(Peer Reviewed) கரும்பனூர் கிழான் அளித்த விருந்து

5

ச. கண்மணி கணேசன் (ப.நி.)

முன்னுரை

தொகைநூல்களில்  பண்டைத் தமிழர் உண்ட உணவு, உண்ணுமுறை குறித்த பல தகவல்கள்  உள்ளன. கரும்பனூர் கிழான் பொருநர்க்கு என்னென்ன  விருந்தளித்தான் என விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். விளக்க முறை ஆய்வாக அமையும் இக்கட்டுரையில் புறம்.381, 384 ஆகிய இருபாடல்கள் முதனிலைத் தரவுகளாகவும்; பிற தொகைநூற் பாடல்கள் இரண்டாம்நிலைத் தரவுகளாகவும்  அமைகின்றன.

கரும்பனூர் கிழான்; ஓர் அறிமுகம்

கரும்பனூர் கிழான் வேங்கடப் பகுதியில் இருந்த தன் பெயருக்குரிய ஊரில் புன்செய் வேளாண்மையும் நன்செய் வேளாண்மையும் செய்த முல்லைநிலத் தலைவன் ஆவான். அவனது ஊர் இருந்த பகுதி வேங்கடம் என்பது;

“ஒலிவெள்ளருவி வேங்கட”ம் (புறநானூறு பகுதி ll, 2007, ப.390-394, பா.381) என்ற அடியால் விளக்கம் பெறுகிறது.

“வன்பாலாற் கருங்கால் வரகின்
அரிகால்” (புறம்.384)

உடையதென்றும் வருணிக்கப்படுகிறது. ‘வன்பால்’ புன்செயைக் குறிக்கும். தொடர்ந்து அரிகாலின்கண் வாழும் எலியைப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரமும், அதன் காரணமாக அஞ்சி ஓடும் முயலும், அந்த ஓட்டத்தில் இருப்பை மரத்துப் பூக்கள் உதிர்வதும் இடம் பெறுகின்றன. இவை அவனது புன்செயாகிய காட்டு வளத்தை  உணர்த்துகின்றன.

தம்மை  உழுவித்த நாடனுக்காக வயலில் இறங்கி நெல் வேளாண்மை செய்த உழவரின் தலைவனாகக்  கரும்பனூர் கிழான் விளங்கினான்.

“மென்பாலான் உடன் அணைஇ
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
அறைக் கரும்பின் பூவருந்தும்” (மேற்.)

காட்சியும் அவனது ஊரின் வருணனையே ஆகும். ‘மென்பால்’ நன்செய் ஆகும். நன்செயில் இரை தேரிய நாரை வஞ்சிக்கோட்டில் உறங்குமுன் கணுவுள்ள கரும்பின் பூவை உண்டமை; அவனது நன்செய் வேளாண்மையின்  செழிப்பைக் காட்டுகிறது. அவனது ஊரில் விழாக்காலம் அல்லாத போதும்; உழவரின் உண்கலத்தில் பெரிய கெளிற்றுமீனோடு இஞ்சிப்பூவுடன் கள் நிறைந்து  இருக்கும்.

“விழவின் றாயினும் உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையோடு பூங்கள் வைகுந்து”

(மேற்.) எனப் பகர்வது; அவனது மேலாண்மையின் கீழ் உழுவோரின் உணவுமுறை ஆகும்.

விருந்து வகைகள்

இரவலர்க்கு ஊன் கலந்த நெல்லரிசி உணவோடு; பாலிற் பெய்து, பாகிற் கொண்டு கலந்த உணவையும் விருந்தாக அளித்தான்.

“நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை. …
நீர்நாண நெய் பெய்து” (மேற்.)

விருந்துண்டமை பற்றிப் புலவர் பாடியுள்ளார். நெய்யை நீர்போல ஊற்றி நிணம் கலந்த நெல்லரிசிச் சோற்றை உண்ணக் கொடுத்தான் என்பது பொருள்.  புறத்திணை நன்னாகனார் ஊன்கலந்த சோறுண்டு தெவிட்டிய போது; பாலிலும் பாகிலும் அளவோடு கலந்து கரைத்த உணவைப்  பருகியதாகக் கூறுகிறார். அதாவது அவனிடத்தில் நெல்லரிசிச் சோறு மட்டுமின்றிப் பிற உணவு  வகைகளும்  கிடைத்தன என்கிறார்.

“ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்து உறுத்து ஆற்றி இருந்தனெம்” (புறம்.381)

என்பது புலவரின் அறிக்கை ஆகும். பண்டைத் தமிழர் பாலிற் பெய்து உண்டவை எவை என்பதையும்; பாகொடு சேர்த்துண்டது எது என்பதையும்    தொகையிலக்கியம் காட்டுகிறது.

பாலிற் பெய்த உணவு 

பாலிற் பெய்த உணவாகக் கரும்பனூர் கிழான் அளித்த  விருந்தில் இடம் பெற்றவை;  பாலுடன் கூடிய வரகுக்கூழும் தினைக்கூழும் ஆகும். ஆலத்தூர் கிழார் புன்செயில் விளைந்த வரகைப் பாலோடு சேர்த்துக் குடிப்பதை;

“…………………………..புன்புல வரகின்
பாற்பெய்…………………………………..
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்”

(புறநானூறு பகுதி l, 2007, ப.94-98, பா.34) என்று விரிவாகப் பாடியுள்ளார். மிகுதியாகப் பால் கலந்து  இருந்ததால் தான் ‘ஆர்ந்த’ என்கிறார்.  ‘மெல்லிது பருகி’ என்ற உண்ணுமுறைக்குப் பொருந்தி வரும் உணவு இதுவே. இதே போன்று தினைச்சோறும் பாலும் சேர்த்து உண்டதை;

“பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்” (பத்துப் பாட்டு தொகுதி l, 2007, பெரும்பாணாற்றுப்படை, ப.92-94, அடி168) என முல்லைநிலக் கோவலர் குடியிருப்பில் கிடைக்கும் உணவைக் கூறிக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆற்றுப்படுத்துவது காண்கிறோம்.   எனவே கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் தினைப் பால்சோறும் வரகுப்பால்சோறும் இடம் பெற்றமை  உறுதி.

கரும்பனூர் கிழானது புன்செய் வேளாண்மை வளம் பற்றி முன்னர்க் கண்ட செய்தியும் அவனளித்த விருந்தில் வரகுப்பால்சோறு இடம்பெற்றமைக்கு  ஆதாரமாகிறது.

நெல்லரிசிச் சோற்றில் பாலூற்றி உண்பது இந்த உண்ணுமுறைக்குப் பொருந்தி வரவில்லை. ஏனெனில்;

“… … …பால்விட்டு

அயினியும் இன்று அயின்றனனே” (புறம்.77)

என்று இடைக்குன்றூர் கிழார் பாண்டிய வேந்தனைப் பாடும் போது ‘கலந்து பருகு’வதாகச்  சொல்லவில்லை. ‘அயிலுதல்’ என்ற  வினை எடுத்து உண்பதையே குறிக்கும். எனவே கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் நெல்லரிசிப் பால்சோறு இடம்பெறவில்லை என்பது உறுதி.

பாகிற் கொண்ட உணவு

‘பாகிற் கொண்ட’ உணவாவது உழுந்தங்களி என்பது நல்லாவூர் கிழார் மூலம் தெளிவாகிறது. திருமண விருந்தைப் பற்றிப் பேசும் போது;

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை” (அகநானூறு களிற்றியானை நிரை, 2009, ப.221, பா.86) என்கிறார். ‘உழுந்து தலைப்பெய்த’ என்னும் தொடர்; இவ்வுணவுப் பொருளில்  உழுந்தே முதன்மைப் பொருள் என உணர்த்தும். ‘கொழுங்களி’ என்னும் தொடர் அவ்வுணவுப் பண்டத்தின் பதம் பற்றியும், அதை வளமாக எண்ணெய் சேர்த்துச் சமைப்பதையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. மிதவை எனும் சொல் உணவுடன் சேர்க்கும் நீர்மப் பொருளைக் குறிக்கும். பாகு நீர்மப் பொருள் ஆகையால்; அதைச் சேர்த்து உண்பதைக்  ‘களிமிதவை’ என்று பாடியுள்ளார். ‘கொழுங்களி’ என்று அழைத்த காரணம்;

“நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன”

(ஐங்குறுநூறு, 2009, ப.328-329, பா.221) என்னும் பாடல் தொடர் மூலம் தெளிவாகிறது. ‘நெய்யோடு மயக்கிய’ செய்முறை; மிதமிஞ்சிய நெய் சேர்த்தமையைச் சுட்டி நிற்கிறது. இங்கு நெய் எள்ளிலிருந்து எடுக்கப்படுவதாகும். உழுந்தங்களி கிண்டும் போது அளவிறந்த நல்லெண்ணெயைக் குடிக்கும் என்பது நடைமுறை உண்மை.

பொ.வே.சோமசுந்தரனார் மேற்சுட்டிய பாடலுக்கு உரை எழுதுங்கால்; அதை உழுந்தங்களி என்று சுட்டவில்லை; மாறாக உழுந்தினின்று செய்யப்படும் வடகம் என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஏனெனில்; அப்பாடலில் ‘நூற்றுப் போவதைப் போல’ என்னும் உவமை இடம் பெறுகிறது. வடகம் என்னும் உணவு வகை வெய்யிலில் காயவைத்துச் செய்யப்படும். அது நூற்றுப் போக வழியில்லை. ஆனால் உழுந்தில் செய்த பிற உணவுப்பண்டங்கள் நூற்றுப்போகும் வாய்ப்பு மிகுதி. ‘ஊசிப் போதல்’ என்ற இக்கால வழக்கே பாடலில் நூற்றுப்போதல் எனச் சொல்லப்படுகிறது. ஊசிப்போன உழுந்துப் பலகாரத்தில் இருந்து கெட்ட வாடையுடன் நூல்போன்ற கசிவு ஏற்படும். இந்த அனுபவ அறிவுடன் கபிலர் பாடியிருக்கிறார். உழுந்தங்களி உண்ணக் காலம் தாழ்த்தினால் நூற்றுப் போய் உண்ணத் தகுதியற்றுப்   போய் விடும்; அதுபோல் தலைவன் தந்த தழையாடையை ஏற்றுக்கொண்டு உடுத்தாது இருப்பின்; வாடிப்போய் அணியும் தகுதியை இழந்துவிடும் என்பதே பாடலின் பொருளாகும்.

இதனால் கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் பாகுடன் சேர்த்து உண்ணக்கூடிய உழுந்தங்களி இடம் பெற்று இருந்தமை உறுதியாகிறது. இன்றும் கருப்பட்டிப்பாகு என அழைக்கப்படும் பனம்பாகை உழுந்தங்களிக்கு நடுவில் குழித்து; ஊற்றிச் சுவைக்கும் வழக்கம் உளது.

விருந்தின் காலமும் காரணமும்

எவ்வளவு தொலைவில் இருந்தாலும்; வறட்சிக்  காலத்தில்  என்னிடம் வந்து வயிறார உண்க என்கிறான்.

“இருநிலம் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிசைக்கு ஓடிய பின்றைச்
சேயை யாயினும் இவணை யாயினும்
இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ”

(புறம்.381) எனக் கிணைப்பறை இசைக்கும் கலைஞனை அழைத்துக்; ‘கடுமையான கோடையில் கூலமே இன்றிப் பஞ்சம் ஏற்படினும்; ஒரு மழை பொழிந்தவுடன் புன்செய்ப் பயன்கள் தப்பாது ஆதலால்; இங்கு வாருங்கள்’ என்கிறான். நன்செயின் விளைச்சலுக்கு மிகுந்த நீர் தேவைப்படும்; ஆனால் புன்செயில் விளைச்சலுக்குச் சிறிதளவு நீரே போதும் என்ற காரணத்தைக் கூறி அழைக்கிறான்.

சிறுகுடி கிழான் பண்ணனைக் கிள்ளி வளவன் ‘பசிப்பிணி மருத்துவன்’ (புறம்.173) என்று போற்றுகிறான். வறட்சி மிகுந்து நெல் விளையாத காலத்தில் பொதுமக்களுக்குப் புன்செயால் தானம் அளித்தான் என்பது

“வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம் வாடிய பயனில் காலை…
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணன்” (புறம்.388)

எனப் புகழப்படுகிறது. கரும்பனூர் கிழான் சொன்ன காரணமும் பண்ணன் பெருமையும் ஒரே அடிப்படையில் உருவான கருத்துகளாக உள்ளன. தொல்தமிழகத்துக் குடிகள் நான்கையும்; உணவு நான்கையும் வரிசைப்படுத்தும் மாங்குடி கிழார்;

“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையோடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை” (புறம்.335)

எனத் தன் பட்டியலில் வரகு, தினை, அவரை என்ற மூன்றனுக்கும் இடம் கொடுத்து இருக்கிறார். இவற்றுள் அவரை பயறுவகைகளுக்கு உரிய பொதுப்பெயர் ஆகும். இம்மூன்று உணவு வகையும் பாரம்பரியமானவை என்ற கருத்து வலுப்படுகிறது. கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் பாரம்பரியம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

முடிவுரை

கிழார் உழவர் தலைவராய் இருந்து புன்செயிலும் நன்செயிலும் வேளாண்மை செய்ததால் வறட்சிக்காலத்தில் அவர்கள் பாரம்பரியமான புன்செய்ப் பயன்களால் விருந்து அயர்ந்தனர். கரும்பனூர் கிழான் நெய்யும் ஊனும் கலந்த நெல்லரிசிச் சோறு மட்டுமின்றி; வரகு, தினை ஆகிய கூழொடு பால் கலந்து பருகக் கொடுத்தான். கருப்பட்டிப் பாகோடு உழுந்தங் களியை வழங்கினான்.

துணைநூற் பட்டியல்
  1. அகநானூறு களிற்றியானை நிரை, (2009), கழக வெளியீடு, சென்னை.
  2. ஐங்குறுநூறு, (2009), கழக வெளியீடு, சென்னை.
  3. பத்துப்பாட்டு தொகுதி l, (2007), கழக வெளியீடு, சென்னை.
  4. புறநானூறு பகுதி l, 2007, கழக வெளியீடு, சென்னை.
  5. புறநானூறு பகுதி ll, 2007, கழக வெளியீடு, சென்னை.
Brief note on author

Dr.(Mrs)S.Kanmani Ganesanl published ‘chilappathikaaram kaattum naadum nakaramum’- her Ph.D thesis in 1992. She has also translated the traumatology section of the book; An Introduction to Orthopaedics and Traumatology authored by Dr.M.Natarajan as ‘kaaya aruvaiyiyal maruththuvam’ which was published by the Madurai Kamaraj University; sponsored by the Text Book Society of Tamilnadu, Chennai. The booklet makalir udalnalach chikkalkal was published by her as the proceedings of a symposium sponsored by the UGC, New Delhi. She retired as a principal and HOD in Tamil of an autonomous institution Srikaliswari College, Sivakasi.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

‘கரும்பனூர் கிழான் அளித்த விருந்து’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

  • ‘வன்பால்’ புன்செய் எனவும் ‘மென்பால்’ நன்செய் எனவும் எளிமையாக விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
  • நீர் நாண நெய்பெய்து என்னுந் தொடரில் ‘நாண’ என்பதை உவம உருபாகக் கொண்டது கட்டுரையாசிரியர்தம் இலக்கிய முதிர்சசியைக் காட்டுகிறது.
  • ‘நெய்யொடு மயங்கிய உழுந்து நூற்றன்ன’ என்னும்  கபிலரின்  தொடருக்கு ‘உழுத்தங்களி’ என உரைகாண்பதும் அதற்குப் பெருமழைப் புலவரின் வடகம் என்னும் உரை பொருந்தாது என்பதற்குச்  சங்க இலக்கியப் பகுதிகளைச் சான்றாக்குவதும் கட்டுரையாசிரியர்தம் பரந்துபட்ட இலக்கியப் பார்வையை வெளிப்படுத்துகின்றன.
  • மாங்குடிகிழார் பாடடில் “சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை” என்ற வரிகளைத் தனிமைப்படுத்தி உரை காண்பது கட்டுரையாசிரியர் எடுத்துக்கொண்ட பொருளுக்கு வலிமை சேர்க்கலாம். ஆனால் பாட்டின் முழுமை சிதலமடைகிறது என்பதைக் நோக்குதல்  வேண்டும். ‘நான்கல்லது பூவுமில்லை’ ‘நான்கல்லது உணாவுமில்லை’ நான்கல்லது குடியுமில்லை’  என்னும் தொடர்களெல்லாம் பாட்டின்  இறுதி வரியான ‘கல்லே பரவின் ; அல்லது……கடவுளும் இலவே’ என்பதோடு முடிதல் வேண்டும். எனவே ‘நான்கு’ என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையைக் குறிக்காது ‘நாலு பேர் புகழ வாழ்! என்பதுபோல உலக வழக்காகி நின்றது. இல்லையெனின் பூ நான்கல்லது பிற பூக்கள் இலலையென்பதாகிவிடும்
  • இனி, ‘அயிலுதல்’’ என்ற  வினை, எடுத்து உண்பதையே குறிக்கும்’ என்னும் கட்டுரையாளர் கருத்து “வேறுவினைப் பொதுச்சொல் (தொல்.சொல் 46) என்னும் தொல்காப்பிய விதிக்கு முரணானது.
  • ‘தெவிட்டிய’  என்னும் வழக்கு இலக்கிய வழக்காகாது. ஆதலின் ‘உவட்டுதல்’ என்றிருந்தால் நன்று. ‘உவட்டாமல் இனிப்பதுவே’ என்பது திருவருட்பா!
  • ‘கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்” என்னும் ஆலத்தூரார் பாடல் வரியில் பயின்றுள்ள ஆர்ந்த பாணர் என்பது கொழுஞ்சோறு உண்டதால் வயிறு நிறைந்த பாணர் என்பதே சரியாக இருக்க முடியும்.’ ‘பெய் புன்கம்’ என்பது வினைத்தொகை. ‘பால் பெய் ஆர்ந்த’ எனத் தொடர் அமையாது. ஆர்தல் – நிறைதல். பிணித்தல் ‘நீராரும் கடல் உடுத்த’ ‘ஆர்த்த பிறவி துயர்கெட’ என்பன காண்க.
  • ‘நான்கு உணவு’ என வராது. ‘நான்கையும் உணவுப் பொருளாகக் கொண்டனர்’ என்பதே நேரிது.

சுட்டப்பட்டிருக்கும் மதிப்பீட்டுப் பகுதிகள்  கட்டுரைப் பகுதிக்கான கூடுதல் விளக்கங்களே தவிர குறையெனக் கருதுதல் வேண்டா. கட்டுரைப் பொருள் தேர்விலும், தரவு மற்றும் சான்றுகளைத் தொகுத்தலிலும் மொழிநடையிலும் இக்கட்டுரை சிறந்திருக்கிறது. ஆய்வாளரைப் பாராட்டுகிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “(Peer Reviewed) கரும்பனூர் கிழான் அளித்த விருந்து

  1. கருத்துரைகளுக்கு மிக்க நன்றி ஐயா.
    சக 

  2. கட்டுரை ஆசிரியருடைய நுண்ணறிவுத் திறனையும் பரந்துபட்ட இலக்கியப் பார்வையையும் வெளிப்படுத்துகிறது

  3. நன்றி மாலா. உங்கள் பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *