பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

0

ஜோதிர்லதா கிரிஜா

ஆண்கள் செய்வதை யெல்லாம் நாங்களும் செய்வோம் என்று பெண்கள் கூறத் தலைப்பட்டால், அது அடி முட்டாள்தனமாகும். தாய்மை எனும் மகத்தான பேற்றை இயற்கை தங்களுக்கு அருளியுள்ளதன் அடிப்படையில் சிந்தித்தால் “பெண்ணுரிமை” என்பதன் பெயரால் பெண்களில் சிலர் இப்படிப் பேச மாட்டார்கள்.

நாம் உட்கொள்ளும் உணவுகள் நம் உடல் நலத்தை மட்டுமல்லாது, நமது மனநலத்தையும் நல்ல விதமாகவோ கெட்டவிதமாகவோ பாதிக்கின்றன என்பது கண்கூடான விஞ்ஞானமாகும். கள், சாராயம், போதை மருந்துகள், புகைபிடித்தல் போன்றவையும் இந்தப் பொதுவான விதிக்கு விலக்காக இருக்க முடியாதுதானே?

குடி ஆணையும் பெண்ணையும் பாதிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களில் பெண் அதிகமான பாதிப்புக்கும், வேறு சில விஷயங்களில் ஆண் அதிகமான பாதிப்புக்கும் ஆளாவதாய்ச் சொல்லப்படுகிறது. ஆணுக்கு ஏற்படும் பாதிப்பு அவனைவிடவும் பெண் குறைவாய்க் குடித்தாலும் அவளுக்கு அதே அளவு ஏற்படுவதாய்த் தெரியவந்துள்ளது.  ஆனால் அந்தப் பாதிப்புகளிலும் சில வேறுபாடுகள் உள்ளனவாம். குடிவெறியில் கொலை செய்வது, வன்னுகர்வு செய்வது போன்றவற்றில் பெண் ஈடுபடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. உடலளவில் பெண் அதிகமாகவும், மனத்தளவில் ஆண் அதிகமாகவும் பாதிக்கப்படுவதாய் இதிலிருந்து நினைக்க வேண்டியுள்ளது.

பெண் குடிப்பதால் அவளது உடல் நிலையில் ஏற்படக்கூடிய சீர்குலைவு அவள் பெறும் குழந்தைகளைக் கண்டிப்பாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகிக்கலாம். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற வேண்டுமாயின், ஒரு பெண் குடிகாரியாக இல்லாதிருக்கவேண்டும். அதிலும், குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்கும் போது ஒரு பெண் இந்த விஷயத்தில் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு பெண் உட்கொள்ளும் உணவுகள் அவள் சுமக்கும் கருவையும் பாதிக்கின்றன எனும் நிலையில் அவள் தன் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியதாகிறது. சில உணவுகள் கர்ப்பத்தையே கலைத்துவிடக் கூடியவை.  சில உணவுகள்  வேறு வகையான குறைபாடுகளைக் கருவில் உற்பத்திசெய்துவிடக் கூடியவை. எனவே கருவுற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் தன் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாக வேண்டிய நிலையில் உள்ளாள். அவ்வாறு இல்லையெனில், குழந்தைகள் பிறவி யிலேயே அவற்றைப் பாதிக்கும் நோய்களுடன் மட்டுமல்லாது, பல்வேறு ஊனங்களுடனும் பிறக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு ஊனமுற்ற குழந்தைகளை உருவாக்கும் உரிமை எந்தப் பெற்றோர்க்கும் கிடையாது.

இதைப் பற்றியெல்லாம் அறியாமல், பெண்ணுரிமை என்பதன் பெயரால் ஆண்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெணகள் தாங்களும் செய்ய முற்படுவது அசட்டுத்தனம் அல்லது அறிவீனமாகும்.  ‘பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்களே! இது எதில் போய் முடியும்?’ என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.  இது நியாயமான கவலைதான். குடிகாரிகளின் எண்ணிக்கை குடிகாரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக, மிகக் குறைவுதான். ஆனால், இதை எண்ணி நாம் நிம்மதி யடைந்துவிடலாகாது. இந்த எண்ணிக்கை பெருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விதைக்கும் விதை நன்றாக முளைக்கவேண்டுமாயின் அது விதைக்கப்படும் நிலம் செழிப்புள்ள நல்ல நிலமாக இருத்தல் வேண்டும். கருவைப் பெற்றுத் தன்னுள் வைத்து வளர்க்கும் பெண்ணை நிலத்துக்கு ஒப்பிடுவார்கள்.  நிலம் மட்டுமே நல்ல நிலமாக இருந்துவிட்டால் ஆயிற்றா? அதில் விதைக்கப்படும் விதையும் சேதமடைந்ததாகவோ, சொத்தையாகவோ இருக்கலாமா? ஒரு நிலம் என்னதான் களர்நிலமாக இல்லாமல் செழிப்பானதாக இருந்தாலும், அதில் ஊன்றப்படும் விதை சொத்தையாக இருந்தால் அது முளைத்து வளருமா என்ன!

குடியால் ஓர் ஆணுக்கு ஏற்படும் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று அவனுடைய உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்பதாகும். குடித்துக் குடித்துச் சொத்தையான உடம்பை வைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஆணின் மனைவி குடிப்பவளாக இல்லாவிட்டலும் கூட, அவன் மூலம் அவள் பெறும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்குமா என்ன?

எனவே,  ‘அய்யோ! பெண்கள் இப்படிக் குடிக்க ஆரம்பித்துவிட்டார்களே!’ என்று அங்கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்களும் குடிக்காமல் இருப்பதற்கான உபதேசங்களை இவர்கள் செய்வது நடுவு நிலையான செயலாக இருக்கும். தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசையுமன்றோ இவரைப் போன்ற சீர்திருத்தவாதிகள் கண்டிக்க வேண்டும்? ஆணோ பெண்ணோ தவறிழைப்பதற்கான அத்தனை தவறுகளுக்கும் அடித்தளம் அமைத்திருக்கும் அரசன்றோ  கண்டனத்துக்கு உரியது? ஆனால், அரசுக்குத் தமுக்கு அடிப்பார்கள், அல்லது கண்டுங் காணாதிருப்பார்களே தவிர, அதற்கெல்லாம் இவர்களுக்குக் கடுகளவு துணிச்சலும் கிடையாது என்பதே கசப்பான உண்மை.

புகை பிடிப்பதும், போதை மருந்து உட்கொள்ளுவதும் கூட ஆணின் உயிரணுக்களைப் பாதிப்பதாய்ச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியக் குறைபாடுகளுடனோ, ஊனத்துடனோதான் பிறப்பார்கள். எனவே, தீயவற்றுக்கு அடிகோலும் அரசு, அவற்றுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரையும் இவர்களுக்கெல்லாம் துணைநிற்கும் காவல்துறையினரையும் ஒருமித்துச் சாடுவதே முறையாக இருக்கும்.

மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்பதற்கான சாக்குப் போக்குகள் ஏற்புடையனவல்ல. காவல்துறை அலுவலர்களும், ஆட்சியாளர்களும், இன்ன பிற அரசியல்வாதிகளும் ஒழுங்காகச் செயல்பட்டு நடக்க முற்படின், எதையும் சாதிக்கலாம். ஒரு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் இருப்பின், அந்தப் பகுதியைச் சார்ந்த காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவர் என்று சட்டமியற்றினால், கள்ளச் சாராயம் எப்படி ஒழியாமலிருக்கும்? வெறும் இடமாற்றம் தண்டனையாகுமா? வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்லும் காவல்துறையினர் அங்கும் அதையேதானே செய்வர்?

ராஜாஜி சொன்னதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது ‘கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டுச் செத்தாலும் சாவேனே ஒழிய, குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லுபவர்களுக்காக மதுவிலக்கை அமல் படுத்தாமல் இருக்கக் கூடாது’ என்று அன்றே அவர் சொன்னதை  நினைவுகூர்ந்து நடப்பதே அறிவார்ந்த – மனிதாபிமானம் மிக்க – நிலைப்பாடாக இருக்கும்.

இன்று பணிப்பெண்களின் கணவன்மார்கள் அனைவருமே குடிப்பதாய்த் தெரிகிறது. புருசனுக்காகப் படையல் வைத்துக்கொண்டிருந்த பெண்கள் இன்று, ‘அவன் என்னைக்குச் செத்து ஒழியறானோ அன்னைக்குத்தான் என் கொழந்தைங்களும் நானும் நிம்மதியாயிருப்போம்’ என்று விரல் சொடுக்குகிற அளவுக்கு வெறுத்துப் போய் ஒருமையில் அவனைக் குறிப்பிட்டுப் பல்லைக் கடிக்கிறார்கள்.

மாணவர்களில் பலரும், மாணவிகளில் சிலரும் குடிக்கத் தொடங்கியிருப்பது எதில் போய் முடியும் என்பதை மனச்சாட்சியுள்ள ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். …ஹ்ம்…மனம் என்னும் ஒன்றே  இல்லாதவர்களிடம் மனச்சாட்சியை எதிர்பார்ப்பதும் மடத்தனம்தானே?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *