பயணத்தை கவிதையில்தான் தொடங்கினேன். நூற்றுக்கணக்கான கவிதைகள் தொடர்ந்து எழுதிய காலம் அது. 2003ல ஒரு தொகுப்பும், 2005, 2006 களில் மின்னூலாக ஒரு தொகுப்பும் வந்தது. அதற்குப் பிறகு கவிதைத் தொகுப்பு வெளிவரவில்லை. கவிதைகள் தொடர்ந்து எழுதிகொண்டிருந்து இப்போது எழுதவில்லைதான். கவிதை உலகம் சிறப்பாக இயங்கணும் அப்படிங்கறதுக்காக 😉 நாம எதாச்சும் எழுதி, வாசகர்களுக்கும் கவிதை உலகுக்கும் ஏதும் பிரச்சினை வர வேண்டாம்ன்ற விழிப்புணர்ச்சி வந்ததால நான் எழுதாம விட்டுட்டடேன்னு வச்சிக்கோங்களேன்.

கவிதை எனக்கு ரொம்பப் பிடிச்சமான விஷயம். சில காரணங்களால அதை தொடந்து பண்ண முடில. வரணும்னு இருந்தா வரட்டும்னு தான். மத்தபடி முக்கியமான காரணம் இலக்கியமும் வாசகர்களும் தப்பிக்கட்டும்ன்றதுதான்.

ஜெயந்தி சங்கர்: சிறுகதைகள் எழுதியிருப்பீர்கள்? அது குறித்து சொல்லுங்களேன்.

மதுமிதா: சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஆனா, சிறுகதைத் தொகுப்பு இதுவரை கொண்டு வரல்ல. ஒரு சிறுகதைத் தொகுப்பு ஒருவேளை கொண்டு வரலாம். ஆனா, அதற்கு இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தேவைப்படலாம்னு தோணும். அதிகமா வாசிக்கறதுல இருக்கற ஒரு பலன் என்னன்னா, சிறந்த சிறுகதைகளை நம்ம தமிழ்மொழிலயும் சரி பிற மொழியிலயும் சரி ரசித்து வாசித்திருக்கிறோம். அந்தளவுக்கு சிறப்பு இல்லாம ஒரு தொகுப்பு அவசியம் கொண்டு வரணுமான்ற தயக்கம் இருக்கு. அறம் போன்ற தொகுப்புகள், உங்களோட ‘ஈரம்’ சிறுகதை இருக்கற தொகுப்பு, செம்மணி வளையல் வாசித்தபிறகு, ஆண்டன் செக்காவ்வோட கதைகள், இதுமாதிரி நாம விசாலமா கதைகள் வாசிக்கறப்போ அதுவரை காத்திருக்க வேண்டியிருக்கு. அதுமாதிரி, சிறப்பான படைப்பு வந்தா மட்டுமே தரலாம் அப்டிங்கற விழிப்புணர்வு வந்திருக்கறதால தாமதமாயிட்டிருக்கு. சிறுகதைகள்  குறைந்து வருகிற இந்த கால கட்டத்தில் பலரும் சிறுகதைகள் எழுத வந்தா, விஷயங்கள் இல்லன்றமாதிரி, சிறப்பா தரமுடியும்ன்ற சூழலும் அதுல இருக்குது. இன்னும் ரெண்டு மூணு வருடங்கள்ள சிறுகதைத் தொகுப்பு வருதா, நான் தொடர்ந்து எழுதறேனா அப்பிடிங்கறத காலம்தான் நிர்ணயிக்கணும்.

ஜெயந்தி சங்கர்: நீண்ட கதை அல்லது நாவல் எழுதும் முயற்சிகளை நீங்கள் செய்ததுண்டா?

மதுமிதா: இரண்டு நீண்ட கதைகள் எழுதி இருக்கிறேன்.  நாவல் ஒண்ணு எழுதியிருக்கிறேன். ஆனா, இதுவரைக்கும் வெளிவரல்ல. என்னன்னா, சிறந்த படைப்பா நாம கொடுக்கறோமா என்கிற தயக்கம் இருக்குது. சிறுகதை சொல்றேன் இல்லையா? அதேபோல நாவலுக்கும் அந்த உணர்வு இருக்குது. இந்த நாவல் நூலகத்துக்கான என்னுடைய போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட நாவல்தான். சில என்ன சொல்வோம், இயல்பா எழுதறதுன்றது இல்லாம, கைல கால்ல சங்கிலிகளக் கட்டிகிட்டு எழுதறதுன்னுவோம் இல்லையா அதுபோல எழுதப்பட்டது அது. முன்பே எழுத நெனச்சிருந்து இப்போ போன வருடம் ஒரு நாவல் போட்டி வச்சிருக்கறப்போ அதுக்கு எழுத வேண்டிய கட்டாயம் வந்தது. ஒரு ஆறு மாதங்கள் கொடுத்து எழுதச் சொல்லிருந்தாங்க. இருக்கற நேரத்துல ஏதேதோ எழுதி, அதாவது ஒரு நாவல முன் திட்டமிடுதல்னு இருக்கில்லையா அது எதுவும் இல்லாம எழுதி முடிக்கப்பட்டது. இப்ப, அதுல சில விஷயங்களை, அரசியல் சூழல்சார்ந்த விஷயங்கள சேர்க்க வேண்டியிருக்குது. அதுல ஒரு இக்கட்டான விஷயம் என்னன்னா, நானே ஒரு கதாபாத்திரமா அதுல வரேன் அப்டிங்கறதுனால புனைவுகள்ள சில விஷயங்கள கொடுக்க முடியல. ஒரு கதாபாத்திரம் பெயர் கொடுத்து, அவங்களப்பத்தி சொல்றதுபோல தான் அந்தநாவல் இருக்குது. இருந்தாலும் நாமாக இல்லாத பட்சத்தில் எதுவேணும்னாலும் புனைவாக சேர்க்க முடியும். இப்ப, எது எழுதினாலும் இவங்களப் பத்தினதுனு தோணும்ன்றதுனால இதுபோல சங்கிலிகள வச்சிகிட்டு எழுதக்கூடாதுன்றதக் கத்துக்கொடுத்தது அது. ஒண்ணு  ஆட்டோபயாகிராஃபியா இருந்திருக்கணும் அது. அப்படி இருந்தா அது தோணாது. அப்பவும் வெளிப்படையாக சில விஷயங்களை எழுத முடியாது. அப்படி இல்லைன்னா வேற விஷயங்களா அதைத் தந்திருக்கணும். நாவலா கொடுக்கறதுல சில சிக்கல் இருக்கு. அதில் சேர்க்க வேண்டியவையும் இருக்குது. அது என் வாழ்நாள் லட்சியம் அது. ஆகவே, கண்டிப்பாக விரைவில் அது வெளிவரும். குறுநாவல்களப்போன்ற நீள்கதைகள் எப்ப வரும்னு என்னால சொல்ல முடியல. ஆனா, சிறுகதைகள், குறுநாவல்களுக்கு முன்னால இந்த நாவல் ரீரைட் பண்ணி, சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து எடிட் பண்ணி கொண்டு வரணும். காலம் அனுமதித்தால் அவசியம் அது வரும் அப்படிங்கறத, மகிழ்ச்சியோடு சொல்லிக்கறேன்.

ஜெயந்தி சங்கர்: நீங்கள் சொல்வதைப்பார்த்தால், இது நாவலில் வராது, சுயசரிதையில்தான் வரும் என்றே படுகிறது. வேறு பெயரெல்லாம் வேண்டாம் உங்கள் பெயரிலேயே உள்ளபடி கதை வரலாமே. நாவல் என்ற வகைமைக்குள் வலுவில் புகுத்துவதைவிட இப்படிச் செய்வது நூலுக்கு நியாயம் செய்தாற்போல இருக்குமே. புனைவு இல்லாதபட்சத்தில் நீங்கள் ஏன் இந்நூலை ’கதையாக விரியும் சுயசரிதை’ என்ற வகைமையிலேயே உருவாக்கக்கூடாது?

மதுமிதா: நீங்க சொல்லறதும் சரிதான். ஆனா சுயசரிதை எழுதும் அளவுக்கு நாம இருக்கிறோமாங்கறது பெரிய கேள்விக்குறி 😉 காலம் எப்படிக் கைகோர்த்து அழைத்துப் போகிறதோ பார்க்கலாம். அதுபடி செய்யலாம். மனம் திறந்த வெளிப்படையான ஆலோசனைக்கு நன்றி சொல்லிக்கறேன்.

ஜெயந்தி சங்கர்: உங்களுடைய அனுபவப் பார்வையில் மொழிபெயர்ப்பிற்கான சமகாலத் தேவை என்று எவற்றைச் சொல்வீர்கள்? ஏன்?

மதுமிதா: சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் மகாகவி பாரதி. நம்ம மொழில நாம படைக்கிறது வேற. நம்முடைய இந்திய மொழிகள், உலக மொழிகள்லயிருந்து கண்டிப்பாக கொண்டு வந்து சேர்க்க வேண்டிய விஷயங்கள் இருக்கு.  இதுதான் முக்கியம்னு நீங்க சொல்றீங்கனு வச்சிகிட்டா, புனைவுகள் முக்கியமானதா? அந்தந்த தேசத்தின் மக்களின் கலாசார, நிலப்பரப்பை, வாழ்க்கைமுறையை, சமூகம் போன்ற விஷயங்கள் பலதும் இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சது எதுன்னா சுய முன்னேற்றத்துக்கு ஒரு மனிதர் தன்னை உயர்த்திக் கொண்டு வெற்றியடைந்த நிலை இருக்குது இல்லையா? அதை வாசிக்கறதுக்கு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

எந்தந்த துயரங்களை கடினமான பாதைகளைக் கடந்து வந்து அவங்க சேர்றாங்கன்றது. உலகம் முழுக்க இருக்கற அந்த மக்களைப் பத்தின விஷயங்கள் வேறு. அடுத்து வரலாறு. வரலாறு வந்து அதிகமாக மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டிருக்கு. அந்த வரலாறு மொழிபெயர்க்கப்பட்டு நம்ம மொழிக்கு வர வேண்டியதிருக்கு. வரலாறுன்று சொல்றப்ப  மன்னர்களுடைய வரலாறாக மட்டுமில்லாம கலைஞர்களுடைய வரலாறாகவும் நாம பாக்கலாம். எழுத்தாளர்கள் கடந்து வந்த பாதை, ஓவியர்கள் கடந்துவந்த பாதை திரைப்படக்கலைஞர்கள் கடந்து வந்த பாதை இதெல்லாமேகூட மொழியாக்கத்துல வரணும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையுமே கூட ஒரு வரலாறு தான். அதுல சமூக நலனுக்காக என்ன செய்றாங்க அப்படிங்கறதுல அந்த மொழியாக்கத்தோட முக்கியத்துவம் அதிகமாகுது. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமான படிப்பினைகளை நமக்குக் கொடுப்பதால ஒவ்வொன்றுமே மொழியாக்கம் செய்யப்பட வேண்டியவை அப்படிங்கறது என் கருத்து. எனக்குப் பிடிச்ச அலெக்ஸ் ஹேலி எழுதின ஒரு நூல் The Roots, ஏழு தலைமுறைகள் அப்படினு தமிழ்ப்புத்தகமா வந்திருக்கு. இதுமாதிரியான மொழியாக்கம் வரும்போது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த வரலாற்றில் எப்படி ஏழு தலைமுறையினர் எப்படி வந்து சேர்ந்தோம்னு அலெக்ஸ் ஹேலி குடுக்கறப்போ அத வாசிக்கிறப்போ அத்தனை தலைமுறையையும் நாம கூட இருந்து கடந்திருக்குறோம். அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சோதனைகள் துயரங்கள், மனித வாழ்வின் எவ்வளவு பெரிய அவலமான விஷயம் அது?

சித்திலிங்கய்யா கன்னடத்துல எழுதின சேரின்ற ஆக்கத்தையும் தமிழ்ல மொழியாக்கம் செஞ்சிருக்காங்க. அந்த ஆப்பிரிக்க அடிமைத்தனத்து நிகரானதாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன். தமிழில் அவ்வளவு உக்கிரமான விஷயம் இருக்குதானு தெரியல்ல. கவிதைகள்ள இருக்குது. ஆனா சித்திலிங்கய்யா கொடுத்துருக்கற மாதிரியான அந்த வாழ்க்கை புனைவுகள்ள கொடுக்கப்பட்டிருக்கே தவிர இப்படி இல்லை. அந்த வாழ்க்கைய எப்படிப் பார்க்கறேன்னா இன்னும் மலம் எடுக்கற, கழிவுகளைக் கைகளால் எடுக்கற, கழிவுச் சாக்கடைகளைக் கைகளால் எடுக்கற மனிதர்களை நாம பாக்கறோம். ரொம்ப பாதிப்பா இருக்கு. அந்த ஆப்பிரிக்கர்களை அமெரிக்கர்கள் செய்ததற்கு நிகராக நான் இதைப் பார்க்கிறேன். இவையெல்லாம் மொழியாக்கம் செய்தோமானால், பிற மொழிகளிலிருந்து இதுபோன்ற படைப்புகள் தமிழுக்கு வரவேண்டும். தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கும் போக வேண்டும்.

அரசியல்ல இப்போ நடக்குதில்லையா. வேற மொழில பேசறப்போ, நமக்கு தமிழுக்கு அது வந்தே ஆகணும். இந்தில இருக்குதா, வேற மொழில இருக்குதா, ஆங்கிலத்துல இருக்குதா எதுல இருந்தாலும் இப்போது இருக்குற அரசியல் சூழலில் அது வந்தே ஆகணும். நீதிமன்ற வழக்குகள் எல்லாமே ஆங்கிலத்துல தான் இருக்கின்றன. அதுவும் தமிழில் இருந்தா எளிய மக்களுக்குப் புரியும்படி இருக்கும். அவரவருக்குப் புரியும் மொழியில் அந்த விஷயங்கள் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் அப்டினு நெனைக்கிறேன்.

அவங்கவங்களுக்குத் தேவையான துறைகளில், இது எனக்குத் தேவை அப்படினு ஒருவர் தன்முனைப்புடன் அதை செய்தே ஆகணும். அதைத்தான் விரும்பறேன்.

ஜெயந்தி சங்கர்: இந்த இடத்தில், துறைசார்ந்த மொழியாக்கம் என்று சொன்னதை அடுத்து இதைக் கேட்கத் தோன்றுகிறது. தமிழில் துறைசார்ந்த மொழியாக்கம் ஒரு முறைமையும் கட்டுப்பாடும் சீர்மையும் இல்லாமல் இருக்கிறதென்றே என்று நீங்கள் உணர்ந்த சம்பவங்கள் உண்டா? தரங்குறைந்த மொழியாக்கங்கள் மலிந்து வருகிறகாலங்களில் மூல மொழியிலேயே இது இருந்திருக்கலாம் என்று நொந்ததுண்டா?

மதுமிதா: கண்டிப்பாக இதுபோன்ற சிலவற்றைப் பார்த்திருக்கிறோம். கடந்தும் வந்திருக்கிறோம். எதையும் இப்போது இங்கே குறிப்பிட்டு சொல்லவில்லை.

அதனாலேயே அப்படி நம் தமிழாக்கங்கள் வந்துவிடக்கூடாதென்று மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடணும் செயல்பட வேண்டியுள்ளது. சில இடஙகளில் வலிந்து தமிழ் சொற்களைப் புகுத்தும்போதும் இப்படித் தோன்றும்.

ஜெயந்தி சங்கர்: சமீப ஆண்டுகளில் நீங்கள் எழுதியுள்ள மொழியாக்க நூல்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை உங்களுக்குக் கொடுத்த திருப்தி, சவால்கள், அவற்றிலிருந்து நீங்கள் கற்றவை போன்ற எல்லாவற்றையும் சேர்த்தே சொல்லுங்கள்.

மதுமிதா:   மொழியாக்கப் பணி என்பதே மிகவும் சவால்கள் நிறைந்த பணிதான். ஏன்னா, அதை முடித்து புத்தகமா வர்றப்ப மூலநூல் அளவுக்கு, மொழிபெயர்ப்பு நூல் வெளியில் கவனம் பெறுவது கிடையாது. இருந்தாலும் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மொழிபெயர்ப்பு எனும்போது எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்க்கிறோமோ அந்த இரண்டு மொழிகளில் சில நுட்பமான விஷயங்களை நாம தெரிஞ்சி வச்சிருக்கறது அவசியம். தெரியாத பட்சத்தில் நாம் அகராதியை வைத்து, டிக்‌ஷனரியை வைத்து எந்தெந்த இடங்களில் எந்தெந்த சொற்களை உபயோகிக்கலாம் என்று நாம யோசிக்க வேண்டும். நேரம் எடுத்துக்கணும். அதைக் கடந்து ஒரு புதுசொல் பொருத்தமாகக் கிடைக்கும். இந்த இடத்தில் இந்த சொல் தரக்கூடாது. ஒரு சொல்லுக்கு மறு மொழியில் எந்த சொல் பொருத்தமாக இருக்கும்ன்ற நிர்ணயம் செய்யணும். நமக்கு ஒரு நிமிஷத்துல அது பிடிபடலாம். சட்டுன்னு அது தெரிஞ்சுடலாம், அல்லது பத்து நிமிஷத்துல தெரியலாம். அந்த சொல் கிடைக்க ஒரு மணிநேரம் கூட எடுக்கலாம். ஐந்து நாள், பத்து நாள் கழித்துக் கூட அந்த சொல் கிடைக்காது போகலாம். இன்னொரு சொல்லை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். வார்த்தை சிக்கல்களை விடுத்து வரிகளுக்குண்டானதை சொல்லலாம். சில சமயங்களில் நாம் வேகமாக, வேகமாக… இல்ல அப்படின்னு சொல்ல முடியாது. மனவோட்டத்தின் வேகத்தில் மொழிபெயர்த்திருப்போம். மறுபடியும் வேறொரு நேரத்தில் அதையே எடுத்து வாசித்துப் பார்க்கறப்போ வேறொரு மனநிலையில் இன்னும் சிறப்பா யோசிக்க முடிவது போலப்படும். இல்லைன்னா செய்திருக்கிறதே சிறப்பாக, ஓர் அனிச்சை செயலாக நடந்திருக்கும். சில வேளைகள்ள வாக்கிய அமைப்பு எப்படி இருக்குன்றத நம்மால் நிர்ணயம் பண்ண முடியாது. திரும்ப வாசிக்கறப்பதான் அது தெரியும். சில சமயங்களில் நாம் எழுதிய வாக்கியங்களை வாசிக்கும்பொழுது வாசகர்கள் வாசிக்கையில் உணரக்கூடிய சிக்கல்கள் நாம் இதிலேயே உணர வேண்டியதிருக்கும். ஆனால், அது முதலில் நமக்குத் தெரியாது. நம் கவனத்துக்கு வரவும் வராது. ஏன்னா, நாம் பலமுறை மூலமொழியிலும் நமது மொழிபெயர்ப்பிலும் தொடர்ந்து வாசித்து வந்திருப்போம். ஆகவே, இப்போது வாசிக்கும்போது உடனே நமக்குப் புரிந்து விடும். அந்தப் புனைவோ அல்லது உண்மை சம்பவமோ அது மூலமொழியிலிருந்து நமக்கு அப்படியே சட்டென்று புரிந்துவிடும். அதனால், அந்த எழுதுகிற மனநிலையிலிருந்து, வெளியே வந்து கொஞ்ச நாள் ஆறப்போட்டு அந்த வரிவடிவம், அந்த செண்டன்ஸ் ஸ்ட்ரக்ச்சரில் மேலும் மாற்றம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே நமக்குத் தெரியும். அதற்குள் காலம் கடந்துவிட்டிருக்கும். இதை சிலர் மொழிபெயர்ப்பாளரிகளின் குற்றமாக சில சொல்லுவார்கள்.  தெரிந்து செய்வதில்லை அது இயல்பாக நடக்குது. எப்படி அதிலிருந்து சரியானதைக் கொடுக்குறோம் என்பதுதான் நமக்கான சவால். பொருத்தமான சொல்லைக் கொடுப்பது, இன்னொன்று அந்த வரிவடிவத்தை சரியாகக் கொடுப்பது என்பதே நமக்குப் போதுமான விஷயம்.

நான் எழுதிய மொழியாக்க நூல்கள் பற்றி சொல்லும்படி கேட்டிருந்தீங்க. கடைசியா பண்ணினது காளிதாசரிடைய மேகதூதம். அது சம்ஸ்கிருதத்திலிருந்து. பிறகு தெலுங்கிலிருந்து பெத்திபொட்ல சுப்பராமய்யாவின் சிறுகதைகளின் தொகுப்பு முதல்பாகம் செய்திருந்தேன். மூன்று வருடங்களாக படைப்பாக்கப் பணிகள் செய்ய முடியவில்லை.

சம்ஸ்கிருதத்தில் சில சிக்கல்கள், மேகதூதம் செய்யும் போது. காளிதாசர் வர்ணனைகளை, இயற்கையின் அழகை, உவமைகளைக் கொட்டிக் குவித்திருப்பார். சரியான கலாரசிகர். இவ்வளவு ரசிச்சி ரசிச்சி பண்ண முடியுமா அப்படிங்கறது மேகதூதத்திலும் சரி ருதுசம்ஹாரத்திலும் சரி இத்தனை அழகை, வளங்களை அவர் தந்திருக்கிறார் என்று படும். அந்த அளவுக்கு தமிழில் நான் கொண்டு வந்திருக்கிறேனா என்பது எனக்குத் தெரியல. நம்மால் முடிந்த அளவுக்கு நியாயம் பண்ணியிருக்கிறோம் சிறப்பைத் தந்திருக்கிறோம் அந்த மொழிக்கு என்று எடுத்துக்கலாம். ஒரு கவிதை அவர் எப்படி நெனச்சிக் கொடுத்திருப்பர்னு நாலைந்து நாட்களுக்கு யோசித்து, இப்படித்தான் இருக்கும் என்று கொடுத்தது. அந்தக் கவிதை வந்து, வருடங்களாகி விட்டது என்பதால் நினைவில்லை. அந்த புத்தகத்தைப் பார்த்தால் தான் எந்தக் கவிதைன்னு சரியாகச் சொல்ல முடியும். ஒரு சுடரின் வெளிச்சத்தில் அவனும் அவளும் இருக்கும் அந்த அழகைத் தருவது. கண்டிப்பாக இந்த சொல் வராது, கண்டிப்பாக இந்த சொற்றொடர் இருக்கக்கூடாதுனு யோசிச்சி யோசிச்சி செய்தது. மேகதூதம் ருதுசம்ஹாரம் தமிழினியில்தான் பிரசுரமானது. தமிழினி வசந்தகுமார் அவர்கள்தான் அதைக் கொண்டுவந்தாங்க. அது முடிந்த பிறகு அவர் தான் தெலுங்கிலிருந்து ஏன் தமிழாக்கம் எதுவும் செய்யலைன்னு கேட்டாங்க. அதுவரைக்கும் தெலுங்கிலருந்து நான் பண்ணிருக்கல்லன்றப்போ நண்பர் பெருகுராமகிருஷ்ணா  அவங்களோட கவிதைத் தொகுப்பு ஒண்ணு பண்ணிருந்தேன் நட்புரீதியாக. வேற ஒண்ணும் செய்ததில்ல. ஏன்னா தமிழாக்கம் செய்ய மூலப் படைப்பாளியுடைய அனுமதி தேவையா இருக்கு. அடுத்து கண்டம்ப்ரரி ரைட்டர்ஸ், சமகால எழுத்தாளர் ஒருவரோட ஆக்கத்தை நான் செய்றேங்கறப்போ  இருக்கறதுலயே சிறப்பான படைப்பை செய்தாதான் நாம் கொடுக்கற நேரத்துக்கு, நாம் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் அப்படிங்கறப்போ, அந்த சிறப்பான படைப்பு எது, அந்தப் படைப்பாளியோட அனுமதி வாங்க வேண்டும்ங்கற சிக்கல் எல்லாம் இருக்குது. இது சிறப்பான நூல்னு நீங்க சொன்னீங்கன்னா நாம்ப பண்ணலாம்னு சொன்னப்போ, இதை தமிழாக்கம் செய்யலாம்னு சொல்றதுக்கு உங்களுக்கு எந்தப் புத்தகமும் நினைவுக்கு வரவில்லையான்னு கேட்டாங்க. வேமன சதகம் எனக்குப் பிடிக்கும்.  தெலுங்கு எழுதப் படிக்க நாம கத்துக்கறப்போ, ஆரம்பத்தில்  வேமன சதகம், சுமதி சதகம்னு அதெல்லாம் கத்துகிட்டோம் என்றதும், அப்போ  அது இருக்குதில்லையா, அதை ஏன் நீங்க செய்யக்கூடாதுனு கேட்டாங்க. வேமன சதகம் தமிழாக்கம் செய்யலாம் என்றால், நூறுநூறு பாடல்களா செய்யலாமானு கேட்டேன். சம்ஸ்ருதத்துலருந்து திரிசதகமாக பர்த்ருஹரி சுபாஷிதம் 300 பாடல்கள் சந்தியாபதிப்பகத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவந்திருந்தாங்க. அதுபோல வேமன திரிசதகம்னு 300 பாடல்களாகத் தமிழாக்கம் பண்ணலாமானு கேட்டிருந்தேன். ஏன் ஆயிரமும் முழுசா பண்ணக்கூடாதுனு வசந்தகுமார் ஐயா கேட்டாங்க. 1000 பாடல்கள் நம்மால் பண்ணமுடியுமான்றது ஒண்ணு. அதோட தேர்ந்தெடுத்த 100 சிறந்த பாடல்களக் கொடுக்கறப்போ அது எடுப்பாக இருக்கும்னு சொன்னேன். ஆயிரம் பாடல்கள் முழுவதுமாக வர்றபோது எப்படி இருக்கும்ன்றது தெரியல. அப்போ அவர் ஒரு உறுதி கொடுத்தார். நீங்க செய்ங்கம்மா, நாம புத்தகமா கொண்டு வரலாம்னு. அதுல பல சிக்கல்கள் இருந்தன. இருந்தாலும் அதை செய்து முடித்தாகிவிட்டது. சொற்களைக் கண்டுபிடிக்கறது, அந்தக் காலகட்டத்துல இப்படி இருக்குறாங்க அப்டிங்கறபோ அருமையான தத்துவக் கருத்துக்கள் சொல்லிக் கொண்டு வரும்பொழுது பெண்களை உயர்வாகக் குறிப்பிடுகிறார்; ஒரு சில பாடல்களில். அதுவும் இல்லாமல் இருக்கிறது. அதெல்லாம் கடந்து ஆயிரம் பாடல்கள் முடித்து வந்தாச்சு. அடுத்து  சாகித்திய அகாதெமிக்காக பெத்திபொட்ல சுப்பராமய்யா அவர்களுடைய 34 சிறுகதைகள், முதல் தொகுப்பு தமிழாக்கம் செய்தேன். சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். மிகவும் தன்மையான மனிதர். அவருடைய படைப்பு, எளிமை நிலையில், விளிம்பு நிலை மக்களின் வலிகளை, வாழ்க்கை நிலையை மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும். சில இடங்கள்ல சில சொற்கள், அதாவது இங்க வட்டாரவழக்குனு சொல்றோமில்லையா, அதுபோன்ற சொற்கள் வர்றப்போ பணி தாமதமாகிக் கொண்டே இருந்தது. அப்போது பெத்திபொட்ல சுப்பராமய்யா அவர்கள் சாகித்ய அகாதமியில்  நான் தான் தமிழில் மொழியாக்கம் பண்றேன்னு தெரிஞ்சிகிட்டு, என்னுடைய தொலைபேசி எண்ணை வாங்கி என்னை அழைத்தார்.  எப்படிப் போயிட்டிருக்கும்மா, சிறுகதைகள் உங்களுக்குப் பிடிச்சிருக்கா, உங்களுக்கு ஏதும் சிக்கல் இருக்கானு கேட்டாரு. அற்புதமான படைப்பைக் கொடுத்திருக்கீங்க. எனக்கு வேலை செய்யறது காலதாமதம் ஆகிறதுனு சொன்னேன். என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேக்கலாம்னு சொன்னாங்க. இந்த வரிய நா இப்படி எழுதியிருக்கேன்னு ஒரு பத்திருபது வரிகள வெவ்வேற கதைகள்லருந்து சொல்றப்போ சரியாதானே செஞ்சிருக்கீங்க, ஏன் தயங்குறீங்க, ஏன் தாமதப்படுத்தறீங்கனு கேட்டாங்க. மறுபடியும் மற்ற கதைகளை முடிச்சிட்டு வரும்போது,  மூன்று நான்கு மாதங்கள் கழித்து  மறுபடியும் அழைத்தார். இன்னும் முடிக்கலைங்கய்யா, இதுதான் பண்ணிட்டிருக்கேன்னு சொன்னேன். அவரு சொன்ன ஒரு வார்த்தை மொழியாக்கத்துல இருக்கற சிரமங்கள் சிக்கல்களையெல்லாம் தூக்கித் தவிடு பொடியாக்கிட்டு தொடர்ந்து மொழியாக்கம் செய்யலாமென்னும் ஆர்வத்தைக் கொடுத்தது. டிரான்ஸ்லேட்டர்ஸ் லிபர்ட்டி எடுத்துக்கோங்க அப்படினு சொல்றாரு. அப்போ அதுவரைக்கும் அவ்வளவு மொழியாக்கங்கள் செய்திருந்த போதிலும் டிரான்ஸ்லேட்டர்ஸ் லிபர்ட்டினு இருக்குது அத எடுத்துக்கலாம், அதை எப்போ எப்படி எடுத்துக்கணும்ன்றது எனக்குத் தெரியவே இல்ல. அதை அவர் சொன்ன பிறகு, அந்தப் புத்தக வேலையை நான் முடிச்சுத் தரேன், எதையும் பாக்கி வைக்காமனு சொன்னேன். முடிந்த அளவில் சிறப்பாக அதைப் பண்ணனும்னு அதைப் பண்ணியிருக்கிறேன். அதை வாசிக்கிறபோ அது நமக்கு நாமே செய்த கதை அப்படின்ற நிலையில வாசகர்களுக்கு எப்படி இருக்குதுன்னு, வாசகப் பார்வைன்றது நமக்குத் தெரியல. அவருக்கு அந்தத் தமிழாக்கம் பிடித்திருந்தது. ஆனால், அவரைப்பற்றிய குறிப்பு அந்தப் புத்தகத்தில் இல்லை. இப்போது அவர் இவ்வுல்ச்கில் இல்லை. புத்தகம் அச்சில் வெளிவந்ததும் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஜயவாடாவில் அதை வெளியிடணும் என்று சொல்லி இருந்தார். அதற்கு முன்பே அவரின் மறைவு நிகழ்ந்து விட்டது.  இப்படியான இழப்புகள் சோர்வைத் தருகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்த ஒரு நாவலும், சில சிறுகதைகளும் இன்னும் அச்சில் வரவில்லை.

மொழிபெயர்ப்புப் புத்தகம் நூலாக வந்த பிறகு அதை யார் வாசிச்சாங்க, வாசிக்கல்ல, இல்லன்னா எங்கேயாவது அதை வாசிக்கிற அனுபவம்னு சொல்லி எழுதிக் கொடுத்திருக்காங்களா, இல்லைன்னா நூல் விமர்சனம்னு பேசியிருக்கிறாங்களான்னு எதுவும் தெரியல. இதுதான் தமிழ் இலக்கிய உலகத்துல இருக்கற முக்கியமான, சிக்கலாகவும் சிரமமாகவும் பார்க்க வேண்டியதாக இருக்கு. ஒரு நூலை வாசிக்கும் போது இருப்பதைவிட அந்த நூலை மொழிபெயர்க்கும்போது இருக்கற ஆத்மார்த்த திருப்தி அதற்காக நாம என்னவேணா செய்யலாம். முடிக்கும்போது எல்லா சிரமங்களும் சிக்கல்களும் பறந்துபோய்விடும். நமக்குள் ஒரு மனநிறைவு ஆத்மார்த்தமாக நிகழும். நம்ம வேலையை நாம சரியா பண்ணிட்டிருக்குறோம். முடிஞ்ச அளவுக்கு பண்றோம்ன்றப்போ அடுத்தமுறை மேலும் சிறப்பா செய்லாம்னு தோணும். இதெல்லாமே மொழிபெயர்ப்புல இருக்கற சிக்கல்கள் தான், அவற்றைக் கடந்து வர்றப்ப கெடைக்கிற திருப்தி இருக்கு பாத்தீங்களா அதற்கு அளவே கெடையாது. அதுக்காக என்னவேணாலும் பண்ணலாம்.

ஜெயந்தி சங்கர்: தற்போது நீங்கள் செய்துகொண்டிருக்கும் அல்லது எடுத்துச் செய்யவிருக்கும் மொழியாக்கப் பணிகள் யாவை?

மதுமிதா:  இப்ப செய்ய இருக்கற மொழியாக்கப் பணிகள்னு சொன்னா, சில வருடங்களுக்கு முன்னாடி செய்துமுடித்த ஒரு புத்தகம் நூலாக்கப்படாம இருக்குது. ஒன்று நாவல், ஒன்று சிறுகதை தொகுப்பு நூல்.  மொழியாக்க சிறுகதை தொகுப்பு நூல் எப்ப வரும்ன்றத இன்னும் முடிவு பண்ணல. முடிக்காம இருக்கு. மொழியாக்கநாவல் இந்த வருடம் வர்றதுக்கான வாய்ப்பிருக்கு. உடனே வந்துடலாம்.

வேற எந்தத் திட்டமிடலும் இப்ப வச்சிக்கல. இடையில எப்பவாவது பிறமொழிக்கவிஞர்களோட கவிதைகளை மொழிபெயர்த்துகிட்டு இருக்கேன். பிறமொழிக் கவிதைகளை மொழியாக்க நூலாகக் கொண்டு வரலாம்னா, அது எப்ப நடக்கும்ன்றது தெரியல. இனி தான் திட்டமிடணும். சில குடும்பச்சூழல்களாலும் வேறு சில பணிகளினாலும் அடுத்த படைப்பு எதுன்றது தெரியாம, எப்போது வரும்ன்றது தெரியாம கடந்து போயிட்டிருக்கு.

ஜெயந்தி சங்கர்: நீங்கள் குறிப்பட்ட அந்த மொழியாக்கநாவல் யார், எந்த மொழியில் எழுதியது? எதனைப் பற்றியது அந்த நாவல்? எந்தப்பதிப்பகத்தார் எப்போது பிரசுரிப்பார்கள் என்று சொல்லுங்களேன்.

மதுமிதா: ஆங்கிலக் கவிஞர், எழுத்தாளர் சில்வியா ப்ளாத்தின் The Bell Jar என்னும் ஆங்கில நாவல்.  தன் வாழ்வையே பரிசோதனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் படைப்பு. படைப்பில் அவர் செய்திருப்பது போலவே அவருடைய காலமும் தற்கொலையிலேயே முடிந்தது. நண்பர் அஜயன்பாலா அவர்கள் இந்தப் படைப்பினை தமிழாக்கம் செய்ய  பரிந்துரைத்திருந்தார். அவருடைய பதிப்பகத்தில் வெளிவரவில்லை. காலம் அனுமதித்தால் ஒருவேளை இந்த வருடம் தமிழினி பதிப்பகத்தில் வெளிவரலாம்.

ஜெயந்தி சங்கர்: மானுடவாழ்வில் இலக்கியத்தின் பங்கு என்று நீங்கள் இப்போது கருதுவது இளமையில் நீங்கள் சிந்தித்ததிலிருந்து வேறுபடுகின்றதா? எவ்வாறு?

மதுமிதா: மானுடவாழ்வில் இலக்கியத்தின் பங்குன்றத சிறுவயதில் இலக்கியத்தைப் படிக்கறதுக்கும் ஐம்பதைக் கடந்த இந்த வயதில் நினைக்கறதுக்கு பெரிய வித்தியாசம் இருக்குங்க. இளமைல இலக்கியம்ன்றப்போ அதிக அனுபவம் இருக்காதில்லையா? நமக்கு வயது ஏற ஏற நமக்கு அனுபவங்கள் அதிகமாகிறது. வாசிக்கக் கற்றுக் கொண்ட அந்த சமயத்திலேயே வாசிக்க பல இல்ச்க்கியங்கள் கிடைக்கும்போது பலவற்றை வாசிக்கிறதிலும் அதை ரசிப்பதிலும் அவற்றை நினைவுகூர்ந்து பார்ப்பதிலுமே போகும். கண்களை மூடி மனக் கண்ணில் பார்த்து ரசித்த அந்த இலக்கியம் பிடித்திருந்தது. அது சிறுவர்கதைகளாகட்டும், இரும்புக்கை மாயாவி பினாச்சியோ, மந்திரவாதி, முகமூடி இதுபோன்ற சிறுவர்கள் கதைகளாகட்டும், பஞ்சதந்திரக் கதைகள், அரேபிய இரவுக் கதைகள் போன்ற நீதிபோதனைக் கதைகளாகட்டும், அக்பர் பீர்பல், முல்லா கதைகள் எல்லாமே. ஏழெட்டு வகுப்பு கடந்து வருகையில் வீட்டில் பெரியவர்கள் என்ன படிப்பார்களோ அதைப் படிக்க ஆர்வம் பிறக்கும். ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள், பெரும்பாத்திரங்களோடு அதெல்லாம் மிகவும் சுவையாக இருந்தது. அருமையாக இருந்தது. அதையடுத்து தமிழிலக்கியம், பிற இலக்கியங்கள் என்று நாம் வாசிக்க ஆரம்பித்த காலகட்டம். பரந்துவிரிந்த அந்த இலக்கிய அனுபவம் வந்து திகட்டத் திகட்ட அந்த சுவையை நாம உணர்ந்து ரசிக்க முடிந்தது. ஆனா, வாழ்க்கை அப்படி இல்ல பாருங்க. நாம் வாழ்க்கையில் சந்திக்க நேரும் மனிதர்கள் வெவ்வேறு மொழிசார்ந்த வெவ்வேற இனக்குழுக்களை சார்ந்த பலதரப்பட்ட மக்களை சந்திக்க நேரும்போது அனுபவங்கள் அபரிமிதமானது. அதுவும் இந்த நூலகப்பிரச்சினையில் நான் சந்திக்க நேர்ந்த மக்கள் அதிகார வர்க்கத்திலிருந்து ஆட்சியாளர்களிலிருந்து கடைக்கோடி மக்கள் வரை சந்திக்கக்கூடிய அனுபவம் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்னு நெனைக்கிறேன். உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அந்தக்கால கட்டத்துல எங்க பிரிவுல பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் வெளியே போக முடியாது. திரைமூடப்பட்ட ரிக்‌ஷாக்களில் தான் நாங்கள் பள்ளிக்கே சென்றோம். இப்போது அது கிடையாது.  மாறிவிட்டது. பெண்கள் கல்லூரிகளுக்கு வேலைக்கு சென்று எல்லாமே செய்கிறார்கள். அந்தக் கட்டத்தில் அது இல்லை. திருமணமான பிறகுதான் வெளியுலகத்தையே பார்க்க வேண்டியதிருக்கும். அந்தக் காலகட்டத்துலதான் இந்த புத்தகங்களின் மீதான அதிகமான ஈடுபாட்டைக் கொடுத்தது. அதற்குப் பிறகு தான் வெளியுலகத்துக்கே போக முடிகிறது. அதாவது திருமணம் முடிந்த பிறகு தான் வெளியுலகம் என்று வருகிறது. அனைவரையும் பார்க்கிறோம். பலதரப்பட்ட அனுபவங்கள் வாய்க்கின்றன. அப்போது ரசித்த இலக்கியத்தை ரசிக்கும் மனநிலை இப்போதும் இருக்கிறது. அதை மாற்றவே முடியாது. உலக இலக்கியம் என்று வரும்போதும் உலக மக்களின் முன்னேறத் துடித்த, முன்னேறிய மக்களின் கண்ணீர் கதைகளை வாசிக்கும்போது மனம் நெகிழ்ந்துபோய் அழுது கரைந்துன்னு எல்லாமே மிகவும் பிடித்திருக்கிறது என்றாலும் அந்த இளம் வயதில் இருந்த அது இப்போது இல்லவே இல்லை.  மனிதர்களின் வாழ்க்கைப்பாடமும் நமக்குக் கற்றுத்தந்த பாடங்களையும் எத்தனை துயரங்களை எத்தனை சோகங்களை எவ்வளவு மகிழ்ச்சியை அத்தனையையும் கடந்து வந்திருக்கிறோம். நம் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் தோழி எவ்வளவு உயிர்ப்போடு இருக்கிறாள். நாம் சந்திக்காத ஒரு பெண், அன்றைக்கு முதன்முதலில் சந்திக்கையில் எவ்வளவு அழகாக அதைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றெல்லாம் பல்வேறு வாழ்க்கைப் பாடங்களை கடந்து வந்தபின்னும் மரணங்கள் கற்றுக் கொடுக்காததையா மனிதர்கள் எழுதிய இலக்கியம் கற்றுக் கொடுக்கப்போகிறது என்பதும் இந்த அனுபவத்தில் வந்திருக்கிறது. இத்தனை வயது கடந்த பிறகும் வாசிப்பதை நிறுத்த முடிவதில்லை. புதிதுபுதிதாக வாசிப்பதற்கு படைப்பாளிகள் பல மொழிகளில் படைத்து வைத்திருக்கிறார்கள். நமக்கு எந்த நேரம் எது கிடைக்கிறதோ அதை வாசித்து கடைசி உயிர்மூச்சு இருக்கிறவரை இந்த வாசிப்பு அனுபவம் இருக்க வேண்டும் என்றுதான்  கருதுகிறேன். ஆனால், இடையில் இந்த நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இலக்கியப் படைப்புகளையும் வாசிக்கணும். மனிதர்களையும் வாசிக்கணும். இலக்கியமே வாசிக்காத ஆனால் இலக்கியம் நமக்குக் கற்றுக்கொடுத்ததை விடவும் அதிகமாகக் கற்றுக்கொடுக்கும் மனிதர்கள் நம் அன்றாட வாழ்வில் வருவதைப்  பார்க்கிறோமே. நம்மை இலக்கியம் படைக்க வைப்பவர்கள் அவர்கள் 😉  நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்களும் மனித வாழ்க்கையும் மரணமும் கற்றுக் கொடுக்காததையா மனிதர்கள் எழுதிய இலக்கியம் கற்றுக் கொடுக்கப்போகிறது எனும் நினைவு எழுவதையும் தவிர்க்கவே முடியவில்லை.

ஜெயந்தி சங்கர்: இலக்கியம் சார்ந்த தொடர் இயக்கம் ஓர் இலக்கியவாதியிடம், குறிப்பாக அவர் ஒரு பெண்ணாக இருக்கையில் கொணரக்கூடிய அன்றாட/ஒட்டுமொத்த மாற்றங்கள், சவால்கள் எவ்வாறானவை?

மதுமிதா: இலக்கியம் சார்ந்த தொடர் இயக்கம், இலக்கியவாதியிடம் குறிப்பாக ஒரு பெண்ணாக அவர் இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய சவால்களைப்பற்றி கேட்டிருக்கீங்க. அவை நமக்குள் நிகழ்த்தும் ஒட்டுமொத்த மாற்றங்கள் வேறு,… இது ரெண்டும் பத்தி சொல்லும்போது தொடர்ந்து இலக்கியத்துல இருக்கறது சிரமமான காரியம்தான். ஆனா, வேற வழியில்ல. அத விட்டுட்டு வெளிய போக முடியாது. ஏன்னா ஒரு ஈர்ப்புடன் அது தன்னுடன் நம்மை தக்க வச்சிக்கிறது. இல்லைன்னா நாம அதை விடாப்பிடியா பிடிச்சிக்கறது, அதுல இருக்கற சுவை கருதி. அப்படிதான் பார்க்க வேண்டியதிருக்கு. இலக்கியவாதிகளுக்கு மொதல்ல நேரத்தை ஒதுக்க வேண்டிய சிக்கல்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும் குழந்தைகளாகட்டும் நேரத்தை நாம எப்படிக் கையாள்றோம்ன்றதுல தான் விஷயமே இருக்குது.

ரொம்ப ரசிச்சிதான் செய்யறோம். நான்காண்டுகளுக்கு முன்பு நாம செயல்பட்டுகிட்டு இருந்ததை ஒப்பு நோக்க, இப்போ அது குறைஞ்சிருக்குன்றதுதான் உண்மை. அப்பவும் இலக்கியத்துக்கான நேரமில்ல, நேரம் ஒதுக்க முடியல… இப்பவும், நேரமில்ல. நேரம் ஒதுக்க முடியல. நாம ரொம்ப விரும்பி நேரத்தை ஒதுக்கறோம்ன்றது முக்கியக் காரணமா இருந்தாலும் இதில் இன்னும் ரெண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருக்குது.

குடும்பத்துல இருக்கறவங்களுக்கு என்ன இது இவ பதினஞ்சி இருபது வருஷமாவே இதுல ஏதோ பண்ணிகிட்டே இருக்குறா… என்னவோ எழுதுறா, லேப்டாப்ப வச்சிகிட்டு அப்படி எதையோ பண்ணிகிட்டே இருக்குறா அப்படினு தோணுது. என்ன செய்ய? காகிதத்துல பேனா பிடிச்சி எழுதின காலம் மாறிடுச்சு இல்ல்சியா. என்ன பண்றது? அதுல டைப் பண்ணி அதுல கொஞ்சம் விரைவா வேலை முடிக்கணும்ன்றதுக்காக நாம அப்படி செய்யறோம். ஆனா, குடும்பத்துல இருக்கறவங்களுக்கு அது அவங்க பணி, அவங்க அத செய்யட்டும் அப்படிங்கற நினைவு இருந்தாலும், ஏன் அதைத் தொடர்ந்து பண்ணனும், அப்படி என்ன இருக்குது அதுல, வெளியே எங்கயுமே இதற்குண்டான அங்கீகாரமும் தெரியலையேனு யோசிக்கிறாங்க. அப்படி குடும்பத்துல இருக்கறவங்களுக்கு இருக்கு. நாம என்ன செய்ய முடியும்? படைப்புகளதான் கொடுக்க முடியும். படைப்புக்குண்டான கூட்டங்களை நமக்கு ஏற்பாடு பண்ண முடியாது. குழுசார்ந்து இதை எப்படி எடுத்துட்டுப்ப்போகறதுனு தெரியாது. நாம குடும்பத்துல இருக்கறோம். எந்தக் குறைவுமில்லாமல் அவர்களுக்கான வேலைகளைச் செய்யறோம். மீதி நேரத்துல படைப்புகளை படைக்கறோம். அது மட்டும் தான் இருக்கு. இலக்கியத்துல இருக்கறவங்களுக்கு இவங்க தீவிரமா இயங்கறாங்களா இல்லையா குடும்பத்துல எப்படினு பார்வைகள் இருந்திருக்கலாம். இதுரெண்டும் இண்டர்மிங்கிள்ட். ஆகவே, அவங்க கூட்டங்கள் ஏதேனும் நடத்தி, விருதுகள் ஏதேனும் அறிவிச்சி, அதுக்காக நா ஏதோ விருதுக்காக காத்திருக்கேன்னு அர்த்தமில்ல. குடும்பத்துல இருக்கறவங்களுக்கு விருது மாதிரியான விஷயங்கள் நடக்கும்போது, ஓ இவளும் ஏதோ செஞ்சிருக்காபோலனு தோணுது. விருதுக்காக எதையும் நான் செய்றதில்லனு வைங்க. ஒரு மேடைல அமர்ந்து விருது வாங்கறதுகூட கொஞ்சம் கஷ்டம், அதக் கடந்துட்டோம்னு நெனைக்கறேன். இந்த சிக்கல்கள் குடும்பத்துல இருந்துகிட்டு எழுத நெனைக்கற பெண்களுக்கு இருக்குது.

வேலைக்குப் போய்கிட்டு, குடும்பத்துல இருந்துகிட்டு கிளம்பி வேலைக்கிப் போயிட்டு எழுத நெனைக்கற பெண்களுக்கு எந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கும்னு நெனச்சிப் பார்க்கணும். இதுல ஒண்ணை நா சொல்லிக்க விரும்பறேன். தனியாக இருக்கும் பெண்கள் அல்லது திருமணத்துக்குப் பிறகு பிரிந்து வாழும் பெண்கள் அல்லது கணவனின் பூரண ஒத்துழைப்புடன் இலக்கியத்தில் ஈடுபடும் பெண்கள் இவங்கதான் சிறப்பாக செயல்பட முடியும்ன்றத தமிழ் இலக்கிய உலகுல பார்க்கறோம். அதுல எந்த கேட்டகரில வரோம்னா, குடும்பத்துலயும் இருக்கணும், கணவரோட இயைந்தும் இருக்கணும் அவங்க அனுமதியும் கெடைக்காது. வேலையெல்லாம் முடிச்சிட்டு ஏதாச்சும் கூட்டத்துக்குப் போகணும்னா, சரி அவ ஏதோ பண்ணறா அதுக்கு நம்ம ஏதும் சொல்ல வேண்டாம்னு இருக்கற ஒரு  கட்டமைப்பிலிருந்துதான் நாம இயங்க வேண்டியதாக இருக்கு. குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கினது போக மிச்ச நேரத்துல இவ்வளவுதான் முடியும்ன் இருக்குது நம்ம நிலை. நம்ம நிலையை உணர்ந்து அதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இப்போ, கணவரின் ஒத்துழைப்போட சிலர் எழுத்துப்பணி செய்றாங்க. சிலர்னு இல்ல, அப்படி ஒரு வார்த்தைய நான் உபயோகிக்கிறேன். அப்போ, அவங்களுக்கு பயணத்துல உடன் வருவதற்கோ, வீட்டு வேலைகள் உதவ, பணியாளர்கள் அமர்த்துவதோ படைப்புப்பணிகளில் எந்த விதமான உதவியும் செய்வதற்கோ அவங்களுக்கு முடியும். நமக்கு அதுவும் கெடையாது. வீட்டு வேலைகளை நாம் தான் செய்யணும். பணியாளர்கள் கிடையாது. வீட்டில் குழந்தைகளை, பெரியவர்களை நாம தான் கவனிக்கணும். இந்த எழுதணும் அப்டின்னாலும் நாம தான் எழுதணும். இதுவரைக்கும் நான் எழுதியவற்றை திருப்பிதிருப்பி கரெக்‌ஷன் போட்டுட்டு இவ்வளவு தான் முடியும்னு புத்தகமா வந்ததுதான். வெளியில் யாரிடமாவது காட்டி திருத்தி அப்படி எதுவுமே செய்ததில்லை. அதற்கான சூழல் வரல்ல. பெரிய எழுத்தாளர்கள் மற்றவரிடம் காட்டி இன்னும் மேம்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் அப்டிங்கறதுக்கு எல்லாம் செய்யறாங்க. ஆங்கிலத்திலும் சரி பிற மொழிகளிலும் சரி அதெல்லாம் பண்றாங்கன்றதெல்லாம் தெரிஞ்சிருந்தாலும், என்னுடைய நூல்களை பிறரிடம் காட்டிக் கேட்பதற்கான சூழல் அமையவே இல்லை.

இதில் நேரத்தைக் கொடுக்கணும் அப்டிங்கறப்போ என்னுடைய முழு இரவு நேரத்தைதான் நான் இதற்கு ஒதுக்க முடியும். சில நேரங்களில் பகலில் யாரும் இல்லாத போது அல்லது எல்லோருடைய வேலைகளையும் முடித்த பிறகு ஒருமணிநேரம் போல எடுக்கலாம். மிஞ்சிப்போனால் பகலில் இரண்டு மணிநேரம் கெடைக்கறது மிகப் பெரிய சவால். இரவு நேரம்தான் கால அவகாசம் கொடுக்கும். அல்லது அதிகாலை நேரம்.  அதுதவிர இந்தப் பணிகளை செய்ய முடியுது. அதை சரிசெய்ய யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்கிறேன். நேரமில்லாம இவ்வளவு வேலைகள் செய்யணும்னும் போது வேற வழியில்லை. இதையெல்லாம் செஞ்சிதான் ஆகணும். இதையும் முன்போல சரியான நேரத்தில் செய்ய முடிவதில்லை.

அத்தனை சிரமங்களையும் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது. ஆரோக்கியத்துக்கு இது ரொம்ப முக்கியம். சுவர் இருந்தால் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியத்துக்கு இதெல்லாம் முக்கியம்.

இதுபோல பல சவால்களக் கடந்து வரும் போது என்ன ஆகுதுன்னா, பிறர் என்ன பேசினாலும் அதை ஒதுக்கிவிட்டு இயங்கறது நமக்குக் கிடைக்கிறது மொதல்ல.

அடுத்து, என்ன பிரச்சினைகள் இருந்தாலும் நான் எதிர் கொண்ட பிரச்சினைகளை வெளியில் சொன்னது கிடையாது. எந்தப் பிரச்சினை இருந்தாலும் அவற்றைக் கடந்து செல்லும் மனசக்தியை மன தைரியத்தை மன ஊக்கத்தைக் கொடுத்தது. மனதைத் துவண்டுபோக வைக்கும் எந்த நிகழ்வு நடந்தாலும் ஒரு எதிர்மறை சிந்தனைக்குப் போகாமல் நேர்மறையாக, நேர்கொண்ட சிந்தனையோடு அதைக் கடந்து செல்லும் மன உறுதி கிடைத்தது.

சமூகப்பணிகளில் இறங்கும்போது மக்களின் துன்ப நிலையைப் பார்க்கும்போது அவர்களுக்குத் தோள்கொடுத்து அவர்களுக்கு உதவ, நீங்கள் தனியாக இல்லை, உடன் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லும் அந்த மனப்பக்குவத்தைக் கொடுத்தது. அன்பு ஒருவருக்கானது, குடும்பத்துக்கானது மட்டுமல்ல. உலகத்துக்கானது, பிரபஞ்சத்துக்கானது என்ற மன விசாலத்தை அளித்தது.

இதுமாதிரியான மாற்றங்களைப் பெற்றதும் அதிகம்தான். ஒரு சவால் இருக்கும்போது அந்த சவாலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் நம்முடைய வாழ்க்கையிலும் நம்மை சார்ந்தோரின் வாழ்க்கையிலும் என்ன மாற்றங்களைக் கொடுக்கிறோம் என்பவற்றைக் கற்றுக் கொள்ள வைத்து செயல்பட வைத்து நடத்தியது. அதனாலேயே இந்த இலக்கிய வாழ்க்கையையும் நேசிக்கிறேன். நான்காண்டுகளாக சரியாக செயல்பட்டுவரவில்லை என்றாலும், அவ்வப்போது தொகுத்து வைத்துள்ளவற்றை ஒரு நூலாகக் கொண்டு வரலாம் கொண்டு வராமலும் இருக்கலாம். எதுவும் ஒருமனச்சிக்கலை, பாதிப்பைத் தராமல் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய இந்த மனநிலையை நான் ரசிக்கிறேன், நேசிக்கிறேன்.

ஜெயந்தி சங்கர்: இலக்கிய உலகில் (ஃபேஸ்புக்/சமூக ஊடகம் இதில் வராது) வளர்ந்து வரும் ஆட்களால் சிறிய அளவிலும் உச்சத்தில் இருக்கும் ஆட்களால் பெரிய அளவிலும் நடத்தப்பெறும் ’இலக்கிய குண்டாயிசம்’ குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? இதன் பின்னணியில் இருக்கக்கூடிய உளவியலை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன். நேரடியாக எப்போதேனும் இதனால் பாதிக்கப்பட்டதுண்டா?

மதுமிதா: இலக்கியத்துல நாம எழுத வந்ததிலிருந்து இப்ப வரைக்கும் ஒரு கள்ள மௌனத்தை உணர்கிறோம். அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு பிடித்த நூலுக்கு மட்டும் பேசும் போக்கு பல இடங்களில் பார்க்கிறோம். ஆனால், ஆரம்பத்தில் பிரபலமான  எழுத்தாளர்களுக்கும் இப்போது புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் எழுதார்களுக்கும் தாங்கள் கவனிக்கப்படாமல் இருக்கிறோம் என்ற உணர்வு இருந்து கொண்டே இருப்பதையும் கவனிக்க முடிகிறது. அனைத்துப் பத்திரிகைகளிலும் கவனப்படுத்தப்பட்டு மிக உயர்வாக விதந்தோதப்பட்டு வருபவர்களுக்குமே கூட அவ்வாறான மனக்குறை இருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். படைப்பாளிகளுக்கு உள்ள சிக்கலே இதுதான். நாம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இலக்கியத்துக்காக செலவழிக்கிறோம். அதனை, அந்தத் தனித்துவத்தை அதிலிருக்கும் சிறப்பை உணராமல் இருக்கிறார்களே என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக தான் அது இருக்கும் என்று நினைக்கிறேன். சில இடங்களில் தனிமனிதத் தாக்குதல்களாகவும் குழுக்கள் சேர்ந்து சிலரை வார்த்தைகளால் காயப்படுத்துவது அதையும் ஆங்காங்கு கவனிக்க முடிகிறது. என்னுடைய நல்லநேரம் சிக்கல்கள் நடக்கும்போது பார்க்காமல் அவை முடிந்த நிலையில் பார்ப்பதால், சில மனக்கஷ்டங்களிலிருந்து நான் தப்பித்துக் கொள்கிறேன். அது மிகவும் நல்லதுனு தோணும். தாமதமாக அறிந்துகொள்வதும், உணர்ந்துகொள்வதும் ஒருவகையில் நல்லது என்று உணர முடிகிறது. இலக்கியம் படைப்பவர்களை எழுதுபவர்களை  மதித்து நேசிக்கிறோம். எனினும், எந்தக் குழுவிலும் சேரவோ இயங்கவோ எனக்கு வாய்ப்பு இல்லை.

படைப்பாளிகள், இலக்கியவாதிகளை நேசிக்கிறோம் என்கிற அளவில் இந்தக் குழு, அந்தக் குழு என்று எந்தக் குழுவும் நமக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் அனைவரையும் நேசிக்கிறோம். தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு படைப்பாளின் படைப்புகளிலிருந்து நான் ரசித்து வாசித்த, ருசித்த விஷயங்களை என்னால் சொல்ல முடியும். அதனால், எந்த சிக்கலுக்கும் எனக்குத் தேவையில்ல. குடும்பத்தில் இருக்கிறோம், இயங்கிக் கொண்டு இருக்கிறோம். நமக்குப் பிடித்த படைப்புகளை வாசிக்கிறோம், அதற்கான வாழ்த்தைத் தெரிவிக்கிறோம் என்றுதான் என்னுடைய பயணம் போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும்போதும் சில சிக்கல்கள் நமக்கு வருகின்றன.

எந்தக்குழுவிலும் இல்லை என்பதால், இவங்க அந்தக் குழுவை சேர்ந்தவங்களா இருப்பாங்களா, இந்தக் குழுவை சேர்ந்தவங்களா இருப்பாங்களா என்பது போன்ற சிந்தனைகள் எல்லோருக்குள்ளும் ஓடுவதாலேயே எல்லோரும் நம்முடைய இயக்கத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்கிறேன். அப்படிப்பேசப்படாத படைப்புகளை நாம் தரவில்லை. முக்கியமான, தமிழுக்கென்று தேடிப்பிடித்து, இதுவரை மொழியாக்கம் செய்தவையும் சரி, புத்தகமாக வெளியானவையும் சரி வேறு எவரேனும் இதை செய்திருந்தால், கண்டிப்பாக, பிரபலமாகப் பேசப்பட்டிருக்கும் என்பதை கண்டிப்பாக உணர்ந்தே இருக்கிறோம். அதற்காக வருத்தமோ அல்லது எதிர்பார்ப்போ இல்லை. அதையெல்லாம் கடந்தாச்சு இப்போ. அந்த சூழலையும் கடந்தாச்சு.

இலக்கிய குண்டாயிசம் அப்டிங்கறப்போ அதனுடைய இது என்ன அப்படிங்கறது எனக்கு சொல்லத் தெரியல. ஃபேஸ்புக்கில், வலைப்பதிவில் நடக்கும். ரெண்டையுமே வேற விதமா உணர்றேன். ஃபேஸ்புக்கில் நாம எழுதறப்போ, ஒரு கட்சி சார்ந்தவர்களின் விஷயம் பிறரை பாதிக்குமே, இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லும் பொழுது எந்தக்கட்சிக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கோ, அந்தக் கட்சியின் எதிர்க்கட்சி உறுப்பினராக நாம் பார்க்கப்படுகிறோம். இதுதான் நடக்குது. அதே மாதிரி, இலக்கியம் சார்ந்த விஷயங்களில் பொதுவாக சில விஷயங்களை சொல்லும்போது அவர்களுக்குச் சாதகமாக நாம் இருக்கிறோம் எனும் பார்வையும் வைக்கப் படுகிறது. அதனால், சில நேரங்களில் அரசியல், இலக்கியப் பதிவுகளைக் கூட விட்டுவிட்டு திரைப்படப்பாடல்கள், கவிதைகூட எழுதுவதை நிறுத்திவிட்டு பொதுவான விஷயங்களைப் பதிவிடுகிறேன். இயங்கியே ஆகவேண்டும் என்பது முகநூலில் ஒவ்வொரு, அதாவது இதுவரை ஐந்து கட்சிகளோடு என்னைத் தொடர்பு படுத்திப் பேசியுள்ளதால், எந்தக் கட்சியிலும் நான் இல்லை என்பதைக் குறிப்பிடும் வாய்ப்பாக இதனைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் இன்பாக்ஸ் எனும் விஷயத்துள்ளேயே போவதில்லை என்பதால் அதில் நிகழும் சில பிரச்சினைகள் நமக்கு நிகழாமல் காக்கப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். பலரும் பாதிக்கப்படுவது நம்மையும் பாதிப்பதாகத் தான் இருக்கிறது. என்ன உரிமையில் ஒரு பெண்ணை இப்படி வன்முறையான பேச்சாலோ காணொளிகளாலோ வன்முறை செய்வது இவர்களுக்கு எப்படி இயல்பாக வருகிறது என்றே தெரியவில்லை. இது கண்டிப்பாக மாறணும்.

வலைப்பதிவில் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். முத்துக்குமார் அவர்கள் தன்னை எரித்துக் கொண்டு அது பெரிய போராட்டமாக வெடித்த சமயத்தில் நான் சில கேள்விகளை முன்வைத்தேன். அது, ஒரு தாய் மகனை இழந்தால், இழந்துவிட்டால் அப்போது ஒரு தாயாக இருந்து குழந்தை இறக்கும்போது இருக்கும் பரிதவிப்பு இருக்குமில்லையா, அது எதுவுமே இல்லையே என்ற ஆதங்கத்தில் முன்வைத்த கேள்விகள் அவை. இதைத் தவிர பிரத்யேகமான காரணம் என்னுடைய தைவான் நாடோடிக் கதைகள் புத்தகத்தின் ஒரு டைப்செட் அவரால் செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் டைப் செய்கிறார் எனும்போது எழுத்துப் பிழைகள் போன்றவை இருக்குமில்லையா, அப்போது அவர் இருந்த நிலையில் என்னால் அவற்றை அவரிடம் சொல்லவே முடியவில்லை. சிறப்பானவர்,  தன்னுயிரை தியாகம் செய்தவர் அந்த மதிப்புண்டு. அந்த பதைபதைப்பு உண்டு. அதைப் பற்றியே நான் சொல்லப் போகவில்லை. அவர் எழுத்தில் அவர் எழுதியதாகக் கூறப்பட்ட வெளியில் கொடுக்கப்பட்ட பதிவில் ஒரு எழுத்துப் பிழையும் இல்லை. வாக்கியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதுநடக்கும்போது, இது இப்படித்தானே இருக்க முடியும், அந்த அனுமானத்தைதானே சொல்லமுடியும்? அவர் எழுதியதாக இருந்தால், திருத்தப்பட்ட வடிவமாகத்தானே இருக்க முடியும் என்கிற கேள்வியை நான் முன்வைத்து கேட்டிருந்தேன். அதற்கு பதில்கள் சொல்லப்பட்டிருந்தன. அப்படி இருந்தால் இப்படி செய்திருக்கலாம், இப்படி இருந்தால் அப்படி செய்திருக்கலாம் என்றெல்லாம் கொடுத்திருந்தார்கள். கேட்டதற்கு பதில்கள் கொடுத்ததோடு இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர்கள் அதை காப்பி செய்து மதுமிதா பரப்பிய அவதூறோ, வதந்தியோ அப்படி ஒரு டைட்டிலே கொடுத்து அதை சொல்றப்போ ஒரு நண்பர்தான் அதைக் குறிப்பிடறாரு. இன்னொரு நண்பர் இவரையும் அதுபோல உயிரோடு எரித்தால்தான் என்று ஒரு கமெண்ட் அதுல வருது. என்னுடைய தோழிகள், நண்பர்கள் அந்தப் பதிவை நான் நீக்கியே ஆகவேண்டும் என்று கூறியதால் அந்தப் பதிவை என்னுடைய வலைப்பதிலிருந்து நீக்கினேன். அதற்கு முன்னாடியே காப்பி செய்து அவர்கள் அதைப் போட்டிருந்தார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும் எனும்போதுகூட  தோழிகளும் நண்பர்களும் தடுத்தி நிறுத்தி விட்டார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் பேசவே பேசாதீர்கள் என்று சொல்லி விட்டார்கள். என்னுடைய வலைப்பதிவில் நான் நீக்கிய ஒரே பதிவு அதுமட்டும்தான். அங்கேயும் ஒருபதிலும் சொல்லவில்லை. ஒருவிஷயம்தான். இவரை எரித்திருந்தால் என்று என்னைப் பார்த்து ஒருவர் கேட்கிறார். என்னை யார் வேண்டுமானாலும் எரித்துவிட்டுப் போகட்டும். அந்த சமயத்தில் முத்துக்குமாருக்கு இவ்வளவு நீளமான ஊர்வலம் வர வாய்ப்பில்லை. அதைத் தான் குறிப்பிட்டேன். ஒரு மரணம் இவ்வாறு அரசியல் ஆக்கப்படுவதை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. இதிலிருந்து அரசியல் பதிவுகள் போடுவதிலிருந்து வெளிவந்துவிடவேண்டும் என்று அதாவது யாருக்குமே பொது இடத்தில் இது நடக்கும்போது இல்லை, இவருக்கு உள்நோக்கம் கிடையாது, இயல்பாகக் கேட்டிருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் என்ற போதும் இது நடக்கிறது. அவர்கள் விருப்பம் அப்படி எழுதுகிறார்கள். நமக்கு பாதிப்பு இருக்கும்போது நாம பதில் கொடுத்துதானே ஆக வேண்டும்? ஆனால், இதற்கு நான் பதில் கொடுக்காமலே கடந்தேன். இப்படியானவை ஃபேஸ்புக்கிலோ, வலைப்பதிவிலோ, இலக்கியத்திலோ கடந்துகொண்டு தான் இருக்கின்றன. இனியும் நடக்கலாம். அவற்றை எதிர்கொண்டு தைரியமாக முன்வந்துதான் ஆகவேண்டும். ஏனென்றால், அவங்க சொல்ற எதுவும் நாம் அல்ல. நம் மனநிலையில் நாம் வேறாக இருக்கிறோம். நம் எழுத்தில் அவர்கள் தங்களுடைய மனோபாவங்களைத் திணித்துக்கொண்டு வேறாக உணர்கிறார்கள். அதை நாம் எப்படி சரிசெய்ய முடியும்னு சொல்லுங்க. இந்த பாதிப்புகள் எல்லாமே எந்த இடங்களிலிருந்து நாம் எவ்வாறு ஒதுங்கி இருக்க வேண்டும், எவ்வாறு சிலவற்றுக்கு நாம் பதில் சொல்லாமல் இருக்க வேண்டும் அப்படிங்கற பாடங்கள தான் கத்துக் கொடுத்துகிட்ருக்கு. இதைக் கடந்தும் ஃபேஸ்புக், வலைப்பதிவு, இலக்கியம் ஆகியவை எப்போதும் நம்மை வாழ வைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கே நமக்கான மனிதர்கள், நண்பர்கள், தோழிகள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களின் அன்பும் அவர்கள் அளிக்கும் ஊக்கமும் நம்மைத் தொடர்ந்து இயங்கச் செய்கின்றன. நாம் இன்னும் பக்குவப்படுகிறோம். அதிலும் சந்தேகம் இல்லை. இலக்கியம் என்பதே ஓர்  இன்பப்பயணம்தானே. நீங்க ஆரம்பத்துல கேட்டிருந்தீங்க, இளமையில் இலக்கியம், இப்போது இலக்கியம் என்று. அப்போதும் இலக்கியம் இன்பம் தான்.  ருசி தான். சுவை தான். இப்போதும் அது தான். ஆனால், இலக்கியம், வாசிப்பு ஆகியன நமது அனுபவங்களைக் கடந்து வாழ்க்கை அனுபவங்கள் தரும் பாடங்களும் மரணங்கள் நமக்கு போதிக்கும் பாடங்களும் வாழ்வையே இலக்கியமாகக் கொள்ளும் பக்குவத்தைத் தந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். நன்றி, வணக்கம்.

ஜெயந்தி சங்கர்: நன்றி, வணக்கம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *